"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Tuesday, August 2, 2016

ஏகாதிபத்திய வங்கிகளின் பொம்மை ஆட்சி கோரும் தியாகங்களை நிராகரி! சோசலிச வேலைத் திட்டத்திற்கு போராடு!


Thozhilalar Paathai Volume 40 (File no 041)
July, 1991
இந்திய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்களையும், ஏழை விவசாயிகளையும் இளைஞர்களையும் பலிக்கடாக்களாக்க, முதலாளித்துவ ஆட்சியாளர்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டும். தொழிலாள வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வரலாற்று ரீதியாக திவாலான முதலாளித்துவ லாப உற்பத்தி அமைப்பை அகற்றி மனித சமுதாயத்தின் தேவைகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் சோசலிச பொருளாதார அமைப்பை உருவாக்க போராட வேண்டும்.

நாடு மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் "நாம் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும், நாம் எடுக்கும் முடிவுகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு உடையதாக இருக்க மாட்டாது,” என்றும் "மென்மையான எண்ணங்களுக்கு இனிமேல் இடமில்லை, மக்கள் பல தியாகங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும்" என்றும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மறுநாள் தொலைக்காட்சியில் புதிய பிரதமர் நரசிம்மராவ் கோரிக்கை விடுத்துள்ளார். அதே தொனியில் அதற்குப் பின்னர் நிதி அமைச்சரும், ஜனாதிபதியும் கூட கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் புதிய தொழில் அமைச்சரான வாழப்பாடி ராமமூர்த்தி, தொழிலாளர்கள் தொழிற்சங்க நலனைவிட தேசிய நலனையே மேலாக கருதி தியாகங்களை புரிய வேண்டுமென்று" கூறியுள்ளார்.

இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி, தேசியப் பிரச்சினை என்றும் அதனால் அனைத்து மக்களும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கோரும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் கடந்த 44 வருட அவர்களது "சுதந்திர" ஆட்சியின் சாதனையாக காட்டக்கூடியது என்ன? நாட்டில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்ட நிலைமை, 2½ லட்சத்துக்கும் அதிகமான ஆலைகள் நலிவுற்று மூடப்படும் நிலைமை, நகர்ப்பகுதியில் 3 கோடிக்கும் நாட்டுப் புறத்தில் 9 கோடிக்கும் அதிகமானோர் வேலையின்றி இருக்கும் நிலை, சுமார் 2 கோடி சிறுவர் உழைப்பாளர்கள், பல கோடி தொழிலாளர்களின் ஏழை விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் மோசமாகிச் செல்லும் நிலைமைகள் முதலியனவையே!

இவற்றுடன் ஆளும் வர்க்கத்தினர் திருப்தி அடையவில்லை! மக்கள் கடுமையான உழைப்பின் மூலமாக, வேர்வையையும், இரத்தத்தையும் சிந்தி இந்த தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்று அறை கூவல் விடுக்கின்றனர். ஏகாதிபத்திய வங்கியாளர்களின் ஏஜண்டுகளாக ஆட்சி புரியும் காங்கிரஸ் அரசங்கம் அவற்றின் கட்டளைப்படி ஏகாதிபத்திய பன்நாட்டுக் கம்பெனிகள் இந்திய தொழிலாள வர்க்கத்தை வரையறையின்றி சுரண்டுவதற்கு வசதியாக புதிய தொழிற் கொள்கையை அறிமுகப்படுத்த இருக்கிறது, இந்தியாவில் பன்னாட்டு கம்பெனிகளின் முதலீட்டுக்கு இடையூறாக இருக்கும் "சிலந்தி வலைகள்" அகற்றப்படும் என்று நிதியமைச்சர் மன்மோகன் சிங் கூறியுள்ளார், தேர்தலுக்கு முன்னர் அவரது சொந்த கட்சியாக காங்கிரஸ் கட்சி 100 நாட்களுக்குள் விலை உயர்வுகளை குறைப்போம் என்று கூறிய வாக்குறுதியை யதார்த்தமற்றது என்று கண்டனம் செய்துள்ளார். இந்திய முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடி நிலைமையை தீர்க்க உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (.எம்.எப்.) முதலிய ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் 'ஆலோசனைப்படி' உணவு, உரம், போக்குவரத்துக்கான மானியங்களை வெட்டி ரூபாயின் மதிப்பை குறைத்து தொழிலாளர்கள் ஏழை விவசாயிகள் மீது பெரும் தாக்குதலை தொடுக்க காங்கிரஸ் அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கிறது.

ஏகாதிபத்திய வங்கிகளிடம் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கூட செலுத்த முடியாதிருக்கும் நிதி நெருக்கடியை தற்காலிகமாக 'தீர்ப்பதற்காக' காங்கிரஸ் அரசாங்கம் இதுவரையில் 46.91 டன்கள் எடையுள்ள தங்கத்தை இங்கிலாந்து வங்கியில் 'அடகு' வைத்து ஒரு மாத காலத்துக்கு சுமார் 40 மில்லியன் டாலர்களை கடன் வாங்கியுள்ளது.

காங்கிரஸ் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் முன்னெச்சரிக்கையை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. சோசலிசத் தொழிலாளர் கழகம் அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதாவது: “இன்றைய ஆழமான முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி நிலைமையின் மத்தியில் தேர்தலுக்கு பின்னர் ஆட்சி அமைக்கும் எந்த ஒரு அரசாங்கமும் ஏகாதிபத்திய வங்கியாளர்களின் ஏஜண்டுகளாக தொழிலாளர் விவசாயிகளுக்கு எதிராக இதற்கு முன் கண்டிராத தாக்குதல்களை தொடுப்பார்கள்" (தொழிலாளர் பாதை, ஜூன் 1991)

நெருக்கடியின் பின்னணி

இந்திய பாராளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே மிகவும் பலாத்காரங்கள் நிறைந்த இத்தேர்தலுக்கு பின்னர் கடந்த 20 மாதங்களில் மூன்றாவது தடவையாக ஒரு சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 1947ல் ஏகாதிபத்தியத்தின் இந்திய முதலாளித்துவத்தின் எதிர்புரட்சி சதியின் மூலம் மதவாத அடிப்படையில் கூறு போடப்பட்ட அரசுகளில் ஒன்றான இந்தியா பல்வேறு கூறுகளாக மேலும் பிளவுபடும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது. 1947இலிருந்து 40 வருடங்களாக இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய முதலாளித்துவ கட்சியாக ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியின் நேரு குடும்பவழி ஆட்சி ராஜீவ்காந்தியின் மரணத்துடன் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காங்கிரஸ் கட்சி அதன் நீண்டகால "சுயசார்பு" பொருளாதார கொள்கைகளை கைவிட்டு வெளிப்படையாகவே 'ஏகாதிபத்திய சார்பு' கொள்கைகளை அமல்படுத்த தீர்மானித்துள்ளது. சோவியத் ஸ்டாலினிச அதிகாரத்துவம், அதன் காட்டிக் கொடுப்புகளின் உச்சக் கட்டமாக சோவியத் யூனியனுக்குள் முதலாளித்துவத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உலக ஏகாதிபத்திய சக்திகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளது. இம்மாற்றம் குறிப்பிடத் தக்க அளவு சோவியத் யூனியனின் ஆதரவில் தங்கியிருந்த இந்தியா போன்ற நாடுகளை முழுமையாக ஏகாதிபத்திய அரவணைப்புக்குள் தள்ளியுள்ளது.

இந்நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுவது இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிற்பாடு ஏகாதிபத்திய ஒழுங்கை சர்வதேசரீதியாக நிலைநாட்ட முக்கியமான தூண்களாக செயலாற்றி வந்த ஸ்டாலினிசமும் தேசிய முதலாளித்துவமும் மதிப்பிழந்து திவாலாகிப் போயுள்ளன, அதுபோலவே இவற்றின் அரசியல் காட்டிக் கொடுப்புகளை பயன்படுத்தி யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிக்க அன்று அமெரிக்க முதலாளித்துவத்தின் சார்பு ரீதியான பொருளாதார பலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருளாதார அமைப்புகளாக உலக வங்கி, பன்னாட்டு நிதியம், வர்த்தகம், வரியில் பொது உடன்பாடு (GATT) அனைத்துமே இன்று ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறாக பொருளாதார வீழ்ச்சிகளுக்கும், அரசியல் கொந்தளிப்புகளுக்கும் ஊற்றுக்காலாக இருப்பது இந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டு உலக யுத்தங்களை தோற்றுவித்த இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தின் அடிப்படையான முரண்பாடுகளாகும். சமூக உற்பத்திக்கும் தனி உடமைக்கும் பூகோள ரீதியான உற்பத்தி முறைக்கும் தேசிய அரசு அமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகளே இவை. இந்த முரண்பாடுகளை அமுக்கி வைப்பதற்கு எடுத்த அனைத்து நடவடிக்கைகளுமே செயலற்றுப் போய் அவை மறுபடி பூகம்பமாக வெடிக்கும் தன்மையுடன் வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றின் வெளிப்பாடுகளாகவே உலக யுத்தத்திற்கான பதட்டங்களும், உள்நாட்டு யுத்த நிலைமைகளும் உலகளவில் தோன்றி வருகின்றன, பின்தங்கிய நாடுகளில் தீர்க்கப்படாத ஜனநாயகப் புரட்சி சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வெடித்தெழுந்து முதலாளித்துவ ஆட்சிகளை ஆட்டம் காண வைத்துள்ளன.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா முதலிய நாடுகளில் வெடித்தெழுந்துள்ள தேசிய இனப்பிரச்சினைகளும் விவசாயிகளின் அடிப்படையான பிரச்சினைகளும் முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியினால் பன்மடங்கு உக்கிரப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய போராட்டங்கள் தொழிலாள வர்க்கப் போராட்டங்களுடன் ஒன்றிணைந்து முதலாளித்துவ ஆட்சி அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளன.

பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி

ஏகாதிபத்திய வங்கியாளர்களின் பொருளாதார திட்டங்களை தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மேல் திணிப்பதற்கு எதிராக வளர்ச்சிடையும் வர்க்கப் போராட்டங்களை திசை திருப்பவும், ஒடுக்கவும் ஆளும் வர்க்கத்தின் பிரதான கட்சிகளினுள் தொழிற்பங்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் முக்கிய பாகமாக இந்து மதவாத வெறியை வாந்தி எடுக்கும் பாரதீய ஜனதாக் கட்சி முன்னணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 1989க்கு முன்னர் மக்களவையில் 2 தொகுதிகளை மட்டுமே கொண்டிருந்த பா.. கட்சி 1989 தேர்தலில் அதன் எண்ணிக்கையை 89 ஆகவும், 1991 தேர்தலில் 117 ஆகவும் உயர்த்தியுள்ளது. 16ம் நூற்றாண்டு பள்ளிவாசலை உடைத்து அந்த இடத்தில் ராமர் கோயிலை கட்டப் போவதாக பா.. கட்சியும் அதன் பல சகோதர அமைப்புகளும் கங்கணம் கட்டி நிற்பது இந்து மதத்தின் மேலுள்ள வெறித்தனமான பற்றுதலினால் அல்ல. மாறாக சொத்துடமை வர்க்கத்தின் விசுவாசமான பிரதிநிதிகளாக செயற்படுவதற்கே. இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய ஏஜெண்டு பாத்திரம் இன்று அம்மணமாகி உள்ளது. இந்நிலைமையில் இந்திய ஆளும் வர்க்கத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சி ஏகாதிபத்திய வங்கியாளர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துகையில் கிளர்ந்தெழும் வர்க்கப் போராட்டங்களை திசை திருப்பும் வேலையை, மற்றைய முதலாளித்துவ கட்சியான பா.. கட்சி ராமர் கோயிலை கட்டுவதற்கான பிரச்சாரம் மூலம் செய்கிறது. இந்தப் பிரச்சார இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக பா.. கட்சியும், விசுவ ஹிந்து பரிஷத் போன்ற அதன் சகோதர அமைப்புகளும் பிரகடனம் செய்துள்ளன. மதக் கலவரங்களை ஒடுக்கப் போவதாகவும், பா.. கட்சியின் மதவகுப்புவாதத்தை எதிர்ப்பதாகவும் கூறிக் கொள்ளும் காங்கிரஸ் அரசாங்கத்தின் உண்மையான இலக்கு பா.. கட்சி அல்ல, தொழிலாள வர்க்கமே. ஆளும் வர்க்கத்தின் பிரதான கட்சிகளின் இந்தக் கூட்டுச் சதிகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் துரோகத் தலைமைகளான சிபிஐ (எம்) சிபிஐ தலைவர்கள் பெரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

சிபிஐ (எம்) சிபிஐ தலைமைகளின் துரோகம்

நாட்டின் இன்றைய மோசமான பொருளாதார நெருக்கடிக்கும் முக்கியமான பல தேசிய பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ் கட்சியே பொறுப்பாளி என்று தேர்தல் பிரச்சாரங்களின் போது வெற்றுக் கூச்சல் போட்ட சி.பி.. (எம்), சி.பி.. தலைமைகள் தேர்தலுக்குப் பின்னர் "தேசிய நலன் கருதி அதே காங்கிரஸ் கட்சி, அரசாங்கம் அமைத்து ஏகாதிபத்திய வங்கியாளர்களின் திட்டங்களை அமல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளனர். மற்றொரு மக்களவைத் தேர்தலை நடத்தும்படி தாம் கோர முடியாது என்று கூறிக் கொண்டு, காங்கிரஸ் அரசாங்கத்தை தக்க வைப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது உதவி செய்துள்ளனர். தாம் மதசார்பின்மை கொள்கைக்காக போராடுவதாகவும், பா.. கட்சியின் மதவகுப்புவாதத்தை எதிர்ப்பதாக கூறி காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கும் துரோகத்தனமான அரசியல் ஆதரவை நியாயப்படுத்த முயற்சி செய்கின்றனர். இது போன்றே முன்னைய சிறுபான்மை வி.பி.சிங் சந்திரசேகரின் ஆட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கினர், அப்பொழுது நாட்டின் முக்கிய எதிரி காங்கிரஸ் கட்சி என்று கூறி முதலாளித்துவ தேசிய முன்னணி அமைப்புடன் அவர்கள் கொண்டிருந்த சந்தர்ப்பவாத அரசியல் உறவை நியாயப்படுத்தினர். இப்பொழுது மதவகுப்புவாதம், ஏகாதிபத்திய சீர்குலைவு நடவடிக்கைகளை "தோற்கடிக்க" ஏகாதிபத்திய ஏஜண்டுகளான காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து நிற்கின்றனர்.

ராஜீவ்காந்தியின் மரணத்தை அடுத்து சி.பி.எம் பொதுச் செயலாளர் நம்பூதிரிபாட் புதிய காங்கிரஸ் தலைவர் நரசிம்மராவிற்கு எழுதிய கடிதத்தில் 'இடது சாரிகள் சம்பந்தமாக காங்கிரஸின் புதிய தலைமை அதன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். மேற்கு வங்க முதல்வரும் சி.பி.(எம்)மின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஜோதிபாசு 'இது நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்காக ஏகாதிபத்திய சக்திகளின் நடவடிக்கை என்றும் அதனை தோற்கடிக்க அனைத்து தேசபக்த சக்திகளும் ஒன்று சேர வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார். சிபிஐ (எம்) சிபிஐ ஸ்டாலினிசத் தலைமைகளின் வர்க்கக்கூட்டு "மக்கள் முன்னணி அரசியலின் மூலமாகவே இந்த தலைமைகள் திவாலான இந்திய முதலாளித்துவ ஆட்சியை தக்க வைப்பதில் பிரதான பங்கு வகித்து வருகின்றனர். இதற்கு இத்தலைமைகள் வர்க்க சாரமற்ற சொற்பதங்களை 'தேசிய நலனைக் காக்க', 'தேசிய ஒற்றுமையைக் காக்க' போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிராக வளர்ச்சி அடையும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புப் போராட்டங்கள் எப்பொழுதுமே முதலாளித்துவ தனிச் சொத்துடமைக்கும், முதலாளித்துவ ஆட்சிக்கும் அச்சுறுத்தலை ஏற்படவிடாது தடுக்கும் எண்ணத்துடன் தொழிலாளர்களை முதலாளித்துவ சித்தாந்தத்திற்குள் கட்டுப் போட்டு வைப்பதற்காகவே தேசியவாதத்தை இடைவிடாது பிரச்சாரம் செய்கின்றனர். இந்திய 'தேசியத்துள்' இருக்கும் இரண்டு பிரதான வர்க்கங்களுக்கு இடையிலான வர்க்கப் போராட்டத்தை கூர்மைப்படுத்தி முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசுவதற்கு எதிராக வர்க்க சமரச கொள்கைகளை பிரச்சாரம் செய்கின்றனர்.

புரட்சிக் கட்சியை கட்டு!

தொழிலாள வர்க்கத்தின் உத்தியோக பூர்வ தலைமைகளின் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்துக்காகவும் சர்வதேச சோசலிச புரட்சி முன்நோக்கிலும் தொடர்ந்து போராடி வருவது உலக டிராட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்டு இந்தியாவில் போராடும் சோசலிசத் தொழிலாளர் கழகமாகும். முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை பலியிடுவதற்கு 'தேசிய நலன்' என்ற போர்வையில் தேசியவாதத்தை பரப்பும் ஸ்டாலினிசத் தலைமைகளுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பொது எதிரியான முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்கு சோசலிசத் தொழிலாளர் கழகம் போராடுகிறது.

உலகப் பொருளாதாரத்தின் மேலாதிக்கம் அனைத்து வகையான தேசியவாத பொருளாதார திட்டங்களையும் காலாவதியாக்கி விட்டது, அவற்றை நடைமுறை சாத்தியமற்றவையாக்கி விட்டது. இந்நிலைமையில் தேசிய வளங்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்துறை வளர்ச்சி, பொருளாதார திட்டங்களை நியாயப்படுத்துபவர்கள், வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் வறட்டுவாதிகளும், பிற்போக்காளர்களுமே. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்கான போராட்டத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதன் மூலமே இன்று அனைத்து நாடுகளிலும் தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் அடிப்படையான பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியும். ஸ்டாலினிசத் தலைமைகளின் வர்க்கக் கூட்டு கொள்கைகளுக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கவும், அதற்காக போராடும் டிராட்ஸ்கிசக் கட்சியை பரந்த புரட்சிக் கட்சியாக மாற்றுவதற்கான பணியில் ஈடுபட முன்னேறிய தொழிலாளர்களும், புரட்சிகரமான அறிவுஜீவிகளும் இளைஞர்களும் முன் வர வேண்டும்.

ஃ உலக வங்கி, .எம்.எப் போன்ற ஏகாதிபத்திய நிதி அமைப்புகளுக்கான கடன்களையும், உள்நாட்டு முதலாளிகளுக்கான கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை நிராகரி!

ஃ அனைத்து முக்கிய தொழிற்துறைகளையும், ஏகாதிபத்திய உடமைகளையும் நஷ்ட ஈடின்றி தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் தேசியமயமாக்கு!

ஃ விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பள உயர்வுக்கு போராடு!

ஃ மூடும் அபாயத்திலுள்ள அனைத்து ஆலைகளிலும் உள்ளிருப்பு செய்!

ஃ தொழிலாளர் சபைகளை (சோவியத்துக்களை) கட்டு!

ஃ முதலாளித்துவ அரசியன் படைகளின் பயங்கரவாதத்திற்கும் கருங்காலி குண்டர்களின் தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாளர்களின் சொந்த பாதுகாப்பு படைகளை அமை!

ஃ தொழிலாளர்களை பிளவுபடுத்தும் மதவகுப்புவாத கலவரங்களை தூண்டும் சக்திகளைத் தோற்கடி!

ஃ விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்!

ஃ உணவு, உரம், போக்குவரத்துக்கான மானியங்கள் வெட்டப்படுவதை தோற்கடி!

ஃ தேசிய பாதுகாப்புச் சட்டம் (என்.எஸ்.) மற்றும் இதர கறுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்து விசாரணை இன்றி காவலில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்.

ஃ பஞ்சாப், காஷ்மீர் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வாபஸ் வாங்கப் போராடு!

மேற்கூறிய திட்டங்களுக்காக போராடும் சோசலிசத் தொழிலாளர் கழகத்தில் சேர்ந்து போராட முன்வரும்படி அனைத்து வர்க்க நனவுள்ள தொழிலாளர்களையும், புரட்சிகர அறிவுஜீவிகளையும் இளைஞர்களையும் அழைக்கிறோம். சிபிஐ (எம்), சிபிஐ ஸ்டாலினிசத் தலைமைகள் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை நிறுத்தி சோசலிச மற்றும் ஜனநாயக வேலைத்திட்டங்களை அமல்படுத்தும் தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம் அமைக்கப் போராடும்படி தொழிலாளர்கள் நிர்பந்திக்க வேண்டும்.

Monday, August 1, 2016

உலகத் தொழிலாளர் மாநாட்டுக்கு போராட சபதம்


[The Young Socialists 10th national summit pledges to fight to build Sri Lankan section Revolutionary Communist League and Indian Socialist Labour League as working class revolutionary leadership.]
 
Thozhilalar Paathai Volume 409 (File no 041)
August 12, 1991





நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் நவம்பர் 16ம் 17ம் திகதிகளில் ஜேர்மன் பேர்ளின் நகரில் கூட்டப்படவுள்ள ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனித்துவத்திற்கும் எதிரான உலகத் தொழிலாளர் மகாநாட்டுக்கு இம்மகாநாடு தனது பேராதரவினை வழங்குகின்றது.



உலகம் பூரவும் ஏகாதிபத்தியவாதிகள் உலகினை தம்மிடையே காலனிகளாகப் பங்கிட்டுக் கொள்ளும் பகற்கொள்ளை இலக்கில் மூன்றாவது அணுவாயுத உலக யுத்தத்துக்கு தயாராகி வரும் நிலையில் கூட்டப்படவுள்ள இம்மகாநாடு, ஏகாதிபத்தியவாதிகளின் அந்த நாசகார முயற்சிகளை தோற்கடிக்கும் பொருட்டு அனைத்துலகத் தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்தியத்தினை இப்பூகோளத்தில் இருந்து துடைத்துக் கட்டும் உலகச் சோசலிசப் புரட்சி முன்நோக்கினை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.




5 இலட்சத்துக்கு அதிகமான ஈராக்கிய மக்களைக் படுகொலை செய்தும் ஈராக்கின் பொருளாதார கைத்தொழில் துறைகளை அடியோடு நாசமாக்கியும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் நடாத்திய யுத்தம், திரும்பவும் மீண்டும் ஏகாதிபத்தியவாதிகள் உலக யுத்தத்துக்கும் திரும்பியதைச் சுட்டிக் காட்டுகின்றது. அவ்வாறே ஏகாதிபத்தியவாதிகள் ஈராக்குக்கு எதிரான பொருளாதாரத் தடையைத் தொடர்ந்தும் கடைபிடிக்க எழுவர் குழுவின் மகாநாட்டில் தீர்மானம் செய்தனர். பாரசீக வளைகுடாவிலும் வடக்கு ஈராக்கிலும் தமது படைகளை இருத்துவதன் மூலம் எண்ணெய் வளங்களைக் கொள்ளையடிக்கவும் மத்தியகிழக்கு ஒடுக்கப்படும் மக்களிடையே மோதுதல்களைத் தூண்டிவிடும் யுத்தத்துக்கு ஏகாதிபத்திய வல்லரசுகள் தயாராகி வருகின்றன. இதைக் குறிக்கும் விதத்தில் அமெரிக்கா, பிரித்தானிய, பிரான்சிய ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் மீண்டும் ஈராக்கினை தாக்கப் போவதாக எச்சரிக்கை செய்தனர்.




ஈராக்குக்கு எதிரான யுத்தத்தில் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர் அதிகாரத்துவங்கள் - ஸ்டாலிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள், பப்லோவாதிகள் அத்தோடு அமெரிக்க AFL-சீ.I.O உட்பட தொழிற்சங்கத் தலைவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு வழங்கினர். இதன் மூலம் இந்தத் துரோகத் தொழிலாளர் தலைவர்கள் ஏகாதிபத்தியவாதிகளின் உலக யுத்தத்தினதும் காலனித்துவ வேலைத்திட்டதினதும் அழிவுகளை உலகத் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் மேல் திணிக்கும் ஏகாதிபத்தியச் சார்பு ஏஜண்டுகளாகச் செயற்படுகின்றார்கள். ஆதலால் இந்தச் சகல ஏகாதிபத்திய ஏஜன்டு அதிகாரத்துவங்களை தொழிலாள வர்க்கத்திலிருந்து வெளியேற்றி புரட்சித் தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினை உலகளாவிய ரீதியில் கட்டி எழுப்புவதன் மூலமே உலக யுத்தத்துக்கும் காலனித்துவத்துக்கும் எதிரான உலகத் தொழிலாளர்களை அணி திரட்ட முடியும்.




இந்நூற்றாண்டில் ஏகாதிபத்தியவாதிகள் இருதடவை உலகினை காலனிகளாகப் பகிரும் யுத்தத்தின் மூலம் கோடானுகோடி தொழிலாளர்களையும், ஒடுக்கப்படும் மக்களையும், பேரளவிலான உற்பத்திச் சக்திகளையும் அழித்தொழித்தனர். முதலாம் உலக யுத்தத்தில் சமூக ஜனநாயகவாத தலைவர்கள் தத்தம், நாடுகளின் ஏகாதிபத்திய முதலாளி வர்க்கங்களின் பின்னால் அணி திரண்டு தொழிலாள – ஒடுகப்படும் மக்களை யுத்தத்தின் பேரழிவுக்கு பலியாக்கினர். இரண்டாம் உலக யுத்தத்தின் போது சமூக ஜனநாயகவாதிகளை அணிதிரட்டிய ஸ்டாலினிசத் தலைவர்கள் ஏகாதிபத்திய பகற்கொள்கை யுத்தத்துக்கு பூரண ஆதரவு வழங்கியதன் மூலம், மீண்டும் ஒரு தடவை தொழிலாள – ஒடுக்கப்படும் மக்களை இரத்தப் பலியெடுக்க உதவினர். அத்துடன் நின்றுவிடாது இத்துரோகிகள் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியத்துடன் புரட்சிகரமான முறையில் கணக்குவழக்குகளைத் தீர்த்துக் கொள்ள அனைத்துலகத் தொழிலாள வர்க்கம் எடுத்து முயற்சியைத் தடுத்ததோடு உலகம் பூராவும் சமபல நிலையை ஏகாதிபத்தியம் சிருஷ்டிக்கப் பூரண முண்டு வழங்கினர்.



இன்று ஸ்டாலினிச, சமூக ஜனநாயக தலைவர்களும் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் திணிக்கப்பட்ட ஏகாதிபத்திய உலக அமைப்புக்கு அடிபணிந்த பப்லோவாத திரிபுவாதிகள் உள்ளடங்கலான துரோகத் தொலிழாளர் தலைவர்களும் மூன்றாம் அணுவாயுத உலக யுத்தத்துக்கு உலகத் தொழிலாள-ஒடுக்கப்படும் மக்களை அடிமைப்படுத்த ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளனர்.

முதலாளித்துவத்தினைப் புனருதாரணம் செய்து தத்தம் நாடுகளில் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் சுரண்டலுக்கு களம் அமைத்துக் கொடுக்க, சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பா, சீனா வியட்நாம் ஸ்டாலினிச அதிகாரத்துவங்கள் கடைப்பிடித்து வரும் வேலைத்திட்டங்கள் ஏகாதிபத்திய யுத்ததினதும் காலனித்துவத்தினதும் வேலைத்திட்டத்துடன் இணைந்தன. இந்தியாவிலும் இலங்கையிலும் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ அரசாங்கங்கள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைப்படி இந்நாடுகளை ஏகாதிபத்திய யுத்தம், காலனித்துவ திட்டங்களுடன் முழுமனே இணைத்துக் கொண்டுள்ளனர். சிலாபத்தில் 350 ஏக்கர் நிலம் 'வொயிஸ் ஒப் அமெரிக்கா' - யுத்தக் குரல் நிலையத்துக்கு ஒதுக்கிக் கொடுத்தன் மூலம் பிரேமதாச அரசாங்கம் இந்தியத் துணைக் கண்டத்தில் ஏகாதிபத்திய இராணுவ மோதுதல்களுக்கு இலங்கையில் திடல் அமைத்துக் கொடுத்துள்ளது. இந்தியாவில் சீபிஐ, சீபிஎம் ஸ்டாலினிச கட்சிகளின் தலைவர்களும் இலங்கையில் சம சமாஜ கம்யூனிச, நவசம சமாஜ, . தொ. கா, தம்பு தலைமைகளும் ஏகாதிபத்திய யுத்த திட்டங்களுக்குள் முழுமனே இணைந்து கொண்டு தத்தம் நாடுகளில் முதலாளித்துவ அரசாங்க, ஏகாதிபத்திய யுத்தத் தயாரிப்புக்களின் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையினுள் யூ.எம்.பி—சி..சு.. ஏகாதிபத்திய சார்பு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தரும் சமசமாஜ கம்யூனிச நவசம சமாஜ, . தொ. கா, தம்பு போன்ற துரோகத் தலைமையை வெளியேற்றி இந்திய துணைக் கண்டத்தினுள் சீபிஐ சீபிஎம் கட்சிகளை வெளியேற்றியும் தொழிலாள வர்க்கப் புரட்சித் தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தையும் இந்தியாவில் அதன் சகோதர இயக்கமான சோசலிச தொழிலாளர் கழகத்தையும் கட்டி எழுப்புவது பெரிதும் தீர்க்கமானது. அதன் பேரில் போராட இந்த இளம் சோசலிஸ்டுகள் மகாநாடு சபதம் பூணுகின்றது. அவ்வாறே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்நோக்கினை இந்தியத் துணைக்கண்டம் பூராவுமுள்ள கோடானுகோடி தொழிலாள—ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதன் மூலம் பேர்ளினில் நடைபெறும் உலக தொழிலாளர் மகாநாட்டிற்கு பலம் வாய்ந்த பேராளர் குழுவை அனுப்ப இம்மகாநாடு சபதம் பூணுகின்றது.

Friday, July 29, 2016

ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனித்துவத்துக்கும் எதிராக அணிதிரள்வோம்: “நிரந்தரப் புரட்சி இல்லையேல் நிரந்தர மக்கட்படுகொலை"



[With the presence of RCL delegates, ‪SLL-India‬ held preliminary meetings for 1991 Berlin Summit in Chennai and Calcutta respectively on September 26, 1991 and October 5, 1991.]

Thozhilalar Pathai Volume 414
November 1991

பேர்ளினில் நவம்பர் 16-17ல் நடைபெற்ற உலகத் தொழிலாளர் மகாநாட்டுக்கு முன்னோடியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அக்டோபர் 26ல் நடாத்திய மகாநாட்டில் பு... செயலாளர் விஜே டயஸ் சமர்ப்பித்த அறிக்கை

தோழர்களே, தோழியர்களே,

நீங்கள் அனைவரும் அறிந்தது போல் எமது இம்மகாநாடு நவம்பர் 16-17ம் திகதிகளில் ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனித்துவத்துக்கும் எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடாத்தத் தயாராகி வரும் உலகத் தொழிலாளர் மகாநாட்டுக்கான முன்னோடி மகாநாடாகும். அனைத்துலகக் குழுவின் கிளைகளின் அரசியல் தலையீட்டின் மூலம் இத்தகைய முன்னோடி மகாநாடுகள் பல ஏற்கனவே உலகம் பூராவும் நடைபெற்றுள்ளன.

அக்டோபர் 19-20 வார இறுதியில் அவுஸ்திரேலிய சோசலிச லேபர் லீக்கினால் சிட்னி நகரில் நடாத்தப்பட்ட முன்னோடி மகாநாடு பெரிதும் வெற்றிகரமான மகாநாடாக விளங்கியதாக அத்தோழர்களிடம் இருந்து நாம் அறிகின்றோம். பல்வேறு கைத்தொழில் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர் குழுக்களும், ஆசிரியர், தாதிகள் போன்ற சேவை துறை ஊழியர்களும் அங்கு பேராளர்களாகக் கலந்து கொண்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி ஏகாதிபத்தியத்தினால் எதிர்காலம் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ள பெருந்தொகையான இளைஞர், யுவதிகளும் அதில் பங்கு பற்றியுள்ளார்கள்.

கடந்த ஜூலையில் பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மன் பேராளர்கள் கலந்து கொண்ட முன்னோடி மகாநாடு பேர்ளின் நகரில் நடைபெற்றது.

செப்டம்பர் 26ல் சென்னையிலும் அக்டோபர் 5ல் கல்கத்தாவிலும் நடைபெற்ற வெற்றிகரமான முன்னோடி மகாநாடுகள் இரண்டில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.
.

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளுள் மூன்று அரசாங்கங்கள் வீழ்ச்சி கண்டதன் பின்னர் இன்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நரசிம்மராவின் காங்கிரஸ் அரசாங்கம், முன்னொரு போதும் இல்லாத அளவில் ஏகாதிபத்திய பகற் கொள்கைக்குக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ள போதிலும், ஏகாதிபத்தியவாதிகள் அதன் மூலம் திருப்திப்படுவதாய் இல்லை. இந்த அக்டோபர் மாத முற்பகுதியில் இந்தியா வந்த அமெரிக்க வர்த்தகத் தூதுவர் காலா ஹீலசின் நடமாட்டம், இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்களைத் தமது நூலில் ஆடும் பொம்மையாக ஏகாதிபத்தியவாதிகள் கருதிச் செயல்படுவதைக் காட்டியது. 'புத்திஜீவி மூலவள உரிமை' தொடர்பான சட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவள், சிங்கப்பூர் அமெரிக்காவின் சிபாரிசினை ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவும் அவ்வாறே அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும், இல்லையேல் அமெரிக்க வர்த்தக தடை 301 இந்தியாவுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளான். உலகப் படத்தில் ஒரு குற்றான சிங்கப்பூரைக் கணிப்பதை விட கூடுதலாக துணைக் கண்டம் என்றாலும் இந்தியாவைக் கணிக்கப் போவதில்லை என்பதே அப்பேச்சின் பொருள். இத்தகைய கெடுபிடி ஏகாதிபத்தியப் போக்குடன் இணைந்துள்ள பிரமாண்டமான சமூக வெடிப்புப் பற்றிய புரட்சிகர அறிகுறிகள், ஏகாதிபத்தியவாதிகள் காலனித்துவத்துக்கு மீண்டும் தள்ளப்படும் அவல நிலையை வெளிப்படுத்துகின்றது. ...

இந்தியத் துணைக் கண்டம்

ஸ்டாலினிசத்தின் கீழ் உருவான 'கொம்பிரதோர்' முதலாளித்துவக் கும்பல் அணிதிரண்டு கொண்டு சோவியத் சோவியத் யூனியனை சிதறடிக்க தேசியவாத வெறியை தூண்டிவிட்டுள்ளது போலவே, இந்தியத் துணைக் கண்டத்திலும் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ இனவாத, மதவா, ஜாதிவாத இயக்கங்களும் கூட இன்று தலைநீட்டி வருகின்றன. காலனித்துவத்தின் கீழ் இந்தியாவை ஒன்றுபடுத்திய பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளே இந்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை நசுக்கும் பொருட்டு 1947ல் இந்திய முதலாளிகளுடன் சேர்ந்து ஹிந்து-முஸ்லீம் இந்தியா இரண்டினை நிறுவியது. இன்று தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியின்படி பார்க்குமிடத்து அந்தப் பிரிவினை போதியதல்ல என்பதை ஏகாதிபத்தியவாதிகள் அறிவர். காங்கிரஸ் ஆட்சியாளர்களின் குழுக்களும், கோஷ்டிகளும் ஏகாதிபத்தியவாதிகளின் கையாட்களாக இனவாத ரீதியில் இந்தியாவை முழுமனே சிதறடிக்க இன்று முன்வந்துள்ளனர்.

ஒரிஸ்ஸா முதல் அமைச்சர் பிஜூ பட்நாய்க்கின் இயக்கம் இதற்கு நல்ல உதாரணம். ஒரிஸ்ஸாவுக்கு சுயாதீனம் அவசியம் என கூச்சலிடும் அவர் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை என்ன? இதுவரை காலமும் இந்திய மத்திய அரசாங்கத்தின் தனி அதிகாரமாக இருந்து வந்த வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய ஒரிஸ்ஸாவுக்கும் சுதந்திரம் வேண்டும் என அவர் கோருகின்றார். அது ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக தொழிற்பட முதலாளிகளுக்கு சுதந்திரம் வேண்டும் கோரிக்கை அவ்வாறே ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பனிகளுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் உரிமையையும் அவர் வேண்டுகின்றார். ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியினால் கடந்த காலப்பகுதியில் உறுதி செய்து தர முடியாது போன ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சினையையே பாவித்து இந்த இனவாத முதலாளித்துவப் புள்ளிகள் இப்போது தொழிலாள-ஒடுக்கப்படும் மக்களின் செலவில் இந்தியாவைத் தூண்டாடும் ஏகாதிபத்திய காலனித்துவ வேலைத்திட்டத்தின் தரகர்களாக முயற்சிக்கிறார்கள். ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இந்த வேலைத்திட்டத்துடன் தம்மை நேரடியாகப் பிணைத்துக் கொண்டுள்ளார்கள். ஒரிஸ்ஸா கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு இதுவே. …

Thursday, July 28, 2016

முதலாளித்துவ மக்கள் முன்னணி வேண்டாம்! யூ.என்.பி.யை வெளியேற்ற பொது வேலைநிறுத்தத்துக்கு தயார் செய்!


தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்கு போராடு!

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அரசியல் குழுவின் அறிக்கை


[RCL statement announces that the RCL, Sri Lankan section of ICFI, and its fraternal movement SLL-India were struggling to establish revolutionary proletariat program and party in Sri Lanka-Eelam and Indian sub-continent.]
 
Thozhilalar Pathai Volume 414
November 1991

இலங்கை-தமிழ் ஈழம் பிராந்தியங்களிலும் இந்தியத் துணைக் கண்டப் பிராந்தியத்திலும் பாட்டாளி வர்க்கப் புரட்சிகர வேலைத்திட்டத்தினையும், கட்சியையும் நிர்மானிக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்தியாவில் அதன் சகோதர இயக்கமான சோசலிச தொழிலாளர் கழகமும் மட்டுமே போராடுகின்றன. பாட்டாளி வர்க்கத்துக்குப் புரட்சிகர முன்நோக்கினை அனைத்துலகக் குழுவின் கிளைகள் மட்டுமே வழங்குகின்றனபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் சேருமாறும் அதன் பத்திரிகைகளான 'தொழிலாளர் பாதை', 'கம்கறு மாவத்த' பத்திரிகைகளை வாசிக்குமாறும் நாம் தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்கள், இளைஞர்களை வேண்டுகின்றோம். பலம் வாய்ந்த இளைஞர் இயக்கங்களை கட்டி எழுப்புவதன் மூலம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினை உறுதி செய்ய 'இளம் சோஷலிஸ்டுகள்' இயக்கத்தில் சேருங்கள்.

அனைத்துலக ரீதியில் ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனித்துவத்திற்கும் எதிராக உலகத் தொழிலாள வர்க்கத்தினை அணிதிரட்டும் நடவடிக்கையின் ஒரு பாகமாக 1991 நவம்பர் 16-17ம் திகதிகளில் அனைத்துலக குழு பேர்ளினில் கூட்டும் உலக மகாநாட்டுக்கு ஆதரவளிக்கும்படியும் அதன் வெளியீடுகளை ஆய்வு செய்யும்படியும் நாம் சகல தொழிலாளர்களையும், ஒடுக்கப்படும் மக்களையும் வேண்டுகின்றோம்.

Wednesday, July 27, 2016

துப்புரவுத் துறையைத் தனியாரிடம் ஒப்படைப்பதை முறியடி!


Volume 43 (File 414)
November 1991

பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் கட்டளைகளை ஏற்று தொழிற்துறைகளையும் துப்புறவுத் துறை போன்ற சமூக சேவைகளையும் தனியாரிடம் தாரை வார்க்கும் முதலாளித்துவ அ.தி.மு.., .காங். அரசாங்கத்தின் முயற்சியை முறியடிக்கமுதலாளித்துவ ஆட்சியினைத் தூக்கிவீசிதொழிலாளர் விவசாயி அரசாங்கம் அமைக்கின்ற பொதுப் போராட்டத்தில் ஒன்றிணையுமாறு துப்புரவுத் தொழிலாளர்களை சோசலிசத் தொழிலாளர் கழகம் அறைகூவி அழைக்கின்றது.

கொத்தடிமை நிலையில் துப்புரவுத் தொழிலாளர்கள்

சுமார் 10,000க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் மாநகராட்சியின் கீழ் பணி புரிந்து கொண்டிருக்கின்றார்கள். சுமார் 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கின்றனர். இந்த தொழிலாளிகள் அனைவருமே அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வண்டியை தாங்களே ஓட்டி குப்பையை வாரிக் கொட்டுகிறார்கள். வண்டியில் குப்பை அதிகமாகும் பொழுது வண்டியின் குப்பையின் மேல் ஏறி மிதிக்கின்றார்கள். இதனால் அவர்களது கண்ணாடித் துண்டுகளால் கிழிக்கப்படுகின்றன. இவர்களுக்கு செருப்பு தரப்படுவது இல்லை, குப்பையில் பிறரால் எறியப்பட்ட கிழிந்த பழைய செருப்புகளை தேடி எடுத்து போட்டுக் கொள்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான செருப்பு, சோப்பு, டவல், கையுறை எண்ணெய் போன்றவை மறுக்கப்படுகின்றன. மெடிகல் லீவ் உண்டு ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. பண்டிகை விடுமுறை என்பதெல்லாம் கிடையாது. வாரத்திற்கு சனிக்கிழமை ½ நாளும் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை ½ நாளும் விடுமுறை. ஆனால் முழு நாளும் வேலையை செய்து விட்டுத்தான் செல்ல வேண்டும். ஒருநாள் விடுமுறை தருவதாக ஒப்புக் கொள்ளப்பட்டு இன்னும் தரப்படவில்லை. மேலும் இவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்று செல்லும் பொழுது அவர்களுக்கு சேர வேண்டிய பணம் இழுத்தடிக்கப்பட்டு சில வருடங்கள் கழித்து தரப்படுகிறது.

அதிகாரிகளான Ciகள் தொழிலாளருக்கு சேர வேண்டிய எந்தப் பணமாக இருந்தாலும் கமிஷன் ஏஜென்ட் போல் 100க்கு 10 என்று எடுக்கிறார். தொழிலாளி யாராவது எதிர்த்து கேட்டால் அவரை வேறு இடத்திற்கு மாற்றுகிறார். இல்லையேல் வேலையே கொடுக்காமல் மேல் அதிகாரியைப் பார் என்று கூறி மாதக் கணக்கில் அலைய விடுகிறார்.

துப்புரவுத் தொழிலாளர்களுக்காக 'பெயரளவிற்கு' இருக்கக்கூடிய தொழிற்சங்கத் தலைமை சந்தா வசூல் செய்வதில் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறது. ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிலாளியை காட்டிக் கொடுத்தவரும் முதுபெரும் ஸ்டாலினிஸ்டுமான கே.டி.கே. தங்கமணி தான் இதன் கௌரவத் தலைவர். கருப்பண்ணனும் தங்கமணியும் அங்கம் வகிக்கும் இச்சங்கம் கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் ஏஜென்சியாக தொழிலாளர்களுக்குள் செயல்பட்டு வருகின்றது. கருப்பண்ணனை தொழிலாளர்கள் மடக்கிப் பிடித்து தங்கள் குறைகளைத் தீர்க்க போராடுமாறு நிர்பந்தித்தால், மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு கூழைக் கும்பிடு போட்டு, அவர்கள் பாதத்தை நக்கி தொழிலாளர்களின் வயிற்றிலடிப்பதே இவரது வாடிக்கையாகும். இது கருப்பண்ணனின் தனிப்பட்ட குணாம்சத்தோடு சம்பந்தப்பட்டதல்ல. மாறாக அவர் சார்ந்திருக்கும் சிபிஐ ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் எதிர்புரட்சிகர ஏஜென்சி பாத்திரத்தின் ஓர் அங்கமாகும்.

ஸ்டாலினிச மக்கள் முன்னணிக் கொள்கையை நிராகரி

CPI, CPI(M) ஸ்டாலினிச கட்சிகள் வர்க்கக்கூட்டு வைத்துக் கொண்டு மக்கள் முன்னணியை அமைத்து முதலாளித்துவ ஆட்சியை தக்க வைப்பதையே தனது வேலைத்திட்டமாக கொண்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் போராட்டத்திலிருந்து மற்றொரு பகுதியைத் தனிமைப்படுத்தி ஒன்று சேரவிடாமல் முதலாளித்துவத்திற்கு முண்டு கொடுத்து வருகின்றன. ஏகாதிபத்தியத்தின் புதிய ஒழுங்கு முறையை சமன்படுத்த ஸ்டாலினிஸ்டுகள் முழு ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர். வேலையின்மை விலைவாசி உயர்வு, சம்பள வெட்டு, ஆட்குறைப்பு இதிலிருந்து விடுபட தொழிலாள வர்க்கம் எழுச்சி கொண்டு வரும்பொழுது வருடத்திற்கு ஒருமுறை 'பாரத் பந்த்' என்று தொழிலாளர்களின் எழுச்சியை மட்டுப்படுத்துகின்றன. எனவே துப்புரவுத் தொழிலாளர்கள் இத்துரோகத் தலைமையிலிருந்து விடுபட வேண்டும். விடுபட்டு சீர்திருத்தவாத முதலாளித்துவ தலைமையைக் கட்டுவதன் மூலமும் (.தி.மு.. தி.மு.. காங்கிரஸ், ஜனதா, பா.ஜனதா தீர்வு காண முடியாது. மாறாக துப்புரவுத் தொழிலாளர்கள் புரட்சிகரத் தலைமையான டிராட்ஸ்கிச அணியைக் கட்ட வேண்டும். துப்புரவுத் துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிரான போராட்டமானது அ.தி.மு.. காங்கிரஸ் திமுக ஜனதா பா.ஜனதா போன்ற முதலாளித்துவ கட்சியின் ஆட்சிகளை தூக்கியெறிந்து தொழிலாளர்களின் ஆட்சியை அமைக்கும் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்ததாகும். “இன்றைய சகாப்தத்தில் தொழிற்சங்கங்கள் ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் புரட்சியைத் தடுப்பதற்காகத் தொழிலாளர்களை கீழ்ப்படியச் செய்து அடக்குவதற்கான இரண்டாம் உபகரணங்களாக மாற வேண்டும். அல்லது அதற்கு நேர்மாறாகத் தொழிற்சங்கங்கள் பாட்டாளி வர்க்க புரட்சி இயக்கத்தின் உபகரணங்களாக மாற வேண்டும்?' என்று டிராட்ஸ்கி கூறியது போல் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு புதிய புரட்சிகர வேலைத் திட்டமும் புரட்சிகரத் தலைமையுமே முதல் தேவை ஆகும். எனவே துப்புரவுத் தொழிலாளர்கள் பின்வரும் வேலைத்திட்டத்தின் கீழ் போராட வேண்டும் என டிராட்ஸ்கிச தொழிலாளர் அணி முன் வைக்கிறது.

ஃ அனைத்து ஊழியர்களும் நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

ஃ அடிப்படை வசதிகளான சோப்பு, செருப்பு, எண்ணெய், டவல், கையுறை போன்றவை அனைத்தும் வழங்கப்பட வேண்டும்!

ஃ தொழிலாளி உட்பட அவரது குடும்பத்திற்கு முழு மருத்துவ வசதியும் தொழிலாளி குடியிருப்பு வசதியும் அளிக்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் பெற

ஃ அனைத்து தொழிற்துறைகளையும், வங்கிகளையும், முதலாளிக்கு ஒரு பைசா நஷ்ட ஈடின்றி தொழிலாள வர்க்க ஆதிக்கத்தின் கீழ் தேசிய மயமாக்க ஒரு காலவரையற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்ததின் மூலம் தொழிலாளர் விவசாய அரசாங்கம் அமைக்கப் போராட வேண்டும்.

சிபிஐ, சிபிஐ (எம்) ஸ்டாலினிசத் தலைமைகளை முதலாளித்துவக் கட்சிகளுடனான உறவைத் துண்டிக்குமாறு தொழிலாளர்கள் நிர்பந்திக்க வேண்டும். புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடும் சோசலிச தொழிலாளர் கழகத்தை பரந்த கட்சியாக கட்டியெழுப்ப முன்வருமாறு துப்புரவுத் தொழிலாளர்களை அழைக்கிறோம். எம்.கே.