"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Showing posts with label 1991-June. Show all posts
Showing posts with label 1991-June. Show all posts

Saturday, August 6, 2016

போக்குவரத்து தொழிலாளர்கள் மேல் துப்பாக்கிச் சூடும் தொழிற்சங்கத் தலைமைகளின் காட்டிக் கொடுப்பும்!


Thozhilalar Pathai Volume 039
June 1991

வேலூரில் கடந்த மாதம் 6ம் தேதி பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது முதலாளித்துவ அரசு எந்திரமான போலீஸ் நடத்திய காட்டுமிராண்டி தனமான துப்பாக்கி சூட்டையும், தடியடி பிரயோகத்தையும் பணம், நகை போன்ற பொருட்களை கொள்ளையடித்தல் போன்ற ஈனத்தனமான செயல்களையும் சோசலிசத் தொழிலாளர் கழகம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.


மே. 6, 1991 போலீசில் அடாவடித்தனமான, கீழ்த்தரமான நடவடிக்கையை போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்த்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக வேலூர் போக்குவரத்து தொழிலாளர்கள் மேல் போலீசார் மிருகத்தனமான கோர தாக்குதலை நடத்தி உள்ளனர். வேலூரில் உள்ள அனைத்து போலீஸ் படையும் ஆயுதம் தாங்கிய வண்ணம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிராக நடத்திய துப்பாக்கி சூட்டில் ராஜாராம் என்ற இளம் தொழிலாளி கொல்லப்பட்டதுடன் 350க்கும் அதிகமான தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இந்த போலீஸ் படுகொலைக்கும் பெருமளவில் பேருந்துகளை நாசமாக்கியதற்கும், வேலூர் பஸ் டெப்போவை அடித்து நொறுக்கியதற்கும், தொழிலாளர்களின் உடமைகளை கொள்ளை அடித்ததற்கும் பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் ஒரு கால வரையற்ற பொது வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம், இந்திய முதலாளித்துவ கட்சிகளுடன் ஒரு கூட்டரசாங்கத்தில் சேருவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்யும் சி.பி.. (எம்), சி.பி.. தலைமைகளைக் கொண்ட துரோகத் தனமான தொழிற்சங்கத் தலைமைகளால் காட்டிக் கொடுக்கப்பட்டது.

ஸ்டாலினிஸ்டுகளின் இந்த கிரிமினல் காட்டிக் கொடுப்பானது ஒரு முக்கியமான பிரச்சினையை எழுப்புகின்றது, அது இந்த துரோகத் தலைமைகளுக்கு எதிராக ஒரு புதிய புரட்சிகரமான தலைமையை காட்டுவதாகும்.

இந்தியாவின் அண்மைக் காலத்தில் நடைபெற்ற வர்க்கப் போராட்டங்களில் தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் முக்கியமான ஒன்றாகும். வேலூர் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான மிருகத்தனமான போலீஸ் தாக்குதலானது ஒரு போலீஸ், இராணுவ சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துக்கும், விவசாயிகளுக்கும் எதிராக தொடுக்கப்படும் எதிர்ப்புரட்சிகர தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

தமிழ்நாடு தழுவிய அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களின் தன்னெழுச்சியான காலவரையற்ற பொதுவேலை நிறுத்தப் போராட்டமானது, இந்த புரட்சிகர தாக்குதலுக்கு ஒரு சவாலாகும். இது பொது வேலை நிறுத்தத்தை சூழ அனைத்து தொழிலாள வர்க்கத்தையும், விவசாயிகளையும் அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கிறது.

இப்படியான புரட்சிகரமான அணிதிரட்டலை கண்டு ஸ்டாலினிச சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகள் அஞ்சுகின்றன. இதனால் தான் வேலைநிறுத்தத்தை திட்டவட்டமாக காட்டிக் கொடுத்தனர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொழிலாளர்களை மறுபடி வேலைக்குத் திரும்ப செய்தனர். இவ்வாறாக போலீசார் அவர்களது குற்றத்திலிருந்து தப்பிக்க அனுமதித்தார். இதற்கு காரணம் இந்த ஸ்டாலினிச தலைமைகள் முதலாளித்துவ அமைப்பை கட்டிக் காக்க தம்மை 'அர்ப்பணம்' செய்திருப்பதனாலாகும்.

இந்தக் காட்டிக் கொடுப்பு தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான அபாயத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் இந்த துரோகத் தலைமைகள் முதலாளித்துவ வர்க்கத்தின் ஏஜண்டுகளாக செயல்பட்டு முதலாளித்துவ அரசின் ஆயுதப் படைகள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மேலும் கோரத் தாக்குதல் நடத்தவும், உள்நாட்டு யுத்தங்களை நடத்தவும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பதையே நிரூபித்துள்ளது.

இப்படியான காரணங்களினால் இந்த வேலை நிறுத்தப் போராட்ட படிப்பினைகளை தொழிலாள வர்க்கம் மிகக் கவனமாக ஆய்வு செய்து அவசியமான அரசியல் முடிவுகளுக்கு வர வேண்டும்.

வேலை நிறுத்தம் தொடங்கியது எப்படி?

இந்தச் சம்பவம் ஒரு போக்குவரத்து போலீசின் ஆத்திர மூட்டலின் விளைவாக ஏற்பட்டது.

6-5-91 அன்று காலை 5-20 மணியளவில் பஸ் ஸ்டாண்டிலிருந்து சென்ற திருவண்ணாமலை செல்லும் பஸ்ஸில் கைக்குழந்தையுடன் வண்டியை நிறுத்தச் சொல்லி ஓடிவந்த பெண்மணிக்கு மனமிரங்கி வண்டியை நிறுத்தினார் டிரைவர் கணேசன், அப்பொழுது போக்குவரத்து போலீஸ் தகாத வார்த்தைகளால் திட்ட, கண்டக்டர் வி… மரியாதையாகப் பேசுங்க என்று கேட்டும் மேலும் போலீஸ் தரக்குறைவாகப் பேசியதுடன், கண்டக்டரை பலவந்தமாக பஸ்ஸிலிருந்து இழுத்து, ஆட்டோவில் ஏற்றிச் சென்று வேலூர் … காவல் நிலையத்தில் வைத்து அடித்திருக்கின்றனர். ஏனைய பஸ் தொழிலாளர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து பஸ்ஸை நிறுத்தவும், போலீஸ் இன்னும் வெறி கொண்டு—கிருஷ்ண நகரில் இருக்கும் டெப்போவில் சென்று உள்ளிருந்த தொழிலாளர்களை அடித்து நொறுக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியது காலை 8-30 மணிக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்ட ஆயுத போலீஸ்படை (ARP) பணிமனை வாசலில் கோவில் கட்டுவதற்கு குவிக்கப்பட்டிருந்த செங்கற்களை வீசியும், சோடா பாட்டில்களை வீசியும் ஆத்திரமூட்டல் செய்திருக்கின்றனர். பகல் 1-30 மணி அளவில் டெப்போவினுள் உள்ள தொழிலாளர்களின் மண்டை, கை, கால்களை அடித்து, எலும்பை முறித்ததுடன், துப்பாக்கியினாலும் ஐந்தாறு ரவுண்டுகள் சுட்டு அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். அத்துடன் மட்டுமில்லாது வேலூர் பஸ்டாண்டில் சாலைகளில் ஆங்காங்கு தென்பட்ட காக்கிச்சட்டை அணிந்த அனைவரையும் … அடித்து நொறுக்கியிருக்கின்றனர். இந்த அராஜகம் மேலும் மருத்துவமனையிலும் நடைபெற்றதாகத் தெரிகிறது.

கிருஷ்ணா நகர் டெப்போவினுள் லத்தியினாலும், இரும்பு பைப்புகளாலும் தாக்கிய போலீசார் தொழிலாளர்களின் கைக் கடிகாரங்கள், மோதிரங்களை, கண்டக்டர்களின் பணப்பைகளை, டெப்போவில் இருந்த கலெக்ஷன் பணத்தையும் சூறையாடியதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறியுள்ளனர். காயம்பட்டு மருத்துவமனையில் 350க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்துவிடவே, அவர்களில் பலரை காயம் குணமடையும் முன்னரே 'டிச்சார்ஜ்' செய்து அனுப்பும்படியும் நிர்பந்தித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியது என்னவென்றால் தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் போலீசாருக்கு அக்கறை இல்லை. மாறாக தொழிலாளர்களின் எதிர்ப்பை ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ் படையினால் நசுக்குவதே ஆகும். மாவட்ட கலெக்டர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் வேலை நிறுத்தத்தை தீர்ப்பது பற்றி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கையில் போலீசார் உண்மையில் திட்டமிட்ட ஒரு தாக்குதலுக்கு தயார் செய்து கொண்டிருந்தனர். பேச்சு வார்த்தையில் ஒரு உடன்பாட்டுக்கு வந்து கையெழுத்து போடுவதற்கு ஏற்பாடாகிக் கொண்டிருக்கும் போதே, போலீசாரை பிரதிநிதித்துவம் செய்த போலீஸ் சூப்பிரடெண்ட் ஒரு 'அவசர செய்தியை' பெறப்போகும் சாக்கில் பேச்சு வார்த்தை மேசையிலிருந்து எழுந்து சென்றார். இந்த 'அவசர செய்தி' என்னவென்பது மிகத் தெளிவானது அது ஒரு முழு அளவிலான தாக்குதலுக்கும் துப்பாக்கிச் சூட்டுக்குத் தயார் செய்வதாகும். தெருக்களில் தொழிலாளர்களினால் கைவிடப்பட்ட பஸ்களை தொழிலாளர்களின் எதிர்ப்பின் நடுவே போலீசார் தொடர்ந்து அகற்றிக் கொண்டிருந்தனர். வேலூர் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பின்னர் ஒரு தமிழ்நாடு தழுவிய வேலை நிறுத்தமாக வளர்ச்சி கண்டது.

இச்சம்பவம் தற்செயலான ஒன்றில்லை; ஆனால் இந்தியத் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்காக முதலாளித்துவ அரசினால் தயாரிக்கப்பட்ட எதிர்ப் புரட்சிகரமான திட்டங்களின் ஒரு பகுதியாகும். இதன் பின்னணியில் 'இருப்பது இந்திய முதலாளித்துவ வர்க்கம் எதிர்கொண்டுள்ள மோசமான நெருக்கடியாகும். சர்வதேசிய முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பகுதியாக இந்திய முதலாளித்துவ பொருளாதாரம் உடனடி நிதி திவாலை எதிர் கொண்டுள்ளது. தற்போது வெளிநாட்டு செலாவணி இருப்பு முழுமையாக திவாலாகி உள்ள நிலையில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கும் ஏகாதிபத்திய வங்கிகளின் நிதி உதவியிலேயே தங்கியுள்ளது உடனடியாக பட்ஜெட் பற்றாக் குறையையும், வட்டி செலுத்துகையையும் சமாளிப்பதற்கு டெல்லி அரசாங்கத்திற்கு உடனடியாக ரூ. 16 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. உலக வங்கியும், .எம்.எப். வும் புதிய கடன்களை வழங்குவதற்கு நிபந்தனைகளை விதித்துள்ளன. அதாவது அவற்றின் நிபந்தனைகளை நிறைவேற்றும் ஒரு முழுமையான பட்ஜெட் தயார் செய்த பின்னரே புதிய கடன் வழங்கப்படும்.

ஏகாதிபத்திய வங்கியாளர்களின் நிபந்தனைகள் இதுவரையில் தொழிலாள வர்க்கம் அதன் முழு வரலாற்றிலும் போராடிப் பெற்ற அனைத்து சமூக வெற்றிகளையும் அழிப்பதாகும்.

போக்குவரத்து உள்பட அனைத்து அரசு நிறுவனங்களும் தனியார் துறையிடம் தாரை வார்க்க இருக்கின்றன, பெருமளவில் தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படவிருக்கின்றனர்; அரசாங்க உதவிகள் நிறுத்தப்பட இருக்கின்றன. அதிகளவு லாபங்களை எடுப்பதற்காக சுரண்டல் உக்கிரப்படுத்தப்படவிருக்கிறது. இதுவே பல லட்சம் தொழிலாளர்களை வேலையற்றோர் பட்டியலில் சேர்க்கும். அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் அகற்றப்படவிருக்கின்றன. ஏகாதிபத்திய மூலதனம் தடையின்றி உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படவிருக்கிறது. ஏற்கனவே ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் தமது மூலதனம் சுதந்திரமாக உள்ளே வருவதற்கு தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நாட்டுக்குள் ஏகாதிபத்திய கம்பெனிகளின் உற்பத்திப் பொருட்கள் வரையரையின்றி நுழைய அனுமதிக்கும்படி கோருகின்றன. இது இந்தியாவில் பல தொழிற்துறைகளை திவால் நிலைக்கு தள்ளும். இந்தியா முழுவதும் லட்சக் கணக்கான ஆலைகள் மூடப்படவும், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் தூக்கி வீசப்படவும் நிலைமைகளை உண்டு பண்ணும். எந்த முதலாளி தனது ஆலையுள் மிகக் குரூரமான நிலைமைகளையும் சுரண்டலையும் செயற்படுத்துகின்றனரோ, அவர்கள் வியாபாரத்தை தொடர்ந்து செய்ய முடியும் சமூக சேவைகளுக்கான செலவுகளும், விவசாயிகளுக்குமான மானியங்களும் நிறுத்தப்பட வேண்டுமென்றும் ஏகாதிபத்திய வங்கியாளர்கள் கோருகின்றனர், எந்த ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வருமாயினும் அது அனைத்து உணவுப் பொருட்களின் மற்றும் அத்தியாவசிய பண்டங்களின் விலைகளை உயர்த்தும், முதலாளித்துவ லாப உற்பத்தி அமைப்பை பாதுகாக்க நகர்ப்புறங்களில் பரந்தளவில் வறுமையையும், நாட்டுப்புறத்தில் பஞ்ச நிலைமையையும் ஏற்படுத்த திட்டமிடும்.

இந்த தேர்தலில் எந்த அரசாங்கம் வந்தாலும் இந்தத் திட்டத்தையே அமல்படுத்த ஆளும் வர்க்கம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறாக காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை அமல்படுத்தும் போது எதிர்கொள்ளும் பிரதானமான தடையாக இருப்பது அவற்றுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பாகும். இந்தத் தாக்குதல்களை முன்னர் அமல்படுத்திய ஒவ்வொரு தடவையும் தொழிலாள வர்க்கத்தின் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்கள் தோன்றின. சென்னையில் ஸ்டாண்டர்ட் மோட்டார்சின் போராட்டம் இதில் முக்கியமானதாகும். அதேபோல் இந்தியா முழுவதும் பரந்தளவில் வளர்ச்சி அடையும் இதர தொழிலாள வர்க்க போராட்டங்களும் இத்தகையதானதாகும்.

சென்னையில் கதவடைப்பு செய்யப்பட்ட பி&சி தொழிலாளர்களுக்கு ஆதரவான பஸ் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஸ்டாலினிச சி..டி.யு. தலைமை காட்டிக் கொடுத்தது. பி & சி ஆலையில் சி..டி.யு. வின் W. R. வரதராஜன் தலைமை வகித்த போதிலும், அவர் சார்ந்த சி..டி.யு. வே பஸ் தொழிலாளர்களது வேலைநிறுத்த ஆதரவைக் காட்டிக்கொடுத்தது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய தொன்றாகும். உண்மையில் பெரம்பூர், அயனாவரம், மாதவரம் டெப்போவில் உள்ள தொழிலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளுமாறு செய்யப்பட்டது. இவ்வாறு சி..டி.யு. தலைமையே காட்டிக் கொடுத்து விட்டு, 'ரம்ஜான் பண்டிகையையும்' மாணவர்களுக்கான தேர்வையும் காரணம் காட்டி தமது காட்டிக் கொடுப்பிற்கு சப்பைக்கட்டு கட்டினர். இவை பற்றியெல்லாம் முன்கூட்டியே தெரியாதவர்கள் போல் தமது காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்தினர்.

இந்திய முதலாளித்துவ வர்க்கமும் அதன் பின்னணியிலுள்ள ஏகாதிபத்தியவாதிகளும், இந்தியாவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்ட இயக்கங்களை நசுக்குவது சம்பந்தமாக சமமான அக்கறை காட்டுகின்றனர்: முழு ஏகாதிபத்திய அமைப்புமே, அதன் வரலாற்றில் ஆழமான நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. பிரதான ஏகாதிபத்தியவாதிகள் பெரும் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளனர். ஒருவருக்கு எதிராக ஒருவர் வர்த்தக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு வேறு வழியில்லை; இந்தியா போன்ற நாடுகளை மறுபடி காலனி நாடுகளாக முழுமையாக அவர்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர சதி செய்கின்றன, தொழிலாள வர்க்கத்திற்கு ஒடுக்கப்படும் மக்களுக்கும் எதிராக ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய முதலாளித்துவ வர்க்கமும் கூட்டாக சூழ்ச்சி செய்கின்றன.

இப்படியான சூழ்ச்சித் திட்டங்களை அமல்படுத்தவே முதலாளித்துவ வர்க்கம் உள்நாட்டு யுத்தத் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது. இதையே பஞ்சாபிலும், காஷ்மீரிலும், வடகிழக்கு பகுதிகளிலும் முக்கிய குறிக்கோளாக செய்து வருகின்றது. தமிழ் நாட்டில் ஈழப் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் இதே குறிக்கோளையே கொண்டுள்ளன, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில்.

ஆளும் வர்க்கம் இரண்டு முக்கிய திட்டங்களில் செயற்படுகின்றது என்று சிறுபான்மை தேசிய இனங்களான பஞ்சாபி, காஷ்மீரி அஸாம், தமிழ் ஈழ தேசிய இனங்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தங்களை உக்கிரப்படுத்தி பின்னர் இந்த யுத்தங்களையே சாக்காக பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான யுத்தத்தை கட்டவிழ்த்து விடுவதாகும்.

இரண்டாவதாக பாரதீய ஜனதாக் கட்சி போன்ற இந்துமத வெறி அமைப்புகளின் உதவியுடன் பாசிச ஆயுத குண்டர் பட்டாளங்களை பெரும் முதலாளிகளின் உதவியுடன் உருவாக்கி, தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான ஆத்திர மூட்டல்களை ஏற்படுத்துவதாகும். இதன் மூலமாக போலீஸ் அரசு சட்டங்களை திணிப்பதற்குமாகும்.

இப்படியான கொள்கைகளை அமுல்படுத்த முதலாளித்துவ அரசு தொழிலாள வர்க்கத்தின் துரோகத் தலைமைகளில் சி.பி.. (எம்). சி.பி.. தலைமைகளில் நேரடியாக தங்கியுள்ளது; தொழிலாள வர்க்க எதிர்ப்பை காட்டிக் கொடுக்கவும், தொழிலாள வர்க்கத்தை மத்திய தர வர்க்கம், ஒடுக்கப்படும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும் அவர்களை சோர்வடையச் செய்து, தொழிலாள வர்க்கத்தின் தோல்விக்கான நிலைமையை உண்டு பண்ணவுமே ஆகும்.

இப்படியான தயாரிப்புகளே போலீஸ் தாக்குதலுக்கு வழி வகுத்ததுடன் கவர்னர், அரசாங்க சட்ட அதிகாரிகளும் மற்றவர்களும் உள்ளடங்கலாக முதலாளித்துவ அரசு போலீஸ் கிரிமினல்களை பாதுகாக்க வைத்தது. போலீசும், இராணுவமும் வேறு யாருமல்ல ஆயுதம் தரித்த மனிதர்கள், இவர்கள் முதலாளித்துவ அரசை பாதுகாக்க சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு எதிராக பலாத்காரத்தை பிரயோகிப்பவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த தாக்குதல்கள் மிக நவீன செய்தி தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி உயர் அதிகாரிகளினால் வரிசை கிரமமாக திட்டமிட்டு நடத்தப்பட்டன: நிராயுதபாணிகளான தொழிலாளர்கள் மேல் துப்பாக்கிச் சூடுகள் இராணுவ பயிற்சிகள் போன்று செய்யப்பட்டன. போலீஸ் அதிகாரிகளைப் பொறுத்த வரையில் அவர்கள் கையாண்ட முறைகள் இப்போது வளர்ச்சியடையும் தொழிலாளர் வர்க்க போராட்டங்களை நசுக்குவதற்கான அவர்களது தந்திரோபாயங்களை கச்சிதமாக செய்வதற்கான ஒத்திகைகளே. தொழிலாள வர்க்கத்தின் துரோகத் தலைமைகளுடன் அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தைகள் வெறும் கண் துடைப்பே. அவை நேரத்தை எடுப்பதற்கான அவர்களின் யுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

தலைவர்களின் காட்டிக்கொடுப்பு

தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர்களுக்கு எதிராக துரோக உடன்பாட்டை செய்து போலீஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக தொழிலாளர்கள் தம்மை தற்காத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்க விடாது காட்டிக் கொடுத்துள்ளனர். சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகளின் முயற்சிகள் தாக்குதலுக்குள்ளான தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக அல்ல, மாறாக தாக்குதல் தொடுத்த போலீசாரை எவ்வாறாயினும் அதற்கான தண்டனையிலிருந்து தப்ப வைத்து காப்பாற்றுவதே ஆகும்.

அரசாங்கம் நியமித்த 'விசாரணைக் கமிஷனை' சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகள் ஏற்றுக் கொண்டதன் மூலம் இத்தலைமைகள் போலீசாரை பாதுகாக்க முன் வந்துள்ளனர். முதலாளித்துவ பிரதிநிதிகளைக் கொண்ட இந்த கமிஷனில் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று தொழிலாளர்களை கேட்கிறோம். இது குற்றம் சாட்டப்பட்டவர் நீதிபதியாவதை போன்றதாகும். இதே அரசாங்கத்துக்கு போலீசும், இராணுவமும் தேவைப்படுகிறது தொழிலாளர்களை தாக்குவதற்காக. எனவே இங்கு அவசியமானது போலீசின் தாக்குதலுக்கும் படுகொலைக்கும் எதிராக விசாரணை செய்ய தொழிற் சங்கங்களின் சுதந்திரமான விசாரணைக் கமிஷனை ஏற்படுத்துவதாகும். இந்த படுகொலை தாக்குதல்கள் சம்பந்தமாக தொழிற்சங்கங்கள் தமது சொந்த விசாரணையை நடத்த வேண்டும்.

இவ்வாறான விசாரணை தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் அனைது சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தும். அத்துடன் மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும். அது அரசின் ஆயுதப் படைகளின் எதிர்புரட்சிகர திட்டங்களை வெளிப்படுத்தும். அது இந்த முதலாளித்துவ அரசின் ஆயுதப் படைகள் உடனடியாக கலைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டும். மேலும் தொழிலாளர்கள் தமது சொந்த பாதுகாப்பு அணிகளை அமைக்க வேண்டிய தேவையையும் உணர்த்தும்.

அரசு பற்றிய மார்க்சிய தத்துவத்தை சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகள் நிராகரிக்கின்றனர். முதலாளித்துவ அரசை நிர்மூலமாக்கி ஒரு தொழிலாளர் அரசை உருவாக்கும் வேலைத்திட்டம் அவர்களிடம் இல்லை. அதனால் தான் அவர்கள் முதலாளித்துவ அரசு பஞ்சாபிலும், காஷ்மீரிலும், அஸாமிலும் நடத்தும் உள்நாட்டு யுத்தங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இவ்வாறாக உள்நாட்டு யுத்தங்களுக்கு சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகள் வழங்கும் ஆதரவு தான் தொழிலாளர்கள் மேல் பயங்கரமான தாக்குதல் தொடுப்பதற்கு வேலூர் போலீசாருக்கும் உற்சாகம் அளித்தது. வேலூர் போக்குவரத்து தொழிலாளர்களை இந்த துரோகத் தலைமைகள் காட்டிக் கொடுத்தது. இப்படி தாக்குதல்களை போலீசார் தொடர அவர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. வேலை நிறுத்தம் காட்டிக் கொடுக்கப்பட்ட மறுநாள் திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் தாக்கப்பட்டதன் மூலம் இது மேலும் நிரூபணமாகி உள்ளது.

தொழிலாளர்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பஞ்சாபிலும், காஷ்மீரிலும், அஸாமிலும், தமிழ் ஈழத்திலும் உள்நாட்டு யுத்தங்களை நடத்தும் இதே ஆயுதப் படைகள் தான் தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதலை தொடுத்துள்ளனர். தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் அடிப்படையில் சிபிஐ (எம்), சிபிஐ தலைவர்களின் தேசியவாத, பேரினவாத நிலைப்பாடுகளை தொழிலாள வர்க்கம் அடியோடு நிராகரிக்க வேண்டும். முதலாளித்துவ அரசினால் நடத்தப்படும் யுத்தங்கள், நமது யுத்தங்கள் அல்ல என்று தொழிலாளர்கள் கூற வேண்டும். ஒரு பைசாவோ, ஒரு ஆளையோ இந்த யுத்தங்களுக்கு வழங்கக் கூடாது. பஞ்சாப், காஷ்மீர், அஸாமிலிருந்து இராணுவங்கள் வாபஸ் வாங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோர வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்களை பாதுகாக்க இதர தொழிலாளர்களையும் ஐக்கியப் படுத்துவதற்கு பதிலாக இத்துரோகத் தலைமைகள் போலீசாருடனும், அரசாங்கத்துடனும் ஐக்கியப்பட்டு நின்று "பொது மக்களின் வசதி"யை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நீடிக்காது இடை நிறுத்த வேண்டும் என்று அழைப்புவிடுத்தனர். ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் பெரும் ஆதரவையும், அனுதாபத்தையும் காட்டினார்கள். போக்குவரத்து தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நீடிக்கப்பட்டிருக்குமாயின் அதற்கு பொதுமக்களும் அவர்களுது முழுமையான ஆதரவை தெரிவித்திருப்பார்கள். ஏனெனில் போக்குவரத்து தொழிலாளர்களைப் போலவே இதர தொழிலாள வர்க்கப் பிரிவினரும், ஒடுக்கப்படும் மக்களும் இளைஞர்களும் இதே போன்ற தாக்குதல்களை எதிர் கொள்ளுகின்றனர் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

இதற்கு தொழிலாளர்கள் கொடுக்கக்கூடிய ஒரே பதில் முதலாளித்துவ அரசை தூக்கிவீசி சோசலிசக் கொள்கைகளை அமல்படுத்தும் ஒரு தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்கம் அமைக்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் பலத்தை அணிதிரட்டுவதே, இந்த வர்க்கப் போராட்டத்தில் முதலாளித்துவ அரசு தூக்கி வீசப்பட வேண்டும். அழித்தொழிக்கப்பட வேண்டும். அந்த ஒடுக்குமுறை அரசை தொழிலாள வர்க்கம் எந்த வழியிலும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது. எதிர்ப்புரட்சிகர தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள், தமது உயிர்களையும் அமைப்புகளையும் பாதுகாக்க பாதுகாப்பு அணிகளை உருவாக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான தாக்குதல்கள் தொடர விடாது தடுக்க ஒரு காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு தயார் செய்ய வேண்டும், சரியான புரட்சிகர தலைமையும், வேலைத்திட்டமும் வழங்கப்ப்படுமாயின் தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதற்கான நிலைமைகளை உண்டு பண்ணும்.

அது மேற்கூறிய வேலைத்திட்டங்களின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் துரோகத் தலைமைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வருவது நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகமும், தன் தொழிற்துறை பிரிவான டிராட்ஸ்கிசத் தொழிலாளர் அணியுமே. காட்டிக் கொடுப்புகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களினுள் மாற்று புரட்சித் தலைமையைக் கட்ட போராடி வரும் டிராட்ஸ்கிசத் தொழிலாளர் அணியில் சேர்ந்து சோசலிசக் கொள்கைகளுக்கான தொழிலாள வர்க்க ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க வருமாறு அனைத்து வர்க்க நனவுள்ள தொழிலாளர்களையும் அழைக்கிறோம். சோசலிசத் தொழிலாளர் கழகமும், டிராட்ஸ்கிச தொழிலாளர் அணியும் பின்வரும் கோரிக்கைகளுக்கு போராட முன்வரும்படி தொழிலாளர்களை அழைக்கிறது.

ஃ கண் துடைப்பு அரசாங்க விசாரணைக் கமிஷன்களில் நம்பிக்கை வைக்காதே!

ஃ தொழிற்சங்கங்களின் சொந்த 'விசாரணை கமிஷனை' ஏற்படுத்து!

ஃ கொலைகாரர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கு!

ஃ போலீசார் உண்டு பண்ணிய நாசத்துக்காக முழு நஷ்ட ஈடு வழங்கு!

ஃ வேலைநிறுத்த நாட்களுக்கு முழு சம்பளம் வழங்கு!

ஃ காலவரையற்ற பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடு!

ஃ போராட்டத்திலுள்ள அனைத்து தொழிலாள வர்க்க பிரிவுகளையும் ஐக்கியப்படுத்து!

ஃ போலீஸ் இராணுவங்களை கலை!

ஃ தொழிலாளர்களின் சொந்த பாதுகாப்பு அணிகளை கட்டு!

ஃ பஞ்சாப், காஷ்மீர், அஸாமிலிருந்து உடனடியாக இராணுவங்களை வாபஸ் வாங்கு!

ஃ சிபிஐ (எம்) சிபிஐ தலைமைகள் முதலாளித்துவ கட்சிகளுடன் உறவை துண்டித்து சுதந்திரமாக சோசலிசக் கொள்கைகளை நிறைவேற்றும் தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம் அமைக்கப் போராடும்படி நிர்பந்தி!

மேற்கூறிய கோரிக்கைகளுக்காகவும், இதர தொழிலாளர் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மாநாட்டுக்கு அழைப்புவிடு!

Wednesday, June 8, 2016

சோசிசத் தொழிலாளர் கழக உறுப்பினர் மேலான போலீசாரின் பொய் வழக்கையும் தொந்தரவுகளையும் உடனே நிறுத்து!

Thozhilalar Pathai Volume 039
June 1991

சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் உறுப்பினர்கள், தேர்தல் வேட்பாளர்களை போலீஸ் இலாகாவை சேர்ந்தவர்கள் தொந்தரவு செய்வதை உடனடியாக நிறுத்தும்படி கோர நாம் இக்கடிதத்தை எழுதுகின்றோம்.

சோசலிசத் தொழிலாளர் கழகம் (Socialist Labour League) ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் இயக்கமும், இந்தியாவிலுள்ள டிரொட்ஸ்கிச அமைப்புமாகும். இலங்கையில் அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சோ.தொ.. (SLL-India) வின் உறுப்பினர் ஒருவர் பேசிய பின்னரே இது தொடங்கியது.

  1. ஏப்ரல் 25, பிற்பகல் 4 மணிக்கு சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் அலுவலகத்திற்கு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து குருசாமி என்று தன்னை அடையாளம் காட்டிய அதிகாரி ஒருவர் விஜயம் செய்தார். அவர் சோ.தொ.. வின் முன்னணி உறுப்பினரும், அதன் மாத இதழான 'தொழிலாள பாதை' ஆசிரிய குழுவின் உறுப்பினருமான S. ராமை விசாரிக்க விரும்புவதாக கூறினார்.
போலீஸ் இலாகாவினால் S. ராமை விசாரணை செய்யவும், கேள்விகள் கேட்கவும் எடுக்கும் முயற்சிகள் S. ராம் ஏதோ குற்றம் செய்துவிட்டார் என்பதால் அல்ல, இது "இலங்கையில் நாட்டுப்புற படுகொலையும், இனவாத யுத்தமும்—பின்னனணியும் தீர்வும்" என்ற தலைப்பில் S. ராம் ஒரு சொற்பொழிவை நிகழ்த்திய பின்னர் தொடங்கப்பட்டது. இந்த சொற்பொழிவு ஏப்ரல் 23ல், அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகக் கட்டிடத்தில் சமூக அறிவியல் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

சட்டரீதியாகவும், ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவும் செயற்படும் எமது அமைப்பின் உறுப்பினர்களின் அரசியல் மற்றும் ஜீவாதார உரிமைகள் மீது நியாயமற்ற முறையிலும் சட்டவிரோதமாகவும் மேற்குறிப்பிட்ட விசாரணைகளும் கேள்விகள் கேட்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சோ.தொ.. (SLL-India) இன் உரிமையுள்ள, சட்டரீதியான வேலைகளில் அதன் கொள்கைகளையும், வேலைத்திட்டகளையும் விளக்கி பிரச்சாரம் செய்வதையும், அதே போல் வட சென்னை பாராளுமன்ற தொகுதிக்கும், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கும் நிறுத்தப்பட்டுள்ள அதன் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதிலும் தலையீடு செய்வதாக உள்ளது.

  1. மே, 12 ல் மேலே குறிப்பிட்ட குருசாமி என்ற போலீஸ் அதிகாரி, வட சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு சோ.தொ.. யின் வேட்பாளரும் பி அண்டு சி மில் தொழிலாளியுமான P. மோசஸின் உறவினர்கள் வீடுகளுக்கும் விஜயம் செய்து மோசஸின் கடந்த காலம் பற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும், அவரது அரசியல் வேலை பற்றியும் விசாரணைகள் நடத்தியுள்ளார்.

அதே நாள் 5 மணிக்கு, பி அண்டு சி. மில் தொழிலாளர்களின் பெரம்பூர் பேரக்ஸ் குடியிருப்பு வாசலில் அதே போலீஸ் அதிகாரி குருசாமி மோசசை சந்தித்து சோ.தொ.. வின் இதர உறுப்பினர்கள் பற்றியும், சோ.தொ.க பஸ் வேலை நிறுத்தத்தில் தலையீடு செய்கின்றதா என்பது பற்றியும் கேள்விகள் கேட்டார்.

  1. மே 16ல் திருமங்கலம் போலீஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட அண்ணாநகர் மேற்கு விஷேச போலீஸ் பிரிவைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் சிவலிங்கம் (பி.சி. 2179), வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு சோ.தொ..வின் வேட்பாளரும் ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிற்சங்கத்தின் முன்னாள் கமிட்டி உறுப்பினருமான எம். கைலாசத்தின் வீட்டுக்கு காலையும், மாலையும் இரு தடவைகள் விஜயம் செய்திருந்தார். பின்னர் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வந்து தன்னை தொடர்பு கொள்ளும் படி கைலாசத்திற்கு ஒரு செய்தியை அவரது வீட்டில் விட்டுச் சென்றார்.
  2. S. ராமுக்கு எதிராக புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் ஒரு பொய் வழக்கை தொடர்ந்துள்ளனர். டிசம்பர் 13, 1990ல் பி & சி மில் தொழிலாளர்களின் வாயில் கூட்டம் சென்னை தொழிலாளர் சங்கத்தினால் நடத்தப்பட்டது. அதற்கு தற்போது தலைவராக இருப்பவர் சி.பி.. (எம்) தொழிற்சங்கத் தலைவரே, 1989 சங்கத்தேர்தலில் வரதராஜனுக்கு எதிராக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட S. ராம் சோ.தொ..வின் பத்திரிகையான "தொழிலாள பாதை"க்கு செய்தி திரட்டுவதற்காக அக்கூட்டத்தில் பங்கு கொண்டார். அப்போது வரதராஜனால் வெளியேயிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 30 குண்டர்கள் சிபிஐ (எம்) உறுப்பினரும் எம்.எல்.யு.வின் கமிட்டி உறுப்பினருமான குமரேசனின் தலைமையில் S ராம் மேல் ஒரு கொலைவெறி தாக்குதலை நடத்தினார்.

    இந்த தாக்குதல் நடந்த போது பக்கத்திலுள்ள புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ் அங்கே நின்றது. அவர்கள் கொலை வெறித்ததாக்குதல் நடத்திய குண்டர்களையோ அல்லது அவர்களுக்கு தலைமை தாங்கிய குமரேசனையோ கைது செய்யவில்லை. ஆனால் கூட்டத்தின் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டு நின்றவரும் குண்டர்களினால் தாக்கப்பட்டவருமான S. ராமை கைது செய்தனர். அவர்கள் S. ராமை கைது செய்ததுடன் நிறுத்தவில்லை. ஒருபடி மேலே சென்று அவருக்கு எதிராக இ.பி.கோ. வின் 75 வது பிரிவின்கீழ் எழும்பூர் பெருநகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த சம்பவம் சம்பந்தமாக, நாம் கோருவது உடனடியாக இந்த பொய் வழங்கை வாபஸ் பெறப்பட வேண்டும். போலீசார் தகுந்த விசாரணை நடத்தி S. ராமை தாக்கியவர்களை கைது செய்து அவர்கள் செய்த குற்றத்துக்கு அவர்கள் மேல் வழக்குத் தொடர வேண்டும்.

    இங்ஙனம்
    P.மோசஸ்

    (
    சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் சார்பில்)சோசலிசத் தொழிலாளர் கழக உறுப்பினர்கள் மேல் பொய் வழக்குகள் தொடுப்பதையும், அதன் அரசியலாளர்கள் மீது தாக்குதல் செய்வதையும் கண்டனம் செய்து தொழிற்சங்கங்களிலும், தொழிலாளர் வர்க்க அமைப்புகளிலும் கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி இன்ஸ்பெக்டர் ஜெனரல் சப் போலீஸ் அலுவலகத்திற்கும் அதன் பிரதி ஒன்றை சோசலிசத் தொழிலாளர் கழகம், தபால் பெட்டி எண் 968, பெரம்பூர் பாரக்ஸ், சென்னை - 12 என்ற முகவரிக்கு அனுப்பும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.)