"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Showing posts with label 1991-November. Show all posts
Showing posts with label 1991-November. Show all posts

Friday, July 29, 2016

ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனித்துவத்துக்கும் எதிராக அணிதிரள்வோம்: “நிரந்தரப் புரட்சி இல்லையேல் நிரந்தர மக்கட்படுகொலை"



[With the presence of RCL delegates, ‪SLL-India‬ held preliminary meetings for 1991 Berlin Summit in Chennai and Calcutta respectively on September 26, 1991 and October 5, 1991.]

Thozhilalar Pathai Volume 414
November 1991

பேர்ளினில் நவம்பர் 16-17ல் நடைபெற்ற உலகத் தொழிலாளர் மகாநாட்டுக்கு முன்னோடியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அக்டோபர் 26ல் நடாத்திய மகாநாட்டில் பு... செயலாளர் விஜே டயஸ் சமர்ப்பித்த அறிக்கை

தோழர்களே, தோழியர்களே,

நீங்கள் அனைவரும் அறிந்தது போல் எமது இம்மகாநாடு நவம்பர் 16-17ம் திகதிகளில் ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனித்துவத்துக்கும் எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடாத்தத் தயாராகி வரும் உலகத் தொழிலாளர் மகாநாட்டுக்கான முன்னோடி மகாநாடாகும். அனைத்துலகக் குழுவின் கிளைகளின் அரசியல் தலையீட்டின் மூலம் இத்தகைய முன்னோடி மகாநாடுகள் பல ஏற்கனவே உலகம் பூராவும் நடைபெற்றுள்ளன.

அக்டோபர் 19-20 வார இறுதியில் அவுஸ்திரேலிய சோசலிச லேபர் லீக்கினால் சிட்னி நகரில் நடாத்தப்பட்ட முன்னோடி மகாநாடு பெரிதும் வெற்றிகரமான மகாநாடாக விளங்கியதாக அத்தோழர்களிடம் இருந்து நாம் அறிகின்றோம். பல்வேறு கைத்தொழில் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர் குழுக்களும், ஆசிரியர், தாதிகள் போன்ற சேவை துறை ஊழியர்களும் அங்கு பேராளர்களாகக் கலந்து கொண்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி ஏகாதிபத்தியத்தினால் எதிர்காலம் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ள பெருந்தொகையான இளைஞர், யுவதிகளும் அதில் பங்கு பற்றியுள்ளார்கள்.

கடந்த ஜூலையில் பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மன் பேராளர்கள் கலந்து கொண்ட முன்னோடி மகாநாடு பேர்ளின் நகரில் நடைபெற்றது.

செப்டம்பர் 26ல் சென்னையிலும் அக்டோபர் 5ல் கல்கத்தாவிலும் நடைபெற்ற வெற்றிகரமான முன்னோடி மகாநாடுகள் இரண்டில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.
.

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளுள் மூன்று அரசாங்கங்கள் வீழ்ச்சி கண்டதன் பின்னர் இன்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நரசிம்மராவின் காங்கிரஸ் அரசாங்கம், முன்னொரு போதும் இல்லாத அளவில் ஏகாதிபத்திய பகற் கொள்கைக்குக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ள போதிலும், ஏகாதிபத்தியவாதிகள் அதன் மூலம் திருப்திப்படுவதாய் இல்லை. இந்த அக்டோபர் மாத முற்பகுதியில் இந்தியா வந்த அமெரிக்க வர்த்தகத் தூதுவர் காலா ஹீலசின் நடமாட்டம், இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்களைத் தமது நூலில் ஆடும் பொம்மையாக ஏகாதிபத்தியவாதிகள் கருதிச் செயல்படுவதைக் காட்டியது. 'புத்திஜீவி மூலவள உரிமை' தொடர்பான சட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவள், சிங்கப்பூர் அமெரிக்காவின் சிபாரிசினை ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவும் அவ்வாறே அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும், இல்லையேல் அமெரிக்க வர்த்தக தடை 301 இந்தியாவுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளான். உலகப் படத்தில் ஒரு குற்றான சிங்கப்பூரைக் கணிப்பதை விட கூடுதலாக துணைக் கண்டம் என்றாலும் இந்தியாவைக் கணிக்கப் போவதில்லை என்பதே அப்பேச்சின் பொருள். இத்தகைய கெடுபிடி ஏகாதிபத்தியப் போக்குடன் இணைந்துள்ள பிரமாண்டமான சமூக வெடிப்புப் பற்றிய புரட்சிகர அறிகுறிகள், ஏகாதிபத்தியவாதிகள் காலனித்துவத்துக்கு மீண்டும் தள்ளப்படும் அவல நிலையை வெளிப்படுத்துகின்றது. ...

இந்தியத் துணைக் கண்டம்

ஸ்டாலினிசத்தின் கீழ் உருவான 'கொம்பிரதோர்' முதலாளித்துவக் கும்பல் அணிதிரண்டு கொண்டு சோவியத் சோவியத் யூனியனை சிதறடிக்க தேசியவாத வெறியை தூண்டிவிட்டுள்ளது போலவே, இந்தியத் துணைக் கண்டத்திலும் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ இனவாத, மதவா, ஜாதிவாத இயக்கங்களும் கூட இன்று தலைநீட்டி வருகின்றன. காலனித்துவத்தின் கீழ் இந்தியாவை ஒன்றுபடுத்திய பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளே இந்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை நசுக்கும் பொருட்டு 1947ல் இந்திய முதலாளிகளுடன் சேர்ந்து ஹிந்து-முஸ்லீம் இந்தியா இரண்டினை நிறுவியது. இன்று தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியின்படி பார்க்குமிடத்து அந்தப் பிரிவினை போதியதல்ல என்பதை ஏகாதிபத்தியவாதிகள் அறிவர். காங்கிரஸ் ஆட்சியாளர்களின் குழுக்களும், கோஷ்டிகளும் ஏகாதிபத்தியவாதிகளின் கையாட்களாக இனவாத ரீதியில் இந்தியாவை முழுமனே சிதறடிக்க இன்று முன்வந்துள்ளனர்.

ஒரிஸ்ஸா முதல் அமைச்சர் பிஜூ பட்நாய்க்கின் இயக்கம் இதற்கு நல்ல உதாரணம். ஒரிஸ்ஸாவுக்கு சுயாதீனம் அவசியம் என கூச்சலிடும் அவர் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை என்ன? இதுவரை காலமும் இந்திய மத்திய அரசாங்கத்தின் தனி அதிகாரமாக இருந்து வந்த வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய ஒரிஸ்ஸாவுக்கும் சுதந்திரம் வேண்டும் என அவர் கோருகின்றார். அது ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக தொழிற்பட முதலாளிகளுக்கு சுதந்திரம் வேண்டும் கோரிக்கை அவ்வாறே ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பனிகளுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் உரிமையையும் அவர் வேண்டுகின்றார். ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியினால் கடந்த காலப்பகுதியில் உறுதி செய்து தர முடியாது போன ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சினையையே பாவித்து இந்த இனவாத முதலாளித்துவப் புள்ளிகள் இப்போது தொழிலாள-ஒடுக்கப்படும் மக்களின் செலவில் இந்தியாவைத் தூண்டாடும் ஏகாதிபத்திய காலனித்துவ வேலைத்திட்டத்தின் தரகர்களாக முயற்சிக்கிறார்கள். ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இந்த வேலைத்திட்டத்துடன் தம்மை நேரடியாகப் பிணைத்துக் கொண்டுள்ளார்கள். ஒரிஸ்ஸா கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு இதுவே. …

Thursday, July 28, 2016

முதலாளித்துவ மக்கள் முன்னணி வேண்டாம்! யூ.என்.பி.யை வெளியேற்ற பொது வேலைநிறுத்தத்துக்கு தயார் செய்!


தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்கு போராடு!

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அரசியல் குழுவின் அறிக்கை


[RCL statement announces that the RCL, Sri Lankan section of ICFI, and its fraternal movement SLL-India were struggling to establish revolutionary proletariat program and party in Sri Lanka-Eelam and Indian sub-continent.]
 
Thozhilalar Pathai Volume 414
November 1991

இலங்கை-தமிழ் ஈழம் பிராந்தியங்களிலும் இந்தியத் துணைக் கண்டப் பிராந்தியத்திலும் பாட்டாளி வர்க்கப் புரட்சிகர வேலைத்திட்டத்தினையும், கட்சியையும் நிர்மானிக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்தியாவில் அதன் சகோதர இயக்கமான சோசலிச தொழிலாளர் கழகமும் மட்டுமே போராடுகின்றன. பாட்டாளி வர்க்கத்துக்குப் புரட்சிகர முன்நோக்கினை அனைத்துலகக் குழுவின் கிளைகள் மட்டுமே வழங்குகின்றனபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் சேருமாறும் அதன் பத்திரிகைகளான 'தொழிலாளர் பாதை', 'கம்கறு மாவத்த' பத்திரிகைகளை வாசிக்குமாறும் நாம் தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்கள், இளைஞர்களை வேண்டுகின்றோம். பலம் வாய்ந்த இளைஞர் இயக்கங்களை கட்டி எழுப்புவதன் மூலம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினை உறுதி செய்ய 'இளம் சோஷலிஸ்டுகள்' இயக்கத்தில் சேருங்கள்.

அனைத்துலக ரீதியில் ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனித்துவத்திற்கும் எதிராக உலகத் தொழிலாள வர்க்கத்தினை அணிதிரட்டும் நடவடிக்கையின் ஒரு பாகமாக 1991 நவம்பர் 16-17ம் திகதிகளில் அனைத்துலக குழு பேர்ளினில் கூட்டும் உலக மகாநாட்டுக்கு ஆதரவளிக்கும்படியும் அதன் வெளியீடுகளை ஆய்வு செய்யும்படியும் நாம் சகல தொழிலாளர்களையும், ஒடுக்கப்படும் மக்களையும் வேண்டுகின்றோம்.

Wednesday, July 27, 2016

துப்புரவுத் துறையைத் தனியாரிடம் ஒப்படைப்பதை முறியடி!


Volume 43 (File 414)
November 1991

பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் கட்டளைகளை ஏற்று தொழிற்துறைகளையும் துப்புறவுத் துறை போன்ற சமூக சேவைகளையும் தனியாரிடம் தாரை வார்க்கும் முதலாளித்துவ அ.தி.மு.., .காங். அரசாங்கத்தின் முயற்சியை முறியடிக்கமுதலாளித்துவ ஆட்சியினைத் தூக்கிவீசிதொழிலாளர் விவசாயி அரசாங்கம் அமைக்கின்ற பொதுப் போராட்டத்தில் ஒன்றிணையுமாறு துப்புரவுத் தொழிலாளர்களை சோசலிசத் தொழிலாளர் கழகம் அறைகூவி அழைக்கின்றது.

கொத்தடிமை நிலையில் துப்புரவுத் தொழிலாளர்கள்

சுமார் 10,000க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் மாநகராட்சியின் கீழ் பணி புரிந்து கொண்டிருக்கின்றார்கள். சுமார் 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கின்றனர். இந்த தொழிலாளிகள் அனைவருமே அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வண்டியை தாங்களே ஓட்டி குப்பையை வாரிக் கொட்டுகிறார்கள். வண்டியில் குப்பை அதிகமாகும் பொழுது வண்டியின் குப்பையின் மேல் ஏறி மிதிக்கின்றார்கள். இதனால் அவர்களது கண்ணாடித் துண்டுகளால் கிழிக்கப்படுகின்றன. இவர்களுக்கு செருப்பு தரப்படுவது இல்லை, குப்பையில் பிறரால் எறியப்பட்ட கிழிந்த பழைய செருப்புகளை தேடி எடுத்து போட்டுக் கொள்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான செருப்பு, சோப்பு, டவல், கையுறை எண்ணெய் போன்றவை மறுக்கப்படுகின்றன. மெடிகல் லீவ் உண்டு ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. பண்டிகை விடுமுறை என்பதெல்லாம் கிடையாது. வாரத்திற்கு சனிக்கிழமை ½ நாளும் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை ½ நாளும் விடுமுறை. ஆனால் முழு நாளும் வேலையை செய்து விட்டுத்தான் செல்ல வேண்டும். ஒருநாள் விடுமுறை தருவதாக ஒப்புக் கொள்ளப்பட்டு இன்னும் தரப்படவில்லை. மேலும் இவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்று செல்லும் பொழுது அவர்களுக்கு சேர வேண்டிய பணம் இழுத்தடிக்கப்பட்டு சில வருடங்கள் கழித்து தரப்படுகிறது.

அதிகாரிகளான Ciகள் தொழிலாளருக்கு சேர வேண்டிய எந்தப் பணமாக இருந்தாலும் கமிஷன் ஏஜென்ட் போல் 100க்கு 10 என்று எடுக்கிறார். தொழிலாளி யாராவது எதிர்த்து கேட்டால் அவரை வேறு இடத்திற்கு மாற்றுகிறார். இல்லையேல் வேலையே கொடுக்காமல் மேல் அதிகாரியைப் பார் என்று கூறி மாதக் கணக்கில் அலைய விடுகிறார்.

துப்புரவுத் தொழிலாளர்களுக்காக 'பெயரளவிற்கு' இருக்கக்கூடிய தொழிற்சங்கத் தலைமை சந்தா வசூல் செய்வதில் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறது. ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிலாளியை காட்டிக் கொடுத்தவரும் முதுபெரும் ஸ்டாலினிஸ்டுமான கே.டி.கே. தங்கமணி தான் இதன் கௌரவத் தலைவர். கருப்பண்ணனும் தங்கமணியும் அங்கம் வகிக்கும் இச்சங்கம் கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் ஏஜென்சியாக தொழிலாளர்களுக்குள் செயல்பட்டு வருகின்றது. கருப்பண்ணனை தொழிலாளர்கள் மடக்கிப் பிடித்து தங்கள் குறைகளைத் தீர்க்க போராடுமாறு நிர்பந்தித்தால், மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு கூழைக் கும்பிடு போட்டு, அவர்கள் பாதத்தை நக்கி தொழிலாளர்களின் வயிற்றிலடிப்பதே இவரது வாடிக்கையாகும். இது கருப்பண்ணனின் தனிப்பட்ட குணாம்சத்தோடு சம்பந்தப்பட்டதல்ல. மாறாக அவர் சார்ந்திருக்கும் சிபிஐ ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் எதிர்புரட்சிகர ஏஜென்சி பாத்திரத்தின் ஓர் அங்கமாகும்.

ஸ்டாலினிச மக்கள் முன்னணிக் கொள்கையை நிராகரி

CPI, CPI(M) ஸ்டாலினிச கட்சிகள் வர்க்கக்கூட்டு வைத்துக் கொண்டு மக்கள் முன்னணியை அமைத்து முதலாளித்துவ ஆட்சியை தக்க வைப்பதையே தனது வேலைத்திட்டமாக கொண்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் போராட்டத்திலிருந்து மற்றொரு பகுதியைத் தனிமைப்படுத்தி ஒன்று சேரவிடாமல் முதலாளித்துவத்திற்கு முண்டு கொடுத்து வருகின்றன. ஏகாதிபத்தியத்தின் புதிய ஒழுங்கு முறையை சமன்படுத்த ஸ்டாலினிஸ்டுகள் முழு ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர். வேலையின்மை விலைவாசி உயர்வு, சம்பள வெட்டு, ஆட்குறைப்பு இதிலிருந்து விடுபட தொழிலாள வர்க்கம் எழுச்சி கொண்டு வரும்பொழுது வருடத்திற்கு ஒருமுறை 'பாரத் பந்த்' என்று தொழிலாளர்களின் எழுச்சியை மட்டுப்படுத்துகின்றன. எனவே துப்புரவுத் தொழிலாளர்கள் இத்துரோகத் தலைமையிலிருந்து விடுபட வேண்டும். விடுபட்டு சீர்திருத்தவாத முதலாளித்துவ தலைமையைக் கட்டுவதன் மூலமும் (.தி.மு.. தி.மு.. காங்கிரஸ், ஜனதா, பா.ஜனதா தீர்வு காண முடியாது. மாறாக துப்புரவுத் தொழிலாளர்கள் புரட்சிகரத் தலைமையான டிராட்ஸ்கிச அணியைக் கட்ட வேண்டும். துப்புரவுத் துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிரான போராட்டமானது அ.தி.மு.. காங்கிரஸ் திமுக ஜனதா பா.ஜனதா போன்ற முதலாளித்துவ கட்சியின் ஆட்சிகளை தூக்கியெறிந்து தொழிலாளர்களின் ஆட்சியை அமைக்கும் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்ததாகும். “இன்றைய சகாப்தத்தில் தொழிற்சங்கங்கள் ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் புரட்சியைத் தடுப்பதற்காகத் தொழிலாளர்களை கீழ்ப்படியச் செய்து அடக்குவதற்கான இரண்டாம் உபகரணங்களாக மாற வேண்டும். அல்லது அதற்கு நேர்மாறாகத் தொழிற்சங்கங்கள் பாட்டாளி வர்க்க புரட்சி இயக்கத்தின் உபகரணங்களாக மாற வேண்டும்?' என்று டிராட்ஸ்கி கூறியது போல் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு புதிய புரட்சிகர வேலைத் திட்டமும் புரட்சிகரத் தலைமையுமே முதல் தேவை ஆகும். எனவே துப்புரவுத் தொழிலாளர்கள் பின்வரும் வேலைத்திட்டத்தின் கீழ் போராட வேண்டும் என டிராட்ஸ்கிச தொழிலாளர் அணி முன் வைக்கிறது.

ஃ அனைத்து ஊழியர்களும் நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

ஃ அடிப்படை வசதிகளான சோப்பு, செருப்பு, எண்ணெய், டவல், கையுறை போன்றவை அனைத்தும் வழங்கப்பட வேண்டும்!

ஃ தொழிலாளி உட்பட அவரது குடும்பத்திற்கு முழு மருத்துவ வசதியும் தொழிலாளி குடியிருப்பு வசதியும் அளிக்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் பெற

ஃ அனைத்து தொழிற்துறைகளையும், வங்கிகளையும், முதலாளிக்கு ஒரு பைசா நஷ்ட ஈடின்றி தொழிலாள வர்க்க ஆதிக்கத்தின் கீழ் தேசிய மயமாக்க ஒரு காலவரையற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்ததின் மூலம் தொழிலாளர் விவசாய அரசாங்கம் அமைக்கப் போராட வேண்டும்.

சிபிஐ, சிபிஐ (எம்) ஸ்டாலினிசத் தலைமைகளை முதலாளித்துவக் கட்சிகளுடனான உறவைத் துண்டிக்குமாறு தொழிலாளர்கள் நிர்பந்திக்க வேண்டும். புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடும் சோசலிச தொழிலாளர் கழகத்தை பரந்த கட்சியாக கட்டியெழுப்ப முன்வருமாறு துப்புரவுத் தொழிலாளர்களை அழைக்கிறோம். எம்.கே.

Tuesday, July 26, 2016

ஏகாதிபத்தியத்தின் 'புதிய உலக ஒழுங்கை' அமைக்க ஸ்டாலினிஸ்டுகள் நடத்தும் 'நவ. 29 ஒரு நாள் பந்த்'தை தொழிலாளர்-விவசாயி அரசாங்கம் அமைப்பதற்கான காலவரையற்ற பொது வேலை நிறுத்தமாக்கப் போராடு!


Volume: 43 (File 414)
November 1991

முதலாளித்துவ காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அரசாங்கம் உலக வங்கி-பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் நிபந்தனைகளை ஏற்று அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தல், பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கு கதவைத் திறந்துவிடல், நலிந்த ஆலைகளைமூடல், மானியங்களை வெட்டல், சமூக சேவை செலவுகளைக் குறைத்தல் போன்ற புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக-சோசலிச மற்றும் புரட்சிகர ஜனநாயக வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும் தொழிலாளர்-விவசாயி அரசாங்கத்தை அமைக்கப் போராடுமாறு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம், தொழிலாளர் வர்க்கத்திற்கு அறைகூவல் விடுக்கின்றது. நரசிம்மராவின் சிறுபான்மை அரசாங்கத்தைக் கவிழவிடாது ஒருபுறம் காப்பாற்றிக் கொண்டும், மறுபுறம் அதன் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிராகத் திரண்டு எழுந்துவரும் தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன்—அதற்கு வடிகாலாக சிபிஐ (எம்) சிபிஐ ஸ்டாலினிசக் கட்சிகள் நடத்த இருக்கும் நவம்பர் 29, 'ஒருநாள் பாரத் பந்த்தை', தொழிலாளர் விவசாயி அரசாங்கத்தை அமைப்பதற்கு இட்டுச் செல்லும் காலவரையற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தமாக மாற்றப் போராடுமாறு தொழிலாள வர்க்கத்திற்கும், விவசாயிகள், ஒடுக்கப்படும் மக்கள், இளைஞர்கள் மற்றும் புரட்சிகர அறிவுஜீவிகளுக்கும் சோசலிசத் தொழிலாளர் கழகம் வேண்டுகோள் விடுக்கின்றது. அத்துடன் சிபிஐ (எம்), சிபிஐ ஸ்டாலினிசக் கட்சித் தலைமைகளையும் சிஐடியு, ஏஐடியுசி ஸ்டாலினிச தொழிற்சங்க அதிகாரத்துவத் தலைமைகளையும் முதலாளித்துவக் கட்சிகளுடனான உறவைத் துண்டிக்குமாறும், தொழிலாளர்கள் நிர்பந்திக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றது.

புதிய பொருளாதாரக் கொள்கை

பணத்தின் மதிப்பை 20% குறைத்த ராவின் அரசாங்கம், அந்நிய முதலாளிகள் உள்நாட்டு முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு, இந்தியத் தொழிலாள வர்க்கத்தை மேலும் ஒட்டச் சுரண்டுவதற்கு ஏதுவாக, வெளிநாட்டு வங்கிகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளது. ஸ்டாலினிஸ்டுகள் ஆதரித்துத் தாங்கிய ஜனதாதள அரசாங்கம் 41% வெளிநாட்டு மூலதனத்திற்கு கதவு திறந்த நிலையில், ராவின் அரசாங்கம் இன்னும் ஒருபடி போய் 51% கதவு திறந்து விட்டுள்ளது. அந்நிய மூலதன வரலாறும் பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளின் நுழைவாலும் உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் போட்டியிட முடியாது நலிவடையும் அதே நேரத்தில், அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்கல் முதலாளிகளின் கோரச் சுரண்டலுக்கு இந்தியத் தொழிலாள வர்க்கத்தைப் பலியிடப் போகின்றன.

எதிர்காலத்தின் அரசின் பணிகள், சுகாதாரம் போன்ற சமூக நலத்துறைகளுடன் கட்டுப்படுத்தப்படும். வர்த்தகம், தொழில் போன்ற துறைகளை தனியார் துறைக்கென ஒதுக்கப்படும்" என்று மத்திய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். (தினமணி - 2.11.91).

அடிப்படை உணவுப் பொருட்களின் உற்பத்திக்கான உரமானியம் போன்றவற்றில் ஏற்படுத்திய வெட்டானது, உணவுப் பொருட்களின் விலையைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. போக்குவரத்துக் கட்டணம் முதற்கொண்டு சரக்குக் கட்டணம் உட்பட அனைத்து ரயில், பஸ், விமான கட்டணங்களும் உயர்ந்துள்ளன. ரயில் பெட்டிகள் தயாரித்தல், மின்உற்பத்தி, எண்ணெய் எடுத்தல், துறைமுகங்களைப் பராமரித்தல், பஸ் போக்குவரத்து, தொலைத் தொடர்பு உட்பட தனியார்மயமாக்கலுக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கும் 83 ஆலைகளையும் மூடப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதில் 46 தொழிற்சாலைகள் ஏற்கனவே தனியாரால் நடத்த முடியாமல் நலிந்து போய் தான், அரசு ஏற்றது. பி&சி, ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் போல் கதவடைப்புச் செய்யப்பட்ட தொழிற்சாலைகளாலும், 1,80,000 நலிவடைந்த ஆலைகளாலும் பரந்த அளவில் தொழிலாள வர்க்கம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் 'புதிய பொருளாதாரக் கொள்கை' .காங் முதலாளித்துவ அரசாங்கத்தின் திவாலைப்படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.

இந்தியப் பொருளாதார நெருக்கடி

1947-ல் இருந்து மாறிமாறி வந்த முதலாளித்துவ ஆட்சியாளர்களின் சாதனை வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்காகிவிட்டது. 1970 களில் 804 கோடி ரூபாயாக இருந்த பற்றாக்குறை 1985-1986ல் 6 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இறக்குமதிக்கு தாராளமாக கதவைத் திறந்து விட்டதால் வர்த்தகப் பற்றாக்குறை 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் போய் விட்டது. அந்நியக் கடன் 1989-91ஆம் ஆண்டில் லட்சம் கோடியாய்த் தாண்டிவிட்டது. 1991 செப்டம்பரில் ஒரு ரூபாயின் உண்மை மதிப்பு (1947ஐ அடிப்படையாகக் கொண்டால்) 6.47 பைசாவாகி விட்டது. இந்தியாவின் இறக்குமதி 48 ஆயிரம் கோடியைத் தாண்டி விடும் நிலை இருக்கிறது. அந்நியச் செலாவணிக் கையிருப்பைக் கணக்கிட்டால், 4 ஆயிரம் கோடியைத் கூட திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருக்கிறது. நாட்டின் மொத்த வருமானத்தில் ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டி மட்டும் 35%க்கு மேல் செலவிடப்படுகின்றது. பிறக்கும் ஒவ்வொரு இந்தியக் குழந்தையின் தலையிலும் 1500 ரூபாய் வெளிநாட்டுக் கடன் சுமை உள்ளது.

பின்தங்கிய நாடுகளிலேயே அதிக கடன் பெற்ற நாடு இந்தியா தான். வளர்ந்து செல்லும் பொருளாதார நெருக்கடி இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று நான்கு அரசாங்கங்களை மாற்றிவிட்ட அரசியல் நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளது.

போருக்குப் பிந்தைய உடன்படிக்கைகளின் உடைவும், தேசிய முதலாளித்துவத்தின் 'சுயசார்பு' கொள்கையின் திவாலும்

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அச்சுறுத்திக் கொண்டிருந்த புரட்சிகர எழுச்சிகளை நசுக்குவதற்காக ஸ்டாலினிசத்தின் முழு ஒத்துழைப்புடன், ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய 'புதிய உலக ஒழுங்கு' நிர்மானிக்கப்பட்ட போருக்குப் பிந்தைய உடன்படிக்கைகளின் அடிப்படையில், ஏகாதிபத்தியம் தனது நலனைக் காக்கும் நம்பகமான 'தேசிய முதலாளிகளின் கையில் அமைதியான ஆட்சி மாற்றத்தைக் கொடுத்தது; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பு ரீதியான வளத்தை வைத்து உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தை உயிர் பிழைக்கச் செய்தது. இந்த வகையிலான போலி சுதந்திரத்தை வைத்துக் கொண்டு ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தினின்று சுதந்திரம் பெற்று விட்டதாக, தேசிய முதலாளிகள் தம்பட்டம் அடித்துக் கொண்டதுடன், 'சுயசார்பு பொருளாதாரத்தை' ஸ்தாபிக்கப் போவதாகவும் வாய்ச்சவடால் அடித்தார்கள். அப்படி கடந்த காலத்தில் நேரு போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த பாசாங்கு நடவடிக்கையும் தூக்கி எறிந்து விட்டு, இன்று ஏகாதிபத்திய மூலதனத்துக்கு வெளிப்படையாக கதவு திறந்து விட்டுள்ளது, இந்திய முதலாளித்துவ காங்கிரஸ் அரசாங்கம். கடந்த காலத்தில் சோவியத் ஸ்டாலினிச அதிகாரத்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயான பனிப்போர் பதட்ட நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு, இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் 'ஏகாதிபத்திய எதிர்ப்பு' எனும் பாசாங்குகளின் பேரில், ஏகாதிபத்தியத்திடமும், ஸ்டாலினிச ஆட்சியாளர்களிடமும் பேரம் செய்தன. எனவே 'இந்தியனாக இரு; இந்திய பொருள்களையே வாங்கு' என்றெல்லாம் திட்டங்களைக் கொண்டு வந்தனர்.

ஆனால் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியும் மைக்ரோசிப்ஸ் கண்டுபிடிப்பில் ஏற்பட்ட புரட்சியும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை பூகோள மயப்படுத்தி இருக்கிறது- உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தை முன் என்றுமில்லாத வகையில் பின்னிப்பிணைத்திருக்கிறது. எனவே உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் அழுத்தமே எல்லா தேசிய அரசுகளின் பொருளாதாரத்தின் மீதும் அழுத்தங்களை ஏற்படுத்துகிறது, எனவே சுதந்திரமான தேசியப் பொருளாதாரம் என்பது காலாவதியாகி விட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கால உடன்படிக்கைகளின் மேல் கட்டப்பட்ட 'உலக ஒழுங்கு முறை' நொறுங்கிப் போய் விட்டது. இதன் அடிப்படையில் ஏகாதிபத்தியம் அமைத்த வர்த்தகம் பற்றிய பொது உடன்பாடு (GATT) பிரிட்டன்வுட்ஸ் ஒப்பந்தம் ஆகியன உடைந்து போயுள்ளன. ஏகாதிபத்தியம் மூன்று முகாம்களாக (அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி) பிளவுண்டு சர்வதேச சந்தையை கைப்பற்றுவதற்கும், மலிவான கூலி உழைப்பு, மூல வளங்களைச் சுரண்டுவதற்குமான போட்டியில் இறங்கியுள்ளன. தனது சார்பு ரீதியான வளத்தைப் பயன்படுத்தி, இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலக முதலாளித்து பொருளாதாரத்தைப் புணரமைத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று நிதி ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளது. ராணுவ ரீதியில் மட்டும் வலிமையைக் கொண்டிருக்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியம், பின்தங்கிய ஆசிய, அமெரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் தனது காலனி ஆதிக்கத்தை நிர்மாணிக்கும் வேலையைக் கட்டவிழ்த்துள்ளது. இதுவே வளைகுடாப் பிராந்தியத்தில் நடத்திய புஷ் கூறிய புதிய உலக ஒழுங்கிற்கான இரத்தக்களறிகளாகும்.

சூப்பர்301-ஏகாதிபத்திய நிர்பந்தம்

அத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்தங்கிய நாடுகளை தனது சூப்பர் 301 என்ற வர்த்தகச் சட்டத்தை முன்வைத்து மிரட்டுகிறது. கண்டுபிடிப்புகள் பதிவு விஷயத்தில் இந்தியா கடைபிடிக்கும் உற்பத்தி முறையிலான உரிமம் என்பதற்கு பதிலாக, கண்டுபிடிப்புக்கான உரிமம் என்பதை இந்தியா ஏற்க வேண்டும் என நிர்பந்திக்கிறது. அண்மையில் இந்தியாவிற்கு வந்த அமெரிக்க வர்த்தகப் பிரதிநி கார்லாஹில்ஸ் அந்நிய மூலதனத்திற்கான இந்திய பணித்துறைக் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று கோரியதோடு வர்த்தகம் சார்ந்து துறைகளில் அந்நிய மூலதனத்திற்கு ஏற்றுமதி வருவாய் ஒரு நிபந்தனையாக இருக்க வேண்டும் என்ற இந்திய அரசாங்கத்தின் சட்ட ஷரத்தையும் எதிர்த்திருக்கிறார். இந்த ஏகாதிபத்திய நிர்பந்தங்களுக்கு அடிபணியும் வகையில் புதிய பொருளாதார கொள்கைகளின் மூலம் கதவு திறந்து விட்டுள்ளது நரசிம்மராவின் அரசாங்கம்.

ஸ்டாலினிசத்தின் காட்டிக் கொடுப்பு

சர்வதேசரீதியாக ஸ்டாலினிசமும், சமூக ஜனநாயகமும் கொடுத்த எதிர்புரட்சிகர ஒத்துழைப்பின் பேரில்தான், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரும் ஏகாதிபத்தியத்தால் உலக முதலாளித்துவத்தை உயிர் பிழைக்க வைக்க முடிந்தது. அக்டோபர் புரட்சியினால் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் தேசிய மயமாக்கப்பட்ட சொத்துறவுகளில், ஒட்டுண்ணியாக இருந்த ஸ்டாலினிச அதிகாரத்துவம்—தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து 'பெரஸ்த்ரொய்கா' முதலாளித்துவ மறுசீரமைப்புக் கொள்கையை அமல்படுத்துகின்றது. ஸ்டாலினிச அதிகாரத்துவம் கடந்த காலத்தில் போட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற நடிப்பை எல்லாம் உதறி விட்டு, பின்தங்கிய நாடுகளின் ஆட்சியாளர்களைக் கைவிட்டு விட்டது. உச்சக் கட்டமாக வளைகுடாப் போரில் ஈராக்கில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் ஏகாதிபத்திய காலனி ஆதிக்கப் போருக்கு நேரடி ஒத்துழைப்பை சோவியத், சீன ஸ்டாலினிச அதிகாரத்துவங்கள் வழங்கின. இந்த நிலை பின்தங்கிய நாடுகளின் ஆட்சியாளர்களை ஏகாதிபத்தியங்களிடம் தஞ்சம் புகுந்து தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அச்சுறுத்தலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் ஓட்டத்தை விரைவு படுத்தியிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கால உடன்படிக்கைகளின் அம்சமாக, 1947ல் இந்திய உபகண்டத்துத் தொழிலாள வர்க்கத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து, (ஏகாதிபத்தியம் ஸ்டாலினிசத்தின் ஒத்துழைப்புடன்) பிறப்பித்ததே இந்தியா, பாகிஸ்தான், பர்மா, இலங்கை போன்ற மத, வகுப்புவாத அரசுகளாகும். மத அடிப்படையில் முஸ்லீம்கள் தனி தேசிய இனமென்று மார்க்சியத்தைக் கொச்சைப் படுத்தி 1947 துண்டாடலுக்கு இந்திய ஸ்டாலினிஸ்டுகள் துணை போனார்கள் பாசிசத்துக்கு எதிரான 'ஜனநாயக ஏகாதிபத்தியங்கள்' எனும் ஸ்டாலினின் கொள்கையை ஏற்று, பிரிட்டிஷ் காலனித்துவத்துக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததுடன், சுதந்திரமாக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த டிராட்ஸ்கிஸ்டுகளை, பிரிட்டிஷ் போலீசாரிடம் ஒப்படைத்தும், உளவுவேலை செய்தும் ஆகஸ்டு கருங்காலிகள் என அவப்புகழ் பெற்றவர்கள் இந்திய ஸ்டாலினிஸ்டுகள்.

ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக 1947 உபகண்ட பிரிவினையை இன்றும் காத்து வரும் இந்திய ஸ்டாலினிஸ்டுகள் ஸ்டாலின் வகுத்த 'மக்கள் முன்னணி' வர்க்க கூட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம், இந்திய ஆளும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஆபத்து ஏற்படா வண்ணம் இன்றும் பாதுகாத்து கொண்டிருக்கிறார்கள். 1947-ல் இருந்து ஆண்ட காங்கிரஸ் கட்சி அம்பலப்பட்டு செல்வாக்கு இழந்த போது இகாங் ஜனதா தளம் எனவும் சில வேளைகளில் 'பாரதீய ஜனதா' மத வகுப்புவாதத்துக்கு எதிராக இ.காங்கிரஸ் தேவலாம் என்றும் மாறி மாறி தங்களது ஆதரவைக் கொடுப்பதன் மூலம், மொத்தத்தில் இந்திய முதலாளித்துவத்தின் ஆட்சி அதிகாரத்துக்கு-சுதந்திரமான தொழிலாள வர்க்க எழுச்சியினால் ஆபத்து ஏற்படாதவாறு பாதுகாத்து வருகின்றார்கள். ஆளும் வர்க்கத்திற்கு எதிராகக் திரண்டெழும் தொழிலாளர்களையும், விவசாயிகளையும், ஒடுக்கப்படும் மக்களையும் திசை திருப்பி பாராளுமன்றத் தேர்தல் முறையில் சோசலிச அரசை ஏற்படுத்தப் போவதாக தொடர்ந்து தொழிலாள வர்க்கத்தை சீர்திருத்த பிரமைக்குள் புதைத்து வருகின்றார்கள். முழுமையாக ஏகாதிபத்தியத்துக்கு கதவைத் திறந்துவிட்ட, தனியார்மயத்தை தாராளமாக்கிய நரசிம்மாவின் சிறுபான்மை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது, (.நா.வில் ஈராக்கிற்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் போர்த் தீர்மானத்தை நிறைவேற்ற அதில் கலந்து கொள்ளாது ஆதரவளித்த சீன ஸ்டாலினிச அதிகாரத்துவத்தைப் போல்) சிபிஐ (எம்) சிபிஐ நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது, அவரது அரசைத் தக்க வைத்தனர். இது பற்றி சிபிஐ (எம்) மத்தியகுழு உறுப்பினரும், மேற்கு வங்க முதலமைச்சருமான ஜோதிபாசு குறிப்பிடுகையில், “இன்னொரு தேர்தலை இப்போது நடத்த முடியாது. மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் நம்பிக்கை இழந்து விடுவார்கள்” என்றார்.

முதலாளித்துவ அமைப்புக்கு தொழிலாள வர்க்கத்தைப் பலியிடும் ஒருநாள் பந்த்

காங்கிரஸ் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக நடத்துவதாக ஸ்டாலினிஸ்டுகள் கூறிக் கொள்ளும் ஒரு நாள் பந்த், மார்க்சிய விரோத வர்க்கக்கூட்டு மக்கள் முன்னணிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் தன்னியல்பாக போராட்டம் வெடித்து எழுந்து வருகையில் அதனை வர்க்கக்கூட்டு அடிப்படையில் 1 நாள் பந்த்தாக முன்னெடுத்து போராட்டத்தை மழுங்கடித்து விடுவது ஸ்டாலினிஸ்டுகளின் தந்திரோபாயமாகும், இந்திரா காந்தியின் காங்கிரஸ் முதலாளித்துவ அரசாங்கத்துக்கு எதிராக 1982 ஜனவரி 19ல் ஸ்டாலினிஸ்டுகள் முன்னின்று நடத்திய பந்த்தும், ராஜீவ்காந்தியின் ஆட்சிக் காலத்தில் 1989 ஆகஸ்டு 30ல் நடாத்திய ஒருநாள் பாரத் பந்த்தும், சந்திரசேகர் ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்த ஒருநாள் பாரத் பந்த்தும்—முதலாளித்துவ வர்க்கத்தை தொழிலாள வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட அச்சுறுத்தலில் இருதநு பாதுகாப்பதற்கான தந்திரோபாயமாகவே கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று ஏகாதிபத்தியத்தின் பழைய ஒழுங்குக்கு அத்திவாரமாக இருந்த, போருக்குப் பிந்தைய உடன்படிக்கைகள் நொறுங்கிய நிலையில் நவம்பர் 29ல் ஸ்டாலினிஸ்டுகள் நடத்த இருக்கும் 'பாரத் பந்த்' புதிய உலக ஒழுங்கை ஏகாதிபத்தியம் நிர்மானிப்பதற்கு வசதியாக இந்தியத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சியின் பால் செல்லவிடாமலும் திசை திருப்புவதற்காகவும், தொழிலாள வர்க்கத்தின் மீதான முதலாளி வர்க்கத்தின் சுரண்டலை அதிகரிப்பதற்குமான மாயமான் ஆகப் பயன்படுத்துகின்றனர். சிபிஐ (எம்) மின் ஜோதிபாசு லண்டன் சுற்றுப் பயணத்தின் போது, வெளிந்நாடில் வாழும் இந்திய முதலாளிகளையும் பிற முதலீட்டாளர்களையும் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறும், இப்போது சாதகமான நிலை இருக்கிறது என்று அழைப்புவிட்டார். அப்படி அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான 'சாதகமான நிலையை' ஏற்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து - ஒருநாள் அகில இந்திய பந்த் நடத்துவதாகக் கூறிக் கொள்வது அப்பட்டமான இரட்டை வேடமாகும். இதே நரசிம்மராவுக்கு எதிராக, வேட்பாளரை நிறுத்தாமல் அவரையும் அவர் ஆட்சியையும் பாதுகாப்பு வரும் சிபிஐ (எம்), சிபிஐ ஸ்டாலினிஸ்டுகள் மற்றும் இடதுசாரி கட்சிகளின் 'பந்த்' வாய்ச்சவடால்கள் படுபிற்போக்குத் தனமான மோசடியாகும்.

கடந்த காலத்தில் இருந்து இன்றுவரை ஒவ்வொரு போராட்டத்தையும், ஏனைய பகுதித் தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைக்காமல் தனிமைப்படுத்தியே வந்து, இறுதியில் தொழிலாள வர்க்கத்தை சோர்வடையச் செய்து, முதலாளிகளின் ஒடுக்குமுறைக்குப் பணிந்து போகச் செய்தது. ஸ்டானிஸ்டுகளின் திட்டமிட்ட எதிர்ப்புரட்சிகர வேலையாகும். 1982ல் தத்தாசமந்த் தலைமையில் நடைபெற்ற லட்சம் துணி ஆலைத் தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவாக ஏனைய பகுதித் தொழிலாளர்களை களத்தில் இறக்க மறுத்து காட்டிக் கொடுத்தனர். 1974 ரயில்வெ தொழிலாளர் போராட்டத்தையும், 1989ல் 12 துறைமுகங்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தையும், 1989ல் லட்சம் தொலைபேசித் தொழிலாளர்கள் போராட்டத்தையும், இவ்வாறே தான் காட்டிக் கொடுத்தனர். 800 ஆலைகளுக்கு மேல் கதவடைப்புச் செய்யப்பட்ட நிலையில், நலிவடைந்த நிலையில், பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளுக்கு ஆதரவான புதிய பொருளாதாரக் கொள்கையை முறியடிக்க-முதலாளித்துவத்திடம் இருந்து உற்பத்திச் சாதனங்களை பறித்தெடுப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க மறுக்கின்றதுடன், தடையாகவும், ஏகாதிபத்தியத்தினுடைய முதலாளித்துவத்தினதும் திறம்மிக்க ஏஜண்டாக செயல்படுகின்றனர். சர்வதேச அளவில் எவ்வாறு ஸ்டாலினிச அதிகாரத்துவம் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து 'பெரஸ்துரொய்கா' முதலாளித்துவ மீட்சிக் கொள்கையைத் திணித்து அக்டோபர் புரட்சியின் வெற்றிகளை அழிக்கின்றதோ அதேபோல் கடந்த காலத்தில் தொழிலாள வர்க்கம் எண்ணற்ற தியாகங்கள் செய்து போராடி எடுத்த வெற்றிகள் ஒவ்வொன்றையும் முதலாளி வர்க்கத்திடம் தாரை வார்த்து வருகின்றன ஸ்டாலினிச அதிகாரத்துவங்கள்.

முதலாளி வர்க்கத்தால் தீர்க்க முடியாத ஜனநாயகக் கடமைகளும் ஸ்டாலினிசமும்

நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்ற திராணியற்ற முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டு, நிலத்தில் ஏகபோகத்தையும், கொத்தடிமையாக விவசாயக் கூலித் தொழிலாளர்களையு ஒடுக்கி வருகின்றது. கிராமப்புறங்களில் கொழுந்து விட்டு எரியும் சாதிய ஒடுக்குமுறையின் பின்னால் நிலத்திற்கான வேட்கை கொண்ட வர்க்கப் போராட்டமே மறைந்து கிடக்கின்றது. பெரும்பாலான உழைக்கும் விவசாய கூலித் தொழிலாளர்கள் சாதி ரீதியாய் பிளவுபடுத்தப்பட்டு, உயர்சாதி நிலப்பிரபுக்களால் உயிரோடு கொளுத்தப் படுகின்றனர். கீழ் வெண்மனி முதல் சுண்டூரு வரையிலான நிகழ்ச்சிகள் வெளி உலகுக்குத் தெரியா வண்ணமும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கடந்த காலங்களின் ஸ்டாலினிசக் கட்சிகளின் காட்டிக்கொடுப்புகளினால், இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சோசலிச வேலைத்திட்டம் நிராகரிக்கப்பட்டதால், தேசிய இன ஒடுக்கலுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் மக்கள் குட்டி முதலாளித்துவ தலைமைகளின் பின் அணிதிரளும்படி கைவிடப்பட்டனர். இந்தத் தலைமைகள் இப்போராட்டங்களை வர்க்கப் போராட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு, ஏகாதிபத்தியத்தின், முதலாளித்துவத்தின் கருவிகளாகத் தான் இன்றவும் செயல்படு வருகின்றனர்.

ஏகாதிபத்தியம் ஸ்டாலினிசத்தின் ஒத்துழைப்புடன், வகுப்புவாத அரசுகளால் பிளவுபடுத்தப்பட்டு தேசிய முதலாளித்துவத்திடம் கை மாற்றப்பட்ட — இந்தியா, பாகிஸ்தான், சிறிலங்கா, பர்மா அரசுகள் இன்றும் தேசிய இனப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அடக்கி ஒடுக்கி வருகின்றன. மொத்தத்தில் இந்திய உபகண்டம் தேசிய இனங்களின் சிறைக்கூடமாகத் தான் இருக்கின்றது. தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுபவர்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு காஷ்மீர், தமிழீழம், அசாமில் நாளும் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சிறுபான்மை சீக்கிய மதப் பிரிவினர் பஞ்சாப்பில் நாளும் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஒடுக்குமுறைக்கு சிபிஐ (எம்) ஸ்டாலினிஸ்டுகள் முழு ஆதரவு தருவதுடன், 'இந்திய ஒருமைப்பாடு' எனும் பேரில் தேசிய வெறியின் கீழ் தொழிலாள வர்க்கத்தைப் பிணைத்துப் போடுகின்றார்கள். இந்து வெறி வகுப்புவாத பி.ஜே.பி. உட்பட ஏனைய முதலாளித்துவ இ.காங். ஜனதா தளம் ஆகியோருடன் 'ஒருமைப்பாட்டுக் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஸ்டாலினிஸ்டுகள், தேசிய இனங்களின் மீதான ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு ஆதரவளிப்பதன் மூலம், தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்திய முதலாளித்துவத்தின் பிடியை இறுகச் செய்யும் வேலையை சுலபமாக்குகின்றார்கள். தொழிலாள வர்க்கத்தின் நேச சக்திகளான விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் சோசலிசத்திற்கான வேலைத்திட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் கொண்டு வருவதன் மூலமே இவர்களுக்கு விடிவு கிடைக்கும்.

நதிநீர்ப் பங்கீடுகள் தொடர்பாகவும், மாநிலங்களுக்கிடையில் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. குறிப்பாகக் காவிரி ந்திநீர்ப் பங்கீடு தொடர்பாக ஆளும் வர்க்கம் இனரீதியாக பிளவுகளை ஏற்படுத்துவதற்கு செயலில் இறங்கியதை அண்மையில் காண முடிந்தது. இதற்கு சிபிஐ (எம்) சிபிஐ ஸ்டாலினிஸ்டுகள் முழுமையான ஆதரவைத் தந்தனா கர்னாடக இ.காங்' அரசு காவிரி நீரைவிட மறுத்து பந்த் நடத்தியதில் அங்குள்ள ஸ்டாலினிஸ்டுகள் கலந்து கொண்டனர். தமிழ் நாட்டில் உள்ள அதிமுக முதலாளித்துவ அரசு நீர்விடக் கோரி பந்த் நடத்திய போது அதற்கும் ஆதரவளித்தனர். இங்குள்ள ஸ்டாலினிஸ்டுகள் இது ஸ்டாலினிஸ்டுகளின் அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தையும், பிராந்திய வெறியையுமே காட்டுகிறது. எப்படி சோவியத் ஸ்டாலினிச அதிகாரத்துவங்கள் தங்களது சலுகையின் அளவைக் கூட்ட தனித்தனியான பேரங்களுக்காக, தேசிய வெறிக்கு அடிபணிந்து பல குடியரசுகளை உடைக்கின்றார்களோ, அதே போல் இந்திய ஸ்டாலினிஸ்டுகளும் பிராந்தியத் துண்டாடல்களில் ஆதாயம் காண்பவர்களாக மாறி வருகின்றனர்.

வேலையின்மையும் மண்டல் கமிஷனும்

லாப நோக்கத்திற்கான முதலாளித்துவ உற்பத்தியின் கீழ் வேலையின்மை இருந்தே தீரும், முதலாளி வர்க்கம் உபரி உழைப்பை சுரண்டுவதற்கும், மலிவான கூலியுழைப்பைப் பெறவும் முதலாளித்துவத்திற்கு வேலையின்மை இன்றியமையாததாக இருக்கிறது. சந்தைக்கான அராஜக உற்பத்தியில் போட்டா போட்டியில் ஏற்படும் சீரழிவுகளாலும், ஆலைகளை நவீனமயமாக்கல்களினாலும் இருக்கின்ற வேலைகளும் இல்லாமல் ஆக்கப்படுகின்றன, தற்போதைய வேலை இல்லாதோர் எண்ணிக்கை பன்னிரண்டு கோடி ஆகும். இல்லாத வேலைகளுக்கு இட ஒதுக்கீடாக — சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு எனும் பேரில் ஜனதா தள ஆட்சி அமல்படுத்திய மண்டல் கமிஷனின் பரிந்துரை இளைஞர்களிடையே பாகுபாட்டினையும் பகை உணர்வுகளையும் ஊட்டி வருகிறது. சாதிரீதியான இடஒதுக்கீடு எனும் பிற்போக்குக் கொள்கையை ஸ்டாலினிஸ்டுகளும் மாவோயிஸ்டுகளும் ஆதரிப்பதன் மூலம், முதலாளித்துவத்துவத்துக்குள் வேலையின்மை பிரச்சினையை சாந்தப்படுத்தும் முதலாளித்துவ வர்க்கதிதன் திட்டங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பிரமைகளை விதைத்து வருகின்றனர். வேலையின்மைக்கு எதிராக கிளர்ந்து எழும் இளைஞர்களை எதிரும் புதிருமாய் நிறுத்தும் இத்திட்டத்தை ஆதரிப்பதன் மூலம், வேலையின்மைக்கு எதிராகப் போராடும் இளைஞர் இயக்கத்தைப் பலவீனப்படுத்துகின்றார்கள்.

இந்துமத வெறி வகுப்புவாத பிஜேபியும் பாசிசம் வளர்வதற்கான பேரபாயமும்

பாசிசம் என்பது முதலாளித்துவத்தின் கோரமான வடிவமாகும். முதலாளித்துவத்தின் கோரச் சுரண்டலுக்காக தொழிலாளர் வர்க்க அமைப்புகள் எல்லாவற்றையும் நசுக்கி, தடை செய்து ஆளும் வர்க்கம் தனது சுரண்டலாட்சியை ரத்த வெள்ளத்தில் நடத்திச் செல்வதாகும்.

1947ல் இருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தேசிய முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்தின் நலனைப் பேணும் அரசாங்கங்களை ஆளும் வர்க்கத்தின் (காங், ஜனதா, .காங், ஜனதா தளம்) பல்வேறு துருப்புச் சீட்டுக்களை வைத்து ஸ்டாலினிஸ்டுகளின் ஒத்துழைப்புடன் நடத்திக் கொண்டு வந்தது. ஆனால் இன்றுள்ள காலப்பகுதியில், திரண்டு எழுந்து வரும் வர்க்கப் புரட்சி அலைகளை நசுக்குவதற்கு பாசிச வடிவத்தை எடுப்பதற்காக பி.ஜே.பி. போன்ற இந்து மதவாத, முதலாளித்துவ வர்க்க கட்சியை முன்னுக்குக் கொண்டு வருகின்றது. 1933ல் ஜெர்மன் தொழிலாள வர்க்கப் புரட்சியை நசுக்குவதற்காக ஹிட்லரின் தலைமையில் யூதர்களைக் கொன்று குவித்து ஜெர்மனியர், ஆரியர் என்ற வெறியுடன் கொண்டு வரப்பட்டதைப் போன்றே, பிஜெபி யும் இந்துமத வெறியைக் கக்கிக் கொண்டு சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிரான படுகொலைக்குத் தூபமிட்டு வளர்ந்து வருகின்றது.

ஏழை விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும், சிறுபான்மை இனக் குழுக்களுக்கும், மதப் பிரிவினரும், அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் புரட்சிகர ஜனநாயக வேலைத் திட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தலைமை கொடுக்க விடாது ஸ்டாலினிஸ்டுகள் தடுத்ததால் இவை குட்டி முதலாளித்துவ, பிற்போக்கு, மதவெறி முதலாளித்துவ கட்சிகளின் பால் அணிதிரளும்படி பொறிக் கிடங்குக்குள் தள்ளப்பட்டனர்.

பாசிசம் இன்னொரு வகையிலும் காலூன்ற முயற்சிக்கும். கிராமப்புற விவசாயிகளையும், நகர்ப்புற குட்டி முதலாளித்துவத்தையும் தளமாகக் கொண்டுள்ள மாவோயிச குழுக்கள் வளர்ச்சியடைவதையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும், தொழிலாள வர்க்கத்தின் தலைமையை நிராகரித்து, நான்கு வர்க்கக்கூட்டு மக்கள் முன்னணி வேலைத்திட்டத்தில் செயல்படும் குட்டி முதலாளித்துவ மாவோயிச குழுக்களை தங்களின் திவாலான அரசியல் வேலைத் திட்டத்தின் காரணமாகவும் வர்க்க ஊசலாட்டத்தின் காரணமாகவும் ஆளும் வர்க்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். சிறிலங்காவில் இப்படி வளர்ந்து வந்த ஜே.வி.பி. இயக்கம் இறுதியில் தொழிலாள வர்க்கத்தை இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தி வேலை நிறுத்த உரிமையையும் வேலைக்குப் போகும் உரிமையையும் துப்பாக்கி முனையில் நசுக்கினர். தொழிலாள வர்க்க இயக்கங்களின் தலைவர்களையும், தொழிலாளர்களையும் சுட்டுப் பொசுக்கினர். இவ்வாறு முதலாளித்துவத்தின் நலனைக் காக்க தொழிலாள வர்க்கத்தைப் பலியிடும் பாசிச சக்தியாக வளர்ந்தனர். அதன் சொந்த முடிவு அதன் அரசியல் திவால் தன்மையினால் ஏற்பட்ட போதிலும் அதன் தளமாக இருந்த இளைஞர்கள் லட்சக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். மொத்தத்தில் தொழிலாள வர்க்கத்தின் நேச சக்தியான கிராமப்புற ஏழை விவசாயிகளை பேரளவில் கொன்று குவிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தனர், ஒருபுறம் அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்குவதற்குப் பதிலீடாக வெறும் ஆயுதத்தை முன் வைத்துப் போராட்டம் நடத்தும் மாவோயிசக் குழுக்களையும், மறுபுறம் இந்து மதவாத வெறியைத் தூண்டி வளர்த்து வரும் பி.ஜே.பி. போன்றவற்றின் மூலமும் பாசிசத்தை வளர்த்து விட இந்திய ஆளும் வர்க்கம் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பி.ஜே.பி. யும் பஜ்ரங்தளம், சிவ சேனை, விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளும் சேர்ந்து 16ஆம் நூற்றாண்டு அரசன் பாபரின் மசூதியை இடித்து கற்பனைக் காவியத்தின் நாயகனான இராமனின் கோவிலைக் கட்டும் வெறியை பிரச்சாரப்படுத்திக் கொண்டு வருகின்றன. இதன் மூலம் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிரான வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு, இந்திய உபகண்டத்துத் தொழிலாள வர்க்கத்தை மத ரீதியில் துண்டாடியது. போதாதென்று, தொடர்ந்து அதனைப் பேணும் வேலையைச் செய்து வருகின்றன. உத்தரப் பிரதேச பா... அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கோயில் கட்ட நிலத்தைக் கையகப்படுத்தியதும், பாபர் மசூதியின் மேல் ஆக்கிரமிப்பு நடத்த அனுமதித்ததும் மத, வகுப்புவாத கலவரங்களைத் தூண்டிவிடும் நோக்குடையதாகும். அலிகார் ஹைதராபாத் போன்ற மதக் கலவரங்களை ஆளும் வர்க்கத்தால் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

மதவகுப்பு வாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சுரண்டல்களில் இருந்து விடுபடுவதற்கான சோசலிசத்திற்கான போராட்டத்துடன் தொடர்புடையதாகும்; ஆனால் சோசலிசத்திற்கான போராட்டத்தை நிராகரிக்கும் ஸ்டாலினிஸ்டுகள் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக மத நல்லிணக்க ஊர்வலத்துடன் நிறுத்திக் கொண்டு, வகுப்பு வாதத்தைத் தூண்டிவரும்—முதலாளித்துவ கட்சிகளுடனேயே கூட்டு வைத்துக் கொள்கின்றனர். பஞ்சாப்பில் தேர்தலுக்கான அறிவிப்பு வந்ததும், பி.ஜே.பி. யுடன் கூட தேர்தலில் தொகுதிகளில் போட்டியிடாமல், ஸ்டாலினிஸ்டுகள் ஒத்துழைப்புத் தர முன்வந்ததும், மத, வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டம் வெறும் வாய்ச்சவடால் தான் என்பதை நிரூபிக்கின்றது.
இந்திய-பாகிஸ்தான் யுத்தங்கள்

1947ல் இந்திய உபகண்டத்துத் தொழிலாளர்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து, ஏகாதிபத்தியத்திடமிருந்து கைமாற்றிக் கொண்ட தேசிய முதலாளித்துவ, ஆட்சியாளர்கள், இந்திய பாகிஸ்தானில் தொழிலாள வர்க்கத்தை தொடர்ந்து பிளவுபடுத்தவும் உள்நாட்டில் சுரண்டலை உக்கிரப்படுத்தவும் மூன்று யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். இரு நாடுகளிலும் உள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்கள் இன்றும் தேசிய வெறியை ஊட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர். உள்நாட்டில் சொந்த மக்களைக் கொன்று குவிக்கும் ஆட்சியாளர்கள் பாதுகாப்பு என்ற பேரில் ராணுவத்திற்கு பல கோடி செலவினங்களைக் கூட்டியுள்ளனர். நடந்து முடிந்த ஒவ்வொரு யுத்தத்தின் செலவும் உள்நாட்டு மக்களின் தலையில் சுமத்தப்பட்டன. தொழிலாள வர்க்கத்தின் ரத்தத்தில் கறந்தெடுக்கப்பட்டன. உள்நாட்டில் வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்களும்; ஒடுக்கப்படும் மக்களும் திரண்டெழும் பொழுதெல்லாம் ஆளும் வர்க்கம் யுத்த வெறியையும் தேசிய வெறியையும் கட்டவிழ்த்து விட்டு, தொழிலாள வர்க்கத்தினை திசை திருப்பும், இந்த பிரச்சாரத்திற்கு ஸ்டாலினிஸ்டுகளும் ஒத்துழைப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை தேசியவாத நுகத்தடியில் மாட்டி வைக்கும் வேலையைச் செவ்வனே செய்து வருகின்றனர்.

இந்திய முதலாளித்துவ ராணுவம், அசாம் காஷ்மீர் பஞ்சாப் தமிழீழம் மணிப்பூர் பகுதிகளில் கட்டவிழ்த்து விட்ட அரச பயங்கரவாதத்திற்கு ஸ்டாலினிஸ்டுகள் முழு ஒத்துழைப்புத் தருகின்றனர். பங்களாதேஷை விடுவிக்க எனும் பேரில் அங்குள்ள முக்திவாஹினி வீரர்களைக் கொன்றொழித்த இந்திய முதலாளித்துவ ராணுவம் 1989ல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்க அனுப்பப்பட்டது. 1961ல் ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம், 1989ல் மக்கள் வேலைநிறுத்தம், 1990ல் துறைமுகத் தொழிலாளர் போக்கிற்கு எதிராகவும் ஈடுபடுத்தப்பட்டது' இந்த முதலாளித்துவ ராணுவத்தை நமது இராணுவம் என்றும் தமிழீழத்தில் நடத்திய படுகொலைக்கு நன்றி அறிவிப்பு தீர்மானம் ஸ்டாலினிஸ்டுகளால் சி..டி.யு. 5வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்துவரும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒடுக்க ஒடுக்குமுறை எந்திரமான முதலாளித்துவ இராணுவம், போலீஸ், BSFC ஆகியன நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.

கருப்புச் சட்டங்கள்

1947லிருந்து இன்று வரை மத்தியிலும் மாநிலத்திலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் சரி, கேரளா, மே. வங்காளத்தில் ஆட்சி ஏற்ற ஸ்டாலினிச கட்சி அரசாங்கங்களுக்கும் சரி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற கொடிய சட்டங்களைப் போட்டு தொழிலாளர்களையும் ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களையும் நசுக்கி வருகின்றன. கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான ஜனநாயக உரிமைகள், கூட்டம், மாநாடு கூட்டும் உரிமை, பத்திரிகை உரிமைகளை முதலாளித்துவ ஜெயலலிதாவின் அதிமுக அரசாங்கமும், காங்கிரஸ் அரசாங்கமும் போலீசின் பூட்சுகளின்கீழ் வைத்து நசுக்குகின்றன. தமிழீழ தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகப் பேசுவோர் பயங்கரவாதிகளாகவும், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்போர் தேசத் துரோகிகளாகவும், அரச எந்திரங்களால் பிரச்சாரம் செய்யப் படுகின்றனர். ஏகாதிபத்தியப் போருக்கும் காலனித்துவத்துக்கும் எதிராக சோசலிசத் தொழிலாளர் கழகம் நடத்திய முன்னோடி மாநாட்டின் போது போலீசின் ஆத்திரமூட்டல் தலையீடும், மாவோயிஸ்டுகளின் தமிழீழ அகதிகளுக்கு ஆதரவான மாநாட்டைத் தடை செய்ததும், வளைகுடாப் போர் எதிர்ப்பு ஊர்வலங்களைக் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கியமையும் ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய விசுவாசத்தையும், பீதியையும் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

டிராட்ஸ்கிச வேலைத்திட்டம்

புரையோடிப் போய்விட்ட முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எந்த தேசியவாத வேலைத் திட்டமும் தீர்வைத் தராது, உலக முதலாளித்துவத்தைத் தோற்கடித்து, உலகத் தொழிலாள வர்க்கம் உற்பத்தி சக்திகளைத் தனது கையில் எடுத்து, திட்டமிட்ட பொருளாதார முறையில் தேவைக்கேற்ற சோசலிச உற்பத்தி முறைக் கொண்டு வரும் - உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தின் மூலமே, தீர்வு காண முடியும். இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பகுதியாக இந்திய டிராட்ஸ்கிசக் கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகத்தைக் கட்டி எழுப்ப வேண்டியது மிக இன்றியமையாததாகும்.

இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகளால் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் விவசாயிகள், குட்டி முதலாளிகள், ஒடுக்கப்படும் தேசிய இனம், சிறுபான்மை மொழி, மதப்பிரிவினர் அனைவருக்கும் தொழிலாளர் வர்க்கம் தலைமை கொடுக்கும் சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் மூலமே விடிவு ஏற்படும் - அந்த சோசலிசப் புரட்சியும் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படும் உலக சோசலிசப் புரட்சி முன் நோக்கின் மூலமே முழுமை பெறும். இதுதான் டிராட்ஸ்கி காட்டிய நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் சாராம்சம். மாறாக ஸ்டாலினிச அதிகாரதுதவம் முன்னெடுத்த 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற பிற்போக்கு தேசியவாதக் கொள்கை-சோவியத் யூனியனில் ஸ்டாலினிசக் கட்சியை கரைத்ததிலும், கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகள் கலைந்ததிலும் தனது திவால் தன்மையை வெளிப்படுத்தி விட்டது. ஸ்டாலினிசம் ஏகாதிபத்தியத்தின் நேரடி ஏஜென்சியாகத் தொழிலாளர் வர்க்க இயக்கத்துக்குள் இயங்கி வருகிறது. இதனைத்தான் 1938ல் லியோன் டிராட்ஸ்கி நான்காம் அகிலத்தின் ஸ்தாபன வேலைத்திட்டமான 'இடை மருவு வேலைத்திட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

அகிலமானது (ஸ்டாலினிச அதிகாரத்துவத் தலைமையின்கீழ் இருந்த முன்றாம் அகிலமானது) சீரழிந்து செல்லும் முதலாளித்துவ சகாப்தத்தில் சமூக ஜனநாயகத்தின் பாதையைப் பின்பற்றத் தொடங்கி உள்ளது. ஆனால் பொதுவாக, அங்கே வரிசைக்கிரமமாக சமூக சீர்திருத்தங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. பாட்டாளி வர்க்கத்தின் ஒவ்வொரு முக்கிய கோரிக்கையும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு முக்கிய கோரிக்கையும் தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவ சொத்துறவுகளின் மற்றும் முதலாளித்துவ அரசின் எல்லைகளுக்கு அப்பால் செல்கிறது.

நான்காம் அகிலத்தின் தொலைநோக்குப் பணி முதலாளித்துவத்தை சீர்திருத்துவதில் அல்ல; அதனைத் தூக்கி வீசுவதிலேயே உள்ளது, அதனுடைய அரசியல் நோக்கம் முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து உடைமைகளைப் பறித்தெடுப்பதற்காக பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை ஏற்படுத்துவது ஆகும்" (இடைமருவு வேலைத்திட்டம், 1938, பக்கம் 4, லேபர் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு)

இந்திய உப கண்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளான இந்திய டிராட்ஸ்கிச கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகமும், இலங்கை டிராட்ஸ்கிச கட்சியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும்—இந்திய உபகண்ட மதவகுப்புவாதப் பிரிவினைக் கெதிராக—உலக சோசலிசக் குடியரசுகளின் பகுதியாக இந்திய உபகண்ட சோசலிசக் குடியரசுகளை அமைக்கும் உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கை தொழிலாள வர்க்கத்தின் முன் வைக்கின்றது. அந்த அடிப்படையில் ஏகாதிபத்திய கால்வருடி காங் அரசாங்கத்தின் தொழிலாள விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராட இந்தியத் தொழிலாள வர்க்கம் உலகத் தொழிலாள வர்க்கத்துடன் புரட்சிகர ஐக்கியம் கொண்டு இந்திய முதலாளித்துவ வர்க்கத்தைத் தூக்கிவீசுவதற்கான வேலைத்திட்டத்தைப் பற்றி விவாதிக்க வருகின்ற 'ஏப்ரல் மாதம்' அகில இந்திய தொழிலாளர் மாநாட்டைக் கூட்டவிருக்கிறது. அதில் கலந்து கொள்ளுமாறு இந்திய தொழிலாள வர்க்கத்தைச் சோசலிசத் தொழிலாளர் கழகம் அறைகூவி அழைக்கிறது. அத்துடன் வருகின்ற நவம்பர் 29ல் ஸ்டாலினிஸ்டுகள் முன் நின்று நடத்த இருக்கும் ஒரு நாள் பாரத் பந்த்தை காலவரையற்ற அகில இந்திய வேலை நிறுத்தமாக நீடிக்கப் போராடுமாறு இந்தியத் தொழிலாள வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் ஏழை விவசாயி மற்றும் ஒடுக்கப்படும் சிறுபான்ஐ தேசிய, இன, மொழி, மத பிரிவினருக்கும் அறை கூவல் விடுக்கின்றது.

ஃ முதலாளித்துவ ஆட்சி அமைப்புகளுக்கு மாற்றாக, தொழிலாளர்களின் சபைகளை (சோவியத்துக்களை) நகர்ப் புறத்திலும், கிராமப் புறங்களில் தொழிலாள-விவசாயி சோவியத்துக்களையும் அமைக்க வேண்டும்.

ஃ முதலாளித்துவ அரச ஒடுக்குமுறை சாதனங்களாகிய போலீஸ், இராணுவம் இவற்றின் ஒடுக்குமுறையில் இருந்து பாதுகாக்க தொழிலாளர்களின் சொந்த படை அணிகளை அமைக்க வேண்டும்!

ஃ ஏகாதிபத்திய வங்கியாளர்களிடமிருந்து பெற்ற அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை நிராகரிக்க வேண்டும்!

ஃ சி.பி.. (எம்) சி.பி.. ஸ்டாலினிச கட்சித் தலைமைகளை முதலாளித்துவக் கட்சிகளுடனான உறவைத் துண்டிக்குமாறு நிர்பந்திக்க வேண்டும்1

ஃ சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய பகுதியாக சோசலிச தொழிலாளர் கழகத்தைக் கட்டி எழுப்ப வேண்டும்!

ஃ முதலாளிகளுக்கு ஒரு பைசா நஷ்டஈடின்றி அனைத்து தொழிற்சாலைகளையும் வங்கிகளையும் தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் தேசிய மயமாக்கும் தொழிலாளர்-விவசாயி அரசாங்கத்தை அமைக்க போராட வேண்டும்.

இந்த அரசாங்கம் நிலப்பிரபுக்களின் நிலங்களை சுவீகரித்து நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பங்கிடும் அனைத்து கருப்புச் சட்டங்களையும் விலக்கி, அரசியல் கைதிகளை விடுவிக்கும், நதிநீர்வளங்களை ஒன்றிணைத்து குடிநீர், பாசனநீர் கட்டுப்பாட்டை இல்லாமல் செய்யும், அனைத்து தேசிய இனங்களின், பிரிந்து போகும் தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும்.

அனைத்து மொழிக்கும் சம அந்தஸ்தினை வழங்கும்.

மதத்தை தனிநபரின் சொந்த விஷயமாகக் கருதும் அதே வேலை மதம் ஸ்தாபன ரீதியாக சுரண்டலுக்கான கருவியாவதை தடை செய்யும். மத நிறுவனங்களின் சொத்துக்களை தொழிலாளர் அரசாங்கத்தின் கீழ் தேசியமயமாக்கும்.

மாதிரக் கூட்டுப் பண்ணைகளை அமைத்து, விவசாயிகளிடையே கூட்டுப் பண்ணைமயமாக்கலைத் தானாக செயற்பட வைக்கும், இதன்மூலம் விவசாயத் துறையை பேரளவில்தொழில் மயமாக்கி சாதிக்கான பொருளாயாத அத்திவாரத்தை இல்லாமல் செய்யும்.

ஆண், பெண் சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் விஞ்ஞான முறையிலான கல்வியையும், வேலைவாய்ப்பையும் உத்தரவாதப்படுத்தும்.

உலகத் தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியம் கொண்டு உலக சோசலிசக் குடியரசுகளை உருவாக்கப் போராடும்.

இதுவரை மனிதகுலம் கண்டுபிடித்த அனைத்து வளங்களையும் பயன்படுத்தி மனித குலத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து, சோசலிச கலாச்சாரம் வளர்ச்சியடையப் போராடும்.