"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Saturday, July 2, 2016

காஷ்மீரில் யுத்த முஸ்தீபுகளில் சிங்-பூட்டோ ஆட்சிகள்


[‪‪‎‪SLL-India report announces that itself along with Sri Lanka Revolutionary Communist League were struggling for United Socialist Soviet States in Indian Sub continent.]

Thozhilalar Paathai, Volume 396
July, 1990

பாகிஸ்தானுடன் யுத்தத்தினை ஆரம்பிக்கத் தாம் எதுவித தயக்கமும் காட்டப் போவதில்லை என்ற தொனியில் இந்திய வலது சாரி தேசிய முன்னணி அரசாங்கத்தின் பிரதமர் வி.சி. சிங் சமீபத்தில் அலகபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் முன்னணி காஷ்மீர் பிரிவினைவாதி ஒருவர் இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய இராணுவ முகாம்கள் மீது இடம் பெற்ற றெக்கட் தாக்குதலில் 6 இந்தியப் படையாட்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாண்டின் தொடக்கத்தில் இருந்து இடம்பெற்ற பிரிவினைக் கிளர்ச்சியில் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட காஷ்மீரில் சுமார் 700 மக்கள் கொல்லப்பட்டனர். பிரிவினைவாத தலைவரின் இக்கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்கும் பொருட்டு வி.பி. சிங் அரசாங்கம், ஸ்ரீநகரில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்ததோடு, ஊரடங்குச் சட்டத்தினை மீறுவோரை கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளும்படியும் உத்தரவு பிறப்பித்தது.

முஸ்லீம் அடிப்படைவாதிகளைக் கொண்ட கெரில்லா குழுவான ஹெஸ்பி-முபாகுதீன் இயக்க கொமாண்டரான மொஹமட் அப்துல்லா பங்தூவின் மாபெரும் ஆர்ப்பட்ட ஊர்வலகங்கள் இடம்பெறும் என அஞ்சிய டெல்லி அரசாங்கம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை பன்மடங்கு அதிகரித்தது. இக்கெரில்லா இயக்கம், காஷ்மீரின் சகல பகுதிகளும் பாக்கிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் எனக் கோரி வருகின்றது.

ஹெஸ்பி இயக்கத் தலைவரின் இக்கொலை, ஒரு மாத காலத்துள் இடம் பெற்ற காஷ்மீர் பிரிவினைவாதிகள் தலைவரின் இரண்டாவது கொலையாகும். மே மாத இறுதியில் காஷ்மீரில் முன்னணி முஸ்லீம் சமயத் தலைவரான எம். எம். பாரூக் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட 100,000 க்கும் அதிகமான மக்கள் மீது இந்திய பரா இராணுவ பொலிசார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 100க்கும் 300க்கும் இடைப்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்திய பாகிஸ்தானிய அரசாங்கங்கள் காஷ்மீர் சம்பந்தமாக ஒரு புதிய யுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது பற்றி அறிவித்ததைத் தொடர்ந்தே காஷ்மீரில் இக்கலவரங்கள் மோசமடைந்தன. பேச்சு வார்த்தைகள் சம்பந்தமக டெல்லியிலும், இஸ்லமாபாத்திலும் ஒரு பொது இணக்கம் காணப்பட்ட போதிலும் அதற்கான திகதியோ அல்லது இடமோ இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

காஷ்மீரின் இன்றைய நெருக்கடி, 1947-48ம் காலப் பகுதியில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பணிப்பின் கீழ் இந்தியத் துணைக் கண்டம் பிரிவினை செய்யப்பட்டதில் இருந்து இடம் பெற்றுவரும் ஒரு மோசமான தகராறின் தொடர்ச்சியாகும். அன்றும் அதைத் தொடர்ந்து 1965லும் இத்தகராறு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான யுத்தமாக வெடித்தது. மூன்றாவது யுத்தம் 1971ல் கிழக்கு வங்காளத்தின் தலைவிதி சம்பந்தமாக வெடித்தது. இந்த யுத்தம் ஒரு உடன்பாட்டில் முடிவடைந்ததோடு அது காஷ்மீர் எல்லைக் கோடுகளை மீள வரையும் உடன்பாட்டினையும் உள்ளடக்கி கொண்டது. இந்தியாவில் முஸ்லீம் பெரும்பான்மையைக் கொண்ட ஒரே அரசு காஷ்மீர் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் சம்பந்தமாக மாற்றுமோர் யுத்தத்துக்கான சாத்தியங்கள் இரண்டு பிற்போக்கு அரசாங்கங்களதும் சூழ்ச்சிகளாலும், அறிக்கைகளாலும் உக்கிரம் கண்டு பரந்ததோடு, வீ.பி. சிங்கின் அலகபாத் பேச்சு அதற்கான தயாரிப்புக்களைச் சுட்டிக் காட்டுகின்றது. அத்தகைய ஒரு யுத்தம் அணுஆயுதங்களின் பாவனையையும் உள்ளடக்கிக் கொள்ளும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியா 1974ல் முதல் தடவையாக ஒரு நியூசினியர் சாதனத்தை வெடிக்க வைத்தது. பாகிஸ்தான் அத்தகைய பலத்தைக் கொண்டுள்ளதாகப் பேசப்பட்டு வருகின்றது. அத்தகைய ஒரு யுத்தம், ஏகாதிபத்தியத்துக்கு ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக இடம் பெற்ற ஈரான்-ஈராக் யுத்தத்தினைக் காட்டிலும் படுபயங்கரமான யுத்த சாகசங்களைப் பரீட்சிக்கும் வாய்ப்பினை வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சோவியத் யூனியன் எல்லையில் கொண்ட ஒரு பிராந்தியத்தில் அதன் பாத்திரம் உலக அரசியலில் குறைந்து கொண்டுள்ள நிலையில் இந்த 'நியூசினியர்' அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவ்வளவுக்கு கொர்பச்சேவ் அதிகாரத்துவம் ஏகாதிபத்திய நலன்களுடன் நெருங்கி உறவாடிக் கொண்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தப் பிராந்தியத்தில் தனது முக்கிய ஏஜன்டாக பாகிஸ்தானுக்கு நீண்டகாலமாக நிதியுதவி வழங்கியும், ஆயுதங்கள் வினியோகம் செய்தும் வந்துள்ளது. பின்னர் அது தனது எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை அமுல் செய்ய இந்திய முதலாளி வர்க்கத்தில் பெரிதும் தங்கியிருந்தது. உதாரணமாக இலங்கையில் தமிழர் தாயகத்தில் இந்திய ஆக்கிரமிப்பினைக் குறிப்பிடலாம். காஷ்மீர் நெருக்கடி மீண்டனும் வெடித்துள்ளமை, இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தப்பட்ட இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னைய தீர்உகள் சரிந்து கொட்டியுள்ளதைக் காட்டுகின்றது. இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தத் தீர்வானது, தேசிய சுதந்திரப் போராட்டத்தினை பிராந்தியத்தினை சமய, இன அடிப்படையில் கூறுபோட்டு கருச்சிதைவு செய்ததன் மூலம் பாதிக்கப்பட்டது. தேசிய முதலாளி வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து பிரித்தானிய ஏகாதிபத்தியம் இதை சாதித்தது.

40 ஆண்டு கால இந்திய பாகிஸ்தானிய முதலாளி வர்க்கத்தின் ஒடுக்குமுறையானது துணைக்கண்டத்தின் ஒடுக்கப்படும் மக்களுக்கு நிஜ தேசிய சமத்துவமும், சுய நிர்ணயமும் பாட்டாளி வர்க்கச் சோசலிசப் புரட்சியின் மூலம் மட்டுமே அடையப்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளது. இதற்கு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை தொழிலாளர்களை 1947-48ம் ஆண்டு ஏகாதிபத்திய தீர்வுகளுக்கு எதிரான பெரும் போராட்டத்தில் ஈடுபடுத்துவது அவசியம். இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், இந்தியாவில் சோசலிச லேபர் லீக்குமே—இந்திய துணைக்கண்ட ஐக்கிய சோவியத் சோசலிச அரசுகளை அமைக்கப் போராடி வருகின்றன. சகல ஸ்டாலினிச, சீர்திருத்தவாத ஏஜண்டுகளுக்கும் எதிராக ட்ரொட்ஸ்கிச நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை கட்டி எழுப்புவது தீர்க்கமானது.

No comments:

Post a Comment