"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Tuesday, August 2, 2016

ஏகாதிபத்திய வங்கிகளின் பொம்மை ஆட்சி கோரும் தியாகங்களை நிராகரி! சோசலிச வேலைத் திட்டத்திற்கு போராடு!


Thozhilalar Paathai Volume 40 (File no 041)
July, 1991
இந்திய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்களையும், ஏழை விவசாயிகளையும் இளைஞர்களையும் பலிக்கடாக்களாக்க, முதலாளித்துவ ஆட்சியாளர்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டும். தொழிலாள வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வரலாற்று ரீதியாக திவாலான முதலாளித்துவ லாப உற்பத்தி அமைப்பை அகற்றி மனித சமுதாயத்தின் தேவைகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் சோசலிச பொருளாதார அமைப்பை உருவாக்க போராட வேண்டும்.

நாடு மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் "நாம் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும், நாம் எடுக்கும் முடிவுகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு உடையதாக இருக்க மாட்டாது,” என்றும் "மென்மையான எண்ணங்களுக்கு இனிமேல் இடமில்லை, மக்கள் பல தியாகங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும்" என்றும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மறுநாள் தொலைக்காட்சியில் புதிய பிரதமர் நரசிம்மராவ் கோரிக்கை விடுத்துள்ளார். அதே தொனியில் அதற்குப் பின்னர் நிதி அமைச்சரும், ஜனாதிபதியும் கூட கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் புதிய தொழில் அமைச்சரான வாழப்பாடி ராமமூர்த்தி, தொழிலாளர்கள் தொழிற்சங்க நலனைவிட தேசிய நலனையே மேலாக கருதி தியாகங்களை புரிய வேண்டுமென்று" கூறியுள்ளார்.

இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி, தேசியப் பிரச்சினை என்றும் அதனால் அனைத்து மக்களும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கோரும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் கடந்த 44 வருட அவர்களது "சுதந்திர" ஆட்சியின் சாதனையாக காட்டக்கூடியது என்ன? நாட்டில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்ட நிலைமை, 2½ லட்சத்துக்கும் அதிகமான ஆலைகள் நலிவுற்று மூடப்படும் நிலைமை, நகர்ப்பகுதியில் 3 கோடிக்கும் நாட்டுப் புறத்தில் 9 கோடிக்கும் அதிகமானோர் வேலையின்றி இருக்கும் நிலை, சுமார் 2 கோடி சிறுவர் உழைப்பாளர்கள், பல கோடி தொழிலாளர்களின் ஏழை விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் மோசமாகிச் செல்லும் நிலைமைகள் முதலியனவையே!

இவற்றுடன் ஆளும் வர்க்கத்தினர் திருப்தி அடையவில்லை! மக்கள் கடுமையான உழைப்பின் மூலமாக, வேர்வையையும், இரத்தத்தையும் சிந்தி இந்த தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்று அறை கூவல் விடுக்கின்றனர். ஏகாதிபத்திய வங்கியாளர்களின் ஏஜண்டுகளாக ஆட்சி புரியும் காங்கிரஸ் அரசங்கம் அவற்றின் கட்டளைப்படி ஏகாதிபத்திய பன்நாட்டுக் கம்பெனிகள் இந்திய தொழிலாள வர்க்கத்தை வரையறையின்றி சுரண்டுவதற்கு வசதியாக புதிய தொழிற் கொள்கையை அறிமுகப்படுத்த இருக்கிறது, இந்தியாவில் பன்னாட்டு கம்பெனிகளின் முதலீட்டுக்கு இடையூறாக இருக்கும் "சிலந்தி வலைகள்" அகற்றப்படும் என்று நிதியமைச்சர் மன்மோகன் சிங் கூறியுள்ளார், தேர்தலுக்கு முன்னர் அவரது சொந்த கட்சியாக காங்கிரஸ் கட்சி 100 நாட்களுக்குள் விலை உயர்வுகளை குறைப்போம் என்று கூறிய வாக்குறுதியை யதார்த்தமற்றது என்று கண்டனம் செய்துள்ளார். இந்திய முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடி நிலைமையை தீர்க்க உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (.எம்.எப்.) முதலிய ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் 'ஆலோசனைப்படி' உணவு, உரம், போக்குவரத்துக்கான மானியங்களை வெட்டி ரூபாயின் மதிப்பை குறைத்து தொழிலாளர்கள் ஏழை விவசாயிகள் மீது பெரும் தாக்குதலை தொடுக்க காங்கிரஸ் அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கிறது.

ஏகாதிபத்திய வங்கிகளிடம் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கூட செலுத்த முடியாதிருக்கும் நிதி நெருக்கடியை தற்காலிகமாக 'தீர்ப்பதற்காக' காங்கிரஸ் அரசாங்கம் இதுவரையில் 46.91 டன்கள் எடையுள்ள தங்கத்தை இங்கிலாந்து வங்கியில் 'அடகு' வைத்து ஒரு மாத காலத்துக்கு சுமார் 40 மில்லியன் டாலர்களை கடன் வாங்கியுள்ளது.

காங்கிரஸ் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் முன்னெச்சரிக்கையை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. சோசலிசத் தொழிலாளர் கழகம் அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதாவது: “இன்றைய ஆழமான முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி நிலைமையின் மத்தியில் தேர்தலுக்கு பின்னர் ஆட்சி அமைக்கும் எந்த ஒரு அரசாங்கமும் ஏகாதிபத்திய வங்கியாளர்களின் ஏஜண்டுகளாக தொழிலாளர் விவசாயிகளுக்கு எதிராக இதற்கு முன் கண்டிராத தாக்குதல்களை தொடுப்பார்கள்" (தொழிலாளர் பாதை, ஜூன் 1991)

நெருக்கடியின் பின்னணி

இந்திய பாராளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே மிகவும் பலாத்காரங்கள் நிறைந்த இத்தேர்தலுக்கு பின்னர் கடந்த 20 மாதங்களில் மூன்றாவது தடவையாக ஒரு சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 1947ல் ஏகாதிபத்தியத்தின் இந்திய முதலாளித்துவத்தின் எதிர்புரட்சி சதியின் மூலம் மதவாத அடிப்படையில் கூறு போடப்பட்ட அரசுகளில் ஒன்றான இந்தியா பல்வேறு கூறுகளாக மேலும் பிளவுபடும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது. 1947இலிருந்து 40 வருடங்களாக இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய முதலாளித்துவ கட்சியாக ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியின் நேரு குடும்பவழி ஆட்சி ராஜீவ்காந்தியின் மரணத்துடன் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காங்கிரஸ் கட்சி அதன் நீண்டகால "சுயசார்பு" பொருளாதார கொள்கைகளை கைவிட்டு வெளிப்படையாகவே 'ஏகாதிபத்திய சார்பு' கொள்கைகளை அமல்படுத்த தீர்மானித்துள்ளது. சோவியத் ஸ்டாலினிச அதிகாரத்துவம், அதன் காட்டிக் கொடுப்புகளின் உச்சக் கட்டமாக சோவியத் யூனியனுக்குள் முதலாளித்துவத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உலக ஏகாதிபத்திய சக்திகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளது. இம்மாற்றம் குறிப்பிடத் தக்க அளவு சோவியத் யூனியனின் ஆதரவில் தங்கியிருந்த இந்தியா போன்ற நாடுகளை முழுமையாக ஏகாதிபத்திய அரவணைப்புக்குள் தள்ளியுள்ளது.

இந்நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுவது இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிற்பாடு ஏகாதிபத்திய ஒழுங்கை சர்வதேசரீதியாக நிலைநாட்ட முக்கியமான தூண்களாக செயலாற்றி வந்த ஸ்டாலினிசமும் தேசிய முதலாளித்துவமும் மதிப்பிழந்து திவாலாகிப் போயுள்ளன, அதுபோலவே இவற்றின் அரசியல் காட்டிக் கொடுப்புகளை பயன்படுத்தி யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிக்க அன்று அமெரிக்க முதலாளித்துவத்தின் சார்பு ரீதியான பொருளாதார பலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருளாதார அமைப்புகளாக உலக வங்கி, பன்னாட்டு நிதியம், வர்த்தகம், வரியில் பொது உடன்பாடு (GATT) அனைத்துமே இன்று ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறாக பொருளாதார வீழ்ச்சிகளுக்கும், அரசியல் கொந்தளிப்புகளுக்கும் ஊற்றுக்காலாக இருப்பது இந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டு உலக யுத்தங்களை தோற்றுவித்த இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தின் அடிப்படையான முரண்பாடுகளாகும். சமூக உற்பத்திக்கும் தனி உடமைக்கும் பூகோள ரீதியான உற்பத்தி முறைக்கும் தேசிய அரசு அமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகளே இவை. இந்த முரண்பாடுகளை அமுக்கி வைப்பதற்கு எடுத்த அனைத்து நடவடிக்கைகளுமே செயலற்றுப் போய் அவை மறுபடி பூகம்பமாக வெடிக்கும் தன்மையுடன் வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றின் வெளிப்பாடுகளாகவே உலக யுத்தத்திற்கான பதட்டங்களும், உள்நாட்டு யுத்த நிலைமைகளும் உலகளவில் தோன்றி வருகின்றன, பின்தங்கிய நாடுகளில் தீர்க்கப்படாத ஜனநாயகப் புரட்சி சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வெடித்தெழுந்து முதலாளித்துவ ஆட்சிகளை ஆட்டம் காண வைத்துள்ளன.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா முதலிய நாடுகளில் வெடித்தெழுந்துள்ள தேசிய இனப்பிரச்சினைகளும் விவசாயிகளின் அடிப்படையான பிரச்சினைகளும் முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியினால் பன்மடங்கு உக்கிரப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய போராட்டங்கள் தொழிலாள வர்க்கப் போராட்டங்களுடன் ஒன்றிணைந்து முதலாளித்துவ ஆட்சி அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளன.

பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி

ஏகாதிபத்திய வங்கியாளர்களின் பொருளாதார திட்டங்களை தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மேல் திணிப்பதற்கு எதிராக வளர்ச்சிடையும் வர்க்கப் போராட்டங்களை திசை திருப்பவும், ஒடுக்கவும் ஆளும் வர்க்கத்தின் பிரதான கட்சிகளினுள் தொழிற்பங்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் முக்கிய பாகமாக இந்து மதவாத வெறியை வாந்தி எடுக்கும் பாரதீய ஜனதாக் கட்சி முன்னணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 1989க்கு முன்னர் மக்களவையில் 2 தொகுதிகளை மட்டுமே கொண்டிருந்த பா.. கட்சி 1989 தேர்தலில் அதன் எண்ணிக்கையை 89 ஆகவும், 1991 தேர்தலில் 117 ஆகவும் உயர்த்தியுள்ளது. 16ம் நூற்றாண்டு பள்ளிவாசலை உடைத்து அந்த இடத்தில் ராமர் கோயிலை கட்டப் போவதாக பா.. கட்சியும் அதன் பல சகோதர அமைப்புகளும் கங்கணம் கட்டி நிற்பது இந்து மதத்தின் மேலுள்ள வெறித்தனமான பற்றுதலினால் அல்ல. மாறாக சொத்துடமை வர்க்கத்தின் விசுவாசமான பிரதிநிதிகளாக செயற்படுவதற்கே. இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய ஏஜெண்டு பாத்திரம் இன்று அம்மணமாகி உள்ளது. இந்நிலைமையில் இந்திய ஆளும் வர்க்கத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சி ஏகாதிபத்திய வங்கியாளர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துகையில் கிளர்ந்தெழும் வர்க்கப் போராட்டங்களை திசை திருப்பும் வேலையை, மற்றைய முதலாளித்துவ கட்சியான பா.. கட்சி ராமர் கோயிலை கட்டுவதற்கான பிரச்சாரம் மூலம் செய்கிறது. இந்தப் பிரச்சார இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக பா.. கட்சியும், விசுவ ஹிந்து பரிஷத் போன்ற அதன் சகோதர அமைப்புகளும் பிரகடனம் செய்துள்ளன. மதக் கலவரங்களை ஒடுக்கப் போவதாகவும், பா.. கட்சியின் மதவகுப்புவாதத்தை எதிர்ப்பதாகவும் கூறிக் கொள்ளும் காங்கிரஸ் அரசாங்கத்தின் உண்மையான இலக்கு பா.. கட்சி அல்ல, தொழிலாள வர்க்கமே. ஆளும் வர்க்கத்தின் பிரதான கட்சிகளின் இந்தக் கூட்டுச் சதிகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் துரோகத் தலைமைகளான சிபிஐ (எம்) சிபிஐ தலைவர்கள் பெரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

சிபிஐ (எம்) சிபிஐ தலைமைகளின் துரோகம்

நாட்டின் இன்றைய மோசமான பொருளாதார நெருக்கடிக்கும் முக்கியமான பல தேசிய பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ் கட்சியே பொறுப்பாளி என்று தேர்தல் பிரச்சாரங்களின் போது வெற்றுக் கூச்சல் போட்ட சி.பி.. (எம்), சி.பி.. தலைமைகள் தேர்தலுக்குப் பின்னர் "தேசிய நலன் கருதி அதே காங்கிரஸ் கட்சி, அரசாங்கம் அமைத்து ஏகாதிபத்திய வங்கியாளர்களின் திட்டங்களை அமல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளனர். மற்றொரு மக்களவைத் தேர்தலை நடத்தும்படி தாம் கோர முடியாது என்று கூறிக் கொண்டு, காங்கிரஸ் அரசாங்கத்தை தக்க வைப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது உதவி செய்துள்ளனர். தாம் மதசார்பின்மை கொள்கைக்காக போராடுவதாகவும், பா.. கட்சியின் மதவகுப்புவாதத்தை எதிர்ப்பதாக கூறி காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கும் துரோகத்தனமான அரசியல் ஆதரவை நியாயப்படுத்த முயற்சி செய்கின்றனர். இது போன்றே முன்னைய சிறுபான்மை வி.பி.சிங் சந்திரசேகரின் ஆட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கினர், அப்பொழுது நாட்டின் முக்கிய எதிரி காங்கிரஸ் கட்சி என்று கூறி முதலாளித்துவ தேசிய முன்னணி அமைப்புடன் அவர்கள் கொண்டிருந்த சந்தர்ப்பவாத அரசியல் உறவை நியாயப்படுத்தினர். இப்பொழுது மதவகுப்புவாதம், ஏகாதிபத்திய சீர்குலைவு நடவடிக்கைகளை "தோற்கடிக்க" ஏகாதிபத்திய ஏஜண்டுகளான காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து நிற்கின்றனர்.

ராஜீவ்காந்தியின் மரணத்தை அடுத்து சி.பி.எம் பொதுச் செயலாளர் நம்பூதிரிபாட் புதிய காங்கிரஸ் தலைவர் நரசிம்மராவிற்கு எழுதிய கடிதத்தில் 'இடது சாரிகள் சம்பந்தமாக காங்கிரஸின் புதிய தலைமை அதன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். மேற்கு வங்க முதல்வரும் சி.பி.(எம்)மின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஜோதிபாசு 'இது நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்காக ஏகாதிபத்திய சக்திகளின் நடவடிக்கை என்றும் அதனை தோற்கடிக்க அனைத்து தேசபக்த சக்திகளும் ஒன்று சேர வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார். சிபிஐ (எம்) சிபிஐ ஸ்டாலினிசத் தலைமைகளின் வர்க்கக்கூட்டு "மக்கள் முன்னணி அரசியலின் மூலமாகவே இந்த தலைமைகள் திவாலான இந்திய முதலாளித்துவ ஆட்சியை தக்க வைப்பதில் பிரதான பங்கு வகித்து வருகின்றனர். இதற்கு இத்தலைமைகள் வர்க்க சாரமற்ற சொற்பதங்களை 'தேசிய நலனைக் காக்க', 'தேசிய ஒற்றுமையைக் காக்க' போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிராக வளர்ச்சி அடையும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புப் போராட்டங்கள் எப்பொழுதுமே முதலாளித்துவ தனிச் சொத்துடமைக்கும், முதலாளித்துவ ஆட்சிக்கும் அச்சுறுத்தலை ஏற்படவிடாது தடுக்கும் எண்ணத்துடன் தொழிலாளர்களை முதலாளித்துவ சித்தாந்தத்திற்குள் கட்டுப் போட்டு வைப்பதற்காகவே தேசியவாதத்தை இடைவிடாது பிரச்சாரம் செய்கின்றனர். இந்திய 'தேசியத்துள்' இருக்கும் இரண்டு பிரதான வர்க்கங்களுக்கு இடையிலான வர்க்கப் போராட்டத்தை கூர்மைப்படுத்தி முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசுவதற்கு எதிராக வர்க்க சமரச கொள்கைகளை பிரச்சாரம் செய்கின்றனர்.

புரட்சிக் கட்சியை கட்டு!

தொழிலாள வர்க்கத்தின் உத்தியோக பூர்வ தலைமைகளின் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்துக்காகவும் சர்வதேச சோசலிச புரட்சி முன்நோக்கிலும் தொடர்ந்து போராடி வருவது உலக டிராட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்டு இந்தியாவில் போராடும் சோசலிசத் தொழிலாளர் கழகமாகும். முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை பலியிடுவதற்கு 'தேசிய நலன்' என்ற போர்வையில் தேசியவாதத்தை பரப்பும் ஸ்டாலினிசத் தலைமைகளுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பொது எதிரியான முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்கு சோசலிசத் தொழிலாளர் கழகம் போராடுகிறது.

உலகப் பொருளாதாரத்தின் மேலாதிக்கம் அனைத்து வகையான தேசியவாத பொருளாதார திட்டங்களையும் காலாவதியாக்கி விட்டது, அவற்றை நடைமுறை சாத்தியமற்றவையாக்கி விட்டது. இந்நிலைமையில் தேசிய வளங்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்துறை வளர்ச்சி, பொருளாதார திட்டங்களை நியாயப்படுத்துபவர்கள், வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் வறட்டுவாதிகளும், பிற்போக்காளர்களுமே. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்கான போராட்டத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதன் மூலமே இன்று அனைத்து நாடுகளிலும் தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் அடிப்படையான பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியும். ஸ்டாலினிசத் தலைமைகளின் வர்க்கக் கூட்டு கொள்கைகளுக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கவும், அதற்காக போராடும் டிராட்ஸ்கிசக் கட்சியை பரந்த புரட்சிக் கட்சியாக மாற்றுவதற்கான பணியில் ஈடுபட முன்னேறிய தொழிலாளர்களும், புரட்சிகரமான அறிவுஜீவிகளும் இளைஞர்களும் முன் வர வேண்டும்.

ஃ உலக வங்கி, .எம்.எப் போன்ற ஏகாதிபத்திய நிதி அமைப்புகளுக்கான கடன்களையும், உள்நாட்டு முதலாளிகளுக்கான கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை நிராகரி!

ஃ அனைத்து முக்கிய தொழிற்துறைகளையும், ஏகாதிபத்திய உடமைகளையும் நஷ்ட ஈடின்றி தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் தேசியமயமாக்கு!

ஃ விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பள உயர்வுக்கு போராடு!

ஃ மூடும் அபாயத்திலுள்ள அனைத்து ஆலைகளிலும் உள்ளிருப்பு செய்!

ஃ தொழிலாளர் சபைகளை (சோவியத்துக்களை) கட்டு!

ஃ முதலாளித்துவ அரசியன் படைகளின் பயங்கரவாதத்திற்கும் கருங்காலி குண்டர்களின் தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாளர்களின் சொந்த பாதுகாப்பு படைகளை அமை!

ஃ தொழிலாளர்களை பிளவுபடுத்தும் மதவகுப்புவாத கலவரங்களை தூண்டும் சக்திகளைத் தோற்கடி!

ஃ விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்!

ஃ உணவு, உரம், போக்குவரத்துக்கான மானியங்கள் வெட்டப்படுவதை தோற்கடி!

ஃ தேசிய பாதுகாப்புச் சட்டம் (என்.எஸ்.) மற்றும் இதர கறுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்து விசாரணை இன்றி காவலில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்.

ஃ பஞ்சாப், காஷ்மீர் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வாபஸ் வாங்கப் போராடு!

மேற்கூறிய திட்டங்களுக்காக போராடும் சோசலிசத் தொழிலாளர் கழகத்தில் சேர்ந்து போராட முன்வரும்படி அனைத்து வர்க்க நனவுள்ள தொழிலாளர்களையும், புரட்சிகர அறிவுஜீவிகளையும் இளைஞர்களையும் அழைக்கிறோம். சிபிஐ (எம்), சிபிஐ ஸ்டாலினிசத் தலைமைகள் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை நிறுத்தி சோசலிச மற்றும் ஜனநாயக வேலைத்திட்டங்களை அமல்படுத்தும் தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம் அமைக்கப் போராடும்படி தொழிலாளர்கள் நிர்பந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment