"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Showing posts with label 1991-March. Show all posts
Showing posts with label 1991-March. Show all posts

Monday, July 18, 2016

இந்தியா: சந்திரசேகர் அரசாங்கத்தின் நெருக்கடி மோசமடைகிறது!


[The article explains the necessity and urgency to build ‪Indian Socialist Labour League‬ and Sri Lankan Revolutionary Communist League as revolutionary leadership in the sub-continent.]


Thozhilalar Paathai, Volume: 402 (File: 404)
March, 1991

இந்திய சந்திரசேகர் அரசாங்கம் வெளிநாட்டுச் செலாவணி பற்றாக்குறையை தீர்க்க 3000 கோடி ரூபாய்களை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனாக பெறுவதாக ஜனவரி 5ம் திகதி அறிவித்தது. 'மசகு எண்ணெய் விலை உயர்வு' அத்தியாவசிய இறக்குமதிகளை சமாளிக்கவே இக்கடன் பெறப்பட்டது.

இக்கடன்கள் இந்தியா முன்னொரு போதும் எதிர்க்கொள்ளாத கடும் நிபந்தனைகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கம் துண்டுவிழாத வரவு செலவுத்திட்டத்தினை தயாரிக்க வேண்டும். இது முக்கிய நிபந்தனைகளில் ஒன்று. சொந்த நலனின் பேரில் இந்நிபந்தனையை அமுல் செய்வதாக சந்திரசேகர் அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 2752 கோடி ரூபாவாக வீழ்ச்சி கண்டது. இப்பணம் இரண்டு கிழமைகளுக்கான இறக்குமதிச் செலவைச் சமாளிக்கவும் பற்றாக்குறையானது. 45 வருட கால ஆட்சியின் பின்னர் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் நாட்டின் பொருளாதாரத்தினை எத்தகைய வங்குரோத்து நிலைக்குள் தள்ளியுள்ளது என்பதற்கு இது நல்லதோர் காட்சி.

மோசமடைந்து வரும் நெருக்கடியின் மத்தியில் இந்திய முதலாளித்துவ அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தினதும், உலக வங்கியினதும் கட்டளை அமுல் செய்வதன் மூலம் ஏகாதிபத்திய நிதி மூலதனம் இந்தியாவினுள் பெருக்கெடுப்பதற்கான நிலைமைகளைச் சிருஷ்டித்து வருகின்றது: வி.பி.சிங் அரசாங்கம் ஏகாதிபத்திய முதலீடுகளுக்கு பெரும் வாய்ப்புகளை வழங்கும் விதத்தில் தயார் செய்த 'புதிய கைத்தொழில் கொள்கை', ராஜீவ் காந்தி காங்கிரஸின் முண்டுகோலில் நின்று வரும் சந்திரசேகர் அரசாங்கத்தின் கொள்கையாகியுள்ளது. அரசுடைமையாக்கப்பட்டிருந்த இந்திய தொலைதொடர்ச் சேவை இன்று தனியார்மயமாக்கப்பட்டுள்ளதோடு ஏனைய அரசாங்கத் துறைகளும் உடைக்கப்பட வேண்டும் என்பதே ஏகாதிபத்தியவாதிகளின் கட்டளையாகவுள்ளது.

இரத்தக் களரி

நெருக்கடி உக்கிரமடைந்து, ஏகாதிபத்தியவாதிகளின் கட்டளைகளை அமுல் செய்ய நேரிட்டதைத் தொடர்ந்து சந்திரசேகர் அரசாங்கமும், மற்றும் முதலாளித்துவக் குழுக்களும் இந்தியா பூராவும் இன, மத மோதல்களையும், இரத்தக் களரிகளையும் சிருஷ்டிப்பதில் ஈடுபட்டுள்ளன. இதன் பொருட்டு மீண்டும் அயோத்தி பிரச்சினை' முன்னணிக்கு வந்துள்ளது. படுபிற்போக்கு மத இயக்கமான விஸ்வ ஹிந்து பரிக்சத் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவுடன் வட இந்திய நகரான அயோத்தியில் 40 வருடத்துக்கு முன்னர் இருந்ததாகச் சொல்லப்படும் இராம ஜென்ம பூமியின் உரித்து பற்றி ஆராயும் 'நிபுணர் குழ' ஒன்றை நிறுவியுள்ளது. கடந்த ஆண்டில் இந்த அயோத்தி பிரச்சினை மீது பிற்போக்குப் பிரச்சாரம் வெடித்த வேளையில் 'வரலாற்று சான்றுகள் ஆயும் கமிட்டியை' அமைக்கும் யோசனையை ராஜீவ் காந்தி முன்வைத்தார். இன்று மற்றும் பிற்போக்குக் கட்சிகளும் இந்த யோசனையைச் சூடிபிடிக்கும் விதத்தில் தாங்கிப் பிடித்து வருகின்றன.

சந்திரசேகர் தமிழ் நாட்டிற்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் அ.தி.மு.. கட்சியினர் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஈழம் விடுதலைப் போராளிகளுக்கும் வட-கீழ் மாகாண தமிழ் விடுதலைப் போராட்டத்துக்கும் எதிரான பிரச்சாரத்தினை முடுக்கி விட்டுள்ளனர். இவ்விரு கட்சிகளும் தமிழ்நாடு அரசாங்கத்தை களைக்கும்படி சந்திரசேகர் அரசாங்கத்தை நெருக்கி வருகின்றன. ஐக்கிய அசாம் விடுதலை முன்னணி, நக்சல்பாரி இயக்கம், மற்றும் இந்திய அமைப்புகளுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், அவற்றுக்கு விடுதலை புலிகள் உதவி வருவதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு தளமாக இருப்பதாகவும் இப்பிற்போக்காளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யூ.என்.பி. அரசாங்கத்தினை நெருக்கடிக்குள் தள்ளி வரும் தமிழ் விடுதலைப் போராட்டம் இந்தியாவினுள் ஏற்படுத்தும் தாக்கங்களையிட்டு இப்பிற்போக்கு அரசியல் கும்பல்கள் அச்சமடைந்துள்ளன. ஆதலால் அப்போராட்டத்தினை நாசமாக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரச்சாரத்தின் அடிநாதமாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினதும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினதும் தலைவர்களின் துரோகத்தின் மத்தியில் தொழிலாளர்களும், ஒடுக்கப்படும் மக்களும் தமது உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் திணைக்களம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து உள்ளமர்வு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு தமிழ்நாடு தபால் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்றுச் சென்ற ஊழியர்கள் கொந்தராத்து முறையில் திரும்பவும் வேலைக்கு அமர்த்தும் ஆட்சியாளர்களின் நடவடிக்கையை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் இழுபட்டு வயிறளந்து வந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்டாலினிஸ்டுகள் காங்கிரஸ் கட்சியின் 'மதச்சார்பின்மையின்' நம்பிக்கை வைக்க முடியாத விதத்தில் அவர்கள் செயல்படுவதையிட்டு குற்றம்சாட்டியுள்ளனர். சமீபத்தில் சீ.பீ.எம். வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி வி.பி.சிங் அரசாங்கத்துக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சியுடன் சேர்ந்து வாக்களிக்காமல் இருந்து விட்டு, பின்னர் வேறாக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொணர வேண்டியிருந்தது என முறைப்பட்டிருந்தது.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் நேபாள ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சி மகாநாட்டில் கலந்து கொள்ளவென சீ.பீ.எம். தலைவரான ஹர்கிருஷ்ணன் நேபாளம் சென்றார். அவர் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பிரிவினரை மீண்டும் ஒன்றுபட்டு நேபாள ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் முன்னணி அமைப்பது அவசியமென குறிப்பிட்டார். பங்களாதேசில் ஈர்ஷாத்தின் இராணுவ அரசாங்கம் வீழ்ச்சி கண்டதன் பின்னர் உருவாகியுள்ள ஆளும் வர்க்கத்தின் நெருக்கடியையிட்டும் சீ.பீ.எம். தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பங்களாதேசைப் பிறப்பிடமாகக் கொண்ட சீ.பீ.எம். தலைவர்களில் ஒருவரான கித்திரவேர்த்தி சமீபத்தில் பங்களாதேஷ் சென்று திரும்பினார். அவரின் இந்த உத்தியோகபூர்வ விஜயம் பற்றி எதுவுமே வெளியிடப்படவில்லை.

இந்தியாவின் இந்த அரசியல் நெருக்கடியும் ஸ்டாலினிஸ்டுகளின் துரோகமும் தொழிலாள வர்க்க புரட்சித் தலைமையினைக் கட்டி எழுப்புவதன் அவசியத்தினை சுட்டிக்காட்டுகின்றது. கோடானுகோடி கிராமிய ஏழைகளும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் தொழிலாள வர்க்கத்துடன் புரட்சிகரப் பிணைப்பை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் முதலாளித்துவத்தினை தூக்கி வீசி, ஏகாதிபத்திய பிடியை உடைத்து எறியும் ட்ரொட்ஸ்கிச புரட்சிக் கட்சியைக் கட்டி எழுப்ப வேண்டும். நான்காம் அகிலத்துடன் உறவு கொண்ட இந்திய சோசலிச லேபர் லீக்கையும் இலங்கை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தையும் துணைக்கண்டத்தின் புரட்சித் தலைமையாக கட்டியெழுப்புவது இன்று அவசியமாகியுள்ளது.

Sunday, July 17, 2016

ஸ்ராலினிச குண்டர்களதும் முதலாளித்துவ போலீசினதும் கூட்டுத்தாக்குதலை தோற்கடி! தோழர் ராம் மீதான பொய் வழக்கை வாபஸ் வாங்கப் போராடு!


[Police arrests ‪SLL-India‬ comrade and files case against him. SLL_India struggles to release him.]

Thozhilalar Paathai, Volume 402 (File no 404)
March, 1991

பி அண்டு சி ஆலைமூடல் அபாயத்துக்கு எதிராக சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்து தொடர்ந்து போராடி வரும் டிராட்ஸ்கிசத் தொழிலாளர் அணியின் சார்பில் 1989 சென்னைத் தொழிலாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தோழர் ராம் மீது சி.பி.எம். ஸ்டாலினிச குண்டர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதலின் பின்னர் போலீசார் தோழர் ராமை கைது செய்து செக்சன் 75ன் கீழ் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை உடனடியாக வாபஸ் வாங்கும்படி சென்னைத் தொழிலாளர் சங்கமும் இதர தொழிற்சங்க அமைப்புகளும் முன் வரவேண்டுமென்று டிராட்ஸ்கிச தொழிலாளர் அணியும் சோசலிசத் தொழிலாளர் கழகமும் அறைகூறுகின்றது.

தோழர் ராம் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்திய ஸ்டாலினிச குண்டர்களை கைது செய்யாமல், தாக்கப்பட்டவரை கைது செய்து அவர் மேல் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தார் என்று போலீசார் வழக்குத் தொடர்ந்திருப்பது ஸ்டாலினிஸ்டுகளுக்கும், அரசுக்கும் இடையிலான நெருக்கமான உறவை பிரதிபலிப்பதாக உள்ளது. மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆலைமூடல்கள், ஆட்குறைப்புகள் ஆகியவற்றினால் பாதிப்புக்குள்ளாக்கப்படுவதற்கு சிபிஎம் சிபிஐ அரசியல் தலைமைகளும் அவற்றின் தொழிற்சங்க அமைப்புகளான சிஐடியு யும் ஏஐடியுசி யும் துணையாக இருந்தன. அது போலவே சென்னையில் பின்னி இன்சினியரிங். எம்.எப்.எல்., மெட்டல்பார்க்ஸ் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் போன்ற பல ஆலைகளில் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதற்கும் ஆலைமூடல்களுக்கும் வழி வகுத்து கொடுத்தனர்.

இவ்வாறாக சிபிஐ சிபிஎம் கட்சித் தலைமைகளும் அவற்றின் தொழிற்சங்க அமைப்புகளும் செயல்படுவதற்கு காரணம் அவர்களின் வேலைத்திட்டம் திவாலாகி மடிந்து கொண்டிருக்கும் லாப உற்பத்தி முதலாளித்துவ அமைப்பை தூக்கி வீசி தேவையை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்தை உருவாக்குவது அல்ல. அதனால் முதலாளித்துவ அமைப்புக்கு ஏற்பட்டுள்ள வரலாற்று நெருக்கடியின் போது வர்க்கப் போராட்டத்தை முதன்மைப்படுத்துவதற்கு பதிலாக தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களை பலியாக்க முதலாளித்துவ அணியினருடன் கை கோர்த்து தேசிய ஐக்கியம் மத சார்பின்மை போன்ற கோஷங்களை எழுப்பி வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புகின்றனர்.

மேலும் இன்றைய ஆழமான இந்திய முதலாளித்துவ, பொருளாதார நெருக்கடி நிலைமையில் செத்து மடியும் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் தேசிய முன்னணியுடன் கூட்டரசாங்கம் அமைக்க தயாராக இருப்பதாக சிபிஐ தலைமை அறிவித்துள்ளது. அதே வேளை சிபிஎம் தலைமை, தேசிய முன்னணி ஸ்திரமான ஆட்சி அமைக்க இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்டாலினிசத் தலைமைகளின் எதிர்புரட்சிகரமான வேலைத்திட்டத்துக்கு எதிராக மாற்று சோசலிச வேலைத்திட்டத்திற்காக டிராட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் போராடி வருகிறது.

இதன் காரணமாகவே முதலாளித்துவ ஏஜண்டுகளான ஸ்டாலினிச அதிகாரத்துவம் குண்டர்களின் பலாத்காரம் மூலம் உண்மையான மார்க்சிஸ்டுகளை—டிராட்ஸ்கிஸ்டுகளை மௌனமாக்க முயற்சிக்கின்றனர்.

அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ள டிராட்ஸ்கிச இயக்கத்தை கொலை மிரட்டல் மூலம், குண்டர் தாக்குதல்களின் மூலம் மௌனமாக்க முடியாது. ஸ்டாலினிஸ்டுகளின் எதிர்ப்புரட்சிகர அரசியலையும், தொழிற்சங்க காட்டிக்கொடுப்பு வேலைகளையும் அம்பலப்படுத்து. தொழிலாளர்கள், இளைஞர்கள் மத்தியில் புரட்சிகர நனவுள்ள மார்க்சியத்திற்கான போராட்டத்தை சோசலிசத் தொழிலாளர் கழகமும் டிராட்ஸ்கிச தொழிலாளர் அணியும் பன்மடங்கு தீவிரப்படுத்தும்.