"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Showing posts with label 1992-December. Show all posts
Showing posts with label 1992-December. Show all posts

Saturday, September 17, 2016

இந்திய சோசலிசத் தொழிலாளர் கழக அங்கத்தவர் மோசஸ் ராஜ்குமாரை நிபந்தனையின்றி மீண்டும் சேவையில் அமர்த்து!


Thozhilalar Paathai 427
December 1992

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியலுக்காக இந்தியாவினுள் போராடி வரும் ட்ரொட்ஸ்கிச இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் அங்கத்தவர் தோழர் மோசஸ் ராஜ்குமாருக்கு எதிராக பகிங்ஹாம், கர்நாடக ஆலை (B&C மில்) நிர்வாகம் ஒடுக்குமுறைத் தாக்குதலைத் தொடுத்துள்ளது.


1992 நவம்பர் 1ம் திகதியில் இருந்து தோழர். மோசஸ் ஒரு கிழமைக்கு வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அத்தோடு அவருக்கு எதிரான குற்றச்சாட்டின் பேரில் எதுவிதமான நஷ்டஈடும் இல்லாமல் வேலையில் இருந்து ஏன் நீக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்டும்படியும் அவர் கோரப்பட்டுள்ளார்.

1991 நவம்பரில் பேர்ளினில் கூடிய உலக தொழிலாளர் மாநாட்டினதும் சர்வதேச தொழிலாளர் பாதுகாப்பு சபையினதும் அங்கத்தவருமான மோசசுக்கு எதிராக நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை எனவும் அவற்றை நிராகரிப்பதாகவும் மோசஸ் குறிப்பிட்டுள்ளார். ஆதலால் இக்குற்றச்சாட்டுக்களை உடன் வாபஸ் பெறும்படியும் தம்மைத் திரும்பவும் சேவையில் அமர்த்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மோசஸ் ராஜ்குமாரால் தாக்கப்பட்டதாக நிர்வாகம் குறிப்பிடும் வெங்கடரமணி அதிகாரி தொழிலாளர் விரோத நடவடிக்கைகளால் தொழிலாளரின் வெறுப்புக்கு ஆளானவர். இவர் இன்று பணிபுரியும் பகுதிக்கு இடமாற்றமாகி வந்ததற்குக் காரணம் முன்னைய பிரிவின் தொழிலாளர்களின் எதிர்ப்பேயாகும். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த அதிகாரி, ஒரு தொழிலாளியையும் கமிட்டி அங்கத்தவர் ஒருவரையும் தாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிகாரியின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தும் விதத்திலும், நிர்வாகத்தின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் விதத்திலும் சோசலிசத் தொழிலாளர் கழகத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் கூறுவதாவது: “தறியில் வேலை செய்வதற்குப் போதுமான கண்டைகளை தொழிலாளர்களுக்கு வழங்குவதில் உதாசீனப் போக்கை கடைப்பிடிக்கும் மில் நிர்வாகம், அவற்றை மேற்பார்வையிடுவதற்கு தொழிலாளர்களை விட பன்மடங்கு சம்பளம் கொடுத்து அதிகாரிகளை நியமித்துள்ளது. அவ்வாறான அதிகாரிகளில் ஒருவரான வெங்கடரமணி கண்டைகள் இல்லாது பல தறிகள் ஆடாமல் நின்று போய் விட்ட நிலைமையிலும் கஷ்டப்பட்டு தறிகளை 8 மணிவரை ஆட வைத்த மோசஸ் ராஜ்குமாரிடம் மரியாதைக் குறைவாக பேசியது மட்டுமல்லாமல் 'பிரிப்பரேசன்' பகுதியில் போய் கண்டைகளை எடுத்து வரும்படி கூறினார்.”

B&C ஆலை ட்ரொட்ஸ்கிச தொழிலாளர் அணியின் செயலாளரான மோசஸ் ராஜ்குமாருக்கு எதிரான இச்சதியின் பின்னணியை விபரிக்கையில் சோ.தொ.. கூறுவதாவது: “மோசஸ் ராஜ்குமார் மீது எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பழிவாங்கல் நடவடிக்கையானது தொழிலாளர்கள் மேல் வேலைப் பழுவை அதிகரிக்கச் செய்தும், புவனகிரிக்கு மில்லின் முக்கியமான பகுதியை மாற்றியும், ஆயிரக் கணக்கில் ஆட்குறைப்புச் செய்தும், போனசை 8.33 சதவீதமாக குறைத்தும், கொள்ளை இலாபம் சம்பாதிக்கும்" திட்டமாகும். இத்திட்டத்தினை தோற்கடிக்கக் கிளர்ந்து வரும் தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் சதியின் ஒரு பாகமாகவே ட்ரொட்ஸ்கிசப் போராளி மோசஸ் ராஜ்குமாருக்கு எதிரான இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என சோ.தொ.. சுட்டிக் காட்டியுள்ளது.

இந்திய மத்திய பிரதேச பிகையில் தொழிற் சங்கத் தலைவர் சங்கர் குகாநியோகியின் படுகொலை, உத்தர பிரதேச டால்மியா சீமெந்து நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்களுக்கு எதிரான பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் (17 பேர் பலி) ஆகியவற்றின் ஒரு பாகமாகவே மோசசுக்கு எதிரான இவ் வேட்டை இடம் பெற்றுள்ளது.

தோழர். மோசஸ் ராஜ்குமாருக்கு எதிரான இந்த வேலை இடைநிறுத்தத்தினை இரத்துச் செய்யும் படியும் அவரை எதுவித நிபந்தனையின்றி மீண்டும் சேவையில் அமர்த்தும் படியும் இலங்கை தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்கள் கோர வேண்டும் எனவும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வேண்டுகின்றது.