"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Wednesday, August 31, 2016

இந்தியாவுக்கு உதவி வழங்கும் குழு' துரித தாக்குதலுக்கு உத்தரவு


Thozhilalar Paathai collected volume 09
July 1993

இந்தியாவின் குரல்வளையை நெரிக்கும் ஏகாதிபத்திய நடவடிக்கை இறுக்கமடைந்து வரும் நிலையில் நரசிம்மராவ் அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடி மேன்மேலும் உக்கிரமடைய ஆரம்பித்துள்ளது.

 
இந்தியாவுக்கு உதவி வழங்கும் குழு எனப்பட்டதன் கூட்டம் ஜூலை 2ம் திகதி பாரிசில் கூடியது. இந்தியாவினுள் தமது சுரண்டலை நிலைநாட்ட ஏகாதிபத்தியம் அமைத்த இக்குழு, இம்முறை வழமைக்கு மாறாக எதிர்பார்த்ததை விட 20 கோடி டாலர் கூடுதலாக – 740 கோடி டாலர்களை உதவியாக வழங்கி தீர்மானித்துள்ளதென ராவ் அரசாங்கமும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் ஆர்ப்பரிக்கின்றன.

இந்த உதவி எனப்படுவது 1992 இறுதியில் இருந்த 7000 கோடி டாலர் கடன் மலையை மேலும் 740 கோடி டாலர்களால் அதிகரிக்கச் செய்துள்ளது. அக்கடன் பளு முழுவதும் பொதுமக்களின் முதுகெலும்பை உடைக்கும் ஒன்றாகும். அத்தோடு இதுவரை ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் தேசியப் பொருளாதாரம் என்பதை துடைத்துக் கட்டி, ட்ரான்ஸ்நஷனல் கம்பனிகளின் சுரண்டலை நிலைநாட்டும் வேலைத் திட்டத்தை துரிதப்படுத்த பொது மக்களின் தொழில், வாழ்க்கைத் தரம், நலன்புரி சேவை அனைத்தையும் ஒழித்துக் கட்டும் புதிய கட்டளைகள் 740 கோடி டாலர்களுடன் ராவ் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ராவ் அரசாங்கம் அமுல் செய்த சீர்திருத்தத் திட்டத்தை புகழ்ந்து "மகிழ்ச்சி" தெரிவித்த ஏகாதிபத்திய வங்கியாளர், இந்த உதவியுடன் "இந்திய அரசாங்கம் கையாண்டு வரும் சவால் நிறைந்த சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் வெற்றியின் முழு முன்நோக்கினையும் உத்தரவாதம் செய்ய உதவும் வகையில் துரிதமானதும் தீர்க்கமானதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய துறைகள் சுட்டிக் காட்டப் பட்டுள்ளதாக" ஹிந்து பத்திரிகை குறிப்பிட்டது.

1996-97ல் நடைமுறைப்படுத்தி முடிக்கவுள்ள ஏகாதிபத்திய வேலைத் திட்டம் ஒன்றை 'செல்லையா குழு தீர்மானம்' என்ற பெயரில் அரசாங்கம் ஜூலை 9ல் வெளியிட்டது, அதில் ஓரம்சம், சுங்கவரி தீர்வையை நூற்றுக்கு 25%க்கு மேற்படாமல் வெட்டுவதாகும். இதனை "மேற்கத்திய நாடுகளின் சுங்கவரி தீர்வைக்கு ஒப்பானது" என விரிந்துரைத்தாலும், உண்மை நோக்கம் அதுவல்ல. ஏகாதிபத்தியம் உற்பத்திகளால் இந்தியச் சந்தையை நிருப்புவதற்கான நிலைமையைச் சிருஷ்டிப்பதே உண்மை நோக்கம்.

நடைமுறைக்கிடும் மற்றைய தீர்மானம் என்னவென்றால் 1993/94ல் மொத்தத் தேசிய வருமானத்தில் நூற்றுக்கு 7 வீதத்துக்குக் குறைக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை மேலும் வெட்டுவதாகும். அதாவது 1996-97ல் மாநில அரசுகளின் பற்றாக்குறையை நூற்றுக்கு 5% ஆகவும், மத்திய அரசாங்கத்தின் பற்றாக்குறையை நூற்றுக்கு 3% ஆகவும் வெட்டுவதாகும். நலன்புரி சேவை வெட்டு, விலைக் கட்டுப்பாட்டு முறையை அகற்றுதல், அரச துறைக்கான உதவித் தொகையை அகற்றுதல், அரச துறைக்கு மூடுவிழா என்பவற்றை அமுல்படுத்த வேண்டுமென்றே செல்லையா குழு இங்கு குறிப்பிடுகின்றது. தொழிலாள, ஒடுக்கப்பட்ட மக்களின் மேல் பாரிய அழிவினைச் சமுத்தும் இந்த தாக்குதலை "திடசங்கற்பத்துடன் நடைமுறைக்கிட வேண்டும்" என முதலாளிகள் கூறுகின்றனர். ஹிந்து பத்திரிகை அதன் ஜூலை 6ம் திகதிய ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

எவ்வாறிருப்பினும் 1996-97 ஆண்டளவில் மத்திய, மாநில அரசுகளின் வரவு-செலவு திட்டப்பற்றாக்குறையை 3% அளவில் விளங்குமாறு குறைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதைச் செயற்படுத்துவது பெரும் சிரமமாகும். நலன்புரி சேவை, விலைக் கட்டுப்பாட்டு என்பன தொடர்பாக வெறுப்புக்கிடமான முடிவெடுக்க நேரும். அத்தோடு மத்திய அரசாங்கம் பொருளாதாரச் சீர்திருத்தம் பூகோளமயமாக்கம் பற்றிய தமது கருத்துக்கு மாநில அரசுகளை இணைத்துக் கொள்ளவும், அதற்கு இணங்கச் செயற்பட அவற்றைத் தூண்டவும் நேரிடும்.”

செல்லையா குழு சிபாரிசு செய்யும் மற்றுமொரு தீர்மானம் ஏகாதிபத்தியம் ஏற்கனவே நிர்பந்தித்துள்ள "கைத்தொழில் பிரச்சினை மசோதாவைத்" திருத்துவதாகும். நோய் பிடித்த கம்பனிகளை மூடி, தொழிலாளரை வெளியேற்ற அரசாங்கத்தின் முன் அனுமதி தேவை என்ற சட்ட விதியை அகற்றிவிடுமாறு ஏகாதிபத்தியம் கோருகிறது, “வேலைநீக்க விதிமுறை" என்ற பெயரில் அரசாங்கம் வெளியிட்டுள்ள மசோதாவை அப்படியே நிறைவேற்றி அமுல் செய்ய உள்ளது.

உதவி வழங்கும் குழுக் கூட்டத்திற்கு இரு தினங்களுக்கு முன்னர் கல்கத்தாவில் ஸ்டாலினிஸ்டுகள் கூட்டிய மகாநாட்டில் கலந்து கொண்ட ராவ், ஏகாதிபத்தியவாதிகளின் கட்டளையை ஒன்றும் தவறாமல் செயற்படுத்த உள்ளதாக அறிவித்தார். “தனியார் துறையை ஊக்குவிக்க நாம் புதிய கைத்தொழில், வர்த்தக, நாணய கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என ராவ் தெரிவித்துள்ளார்.

நரசிம்மராவ் அரசாங்கத்தினை பேருக்கு விமர்சனம் செய்து கொண்ட போதிலும், ராவ் அரசாங்கத்தினை ஆட்சியில் வைத்திருக்க தமது வாக்குகளையும், தொழிற்சங்கங்களைஉம் பாவித்து வரும் ஸ்டாலினிச இந்திய (மார்க்சிச) கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல் அமைச்சருமான ஜோதிபாசுவும் இம்மகாநாட்டில் பங்கு கொண்டார். பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் முதலீடு செய்ய தனியார் துறை 'உற்சாகமின்றி' உள்ளது என்பதே ஸ்டாலினிச தலைவரின் முக்கிய வாதமாக விளங்கியது.

உலகச் சந்தைப் பங்கு போடலில் வெட்டுக் குத்து நடாத்தும் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம்,இந்தியாவில் பாய்ச்சல் நடாத்த எடுத்துள்ள முயற்சி இந்திய முதலாளித்துவ வர்க்க நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. ராவ் அரசாங்கம், ஏகாதிபத்திய ஆணையை செயல்படுத்துவதாக உறுதிக்கு மேல் உறுதி வழங்கி வரும் சமயத்தில் தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களை அடக்க காங்கிரஸ் அரசாங்கத்தைக் காட்டிலும் தாம் சிறந்த விதத்தில் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யத் தகுதியுடையோர் என நிரூபிக்கும் முகமாக பாரதீய ஜனதா கட்சி இனவாதத்தை தூண்டி, பாசிச சக்திகளை அணிதிரட்ட முன் பாய்ந்துள்ளது.

பம்பாய் பங்கு முதல் சந்தை ஊழலின் பெரும் புள்ளியான ஹர்ஷத் மேத்தா, அரசாங்க பாதுகாப்பு பெற நரசிம்மராவுக்கு ஒரு கோடி ரூபா லஞ்சம் வழங்கியதாக அறிவித்தமை, ஆளும் வர்க்க அரசியல் இழுபறிகளின் ஆயுதம் ஆகியுள்ளது. காங்கிரஸ் கட்சி, ராவ் பரிசுத்தமானவர் எனத் தெரிவித்த அதே சமயம் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தை ராஜினாமா செய்ய வைக்க இந்த ஊழல் குற்றச்சாட்டை பயன்படுத்துகின்றது.

ஏகாதிபத்தியத்தின் கொடிய கட்டளைகளுடன் அதை செயற்படுத்த ஆளும் வர்க்கம் நடாத்தும் எதிர்ப்புரட்சி தயாரிப்புக்களும் இந்திய ஏகாதிபத்திய பாணி முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசி சோசலிச அடிப்படையில் இந்தியத் தொழிலாள-ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை பேணும் வேலைத் திட்டத்துக்கு போராட வேண்டியதன் அவசியத்தை புலப்படுத்துகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தின் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியத் தொழிலாள வர்க்கம் உலகத் தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து ஏகாதிபத்தியத்தை தூக்கிவீசும் உலக சோசலிச வேலைத் திட்டத்துக்கு போராட வேண்டும். இந்தியத் துணைக் கண்டத்தின் சோசலிசக் குடியரசுக்கான போராட்டம், இந்த வேலைத்திட்டத்தின் ஒரு பாகமாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்தியாவின் சோசலிசத் தொழிலாளர் கழகமும் இவ்வேலைத் திட்டத்தின் அடிப்படையிலேயே போராடுகின்றன.

No comments:

Post a Comment