"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Friday, July 15, 2016

தோழர் சேதுராமனின் நினைவு நீடுழி வாழ்க!


[An obituary from ‪‎SLL-India to the supporter of ICFI. "Sethu Raman in his last days was involved in translating the important political theoretical documents of ICFI and Workers League in Tamil. He translated Transition Program, Stalinism and Bolshevism in Tamil." "He was full time activist in Bolshevik Leninist Party, the Indian section of Fourth International, from 1946 to 1952. He joined ‪Socialist Labour League India‬ in 1989."]

Thozhilalar Paathai, Volume 398
October, 1990

உலக டிராட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் தீவிர அரசியல் ஆதரவாளரான தோழர் சேதுராமன் 65 வயதில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட இந்திய டிராட்ஸ்கிச இயக்கத்துடன் கடந்த ஒரு வருட காலமாக நெருக்கமாக ஒத்துழைத்த தோழர் சேதுராமனின் மறைவுக்கு சோ.தொ.கழகம் அதன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது. தோழர் சேதுராமனின் நினைவுக் கூட்டங்களை திருச்சியிலும் மதுரையிலும் கல்கத்தாவிலும் நடத்த எண்ணியுள்ளது.

சேதுராமன் தனது வாழ்க்கையின் இறுதிக் காலப்பகுதியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் மற்றும் வொர்க்கர்ஸ் லீக்கின் முக்கிய அரசியல் தத்துவார்த்த கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டிருந்தார். அவர் டிராட்ஸ்கியின் இடைமருவு வேலைத்திட்டத்தையும், ஸ்டாலினிசமும், போல்ஷேவிசமும் எனப்படும் சிறு நூலையும் தமிழில் மொழி பெயர்த்தார். அவர் டிராட்ஸ்கிசத்தின் மீதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் செப்டம்பர் 11 1989ல் சோசலிசத் தொழிலாளர் கழகத்திற்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “உலகப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக வேலை செய்வதை விட சிறந்த சேவை எதுவும் கிடையாது. டிராட்ஸ்கிசம் தான் மார்க்சிசம் லெனினிசம் பாட்டாளி வர்க்க சர்வதேசியம். டிராட்ஸ்கி காட்டிய நிரந்தரப் புரட்சி, சோசலிசப் புரட்சியைத் தவிர வேறு பாதை கிடையாது".

இளவயதிலேயே தோழர் சேதுராமன் டிராட்ஸ்கிச இயக்கத்தில் சேர்ந்தார். அப்போது நான்காம் அகிலத்தின் இந்திய பகுதியான போல்ஷேவிக் லெனினிசக் கட்சியில் 1946ல் இருந்து 1952 வரை முழு நேர ஊழியராக பணியாற்றினார்.

சர்வதேச ரீதியாக 1950 களில் பப்லோவாத திருத்தல்வாதிகளினால் நியாயப்படுத்தப்பட்ட நுழையும் தந்திரோபாயத்தை பின்பற்றி போல்ஷேவிக் லெனினிஸ கட்சியும் சோசலிச கட்சியினுள் கலைக்கப்பட்டது.

போல்ஷேவிக் லெனினிஸ்ட் கட்சியின் காரியாளர்கள் தேசியவாத சோசலிசக் கட்சியினால் "உறிஞ்சப்பட்டார்கள்". பாப்லோவாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு நடத்திய போராட்டத்தைப் பற்றி அறிந்திருக்காத நிலைமையில் தோழர் சேதுராமனும் பப்லோவாதத்திற்கு பலியானார்.

அதன் பின்னர் 1970களில் அவர் சி.பி.எம். இல் சேர்ந்தார். அவர் சி.பி.எம்.இன் இயக்க நடவடிக்கைகளில் பலவற்றில் பங்கு கொண்டிருந்த போதிலும் அவர் சி.பி.எம். இன் ஸ்டாலினிச அரசியலை எதிர்த்தார். அவர் ஆகஸ்ட் 1989ல் சோசலிசத் தொழிலாளர் கழகத்துடன் தொடர்பை ஏற்படுத்திய பின்னர் கடந்த 36 வருடங்களாக பப்லோவாத கலைப்புவாத போக்கிற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு நடத்திய அரசியல், தத்துவார்த்த போராட்டங்களை பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஆவணங்களையும் தோழர் டேவிட் நோர்த் எழுதிய "சோசலிசத்திற்கு எதிராக பெரஸ்த்து ரொய்கா" எனப்படும் நூலையும் கவனத்துடன் படித்து முடித்ததும் தோழர் சேதுராமன் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாட்டுடன் தனது முழு உடன்பாட்டையும் தெரிவித்தார்.

அவர் உத்தியோகப்பூர்வமாக சி.பி.எம். உடன் முறித்துக் கொள்ளாவிடினும் அவர் சி.பி.எம்.இன் ஸ்டாலினிச எதிர்புரட்சி அரசியலை விமரிசித்து பல கட்டுரைகள் எழுதினார். அவர் தனது அரசியல் கட்டுரைகளை எழுதி வெளியிட "இஸ்மாயில்" என்ற புனைபெயரை உபயோகித்தார். சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் மாதப் பத்திரிகையான தொழிலாளர் பாதையின் ஜனவரி, ஏப்ரல் 1990 இதழ்களில் அவர் சி.பி.எம்.ஐ விமரிசனம் செய்து கட்டுரைகள் எழுதினார். அவையாவன: எதிர்புரட்சிகரமான ஸ்டாலினிச-ஹிட்லர் ஒப்பந்தமும் சி.பி.எம்.இன் ஆதரவும் 2) மூன்றாம் அகிலம் கலைப்பு பற்றி நம்பூதிரிபாத்தின் ஒப்புதல் வாக்குமூலம்.

தோழர் சேதுராமன் வாழ்ந்து வந்த இடத்தில் தனிமைப்பட்ட சூழ்நிலைமையில் இருந்ததன் காரணமாக அவர் சி.பி.எம்.இன் அரசியலை வெளிப்படையாக கண்டனம் செய்வதில் தயக்கம் காட்டினார். அவர் தனது கடைசி நாட்களில் சி.பி.எம். உடன் ஸ்தாபன ரீதியாக அவருக்கு இருந்த நொய்ந்து போன உறவையும் முழுமையான முறித்து கொள்ள தீர்மானித்தார். இருந்த போதிலும் அவருக்கு டிராட்ஸ்கி மீதும், நான்காம் அகிலத்தின் மீதும் இருந்த நம்பிக்கை பற்றி சி பி எம் உறுப்பினர்களுக்கு அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதனால் அவரது இறந்த உடல் சி.பி.எம். கொடியினால் போர்த்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது. தோழர் சேதுராமனின் மகளின் வேண்டுகோளின்படி சோசலிசத் தொழிலாளர் கழகத்திற்கு தந்தி அனுப்புவதாக சி.பி.எம் உறுப்பினர்கள் கூறிய போதிலும் மரணச் செய்தி சென்னைக்கு வந்து சேரவில்லை. அவர் இறந்து 5 நாட்களின் பின்னரே அது பற்றி சோ.தொ.கழகத்திற்கு கிடைத்தது.

தோழர் சேதுராமனின் உடல்நிலை மோசமடைந்த நிலைமையில் அவரை திருச்சி ஜீசஸ் சைல்ட் ஆஸ்பத்திரியில் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தலைமை உறுப்பினர் உதவியுடன் சேர்த்ததுடன், அவருடன் கூடவே பல நாட்கள் அவர் ஆஸ்பத்திரியில் தங்கி உதவி செய்தார். தோழர் சேதுராமனின் புற்றுநோயை குணப்படுத்துவதற்கான ஒரு சிறந்த ஆஸ்பத்திரியை சென்னையில் பார்த்து அவரை அங்கே சேர்ப்பதற்கான திட்டங்களுடன் சோ.தொ.கழக தலைமை உறுப்பினர் சென்னை திரும்பிய ஒரு சில நாட்களில் தோழர் சேதுராமன் மரணமானார். அவர் நனவுடன் மேலும் சில நாட்கள் வாழ்ந்திருப்பாராயின் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அவர் வெறுப்புடன் விமரிசித்து பேசிய, எழுதிய ஸ்டாலினிசத்துடன் வெளிப்படையாகவே முறித்துக் கொண்டிருப்பார். அவருடன் திருச்சி ஜீசஸ் ஆஸ்பத்திரியில் கூட இருந்த சோசலிசத் தொழிலாளர் கழக தலைமை உறுப்பினருடன் பேசும் போது சென்னையில் டிராட்ஸ்கி கொலை செய்யப்பட்டு 50வது வருடத்தை நினைவுகூர்வதற்கான சோசலிசத் தொழிலாளர் கழகம் செப்டம்பர் 23ல் பாவணர் நூலகக் கட்டிடத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசுவதற்கு உற்சாகத்துடன் சம்மதம் தெரிவித்தார். ஆனால் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் தலைமையின் கீழ் சோவியத் யூனியனிலும், சீனாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ஸ்டாலினிச ஆட்சிகளுக்கு எதிரான அரசியல் புரட்சியிலும், முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்க புரட்சியிலும் அவருக்கு இருந்த ஆழ்ந்த நம்பிக்கையை அவர் வெளிப்படையாக பேசவிடாது மூளை புற்றுநோய் அவரை இறுதியாக தடுத்துவிட்டது.

தோழர் சேதுராமனின் நினைவு நீடுழி வாழ்க!

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு நீடுழி வாழ்க!

ஏகாதிபத்தியமும், ஸ்டாலினிசமும், தேசிய முதலாளித்துவமும் ஒழிக!

No comments:

Post a Comment