"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Wednesday, July 20, 2016

அகில இந்திய தொழிலாளர் மாநாடு



[To overthrow the Stalinist, reformist leadership and to build revolutionary Trotskyist leadership and advance the socialist program, ‪‎Socialist Labour League India announced its "All-India workers conference" in April-1992.]

Thozhilalar Pathai, Volume 43 [File 414]
November, 1991

ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களான பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் நிபந்தனைகளை ஏற்று நரசிம்மராவின் இ.காங் முதலாளித்துவ அரசாங்கத்தால் கொண்டு வந்துள்ள புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இந்திய தொழிலாள வர்க்கத்தின் மீது கடும் வர்க்க ஒடுக்குதல் கூட்டப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அதிகரிக்கும் ஆலைமூடல்கள் ஆட்குறைப்பு சம்பளவெட்டு, DA சீலிங், சமூக சேவை வெட்டு, ஆலைகளை தனியார்மயமாக்குதல் ஆகியவற்றை எதிர்த்துப் போராட தொழிலாள வர்க்கத்துக்குள் இருக்கும் முதலாளித்துவ ஏஜெண்டுகளான ஸ்டாலினிச, சீர்திருத்தவாத தலைமைகளை அகற்றி புரட்சிகர டிராட்ஸ்கிச தலைமையைக் கட்டவும், சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும், சோசலிசத் தொழிலாளர் கழகம் ஏப்ரல் 1992ல் "அகில இந்திய தொழிலாளர் மாநாட்டைக் கூட்டவுள்ளது. அம்மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறும் மேலும் இம்மாந்நாட்டிற்கான நன்கொடைகளையும் தந்துதவுமாறும் வர்க்க நனவுள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சோசலிசத் தொழிலாளர் கழகம் அறைகூவி அழைக்கின்றது.

Tuesday, July 19, 2016

ராஜீவ் காந்தி கொலை குற்றப் பத்திரிகை: தமிழ் ஈழ விரோத குற்றப்பத்திரிகையாக்க திட்டம்



[“The Trotkyist ‪‎Socialist Labour League India‬ is the only one, which struggles to build Socialist Republic of Sri Lanka and Eelam as part of the Socialist Republics of Indian sub-continent among Indian working class and oppressed mass. In this region, ‪‎SLL-India‬ is fighting along with Revolutionary Communist League for the struggle of self-determination rights of Tamils and against the Indian government's anti-Tamil Eelam maneuvers.”]
 
Volume: 414
December 1991

இந்திய மாஜி பிரதமர் ராஜீவ் காந்தி கொலை பற்றி விசாரணை செய்யும் விசேட விசாரணைக் குழு (S.I.T) எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யவுள்ள குற்றப்பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனையும் ஒரு எதிரியாக குறிப்பிட இந்திய காங்கிரஸ் அரசாங்கம் எடுத்துவரும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் விடுதலை இயக்கத்துக்கு எதிரான கொலைகாரச் சதிகளை இந்தியாவிலும் இலங்கையிலும் புதிய கட்டத்துக்கு உயர்த்த முடிவு செய்துள்ளது.

தமிழ் ஈழம் தேசிய இனத்தினருக்கு எதிரான இந்தச் சதியில் ஏகாதிபத்திய கைக்கூலி நரசிம்மராவ்-பிரேமதாச அரசாங்கங்கள் கூட்டாகவே ஈடுபட்டுள்ளன. தென் ஆசிய எஜமான்களாக எந்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை அனைத்துக் கொள்வது தொடர்பான பிரச்சினைகளின் பேரில் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கங்கள் 'சார்க்' மகாநாட்டைக் கூட்டுவதிலும் கலந்து கொள்வதிலும், அதில் என்ன தான் முரண்பட்டுக் கொண்டாலும் எந்தவொரு இன, மதக் குழுவினரதும் ஜனநாயக கிளர்ச்சி, எழுச்சிகளை நசுக்குவதில் அவர்களிடையே தகராறு கிடையாது.

தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தினை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் பொருட்டு 'விசேட விசாரணைக் குழுவின் அநேக அங்கத்தவர்கள் புனர்விசாரணையின் இழகிய தடயங்களை இறுக்கும்பொருட்டு காலத்துக்குக் காலம் இலங்கைகுக்கு விஜயம் செய்து வந்துள்ளார்கள்.” (ஹிந்து — 5/12/91)

வடக்கு மாகாணத்தில் உள்ள ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்தினருக்கு எதிராக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக முதலாளித்துவ சிங்கள இனவாத அரசாங்கம் கடைப்பிடித்து வரும் 'உணவுத்தடை' நடவடிக்கைகள் அங்கு படுபயங்கரமான பட்டினி வலயத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு வவுனியாவிலும் தீவுப்பகுதியிலும் சிவில் நிர்வாகத்தை' புனர்நிர்மாணம் செய்வதாகக் கூறி அரசாங்க இனவாத படைகள் கைக்கூலி புளொட். டேலோ இயக்கங்களுடன் ஆரம்பித்துள்ள நடவடிக்கைகள் அப்பிராந்தியத்தில் பட்டினியுடனும் எஞ்சிக் கிடந்தோரையும் வெளியேற வைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சென்று திரும்பிய மாஜி யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும், இன்றைய சுற்றாடல் அலுவல்கள் அமைச்சின் செயலாளருமான டாக்டர் தேவநேசன் நேசையா குறிப்பிட்டது போல் "யாழ்ப்பாணத்தில் போஷாக்கில்லாத குழந்தைகள் சமுதாயம் ஒன்று உருவாகிறது. இதனைத் தடுக்க நாம் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்கால இளைஞர் சமுதாயம் வலுக்குறைந்த ஊனச் சமுதாயமாகவே இருக்கும்" இது "ஊனச்சமுதாயமாக" எஞ்சி இருக்கும் நிலைதன்னும் இப்புதிய இந்திய-இலங்கை ஆளும் வர்க்கங்களின் சதியினைத் தொடர்ந்து கிடைக்குமா என்ற ஐயமும் உருவாகியுள்ளது.

குட்டி முதலாளித்துவ விடுதலைப் புலிகள் தலைமை இப்பிற்போக்கு நரசிம்மராவ் - பிரேமதாசா அரசாங்கங்களுடன் நானாவிதமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் உக்திகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ள நிலையில் இந்த ஆளும் கும்பல்கள் ராஜீவ் காந்தி கொலை விசாரணை மீதான வெறிபிடித்த பிரச்சாரத்தினை தமிழ் தேசிய இனத்தினருக்கு எதிராக மட்டுமல்ல முழு இந்திய தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்த முடிவு செய்துள்ளன.

இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் முகம் கொடுத்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பிரதமர் நரசிம்மராவ் ஐரோப்பிய ஏகாதிபத்திய மையங்களில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். எனினும் ஹெல்மட் ஹோலின் அரசாங்கமும் சரி ட்ரான்ஸ்வால்ட் மிட்டரண்டின் அரசாங்கமும் சரி இந்திய தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் வழங்கும் எந்தவொரு சலுகையுடனும் திருப்திப் படுவதாய் இல்லை. சமீபத்தில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி குறிப்பிட்டது போல் நாம் வேண்டும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய சிங்கப்பூரினால் முடியுமானால் இந்தியாவினால் ஏன் முடியாது? என்ற தொனியில் பேசியுள்ளான். 1940பதுகளில் இருந்து 'நேரு சோசலிசம்', 'தேசிய சோசலிசம்' என்ற பேரில் மாஸ்கோ ஸ்டானினிஸ்டுகளின் ஆதரவுடன் இடம் பெற்ற சகல தேசியவாத நடவடிக்கைகளையும் புதுடில்லி அரசாங்கம் சிதறடித்துள்ளது.

தமிழ் தேசிய விடுதலை இயக்கத்துக்கு எதிராக இடம் பெறும் வெறி கொண்ட பிரச்சாரம் தமிழ்நாடு மாநில ஜெயலலிதா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கும் இடையேயான பிரச்சினையாக அன்றி இந்திய மத்திய அரசாங்கம்—ஹிந்தி வெறி சோவினிச பாரதீய ஜனதா கட்சி உள்ளடங்கலான பிரச்சார முன்னணி மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.

காங்கிரஸ் கட்சி, ADMK வுக்கும் மு. கருணாநிதி தலைமையிலான தி.மு.. விற்கும் இடையேயான பிரச்சினை, இந்த தமிழ் ஈழம் மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தினை கருணாநிதி கூறுவது போல் இலங்கையில் இன நெருக்கடி வெடித்த காலத்தில் இருந்து (1983) ஆரம்பிப்பதாக அல்லது ஜெயலலிதா-நரசிம்மராவ் கும்பல் கூறுவதைப் போல் 1989ல் (கருணாநிதி ஆட்சிக்கு வந்த காலத்தில்) இருந்து ஆரம்பிப்பதா? என்பதே. இந்த முதலாளித்துவ கும்பல்களுக்கிடையே தமிழ் ஈழம் போராட்ட குரல் வளையை நெரிப்பது தொடர்பாக வேறு அடிப்படையான கருத்து வேறுபாடு கிடையாது.

மாஜி உள்நாட்டுச் செயலாளர் நாகராஜா கைது தொடர்பான பிரச்சினையில் பத்திரிகைகளுக்கு அளித்த பேச்சியில் மு. கருணாநிதி இதை ஊர்ஜிதம் செய்துள்ளார்: “கருணாநிதி தீவிரவாதிகள் இந்த மாநிலத்தில் ஏதோஒரு சில மாதங்களுக்கு முன் வந்து குதித்தது போல் தோன்றும் வகையில் அன்றி மாநிலத்தில் 1983ல் இருந்து விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை விசாரிக்க ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம் செய்யப்பட வேண்டும் என கோரினார்.” (ஹிந்து 2.11.91)

இந்திய முதலாளி வர்க்கம் இந்த விசாரணை தொடர்பாக இந்திய தொழிலாள-ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் முறையில் பயங்கரவாத, நாசகர நடவடிக்கைகள் சட்டத்தை (tdaa) இந்தக் கொலை விசாரணை தொடர்பாக பயன்படுத்தி வருகின்றது. இந்தக் கொலை தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்கு இந்திய முதலாளித்துவ வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் முன்னுரிமை கொடுப்பதன் மூலம் இந்திய பக்டரி மூடுவிழாக்கள், வேலைநீக்கங்கள், அரசுடமை நிறுவனங்கள் பன்னாட்டு கம்பனிகளிடம் ஒப்படைப்பு, வேலையின்மை போன்ற கொதிக்கும் பிரச்சினைகளால் தினமும் முன்னணிக்கு வரும் இலட்சோப இலட்சம் தொழிலாள-ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக இன, மத, பிராந்திய வெறிகளை தூண்டி விடுகின்றன.

இந்திய ஸ்டாலினிச சீ.பீ.-சீ.பீ.எம். தலைவர்களுக்கு இந்திய முதலாளி வர்க்கக் கட்சிகளில் இருந்து சுயாதீனமான வேறுபட்ட வேலைத்திட்டம் கிடையாது. இதனால் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஒவ்வொரு பொலிஸ் அரசு வேலைத்திட்டமும் இத்துரோகத் தலைவர்களின் ஆசியுடனேயே அமுல் செய்யப்படுகின்றது. தமிழ் ஈழத்தினருக்கு எதிரான தமிழ்நாட்டு பொலிஸ் வேட்டைகள் இதை நிரூபித்துள்ளன.

இலங்கை-தமிழ்ஈழம் சோசலிசக் குடியரசு ஒன்றியத்தினை இந்தியத் துணைக் கண்ட சோசலிச குடியரசின் பாகமாக அமைக்க இந்திய தொழிலாள-ஒடுக்கப்படும் மக்களிடையே ட்ரொட்ஸ்கிச சோசலிசத் தொழிலாளர் கழகம் மட்டுமே போராடுகின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கும் இந்திய அரசின் தமிழ்ஈழம் விரோத சதிக்கும் எதிராக இப்பிராந்தியத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துடன் இணைந்து போராடுவது சோ.தொ.கழகமே.

Monday, July 18, 2016

இந்தியா: சந்திரசேகர் அரசாங்கத்தின் நெருக்கடி மோசமடைகிறது!


[The article explains the necessity and urgency to build ‪Indian Socialist Labour League‬ and Sri Lankan Revolutionary Communist League as revolutionary leadership in the sub-continent.]


Thozhilalar Paathai, Volume: 402 (File: 404)
March, 1991

இந்திய சந்திரசேகர் அரசாங்கம் வெளிநாட்டுச் செலாவணி பற்றாக்குறையை தீர்க்க 3000 கோடி ரூபாய்களை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனாக பெறுவதாக ஜனவரி 5ம் திகதி அறிவித்தது. 'மசகு எண்ணெய் விலை உயர்வு' அத்தியாவசிய இறக்குமதிகளை சமாளிக்கவே இக்கடன் பெறப்பட்டது.

இக்கடன்கள் இந்தியா முன்னொரு போதும் எதிர்க்கொள்ளாத கடும் நிபந்தனைகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கம் துண்டுவிழாத வரவு செலவுத்திட்டத்தினை தயாரிக்க வேண்டும். இது முக்கிய நிபந்தனைகளில் ஒன்று. சொந்த நலனின் பேரில் இந்நிபந்தனையை அமுல் செய்வதாக சந்திரசேகர் அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 2752 கோடி ரூபாவாக வீழ்ச்சி கண்டது. இப்பணம் இரண்டு கிழமைகளுக்கான இறக்குமதிச் செலவைச் சமாளிக்கவும் பற்றாக்குறையானது. 45 வருட கால ஆட்சியின் பின்னர் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் நாட்டின் பொருளாதாரத்தினை எத்தகைய வங்குரோத்து நிலைக்குள் தள்ளியுள்ளது என்பதற்கு இது நல்லதோர் காட்சி.

மோசமடைந்து வரும் நெருக்கடியின் மத்தியில் இந்திய முதலாளித்துவ அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தினதும், உலக வங்கியினதும் கட்டளை அமுல் செய்வதன் மூலம் ஏகாதிபத்திய நிதி மூலதனம் இந்தியாவினுள் பெருக்கெடுப்பதற்கான நிலைமைகளைச் சிருஷ்டித்து வருகின்றது: வி.பி.சிங் அரசாங்கம் ஏகாதிபத்திய முதலீடுகளுக்கு பெரும் வாய்ப்புகளை வழங்கும் விதத்தில் தயார் செய்த 'புதிய கைத்தொழில் கொள்கை', ராஜீவ் காந்தி காங்கிரஸின் முண்டுகோலில் நின்று வரும் சந்திரசேகர் அரசாங்கத்தின் கொள்கையாகியுள்ளது. அரசுடைமையாக்கப்பட்டிருந்த இந்திய தொலைதொடர்ச் சேவை இன்று தனியார்மயமாக்கப்பட்டுள்ளதோடு ஏனைய அரசாங்கத் துறைகளும் உடைக்கப்பட வேண்டும் என்பதே ஏகாதிபத்தியவாதிகளின் கட்டளையாகவுள்ளது.

இரத்தக் களரி

நெருக்கடி உக்கிரமடைந்து, ஏகாதிபத்தியவாதிகளின் கட்டளைகளை அமுல் செய்ய நேரிட்டதைத் தொடர்ந்து சந்திரசேகர் அரசாங்கமும், மற்றும் முதலாளித்துவக் குழுக்களும் இந்தியா பூராவும் இன, மத மோதல்களையும், இரத்தக் களரிகளையும் சிருஷ்டிப்பதில் ஈடுபட்டுள்ளன. இதன் பொருட்டு மீண்டும் அயோத்தி பிரச்சினை' முன்னணிக்கு வந்துள்ளது. படுபிற்போக்கு மத இயக்கமான விஸ்வ ஹிந்து பரிக்சத் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவுடன் வட இந்திய நகரான அயோத்தியில் 40 வருடத்துக்கு முன்னர் இருந்ததாகச் சொல்லப்படும் இராம ஜென்ம பூமியின் உரித்து பற்றி ஆராயும் 'நிபுணர் குழ' ஒன்றை நிறுவியுள்ளது. கடந்த ஆண்டில் இந்த அயோத்தி பிரச்சினை மீது பிற்போக்குப் பிரச்சாரம் வெடித்த வேளையில் 'வரலாற்று சான்றுகள் ஆயும் கமிட்டியை' அமைக்கும் யோசனையை ராஜீவ் காந்தி முன்வைத்தார். இன்று மற்றும் பிற்போக்குக் கட்சிகளும் இந்த யோசனையைச் சூடிபிடிக்கும் விதத்தில் தாங்கிப் பிடித்து வருகின்றன.

சந்திரசேகர் தமிழ் நாட்டிற்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் அ.தி.மு.. கட்சியினர் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஈழம் விடுதலைப் போராளிகளுக்கும் வட-கீழ் மாகாண தமிழ் விடுதலைப் போராட்டத்துக்கும் எதிரான பிரச்சாரத்தினை முடுக்கி விட்டுள்ளனர். இவ்விரு கட்சிகளும் தமிழ்நாடு அரசாங்கத்தை களைக்கும்படி சந்திரசேகர் அரசாங்கத்தை நெருக்கி வருகின்றன. ஐக்கிய அசாம் விடுதலை முன்னணி, நக்சல்பாரி இயக்கம், மற்றும் இந்திய அமைப்புகளுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், அவற்றுக்கு விடுதலை புலிகள் உதவி வருவதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு தளமாக இருப்பதாகவும் இப்பிற்போக்காளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யூ.என்.பி. அரசாங்கத்தினை நெருக்கடிக்குள் தள்ளி வரும் தமிழ் விடுதலைப் போராட்டம் இந்தியாவினுள் ஏற்படுத்தும் தாக்கங்களையிட்டு இப்பிற்போக்கு அரசியல் கும்பல்கள் அச்சமடைந்துள்ளன. ஆதலால் அப்போராட்டத்தினை நாசமாக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரச்சாரத்தின் அடிநாதமாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினதும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினதும் தலைவர்களின் துரோகத்தின் மத்தியில் தொழிலாளர்களும், ஒடுக்கப்படும் மக்களும் தமது உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் திணைக்களம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து உள்ளமர்வு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு தமிழ்நாடு தபால் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்றுச் சென்ற ஊழியர்கள் கொந்தராத்து முறையில் திரும்பவும் வேலைக்கு அமர்த்தும் ஆட்சியாளர்களின் நடவடிக்கையை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் இழுபட்டு வயிறளந்து வந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்டாலினிஸ்டுகள் காங்கிரஸ் கட்சியின் 'மதச்சார்பின்மையின்' நம்பிக்கை வைக்க முடியாத விதத்தில் அவர்கள் செயல்படுவதையிட்டு குற்றம்சாட்டியுள்ளனர். சமீபத்தில் சீ.பீ.எம். வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி வி.பி.சிங் அரசாங்கத்துக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சியுடன் சேர்ந்து வாக்களிக்காமல் இருந்து விட்டு, பின்னர் வேறாக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொணர வேண்டியிருந்தது என முறைப்பட்டிருந்தது.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் நேபாள ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சி மகாநாட்டில் கலந்து கொள்ளவென சீ.பீ.எம். தலைவரான ஹர்கிருஷ்ணன் நேபாளம் சென்றார். அவர் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பிரிவினரை மீண்டும் ஒன்றுபட்டு நேபாள ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் முன்னணி அமைப்பது அவசியமென குறிப்பிட்டார். பங்களாதேசில் ஈர்ஷாத்தின் இராணுவ அரசாங்கம் வீழ்ச்சி கண்டதன் பின்னர் உருவாகியுள்ள ஆளும் வர்க்கத்தின் நெருக்கடியையிட்டும் சீ.பீ.எம். தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பங்களாதேசைப் பிறப்பிடமாகக் கொண்ட சீ.பீ.எம். தலைவர்களில் ஒருவரான கித்திரவேர்த்தி சமீபத்தில் பங்களாதேஷ் சென்று திரும்பினார். அவரின் இந்த உத்தியோகபூர்வ விஜயம் பற்றி எதுவுமே வெளியிடப்படவில்லை.

இந்தியாவின் இந்த அரசியல் நெருக்கடியும் ஸ்டாலினிஸ்டுகளின் துரோகமும் தொழிலாள வர்க்க புரட்சித் தலைமையினைக் கட்டி எழுப்புவதன் அவசியத்தினை சுட்டிக்காட்டுகின்றது. கோடானுகோடி கிராமிய ஏழைகளும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் தொழிலாள வர்க்கத்துடன் புரட்சிகரப் பிணைப்பை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் முதலாளித்துவத்தினை தூக்கி வீசி, ஏகாதிபத்திய பிடியை உடைத்து எறியும் ட்ரொட்ஸ்கிச புரட்சிக் கட்சியைக் கட்டி எழுப்ப வேண்டும். நான்காம் அகிலத்துடன் உறவு கொண்ட இந்திய சோசலிச லேபர் லீக்கையும் இலங்கை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தையும் துணைக்கண்டத்தின் புரட்சித் தலைமையாக கட்டியெழுப்புவது இன்று அவசியமாகியுள்ளது.

Sunday, July 17, 2016

ஸ்ராலினிச குண்டர்களதும் முதலாளித்துவ போலீசினதும் கூட்டுத்தாக்குதலை தோற்கடி! தோழர் ராம் மீதான பொய் வழக்கை வாபஸ் வாங்கப் போராடு!


[Police arrests ‪SLL-India‬ comrade and files case against him. SLL_India struggles to release him.]

Thozhilalar Paathai, Volume 402 (File no 404)
March, 1991

பி அண்டு சி ஆலைமூடல் அபாயத்துக்கு எதிராக சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்து தொடர்ந்து போராடி வரும் டிராட்ஸ்கிசத் தொழிலாளர் அணியின் சார்பில் 1989 சென்னைத் தொழிலாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தோழர் ராம் மீது சி.பி.எம். ஸ்டாலினிச குண்டர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதலின் பின்னர் போலீசார் தோழர் ராமை கைது செய்து செக்சன் 75ன் கீழ் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை உடனடியாக வாபஸ் வாங்கும்படி சென்னைத் தொழிலாளர் சங்கமும் இதர தொழிற்சங்க அமைப்புகளும் முன் வரவேண்டுமென்று டிராட்ஸ்கிச தொழிலாளர் அணியும் சோசலிசத் தொழிலாளர் கழகமும் அறைகூறுகின்றது.

தோழர் ராம் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்திய ஸ்டாலினிச குண்டர்களை கைது செய்யாமல், தாக்கப்பட்டவரை கைது செய்து அவர் மேல் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தார் என்று போலீசார் வழக்குத் தொடர்ந்திருப்பது ஸ்டாலினிஸ்டுகளுக்கும், அரசுக்கும் இடையிலான நெருக்கமான உறவை பிரதிபலிப்பதாக உள்ளது. மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆலைமூடல்கள், ஆட்குறைப்புகள் ஆகியவற்றினால் பாதிப்புக்குள்ளாக்கப்படுவதற்கு சிபிஎம் சிபிஐ அரசியல் தலைமைகளும் அவற்றின் தொழிற்சங்க அமைப்புகளான சிஐடியு யும் ஏஐடியுசி யும் துணையாக இருந்தன. அது போலவே சென்னையில் பின்னி இன்சினியரிங். எம்.எப்.எல்., மெட்டல்பார்க்ஸ் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் போன்ற பல ஆலைகளில் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதற்கும் ஆலைமூடல்களுக்கும் வழி வகுத்து கொடுத்தனர்.

இவ்வாறாக சிபிஐ சிபிஎம் கட்சித் தலைமைகளும் அவற்றின் தொழிற்சங்க அமைப்புகளும் செயல்படுவதற்கு காரணம் அவர்களின் வேலைத்திட்டம் திவாலாகி மடிந்து கொண்டிருக்கும் லாப உற்பத்தி முதலாளித்துவ அமைப்பை தூக்கி வீசி தேவையை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்தை உருவாக்குவது அல்ல. அதனால் முதலாளித்துவ அமைப்புக்கு ஏற்பட்டுள்ள வரலாற்று நெருக்கடியின் போது வர்க்கப் போராட்டத்தை முதன்மைப்படுத்துவதற்கு பதிலாக தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களை பலியாக்க முதலாளித்துவ அணியினருடன் கை கோர்த்து தேசிய ஐக்கியம் மத சார்பின்மை போன்ற கோஷங்களை எழுப்பி வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புகின்றனர்.

மேலும் இன்றைய ஆழமான இந்திய முதலாளித்துவ, பொருளாதார நெருக்கடி நிலைமையில் செத்து மடியும் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் தேசிய முன்னணியுடன் கூட்டரசாங்கம் அமைக்க தயாராக இருப்பதாக சிபிஐ தலைமை அறிவித்துள்ளது. அதே வேளை சிபிஎம் தலைமை, தேசிய முன்னணி ஸ்திரமான ஆட்சி அமைக்க இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்டாலினிசத் தலைமைகளின் எதிர்புரட்சிகரமான வேலைத்திட்டத்துக்கு எதிராக மாற்று சோசலிச வேலைத்திட்டத்திற்காக டிராட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் போராடி வருகிறது.

இதன் காரணமாகவே முதலாளித்துவ ஏஜண்டுகளான ஸ்டாலினிச அதிகாரத்துவம் குண்டர்களின் பலாத்காரம் மூலம் உண்மையான மார்க்சிஸ்டுகளை—டிராட்ஸ்கிஸ்டுகளை மௌனமாக்க முயற்சிக்கின்றனர்.

அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ள டிராட்ஸ்கிச இயக்கத்தை கொலை மிரட்டல் மூலம், குண்டர் தாக்குதல்களின் மூலம் மௌனமாக்க முடியாது. ஸ்டாலினிஸ்டுகளின் எதிர்ப்புரட்சிகர அரசியலையும், தொழிற்சங்க காட்டிக்கொடுப்பு வேலைகளையும் அம்பலப்படுத்து. தொழிலாளர்கள், இளைஞர்கள் மத்தியில் புரட்சிகர நனவுள்ள மார்க்சியத்திற்கான போராட்டத்தை சோசலிசத் தொழிலாளர் கழகமும் டிராட்ஸ்கிச தொழிலாளர் அணியும் பன்மடங்கு தீவிரப்படுத்தும்.

Saturday, July 16, 2016

1947ல் நடந்த இரத்த பிரளயத்தை மீண்டும் ஏற்படுத்த ஏகாதிபத்திய வங்கியாளர்களும் இந்திய முதலாளித்துவமும் சேர்ந்து நடத்தும் கூட்டுச் சதியை தோற்கடி!

[‪SLL-India‬ calls class conscious workers and youths to unify working class and oppressed people. It calls to initiate the struggle for establishing workers defense groups and soviets.]

Thozhilalar Paathai, Volume 398
October, 1990

1947ல் இந்திய உபகண்டத்தில் தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றுபட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்திய புரட்சிகரமான போராட்டத்தினை கண்டு நடுநடுங்கிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இந்திய முதலாளித்துவமும் கூட்டுச்சதி செய்து பிரமாண்டமான தொழிலாளர் விவசாயிகளின் புரட்சிகர இயக்கத்தை உடைப்பதற்கு ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஒத்துழைப்புடன் மதவகுப்புவாதத்தை தூண்டிவிட்டு கலவரங்களை உண்டு பண்ணி முன் கண்டிராத அளவில் லட்சக்கணக்கான சகோதர கொலைகளை ஏற்படுத்தியதன் மூலமாக தமக்கு எதிராக திரண்டு எழுந்து வந்த மாபெரும் புரட்சி இயக்கத்தினை தமது துப்பாக்கி குண்டுகளுக்கு அதிக செலவில்லாது பலவீனப்படுத்தி, சிதறடித்து இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து நசுக்கினார்களோ அதைவிட கோரமான சகோதர யுத்தக் கொலைகளுக்கு இன்றைய இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்களும், ஏகாதிபத்திய வங்கியாளர்களும் கூட்டாக நடத்தும் சதியின் வெளிப்பாடுகளே வி.பி.சிங்கின் மண்டல் கமிஷன் இடஒதுக்கீடு பிரகடனங்களும், அத்வானியின் 'ராம் ரதயாத்திரைகளும்' தேவிலால்களின் நகரவாசிகளுக்கு எதிரான போராட்டமும் ஆகும். மோசமான அரசியல், பொருளாதார நெருக்கடியிலுள்ள அரசாங்கத்தினால் தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிராக கிளர்ந்தெழும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் விவசாயிகளையும் இதர ஒடுக்கப்படும் மக்களையும் பிளவுபடுத்தக்கூடிய அனைத்து வழிகளையும் கையாண்டு புரட்சிகர போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்பதற்காக இந்திய ஆளும் வர்க்கமும் ஏகாதிபத்திய வங்கியாளர்களும் செய்யும் சூழ்ச்சிகை தோற்கடிக்க புரட்சிகர சோசலிச, ஜனநாயக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு காலவரையற்ற பொதுவேலைநிறுத்தத்தின் மூலம் தொழிலாள வர்க்கம் தனது முழு வர்க்க பலத்தையும் அணிதிரட்டி தனது தலைமையின் கீழ் இளைஞர்களையும், ஏழை விவசாயிகளையும், ஒடுக்கப்படும் மக்களையும் கொண்ட வெகுஜன இயக்கங்களையும் கூட்டுச் சேர்த்து இச்சூழ்ச்சிகளை தோற்கடிக்க போராட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின், ஒடுக்கப்படும் மக்களின் ஐக்கியத்தை பேணவும், மத சாதி மொழி வகுப்புவாத கலவரங்களை திட்டமிட்டே உண்டுபண்டும் குண்டர்களை தோற்கடிக்கவும் ஒடுக்கப்படும் சிறிய மதப்பிரிவினர்களை (இஸ்லாமியர், சீக்கியர்களை) பாதுகாக்கவும் தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களையும், சோவியத்துகளையும் (தொழிலாளர் சபைகளையும்) நிறுவும் போராட்டத்தை தொடங்குமாறு வர்க்க நனவுள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் அழைக்கிறது.

நான்கு பத்தாண்டுகளுக்கு கூடுதலாக பேணப்பட்டு வந்த யுத்த பிற்கால சமநிலை உடைந்துவிட்டது தொடர்ந்து அதிகரிக்கும் ஏகாதிபத்தியத்தின் ஸ்திரமற்ற நிலைமையானது சர்வதேச ரீதியாகவே 1930களை விட மோசமான ஒரு உலக பொருளாதார மந்தநிலையை (Depression) உண்டு பண்ணும் நுழைவாயிலில் நிற்கின்றது. அதேசமயம் இதனால் முடுக்கி விடப்பட்டு பிரமாண்டமான முறையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சி இயக்கம் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த ஒரு பகுதியாகவே இந்திய உபகண்டத்திலும் யுத்த பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட வகுப்புவாத அரசு அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தின் விவசாயிகளின் ஒடுக்கப்படும் மக்களின் வர்க்கப் போராட்டங்களினால் ஆட்டம் கண்டுள்ளன. இவ்வாறாக வளர்ச்சி அடையும் பிரமாண்டமான இயக்கத்தை ராணுவ பலத்தை மட்டும் கொண்டு ஒடுக்கிவிட முடியாது என்பனதை வரலாற்று அனுபவங்களின் மூலம் ஆளும் வர்க்கத்தினர் கண்டு கொண்டுள்ளனர். மிக அண்மைக்கால படிப்பினையை உலகத்தின் நான்காவது பெரும் ராணுவம் எனக் கருதப்படும் இந்திய ராணுவம் தமிழீழத்தில் கற்றுக் கொண்டது ஒரு மாதத்தில் தமிழீழ விடுதலை போராளிகளை நிராயுத பாணியாக்குவோம் என்று தம்பட்டம் அடித்து இறுதியில் அம்முயற்சியில் தோல்வியடைந்து அவமானத்துடன் வெளியேறும்படியானது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா இலங்கை போன்ற நாடுகளிலுள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்கள் பேனபாட்டிச போலிஸ் ராணுவ சர்வாதிகார ஆட்சிகளை பல வருடங்களாகவும் பத்தாண்டுகளும் கூட நீடித்து நடத்தி வர்க்கப் போராட்டங்களை நசுக்கி தமது நெருக்கடியான ஆட்சிகளை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருகின்றனர். ஆனால் அப்படியான ஆட்சி வடிவத்தை இந்தியா போன்ற பிரமாண்டமான மக்கள்தொகையும் (80 கோடி) சக்தி வாய்ந்த தொழிற்துறை தொழிலாள வ்ர்க்கத்தையும் கொண்ட நாட்டில் நீடித்து நடத்த முடியாதென்பதை நன்கு அறிந்து கொண்ட இந்திய முதலாளித்துவம் எல்லைப் போர்களைப் பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் உண்டாக்கி அதன்மூலம் வர்க்கப் போராட்டங்களை ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைகளின் உதவியுடன் தேசிய வெறியில் மூழ்கடித்து வந்துள்ளது. நாடு பரந்தளவில் 'அவசரநிலை சட்டம்' (1975-77) பிரகடனம் செய்யப்பட்டு நடத்திய மிருகத்தனமான ராணுவ நடவடிக்கைகளை நீடிக்க முடியாத அளவிற்கு பெரும் எதிர்ப்பு வெடித்தெழுந்தது. இதனால் 1975ல் பிரகடனம் செய்யப்பட்ட அவசரநிலை சட்டம் 1977ல் வாபஸ் வாங்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியா போன்ற பெரும் காலனிகளை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு கையாண்ட பிரித்து, ஆளும் சூழ்ச்சிகளை நன்கு கற்றறிந்த அவர்களது சீடர்களான இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் தமது ஆட்சிமுறைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து மத, சாதி மொழி கலவரங்களை தீவிரமாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

அதே சமயம் பாரதீய ஜனதாக் கட்சி மதிப்பிழந்துள்ள இதர இரு முக்கிய முதலாளித்துவ கட்சிகளினாலும் (தேசிய முன்னணி, காங்கிரஸ்) ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் வி.பி. சிங்கின், அத்வானியின் (பாரதீய ஜனதாக் கட்சித் தலைவரின்) நடவடிக்கைகளை இடைத்தேர்தல் வருமாயின் வாக்குகளை சேகரிப்பதற்கான செயல்களாக முதலாளித்துவ பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் சிறுமைப் படுத்திக் காட்டுகின்றன. ஆனால் உண்மையில் வி.பி. சிங்குகளும் அத்வானிகளும், ராஜிவ்காந்திகளும் தமக்குள்ளே ஒரு தொழிற்பங்கீட்டை ஏற்படுத்தி முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக வளர்ச்சி அடையும் போராட்டங்களை மக்களுக்குள்ளேயான போராட்டங்களாக மாற்றுவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றனர்.

உலக அரசியல், பொருளாதார நெருக்கடியின் தாக்கம்

இந்திய முதலாளித்துவ வர்க்கத்தை இந்த எதிர்ப்புரட்சி சதித்திட்டத்தில் தீவிரமாக தள்ளுவது இன்றைய உலக அரசியல், பொருளாதார அழுத்தங்களின் கீழ் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள இந்திய அரசியல், பொருளாதார நெருக்கடிகளாகும்.

கடந்த இரு பத்தாண்டுகளில் கம்பியூட்டர்களிலும் தொடர்பு சாதனங்களிலும் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சியானது பூகோளமயப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையை கொண்ட உலகப் பொருளாதாரத்தை முன்கண்டிராத வகையில் ஒருங்கிணைத்து, முன்பு வரையப்பட்ட தேசிய எல்லைக்கோடுகள் உலகப் பொருளாதாரத்தின் இயக்கத்துக்கு தடையாக உள்ள நிலையில் உலகப் பொருளாதாரத்துக்கும் காலாவதியாய் போன தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான முட்டி மோதல்கள் கூர்மை அடைகின்றன. இவற்றின் தீவிர வெளிப்பாடாகவே தீவிர தேசியவாத பொருளாதார கொள்கையை பல பத்தாண்டுகள் பின்பற்றி வந்த கிழக்கு ஐரோப்பிய பொருளாதாரங்கள் வீழ்ச்சி அடைந்து அந்நாடுகளின் ஸ்டாலினிச ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. சோவியத் யூனியன், சீனா, வியட்நாம், கியூபா ஆகிய நாடுகளின் பொருளாதார நெருக்கடிக்கும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பர்மா, பங்களாதேஷ் போன்ற பின்தங்கிய நாடுகளின் பொருளாதார நெருக்கடிக்கும் இவையே அடிப்படைக் காரணம். மேலும் இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தின் இந்த அடிப்படை முரண்பாடானது ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பகைமையையும் கூர்மை அடையச் செய்துள்ளது. இந்நிலைமையிலேயே ஏகாதிபத்தியத்தின் இயல்பான குணாம்சத்தின் வழி மீண்டும் உலக சந்தையை மறுபங்கீடு செய்ய, கச்சாப் பொருட்களை சூறையாட, உபரி உழைப்பை அதிகமாக்க மறுபடி உலக யுத்தத்தை நடத்த தயார் செய்கின்றன. அமெரிக்க முதலாளித்துவம் பொருளாதாரத்திலும், நிதி நிலைமையிலும் அடைந்துள்ள பாதாள வீழ்ச்சியானது அமெரிக்க தொழிலாள வர்க்கத்துக்கும் மற்றும் அராபிய, ஆபிரிக்கா ஆசியா போன்ற வரலாற்று ரீதியாக காலனித்துவ ஒடுக்குமுறையை அனுபவித்து வந்தவர்களுக்கு எதிரான கோரமான தாக்குதல்களுக்கு உந்தும் காரணியாக உள்ளது. இந்நிலைமையில் உலகப் பொருளாதாரத்தின் அழுத்தத்தின் கீழ் சுயபூர்த்தி கொள்கைகளை, (இந்தியனாக இரு, இந்திய பொருளை வாங்கு என்ற கொள்கையை) பின்பற்றிய இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகள் அவற்றை கைவிட்டு வெளிப்படையாகவே தமது பிராந்தியங்களில் முதலீடு செய்யும் படி மன்றாடுகின்றன. மேலும் ஏகாதிபத்தியவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக புதிய தொழிற்கொள்கைகளை வி.பி.சிங் ஆட்சியினர் கொண்டு வந்துள்ளனர். இது பரந்தளவில் ஆலை மூடல்களையும், ஆட்குறைப்புகளையும், வேலைப்பளு அதிகரிப்பையும், சம்பள வெட்டுகளையும் மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும், 2 லட்சம் கோடி ரூபாயை வெளிநாட்டு, உள்நாட்டு கடனாக கொண்டுள்ள நிலையில் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்து விலைவாசி ஏற்றத்தை தொடர்ந்து அதிகரிக்க செய்வது தொழிலாளர்களின், மத்திய தர வர்க்கத்தின் மற்றும் ஏழை விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தையும் மோசமாக்கி வருகிறது.

இந்நிலைமையை மேலும் மத்திய கிழக்கு நெருக்கடி உக்கிரப்படுத்தி உள்ளது. இதுபற்றி நிதி அமைச்சர் மதுதண்டவதே பின்வருமாறு கூறியுள்ளார். “வளைகுடா நெருக்கடியினால் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இவற்றுள் மிக முக்கியமானது நமது இறக்குமதிப் பொருள்களின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இரண்டாவது நமது நிதி நெருக்கடி இந்த சூழ்நிலையை சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளுக்கு விசேஷ உதவி எதையும் சர்வதேச நிதி நிறுவனமும் உலக வங்கியும் செய்யாது என்பது தெளிவாகி விட்டது. எனவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கடினமான முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும்.”

பிரதமர் வி.பி.சிங் இது பற்றி குறிப்பிடுகையில்: 'வளைகுடா நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளை நாம் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களின் நம்பிக்கையை முதல்வர்கள் பெற வேண்டும். … 'வளைகுடாவில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் காரணமாக இந்தியா மீது திணிக்கப்பட்டுள்ள "பொருளாதார யுத்தத்தை" எதிர்கொள்ள தியாகங்களை செய்ய மக்கள் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். (தினமணி 12-10-90)

ஜனதாதளத்தின் மூத்த தலைவரான சந்திரசேகர் வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சந்தர்ப்பவாத காரணங்களுக்காக வி.பி.சிங்கின் கொள்கைகளை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டார். “நாடு, மிக மோசமான காலத்தை எதிர்கொண்டுள்ளது. நெருக்கடி எல்லா முனைகளிலும் ஆழமாகி உள்ளது... … இப்போது வகுப்புவாத சக்திகளுக்கு சவால் விடுபவர்கள் யாருமே இல்லை போல் தோன்றுகிறது. அவற்றுடன் மக்கள், அதன் நீண்டகால பிரதிவிளைவுகளை புரிந்து கொள்ளாமல் உடனடி நலன்களுக்காக கூட்டாக சதி செய்து கூட ஒத்துழைக்கின்றனர்… … சமூக பதட்ட நிலைமைகள் வளர்ச்சி அடைகின்றன. அதன் அண்மைக்கால உதாரணம் தான் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதாக பிரகடனம் ஆகும். யாரும் எதையும் பெற்றுவிடவில்லை, யாரும் எதையும் இழக்கவும் இல்லை. ஆனால் பதட்டம் அதிகரித்து உள்ளது, மக்கள் தமக்குள்ளேயே போராடுகிளார்கள்" என்று கூறியுள்ளார்.

ஒரே அணியில் முதலாளித்துவமும் ஸ்டாலினிசமும்

இடஒதுக்கீடு கொள்கையை ஆதரிப்பதாகவும் ஆனால் அதனை வி.பி.சிங் செயல்படுத்தும் விதத்தை எதிர்ப்பதாகவும் சந்திரசேகர் கூறியுள்ளார். இதே பித்தலாட்ட நிலைப்பாட்டையே பாரதீய ஜனதாக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் எடுத்துள்ளன. 1934ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தினால் இந்தியாவில் அரசாங்க வேலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரித்து ஆளும் சாரத்தைக் கொண்ட இட ஒதுக்கீடு கொள்கையை தொடர்வதில் அனைத்து முதலாளித்துவ கட்சிகளிலும், ஸ்டாலினிச கம்யூனிச கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆனால் அதை என்ன விதத்தில் செயல்படுத்துவது என்பது சம்பந்தமாக சில கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளனர். இந்திய முதலாளித்துவமும், ஏகாதிபத்திய வங்கியாளர்களும் கூட்டாகவே மோசமான பொருளாதார நெருக்கடியினால் வளர்ச்சி அடையும் சமூக கொந்தளிப்பை, சமூக கலவரங்களாக மாற்றும் திட்டத்தை தீட்டி உள்ளனர். 10 வருடங்களுக்கு முன்பே இட ஒதுக்கீடு பற்றிய முன்னைய பீகார் முதன் மந்திரியாக இருந்த பி.பி. மண்டல் தலைமையிலான குழு வழங்கிய சிபாரிசுகளை செயல்படுத்த வேண்டிய தருணம் இது தான் என்பதை சிறுபான்மை தேசிய முன்னணி அரசாங்கம் கண்டுள்ளது. தமது எதிர் புரட்சி திட்டங்களை மூடிமறைத்து "குடிசைகளில் வாழ்பவர்களுக்கும் நாட்டை ஆள்வது சம்பந்தமாக சொல்வதற்கும் உண்டு என்பதை உத்தரவாதம் செய்ய" தான் மத்திய அரசாங்க வேலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீதத்தை "பின்தங்கிய வர்க்கங்களுக்கு" ஒதுக்கி உள்ளதாக வி.பி.சிங் கூறியுள்ளார்.

கடந்த 43 வருடங்களாக சுதந்திர ஆட்சி என்ற போர்வையில் டாட்டா, பிர்லா போன்ற சுரண்டும் முதலாளி வர்க்கத்தினர் தமது செல்வங்களை பெருக்கவும், நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்க்கை நடத்தவும், 12 கோடிக்கு மேற்பட்டோர் வேலையின்றி இருப்பதற்கும் லட்சக்கணக்கான ஆலைகள் நலிந்த நிலையில் இருப்பதற்கும், சிறிய, மத, மொழி, பிரிவினர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் நிலைமைகள் மிக மோசமடைவதற்கும் உலக வங்கியாளர்களுடன் நீண்டகாலமாக ஒத்துழைத்து வருபவர்களில் முக்கியமான ஒருவரான வி.பி.சிங் "பின்தங்கிய வர்க்கங்களின் மேம்பாட்டுக்காகவும், “குடிசைகளில் வாழ்பவர்கள் நாட்டை ஆள்வது சம்பந்தமாக பேசுவதற்கும்" என்று கூறுவதெல்லாம் நச்சுத்தன்மையான மோசடிகளே என்பதை வர்க்க நனவுள்ள அனைத்து தொழிலாளர்களும் அறிவார்கள்.

இட ஒதுக்கீடு கொள்கை சம்பந்தமான மண்டல் குழுவின் சிபாரிசுகள் அமல்படுத்தப்படும் என்று அறிவித்த பின்னர் நாடு பரந்தளவில் மாணவர்களின் எதிர்ப்பு போராட்டங்களும், சாதிக் கலவரங்களும் வெடித்தெழுந்துள்ளன. பல மாணவர்கள் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளனர். போலிஸ் ராணுவத்திற்கும் மாணவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் மாணவர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வேலையின்மையானது உலக முதலாளித்துவ நெருக்கடியின் காரணமாக மேலும் அதிகரித்து வரும் நிலைமையிலும் போதிய கல்லூரிகளும், பல்கலைக்கழங்களும் இல்லாத பற்றாக்குறையான நிலைமை இருக்கையில் ஏற்கனவே இடஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை நிரப்புவதிலே "பிற்படுத்தப்பட்ட வர்க்களுக்குள்ளேயே" பலத்த போட்டி அதிகரித்துள்ளது. பணம் மிகுந்த செல்வாக்கு நிறைந்த "பிற்படுத்தப்பட்ட" பிரிவினராலேயே போட்டியில் வெல்ல முடிகிறது. மண்டல் குழுவின் சிபாரிசுகள் தொழிலாள, ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் வர்க்க ஐக்கியத்தை உடைப்பதையும் முதலாளித்துவ அரசாங்களுக்கு எதிராக வளர்ச்சி அடையும் தொழிலாளர்களின் விவசாயிகளின் புரட்சிகர இயக்கங்களை தோற்கடிப்பதற்கு தொழிலாள விரோத பிற்போக்கு குட்டி முதலாளித்துவ சக்திகளை வளர்ப்பதற்கும் ஆகும்.

மரண நெருக்கடியிலுள்ள முதலாளித்துவ அமைப்புக்கு புத்துயிர் அளிப்பதற்காக முதலாளித்துவ பிரதிநிதிகளும் ஸ்டாலினிஸ்டுகளும் கோரும் அனைத்து தியாகங்களையும் இகழ்ச்சியுடன் நிராகரித்து முதலாளித்துவ அமைப்புக்கு உள்ள அரசியல், பொருளாதார நெருக்கடிகளை மேலும் ஆழப்படுத்தி முதலாளித்துவ அமைப்பை தூக்கி வீசி உற்பத்தி சாதனங்களை தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தை உருவாக்க தொழிலாள வர்க்கம் போராட வேண்டும். ஒருபுறம் இந்திய முதலாளித்துவம், ஏகாதிபத்திய வங்கியாளர்களுடன் சேர்ந்து மதக் கலவரங்களை உண்டு பண்ணி அப்பட்டமான சர்வாதிகார ஆட்சிக்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. மறுபுறம் ஸ்டாலினிச கம்யூனிச கட்சிகள் மக்கள் முன்னணி (வர்க்கக் கூட்டு) கொள்கை மூலம் முதலாளித்துவ ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கின்றனர். இந்த அடிப்படையிலே ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், 'தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில்' கூட்டங்களில் பங்கு கொண்டு, தேசிய ஒருமைப்பாட்டை காப்பாற்ற அனைத்து கட்சிகளும் எப்படி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பது பற்றி 'விரிவுரை' நிகழ்த்துகின்றனர். தேசியவாதம், மத, சாதி வகுப்பு வாதங்கள் அனைத்துமே நெருக்கடியிலுள்ள முதலாளித்துவ ஆட்சியை தக்க வைப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளால் தூண்டிவிடப்படும் விஷக் கிருமிகள் என்பதை தொழிலாள வர்க்கத்திற்கு மூடி மறைக்கின்றனர்.

பாரதீய ஜனதாக் கட்சியின் வகுப்புவாதத்திற்கு எதிராக 'போராடுவதாக' பித்தலாட்டம் செய்யும் சி.பி.எம். சிபிஐ தலைமைகள் அண்மையில் சென்னையில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் கூட்டத்தில் பாரதீய ஜனதாக் கட்சி பங்கு கொள்ளாதது பற்றி வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அக்கூட்டத்தில் பங்கு கொள்வதற்காக சென்னை வந்த சிபிஎம் பொதுச் செயலாளர் நம்பூதிரிபாட் அர்கிசன் சுர்ஜித் சிங் ஜோதிபாசு, சுபாஷினி அலி ஆகியோர் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில் சிபிஎம் எம் பிசுபாஷினி அலி பாரதீய ஜனதாக் கட்சியின் நடவடிக்கை பற்றி பின்வருமாறு குறிப்பிட்டார்: “அவர்கள் ஒரு கோயிலை அயோத்தியில் ராமருக்காக கட்டட்டும். நாம் அதை முழுமையாக ஆதரிக்கிறோம். நாமும் கூட அந்த பணியில் நமது செங்கொடிகளை பிடித்த வண்ணம் சேருவோம் (!!) ஆனால் ஒரு மஜீதை (மசூதியை) உடைப்பதற்கான தந்திரமாக அதை மாற்ற வேண்டாம்" (இந்தியன் எக்ஸ்பிரஸ், செப்டம்பர் 24, 1990 பக்கம் 3)

சிபிஎம் தலைவர் கூறியதன்படி, பாரதீய ஜனதாக் கட்சி அதன் பிற்போக்கு முஸ்லீம் விரோத பிரச்சார இயக்கத்துடன் ராமர் கோயிலை கட்டுவதற்கான வேலையை செய்யலாம். அதற்கு சிபிஎம் கூட அதன் செங்கொடிகளுடன் சென்று உதவி செய்யும். ஆனால் தயவுசெய்து மசூதியை இடித்து பெரும் சங்கடத்தை நமக்கு ஏற்படுத்தி விடாதீர்கள் என்று பாரதீய ஜனதாக் கட்சியிடம் "தோழமைரீதியில்" கேட்டுள்ளது!

அதுபோலவே வி.பி.சிங்கின் இட ஒதுக்கீடு கொள்கையிலும் சிபிஎம் அதை முழுமையாக ஆதரிக்கிறது. அக்கொள்கையை திறம்பட அமல்படுத்த சிலவற்றை சேர்க்க வேண்டும் என்று ஆலோசனையும் வழங்கியுள்ளது.

அரசியலில் இருந்து மத, சாதி, மொழி வகுப்பு வாதங்களை ஒழிக்க வேண்டுமாயின் அதை தூண்டி விடுவதற்கு பொருளாதார அடிப்படையாக இருக்கும் லாப உற்பத்தி தனியார் உடமை அமைப்பை ஒழிக்க வேண்டும். எனவே வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது. ஆனால் சிபிஎம் சிபிஐ தலைமைகள் அவ்வாறு பிரித்து வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்புவதிலேயே முழு சக்தியையும் பயன்படுத்தி வேலை செய்கின்றன.

வி.பி.சிங் ஆட்சிக்கு எதிரான இயக்கம் எத்தருணத்திலும் தேசிய முன்னணி ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கக் கூடாது என்பதில் சிபிஎம் சிபிஐ தலைமைகள் அக்கறையாக இருப்பதன் காரணம் மறுபடி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிடம் என்பதனால் அல்ல ஏனெனில் தேசிய முன்னணியின் 10 மாத ஆட்சிக்காலத்தில் அது காங்கிரஸின் ஏகாதிபத்திய சார்பு கொள்கையை தீவிரமாக முன்னெடுக்கும் ஏகாதிபத்திய வங்கியாளர்களின் இந்திய முதலாளித்துவத்தின் விசுவாசமான ஏஜன்டு என்பதையே நிரூபித்துள்ளது. கோர்பச்சேவுகள் டெங்கியோ பிங்குகள் எவ்வழியோ அவ்வழியே நம்பூதிரிபாத்துகளும், இந்திரஜித் குப்தாக்களும்! அது தான் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகர இயக்கத்தை நசுக்க ஏகாதிபத்தியங்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவது, சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சிபிஎம் செயலாளர் நம்பூதிரிபாட் பேசுகையில் "வி.பி.சிங்கை பிரதமர் பதவியிலிருந்து மாற்றுவதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் அராஜகத்திற்கும் வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். முதலாளித்துவ அமைப்பையும் அதன் அரசியல் ஆட்சியையும் புரட்சிகரமான ரீதியில் வர்க்க போராட்ட முறைகள் மூலம் தூக்கி வீசி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும் புரட்சிகர முன்னோக்கை எதிர்க்கும் சிபிஎம் சிபிஐ ஸ்டாலினிசத் தலைமைகள் காங்கிரஸ் ஆட்சி நிராகரிக்கப்பட்டு 10 மாத காலத்திற்குள்ளேயே தேசிய முன்னணி ஆட்சியும் வளர்ச்சி அடையும் தொழிலாளர் விவசாயிகள் ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகர இயக்கத்தினால் மேலும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்படுவதனால் உருவாக்கப்படும் "அராஜக" நிலைமை பற்றியே மரணபீதி அடைந்துள்ளார். அதனால் தேசிய முன்னணி ஆட்சி எதிர்கொள்ளும் அனைத்து அரசியல் பிரச்சினைக்கும்" சர்வரோக நிவாரணியாக" சிபிஎம் சிபிஐ தலைமைகள் அனைத்துக் கட்சி கூட்டங்களை பிரேரிக்கின்றனர். இப்படியான மக்கள் முன்னணி (வர்க்க கூட்டு) அமைப்புகளின் மூலம் முதலாளித்துவ சித்தாந்தத்திலிருந்தும், சுரண்டல் அமைப்பிலிருந்தும் தொழிலாளர்கள் விடுபடாமல் பாதுகாத்துக் கொள்கின்றனர். இந்த துரோகத்தலைமைகள் பிற்போக்கு தேசிய முன்னணி ஆட்சிக்கு வழங்கும் அரசியல் ஆதரவை உடனடியாக நிறுத்தும்படியும், முதலாளித்துவ கட்சிகளுடன் முழுமையாக உறவை துண்டித்துக் கொண்டு சோசலிச மற்றும் தீர்க்கப்படாத ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை நிறைவேற்றும் தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம் அமைக்கப் போராடும்படி தொழிலாளர்கள் சிபிஎம் சிபிஐ தலைமைகளை நிர்பந்திக்க வேண்டும். பின்வரும் கோரிக்கைகளுக்காக போராடும்படி கோர வேண்டும்.

ஃ முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுப் போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படு!

ஃ அனைவருக்கும் வேலைக்காக போராடு!

ஃ தொழிலாளர்களை பிளவுபடுத்தும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளையும், இந்து வகுப்புவாதத்தையும் தூண்டிவிடும் ரதயாத்திரைகளையும் தோற்கடி!

ஃ முதலாளித்துவ போலீஸ், ராணுவத்தை களை!

ஃ அனைத்து முக்கிய ஆலைகளையும், நஷ்டஈடின்றி தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் தேசியமயமாக்கு!

ஃ ஆலைமூடல் அபாயங்களுக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டத்திற்கு தயார் செய்யும்!

ஃ உலக வங்கிக்கான கடன்களை நிராகரி! வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் அமர்த்து!

ஃ ஏகாதிபத்திய வங்கிகளையும் நஷ்டஈடின்றி தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் தேசியமயமாக்கு!

ஃ தொழிலாளர் பாதுகாப்பு குழுக்களை கட்டு!

ஃ நிபந்தனையின்றி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்!

ஃ நிலங்களையும் ஆறுகளையும் தேசியமயமாக்கு!

ஃ உழுபவர்களுக்கு நிலத்தை வழங்கு!

ஃ விவசாயி உற்பத்தி பொருள்களுக்கு நியாய விலை வழங்கு!

ஃ மலிந்த விலையில் விவசாய உற்பத்தி கருவிகளை வழங்கு!

ஃ இலகுவான முறையில் திருப்பி செலுத்தக் கூடிய புதிய கடன் முறைகளை ஏற்படுத்து!

ஃ காஷ்மீரிலிருந்து ராணுவத்தை உடனடியாக வாபஸ் வாங்கு!

ஃ காஷ்மீரி தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை பேணு!

ஃ மறு ஐக்கியம் செய்யப்பட்ட சோசலிச உபகண்டத்தில் காஷ்மீரி, பஞ்சாபி, மணிப்பூரி வங்காளி மற்றும் தமிழ் ஈழ மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் அவற்றில் ஒன்றான தேசிய சுயநிர்ணய உரிமையையும் பேணு!

ஃ தொழிலாளர், விவசாயிகளின் சபைகளை (சோவியத்துக்களை) நிறுவு!

ஃ உலக சோசலிச குடியரசின் பகுதியாக உபகண்டத்தில் ஐக்கிய சோசலிச குடியரசுகள் அமைக்கப் போராடு!

ஃ உலக சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேறு!