"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Saturday, July 16, 2016

1947ல் நடந்த இரத்த பிரளயத்தை மீண்டும் ஏற்படுத்த ஏகாதிபத்திய வங்கியாளர்களும் இந்திய முதலாளித்துவமும் சேர்ந்து நடத்தும் கூட்டுச் சதியை தோற்கடி!

[‪SLL-India‬ calls class conscious workers and youths to unify working class and oppressed people. It calls to initiate the struggle for establishing workers defense groups and soviets.]

Thozhilalar Paathai, Volume 398
October, 1990

1947ல் இந்திய உபகண்டத்தில் தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றுபட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்திய புரட்சிகரமான போராட்டத்தினை கண்டு நடுநடுங்கிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இந்திய முதலாளித்துவமும் கூட்டுச்சதி செய்து பிரமாண்டமான தொழிலாளர் விவசாயிகளின் புரட்சிகர இயக்கத்தை உடைப்பதற்கு ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஒத்துழைப்புடன் மதவகுப்புவாதத்தை தூண்டிவிட்டு கலவரங்களை உண்டு பண்ணி முன் கண்டிராத அளவில் லட்சக்கணக்கான சகோதர கொலைகளை ஏற்படுத்தியதன் மூலமாக தமக்கு எதிராக திரண்டு எழுந்து வந்த மாபெரும் புரட்சி இயக்கத்தினை தமது துப்பாக்கி குண்டுகளுக்கு அதிக செலவில்லாது பலவீனப்படுத்தி, சிதறடித்து இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து நசுக்கினார்களோ அதைவிட கோரமான சகோதர யுத்தக் கொலைகளுக்கு இன்றைய இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்களும், ஏகாதிபத்திய வங்கியாளர்களும் கூட்டாக நடத்தும் சதியின் வெளிப்பாடுகளே வி.பி.சிங்கின் மண்டல் கமிஷன் இடஒதுக்கீடு பிரகடனங்களும், அத்வானியின் 'ராம் ரதயாத்திரைகளும்' தேவிலால்களின் நகரவாசிகளுக்கு எதிரான போராட்டமும் ஆகும். மோசமான அரசியல், பொருளாதார நெருக்கடியிலுள்ள அரசாங்கத்தினால் தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிராக கிளர்ந்தெழும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் விவசாயிகளையும் இதர ஒடுக்கப்படும் மக்களையும் பிளவுபடுத்தக்கூடிய அனைத்து வழிகளையும் கையாண்டு புரட்சிகர போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்பதற்காக இந்திய ஆளும் வர்க்கமும் ஏகாதிபத்திய வங்கியாளர்களும் செய்யும் சூழ்ச்சிகை தோற்கடிக்க புரட்சிகர சோசலிச, ஜனநாயக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு காலவரையற்ற பொதுவேலைநிறுத்தத்தின் மூலம் தொழிலாள வர்க்கம் தனது முழு வர்க்க பலத்தையும் அணிதிரட்டி தனது தலைமையின் கீழ் இளைஞர்களையும், ஏழை விவசாயிகளையும், ஒடுக்கப்படும் மக்களையும் கொண்ட வெகுஜன இயக்கங்களையும் கூட்டுச் சேர்த்து இச்சூழ்ச்சிகளை தோற்கடிக்க போராட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின், ஒடுக்கப்படும் மக்களின் ஐக்கியத்தை பேணவும், மத சாதி மொழி வகுப்புவாத கலவரங்களை திட்டமிட்டே உண்டுபண்டும் குண்டர்களை தோற்கடிக்கவும் ஒடுக்கப்படும் சிறிய மதப்பிரிவினர்களை (இஸ்லாமியர், சீக்கியர்களை) பாதுகாக்கவும் தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களையும், சோவியத்துகளையும் (தொழிலாளர் சபைகளையும்) நிறுவும் போராட்டத்தை தொடங்குமாறு வர்க்க நனவுள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் அழைக்கிறது.

நான்கு பத்தாண்டுகளுக்கு கூடுதலாக பேணப்பட்டு வந்த யுத்த பிற்கால சமநிலை உடைந்துவிட்டது தொடர்ந்து அதிகரிக்கும் ஏகாதிபத்தியத்தின் ஸ்திரமற்ற நிலைமையானது சர்வதேச ரீதியாகவே 1930களை விட மோசமான ஒரு உலக பொருளாதார மந்தநிலையை (Depression) உண்டு பண்ணும் நுழைவாயிலில் நிற்கின்றது. அதேசமயம் இதனால் முடுக்கி விடப்பட்டு பிரமாண்டமான முறையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சி இயக்கம் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த ஒரு பகுதியாகவே இந்திய உபகண்டத்திலும் யுத்த பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட வகுப்புவாத அரசு அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தின் விவசாயிகளின் ஒடுக்கப்படும் மக்களின் வர்க்கப் போராட்டங்களினால் ஆட்டம் கண்டுள்ளன. இவ்வாறாக வளர்ச்சி அடையும் பிரமாண்டமான இயக்கத்தை ராணுவ பலத்தை மட்டும் கொண்டு ஒடுக்கிவிட முடியாது என்பனதை வரலாற்று அனுபவங்களின் மூலம் ஆளும் வர்க்கத்தினர் கண்டு கொண்டுள்ளனர். மிக அண்மைக்கால படிப்பினையை உலகத்தின் நான்காவது பெரும் ராணுவம் எனக் கருதப்படும் இந்திய ராணுவம் தமிழீழத்தில் கற்றுக் கொண்டது ஒரு மாதத்தில் தமிழீழ விடுதலை போராளிகளை நிராயுத பாணியாக்குவோம் என்று தம்பட்டம் அடித்து இறுதியில் அம்முயற்சியில் தோல்வியடைந்து அவமானத்துடன் வெளியேறும்படியானது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா இலங்கை போன்ற நாடுகளிலுள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்கள் பேனபாட்டிச போலிஸ் ராணுவ சர்வாதிகார ஆட்சிகளை பல வருடங்களாகவும் பத்தாண்டுகளும் கூட நீடித்து நடத்தி வர்க்கப் போராட்டங்களை நசுக்கி தமது நெருக்கடியான ஆட்சிகளை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருகின்றனர். ஆனால் அப்படியான ஆட்சி வடிவத்தை இந்தியா போன்ற பிரமாண்டமான மக்கள்தொகையும் (80 கோடி) சக்தி வாய்ந்த தொழிற்துறை தொழிலாள வ்ர்க்கத்தையும் கொண்ட நாட்டில் நீடித்து நடத்த முடியாதென்பதை நன்கு அறிந்து கொண்ட இந்திய முதலாளித்துவம் எல்லைப் போர்களைப் பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் உண்டாக்கி அதன்மூலம் வர்க்கப் போராட்டங்களை ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைகளின் உதவியுடன் தேசிய வெறியில் மூழ்கடித்து வந்துள்ளது. நாடு பரந்தளவில் 'அவசரநிலை சட்டம்' (1975-77) பிரகடனம் செய்யப்பட்டு நடத்திய மிருகத்தனமான ராணுவ நடவடிக்கைகளை நீடிக்க முடியாத அளவிற்கு பெரும் எதிர்ப்பு வெடித்தெழுந்தது. இதனால் 1975ல் பிரகடனம் செய்யப்பட்ட அவசரநிலை சட்டம் 1977ல் வாபஸ் வாங்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியா போன்ற பெரும் காலனிகளை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு கையாண்ட பிரித்து, ஆளும் சூழ்ச்சிகளை நன்கு கற்றறிந்த அவர்களது சீடர்களான இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் தமது ஆட்சிமுறைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து மத, சாதி மொழி கலவரங்களை தீவிரமாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

அதே சமயம் பாரதீய ஜனதாக் கட்சி மதிப்பிழந்துள்ள இதர இரு முக்கிய முதலாளித்துவ கட்சிகளினாலும் (தேசிய முன்னணி, காங்கிரஸ்) ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் வி.பி. சிங்கின், அத்வானியின் (பாரதீய ஜனதாக் கட்சித் தலைவரின்) நடவடிக்கைகளை இடைத்தேர்தல் வருமாயின் வாக்குகளை சேகரிப்பதற்கான செயல்களாக முதலாளித்துவ பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் சிறுமைப் படுத்திக் காட்டுகின்றன. ஆனால் உண்மையில் வி.பி. சிங்குகளும் அத்வானிகளும், ராஜிவ்காந்திகளும் தமக்குள்ளே ஒரு தொழிற்பங்கீட்டை ஏற்படுத்தி முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக வளர்ச்சி அடையும் போராட்டங்களை மக்களுக்குள்ளேயான போராட்டங்களாக மாற்றுவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றனர்.

உலக அரசியல், பொருளாதார நெருக்கடியின் தாக்கம்

இந்திய முதலாளித்துவ வர்க்கத்தை இந்த எதிர்ப்புரட்சி சதித்திட்டத்தில் தீவிரமாக தள்ளுவது இன்றைய உலக அரசியல், பொருளாதார அழுத்தங்களின் கீழ் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள இந்திய அரசியல், பொருளாதார நெருக்கடிகளாகும்.

கடந்த இரு பத்தாண்டுகளில் கம்பியூட்டர்களிலும் தொடர்பு சாதனங்களிலும் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சியானது பூகோளமயப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையை கொண்ட உலகப் பொருளாதாரத்தை முன்கண்டிராத வகையில் ஒருங்கிணைத்து, முன்பு வரையப்பட்ட தேசிய எல்லைக்கோடுகள் உலகப் பொருளாதாரத்தின் இயக்கத்துக்கு தடையாக உள்ள நிலையில் உலகப் பொருளாதாரத்துக்கும் காலாவதியாய் போன தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான முட்டி மோதல்கள் கூர்மை அடைகின்றன. இவற்றின் தீவிர வெளிப்பாடாகவே தீவிர தேசியவாத பொருளாதார கொள்கையை பல பத்தாண்டுகள் பின்பற்றி வந்த கிழக்கு ஐரோப்பிய பொருளாதாரங்கள் வீழ்ச்சி அடைந்து அந்நாடுகளின் ஸ்டாலினிச ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. சோவியத் யூனியன், சீனா, வியட்நாம், கியூபா ஆகிய நாடுகளின் பொருளாதார நெருக்கடிக்கும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பர்மா, பங்களாதேஷ் போன்ற பின்தங்கிய நாடுகளின் பொருளாதார நெருக்கடிக்கும் இவையே அடிப்படைக் காரணம். மேலும் இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தின் இந்த அடிப்படை முரண்பாடானது ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பகைமையையும் கூர்மை அடையச் செய்துள்ளது. இந்நிலைமையிலேயே ஏகாதிபத்தியத்தின் இயல்பான குணாம்சத்தின் வழி மீண்டும் உலக சந்தையை மறுபங்கீடு செய்ய, கச்சாப் பொருட்களை சூறையாட, உபரி உழைப்பை அதிகமாக்க மறுபடி உலக யுத்தத்தை நடத்த தயார் செய்கின்றன. அமெரிக்க முதலாளித்துவம் பொருளாதாரத்திலும், நிதி நிலைமையிலும் அடைந்துள்ள பாதாள வீழ்ச்சியானது அமெரிக்க தொழிலாள வர்க்கத்துக்கும் மற்றும் அராபிய, ஆபிரிக்கா ஆசியா போன்ற வரலாற்று ரீதியாக காலனித்துவ ஒடுக்குமுறையை அனுபவித்து வந்தவர்களுக்கு எதிரான கோரமான தாக்குதல்களுக்கு உந்தும் காரணியாக உள்ளது. இந்நிலைமையில் உலகப் பொருளாதாரத்தின் அழுத்தத்தின் கீழ் சுயபூர்த்தி கொள்கைகளை, (இந்தியனாக இரு, இந்திய பொருளை வாங்கு என்ற கொள்கையை) பின்பற்றிய இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகள் அவற்றை கைவிட்டு வெளிப்படையாகவே தமது பிராந்தியங்களில் முதலீடு செய்யும் படி மன்றாடுகின்றன. மேலும் ஏகாதிபத்தியவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக புதிய தொழிற்கொள்கைகளை வி.பி.சிங் ஆட்சியினர் கொண்டு வந்துள்ளனர். இது பரந்தளவில் ஆலை மூடல்களையும், ஆட்குறைப்புகளையும், வேலைப்பளு அதிகரிப்பையும், சம்பள வெட்டுகளையும் மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும், 2 லட்சம் கோடி ரூபாயை வெளிநாட்டு, உள்நாட்டு கடனாக கொண்டுள்ள நிலையில் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்து விலைவாசி ஏற்றத்தை தொடர்ந்து அதிகரிக்க செய்வது தொழிலாளர்களின், மத்திய தர வர்க்கத்தின் மற்றும் ஏழை விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தையும் மோசமாக்கி வருகிறது.

இந்நிலைமையை மேலும் மத்திய கிழக்கு நெருக்கடி உக்கிரப்படுத்தி உள்ளது. இதுபற்றி நிதி அமைச்சர் மதுதண்டவதே பின்வருமாறு கூறியுள்ளார். “வளைகுடா நெருக்கடியினால் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இவற்றுள் மிக முக்கியமானது நமது இறக்குமதிப் பொருள்களின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இரண்டாவது நமது நிதி நெருக்கடி இந்த சூழ்நிலையை சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளுக்கு விசேஷ உதவி எதையும் சர்வதேச நிதி நிறுவனமும் உலக வங்கியும் செய்யாது என்பது தெளிவாகி விட்டது. எனவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கடினமான முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும்.”

பிரதமர் வி.பி.சிங் இது பற்றி குறிப்பிடுகையில்: 'வளைகுடா நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளை நாம் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களின் நம்பிக்கையை முதல்வர்கள் பெற வேண்டும். … 'வளைகுடாவில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் காரணமாக இந்தியா மீது திணிக்கப்பட்டுள்ள "பொருளாதார யுத்தத்தை" எதிர்கொள்ள தியாகங்களை செய்ய மக்கள் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். (தினமணி 12-10-90)

ஜனதாதளத்தின் மூத்த தலைவரான சந்திரசேகர் வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சந்தர்ப்பவாத காரணங்களுக்காக வி.பி.சிங்கின் கொள்கைகளை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டார். “நாடு, மிக மோசமான காலத்தை எதிர்கொண்டுள்ளது. நெருக்கடி எல்லா முனைகளிலும் ஆழமாகி உள்ளது... … இப்போது வகுப்புவாத சக்திகளுக்கு சவால் விடுபவர்கள் யாருமே இல்லை போல் தோன்றுகிறது. அவற்றுடன் மக்கள், அதன் நீண்டகால பிரதிவிளைவுகளை புரிந்து கொள்ளாமல் உடனடி நலன்களுக்காக கூட்டாக சதி செய்து கூட ஒத்துழைக்கின்றனர்… … சமூக பதட்ட நிலைமைகள் வளர்ச்சி அடைகின்றன. அதன் அண்மைக்கால உதாரணம் தான் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதாக பிரகடனம் ஆகும். யாரும் எதையும் பெற்றுவிடவில்லை, யாரும் எதையும் இழக்கவும் இல்லை. ஆனால் பதட்டம் அதிகரித்து உள்ளது, மக்கள் தமக்குள்ளேயே போராடுகிளார்கள்" என்று கூறியுள்ளார்.

ஒரே அணியில் முதலாளித்துவமும் ஸ்டாலினிசமும்

இடஒதுக்கீடு கொள்கையை ஆதரிப்பதாகவும் ஆனால் அதனை வி.பி.சிங் செயல்படுத்தும் விதத்தை எதிர்ப்பதாகவும் சந்திரசேகர் கூறியுள்ளார். இதே பித்தலாட்ட நிலைப்பாட்டையே பாரதீய ஜனதாக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் எடுத்துள்ளன. 1934ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தினால் இந்தியாவில் அரசாங்க வேலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரித்து ஆளும் சாரத்தைக் கொண்ட இட ஒதுக்கீடு கொள்கையை தொடர்வதில் அனைத்து முதலாளித்துவ கட்சிகளிலும், ஸ்டாலினிச கம்யூனிச கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆனால் அதை என்ன விதத்தில் செயல்படுத்துவது என்பது சம்பந்தமாக சில கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளனர். இந்திய முதலாளித்துவமும், ஏகாதிபத்திய வங்கியாளர்களும் கூட்டாகவே மோசமான பொருளாதார நெருக்கடியினால் வளர்ச்சி அடையும் சமூக கொந்தளிப்பை, சமூக கலவரங்களாக மாற்றும் திட்டத்தை தீட்டி உள்ளனர். 10 வருடங்களுக்கு முன்பே இட ஒதுக்கீடு பற்றிய முன்னைய பீகார் முதன் மந்திரியாக இருந்த பி.பி. மண்டல் தலைமையிலான குழு வழங்கிய சிபாரிசுகளை செயல்படுத்த வேண்டிய தருணம் இது தான் என்பதை சிறுபான்மை தேசிய முன்னணி அரசாங்கம் கண்டுள்ளது. தமது எதிர் புரட்சி திட்டங்களை மூடிமறைத்து "குடிசைகளில் வாழ்பவர்களுக்கும் நாட்டை ஆள்வது சம்பந்தமாக சொல்வதற்கும் உண்டு என்பதை உத்தரவாதம் செய்ய" தான் மத்திய அரசாங்க வேலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீதத்தை "பின்தங்கிய வர்க்கங்களுக்கு" ஒதுக்கி உள்ளதாக வி.பி.சிங் கூறியுள்ளார்.

கடந்த 43 வருடங்களாக சுதந்திர ஆட்சி என்ற போர்வையில் டாட்டா, பிர்லா போன்ற சுரண்டும் முதலாளி வர்க்கத்தினர் தமது செல்வங்களை பெருக்கவும், நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்க்கை நடத்தவும், 12 கோடிக்கு மேற்பட்டோர் வேலையின்றி இருப்பதற்கும் லட்சக்கணக்கான ஆலைகள் நலிந்த நிலையில் இருப்பதற்கும், சிறிய, மத, மொழி, பிரிவினர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் நிலைமைகள் மிக மோசமடைவதற்கும் உலக வங்கியாளர்களுடன் நீண்டகாலமாக ஒத்துழைத்து வருபவர்களில் முக்கியமான ஒருவரான வி.பி.சிங் "பின்தங்கிய வர்க்கங்களின் மேம்பாட்டுக்காகவும், “குடிசைகளில் வாழ்பவர்கள் நாட்டை ஆள்வது சம்பந்தமாக பேசுவதற்கும்" என்று கூறுவதெல்லாம் நச்சுத்தன்மையான மோசடிகளே என்பதை வர்க்க நனவுள்ள அனைத்து தொழிலாளர்களும் அறிவார்கள்.

இட ஒதுக்கீடு கொள்கை சம்பந்தமான மண்டல் குழுவின் சிபாரிசுகள் அமல்படுத்தப்படும் என்று அறிவித்த பின்னர் நாடு பரந்தளவில் மாணவர்களின் எதிர்ப்பு போராட்டங்களும், சாதிக் கலவரங்களும் வெடித்தெழுந்துள்ளன. பல மாணவர்கள் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளனர். போலிஸ் ராணுவத்திற்கும் மாணவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் மாணவர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வேலையின்மையானது உலக முதலாளித்துவ நெருக்கடியின் காரணமாக மேலும் அதிகரித்து வரும் நிலைமையிலும் போதிய கல்லூரிகளும், பல்கலைக்கழங்களும் இல்லாத பற்றாக்குறையான நிலைமை இருக்கையில் ஏற்கனவே இடஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை நிரப்புவதிலே "பிற்படுத்தப்பட்ட வர்க்களுக்குள்ளேயே" பலத்த போட்டி அதிகரித்துள்ளது. பணம் மிகுந்த செல்வாக்கு நிறைந்த "பிற்படுத்தப்பட்ட" பிரிவினராலேயே போட்டியில் வெல்ல முடிகிறது. மண்டல் குழுவின் சிபாரிசுகள் தொழிலாள, ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் வர்க்க ஐக்கியத்தை உடைப்பதையும் முதலாளித்துவ அரசாங்களுக்கு எதிராக வளர்ச்சி அடையும் தொழிலாளர்களின் விவசாயிகளின் புரட்சிகர இயக்கங்களை தோற்கடிப்பதற்கு தொழிலாள விரோத பிற்போக்கு குட்டி முதலாளித்துவ சக்திகளை வளர்ப்பதற்கும் ஆகும்.

மரண நெருக்கடியிலுள்ள முதலாளித்துவ அமைப்புக்கு புத்துயிர் அளிப்பதற்காக முதலாளித்துவ பிரதிநிதிகளும் ஸ்டாலினிஸ்டுகளும் கோரும் அனைத்து தியாகங்களையும் இகழ்ச்சியுடன் நிராகரித்து முதலாளித்துவ அமைப்புக்கு உள்ள அரசியல், பொருளாதார நெருக்கடிகளை மேலும் ஆழப்படுத்தி முதலாளித்துவ அமைப்பை தூக்கி வீசி உற்பத்தி சாதனங்களை தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தை உருவாக்க தொழிலாள வர்க்கம் போராட வேண்டும். ஒருபுறம் இந்திய முதலாளித்துவம், ஏகாதிபத்திய வங்கியாளர்களுடன் சேர்ந்து மதக் கலவரங்களை உண்டு பண்ணி அப்பட்டமான சர்வாதிகார ஆட்சிக்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. மறுபுறம் ஸ்டாலினிச கம்யூனிச கட்சிகள் மக்கள் முன்னணி (வர்க்கக் கூட்டு) கொள்கை மூலம் முதலாளித்துவ ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கின்றனர். இந்த அடிப்படையிலே ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், 'தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில்' கூட்டங்களில் பங்கு கொண்டு, தேசிய ஒருமைப்பாட்டை காப்பாற்ற அனைத்து கட்சிகளும் எப்படி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பது பற்றி 'விரிவுரை' நிகழ்த்துகின்றனர். தேசியவாதம், மத, சாதி வகுப்பு வாதங்கள் அனைத்துமே நெருக்கடியிலுள்ள முதலாளித்துவ ஆட்சியை தக்க வைப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளால் தூண்டிவிடப்படும் விஷக் கிருமிகள் என்பதை தொழிலாள வர்க்கத்திற்கு மூடி மறைக்கின்றனர்.

பாரதீய ஜனதாக் கட்சியின் வகுப்புவாதத்திற்கு எதிராக 'போராடுவதாக' பித்தலாட்டம் செய்யும் சி.பி.எம். சிபிஐ தலைமைகள் அண்மையில் சென்னையில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் கூட்டத்தில் பாரதீய ஜனதாக் கட்சி பங்கு கொள்ளாதது பற்றி வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அக்கூட்டத்தில் பங்கு கொள்வதற்காக சென்னை வந்த சிபிஎம் பொதுச் செயலாளர் நம்பூதிரிபாட் அர்கிசன் சுர்ஜித் சிங் ஜோதிபாசு, சுபாஷினி அலி ஆகியோர் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில் சிபிஎம் எம் பிசுபாஷினி அலி பாரதீய ஜனதாக் கட்சியின் நடவடிக்கை பற்றி பின்வருமாறு குறிப்பிட்டார்: “அவர்கள் ஒரு கோயிலை அயோத்தியில் ராமருக்காக கட்டட்டும். நாம் அதை முழுமையாக ஆதரிக்கிறோம். நாமும் கூட அந்த பணியில் நமது செங்கொடிகளை பிடித்த வண்ணம் சேருவோம் (!!) ஆனால் ஒரு மஜீதை (மசூதியை) உடைப்பதற்கான தந்திரமாக அதை மாற்ற வேண்டாம்" (இந்தியன் எக்ஸ்பிரஸ், செப்டம்பர் 24, 1990 பக்கம் 3)

சிபிஎம் தலைவர் கூறியதன்படி, பாரதீய ஜனதாக் கட்சி அதன் பிற்போக்கு முஸ்லீம் விரோத பிரச்சார இயக்கத்துடன் ராமர் கோயிலை கட்டுவதற்கான வேலையை செய்யலாம். அதற்கு சிபிஎம் கூட அதன் செங்கொடிகளுடன் சென்று உதவி செய்யும். ஆனால் தயவுசெய்து மசூதியை இடித்து பெரும் சங்கடத்தை நமக்கு ஏற்படுத்தி விடாதீர்கள் என்று பாரதீய ஜனதாக் கட்சியிடம் "தோழமைரீதியில்" கேட்டுள்ளது!

அதுபோலவே வி.பி.சிங்கின் இட ஒதுக்கீடு கொள்கையிலும் சிபிஎம் அதை முழுமையாக ஆதரிக்கிறது. அக்கொள்கையை திறம்பட அமல்படுத்த சிலவற்றை சேர்க்க வேண்டும் என்று ஆலோசனையும் வழங்கியுள்ளது.

அரசியலில் இருந்து மத, சாதி, மொழி வகுப்பு வாதங்களை ஒழிக்க வேண்டுமாயின் அதை தூண்டி விடுவதற்கு பொருளாதார அடிப்படையாக இருக்கும் லாப உற்பத்தி தனியார் உடமை அமைப்பை ஒழிக்க வேண்டும். எனவே வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது. ஆனால் சிபிஎம் சிபிஐ தலைமைகள் அவ்வாறு பிரித்து வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்புவதிலேயே முழு சக்தியையும் பயன்படுத்தி வேலை செய்கின்றன.

வி.பி.சிங் ஆட்சிக்கு எதிரான இயக்கம் எத்தருணத்திலும் தேசிய முன்னணி ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கக் கூடாது என்பதில் சிபிஎம் சிபிஐ தலைமைகள் அக்கறையாக இருப்பதன் காரணம் மறுபடி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிடம் என்பதனால் அல்ல ஏனெனில் தேசிய முன்னணியின் 10 மாத ஆட்சிக்காலத்தில் அது காங்கிரஸின் ஏகாதிபத்திய சார்பு கொள்கையை தீவிரமாக முன்னெடுக்கும் ஏகாதிபத்திய வங்கியாளர்களின் இந்திய முதலாளித்துவத்தின் விசுவாசமான ஏஜன்டு என்பதையே நிரூபித்துள்ளது. கோர்பச்சேவுகள் டெங்கியோ பிங்குகள் எவ்வழியோ அவ்வழியே நம்பூதிரிபாத்துகளும், இந்திரஜித் குப்தாக்களும்! அது தான் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகர இயக்கத்தை நசுக்க ஏகாதிபத்தியங்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவது, சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சிபிஎம் செயலாளர் நம்பூதிரிபாட் பேசுகையில் "வி.பி.சிங்கை பிரதமர் பதவியிலிருந்து மாற்றுவதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் அராஜகத்திற்கும் வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். முதலாளித்துவ அமைப்பையும் அதன் அரசியல் ஆட்சியையும் புரட்சிகரமான ரீதியில் வர்க்க போராட்ட முறைகள் மூலம் தூக்கி வீசி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும் புரட்சிகர முன்னோக்கை எதிர்க்கும் சிபிஎம் சிபிஐ ஸ்டாலினிசத் தலைமைகள் காங்கிரஸ் ஆட்சி நிராகரிக்கப்பட்டு 10 மாத காலத்திற்குள்ளேயே தேசிய முன்னணி ஆட்சியும் வளர்ச்சி அடையும் தொழிலாளர் விவசாயிகள் ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகர இயக்கத்தினால் மேலும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்படுவதனால் உருவாக்கப்படும் "அராஜக" நிலைமை பற்றியே மரணபீதி அடைந்துள்ளார். அதனால் தேசிய முன்னணி ஆட்சி எதிர்கொள்ளும் அனைத்து அரசியல் பிரச்சினைக்கும்" சர்வரோக நிவாரணியாக" சிபிஎம் சிபிஐ தலைமைகள் அனைத்துக் கட்சி கூட்டங்களை பிரேரிக்கின்றனர். இப்படியான மக்கள் முன்னணி (வர்க்க கூட்டு) அமைப்புகளின் மூலம் முதலாளித்துவ சித்தாந்தத்திலிருந்தும், சுரண்டல் அமைப்பிலிருந்தும் தொழிலாளர்கள் விடுபடாமல் பாதுகாத்துக் கொள்கின்றனர். இந்த துரோகத்தலைமைகள் பிற்போக்கு தேசிய முன்னணி ஆட்சிக்கு வழங்கும் அரசியல் ஆதரவை உடனடியாக நிறுத்தும்படியும், முதலாளித்துவ கட்சிகளுடன் முழுமையாக உறவை துண்டித்துக் கொண்டு சோசலிச மற்றும் தீர்க்கப்படாத ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை நிறைவேற்றும் தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம் அமைக்கப் போராடும்படி தொழிலாளர்கள் சிபிஎம் சிபிஐ தலைமைகளை நிர்பந்திக்க வேண்டும். பின்வரும் கோரிக்கைகளுக்காக போராடும்படி கோர வேண்டும்.

ஃ முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுப் போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படு!

ஃ அனைவருக்கும் வேலைக்காக போராடு!

ஃ தொழிலாளர்களை பிளவுபடுத்தும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளையும், இந்து வகுப்புவாதத்தையும் தூண்டிவிடும் ரதயாத்திரைகளையும் தோற்கடி!

ஃ முதலாளித்துவ போலீஸ், ராணுவத்தை களை!

ஃ அனைத்து முக்கிய ஆலைகளையும், நஷ்டஈடின்றி தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் தேசியமயமாக்கு!

ஃ ஆலைமூடல் அபாயங்களுக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டத்திற்கு தயார் செய்யும்!

ஃ உலக வங்கிக்கான கடன்களை நிராகரி! வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் அமர்த்து!

ஃ ஏகாதிபத்திய வங்கிகளையும் நஷ்டஈடின்றி தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் தேசியமயமாக்கு!

ஃ தொழிலாளர் பாதுகாப்பு குழுக்களை கட்டு!

ஃ நிபந்தனையின்றி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்!

ஃ நிலங்களையும் ஆறுகளையும் தேசியமயமாக்கு!

ஃ உழுபவர்களுக்கு நிலத்தை வழங்கு!

ஃ விவசாயி உற்பத்தி பொருள்களுக்கு நியாய விலை வழங்கு!

ஃ மலிந்த விலையில் விவசாய உற்பத்தி கருவிகளை வழங்கு!

ஃ இலகுவான முறையில் திருப்பி செலுத்தக் கூடிய புதிய கடன் முறைகளை ஏற்படுத்து!

ஃ காஷ்மீரிலிருந்து ராணுவத்தை உடனடியாக வாபஸ் வாங்கு!

ஃ காஷ்மீரி தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை பேணு!

ஃ மறு ஐக்கியம் செய்யப்பட்ட சோசலிச உபகண்டத்தில் காஷ்மீரி, பஞ்சாபி, மணிப்பூரி வங்காளி மற்றும் தமிழ் ஈழ மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் அவற்றில் ஒன்றான தேசிய சுயநிர்ணய உரிமையையும் பேணு!

ஃ தொழிலாளர், விவசாயிகளின் சபைகளை (சோவியத்துக்களை) நிறுவு!

ஃ உலக சோசலிச குடியரசின் பகுதியாக உபகண்டத்தில் ஐக்கிய சோசலிச குடியரசுகள் அமைக்கப் போராடு!

ஃ உலக சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேறு!

No comments:

Post a Comment