"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Saturday, November 24, 2018

மகளிர் மேம்பாட்டு கழக தொழிலாளர் போராட்டம்


Thozhilalar Paathai Volume 029
February 1990

S. ராம்

கடந்த ஆறுவருட காலமாக குறைந்த சம்பளத்தைக் கொடுத்து தங்களது உழைப்பைச் சுரண்டியும், கழிவறை, குடிநீர் வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமலும் விடுப்புகால உரிமைகளை வழங்காமலும் தாங்கள் கொத்தடிமைத்தனமாக நடத்தப்படுவதற்கு எதிராகவும், ஊதிய உயர்வு கேட்டால் அச்சகங்களை தனியாருக்குத் தாரைவார்க்க சதித்திட்டமிடும் முயற்சிக்கு எதிராகவும் பெண்கள் முன்னேற்றம் பற்றி வாய் கிழியப் பேசும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களுக்கு அனைத்துத் தொழிலாள வர்க்கமும் தங்களது ஒன்றுபட்ட வர்க்க ஆதரவினைத் தர வேண்டும்.

1984 ஆம் ஆண்டு மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசால் தொடங்கப்பட்ட மகளிர் மேம்பாட்டுக் கழகம் கிண்டி தொழிற்பேட்டே, தாம்பரம் சானிட்டோரியம், சிவகாசி ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது.

சென்னையில் 150 தொழிலாளர்களும் சிவகாசணியில் 150 தொழிலாளர்களும் (உடன் ஊனமுற்றோர்) இதில் வேலை செய்து வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள அச்சகத்தில் ஐந்து ஆண் தொழிலாளர்களுடன் பெண் தொழிலாளர்களும், மின்னணுவியல் உபகரணங்கள் தயாரித்தலிலும், தாம்பரம் சானிட்டோரியத்தில் கல்வி உபகரணங்கள் தயாரித்தலிலும் பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

ஆவடி தொழிற்சாலைக்கு வேண்டிய கேபிள்பார்ம் (Cableform), மற்றும் டி.வி. காயில் (T.V. Coil), Printed Circuit Board போன்றவற்றை செயது கொடுக்கும் தொழிலாளர்கள் மிகவும் கோரமாகச் சுரண்டப்படுகின்றார்கள். அரசுத் துறைகளுக்கு வேண்டிய புத்தகங்கள், பற்றுச்சீட்டுக்கள், ஆவின் பால் வழங்கும் அட்டைகள், கோஃஆப் டெக்ஸ் கவர்கள் போன்றவற்றை அச்சிட்டுக் கொடுத்த போதிலும், இவர்கள் குறைந்த சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதுடன், கொத்தடிமைகளாகவும் நடத்தப்பட்டு வருகின்றனர். நிர்வாகமும் மாறி மாறி வரும் முதலாளித்துவ அரசாங்கங்களும் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்குப் பின்னர் கன்சாலிடேட் சம்பளமாக மாதம் ரூ. 300- தான் கொடுத்து வருகின்றார்கள்.

ஆனால் மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களோ தங்களது ஊதிய உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து 11-12-1989 முதல் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள்.

இவ்வளவு பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையில் கழிவறை வசதியே இல்லை. குடிதண்ணீர் வசதியும் கூடக் கிடையாது. இவர்களது உழைப்பை மட்டும் ஒட்டச் சுரண்டும் மாறி மாறி வந்த மூன்று முதலாளித்துவ அரசாங்கங்களும் நிர்வாகமும் இதுவரையில், குறைந்தபட்ச ஊதியங்களைக் கூட கொடுக்கவில்லை.

பயிற்சிக்காலம் ஒரு வருடம் தான் என்று முதலில் அறிவித்த நிர்வாகம் 2 1/2 ஆண்டுகள் வரை அதனை அப்படியே நீடித்தனர். பயிற்சிக்காலத்தில் உதவித்தொகை என்று ரூ. 200 மட்டுமே கொடுத்தனர். பயிற்சிக் காலத்தில் ஒரு நாள் லீவு எடுத்தாலும் போதும், அதற்குத் தண்டனையாக மேலும் 2 நாட்களையும் சேர்த்து மொத்தத்தில் மூன்று நாள் சம்பளத்தை அந்த உதவித் தொகையில் வெட்டி எடுத்துக் கொள்வார்கள். 5 நிமிடம் காலதாமதமாகி விட்டாலும் போதும் அன்றைக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பயிற்சியை முடித்தாலும் சரி பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் கூட கொடுப்பதும் கிடையாது.

அதிகாரிகளின் ஆணவம்

இவர்களுக்கு வருகின்ற அரசு அதிகாரிகளும், மேலாளர்களும் தங்களின் அதிகாரத்துவ நலன்களைப் பேணுவதில் குறியாய் இருக்கிறார்களேயொழிய தொழிலாள வர்க்கத்தின் குறைகளை, தேவைகளை, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இதுவரை உருப்படியாய் முயற்சி எடுக்கவில்லை.

கழிவறை வசதி செய்து தரக்கேட்டதற்கு "மௌண்ட் ரோடிலுள்ள சித்தாளுகளை எல்லாம் போய் பாருங்க. அவர்களெல்லாம் அப்படியா பயன்படுத்துகிறார்கள்?” என்று தலைக்கணம் பிடித்த ஐ..எஸ். பெண் அதிகாரி செல்வி ரமேஷ் என்பவர் ஆணவத்தோடு கூறியிருக்கிறார்.

தன்னெழுச்சியான போராட்டங்கள்

2 1/2 வருடமாகியும் பயிற்சிக் காலத்தை நீடிப்பதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர் தொழிலாளர்கள். அவர்களை சமாதானம் செய்வதற்காக அப்போது (1986ல்) விழா ஒன்றுக்கு வருகை தரவிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா விழா மேடையிலேயே உங்கள் பணி நியமனம் பற்றி அறிவிப்பார் என்று கூறினார்கள். விழாவிற்கு வருகை தந்த பெண் அமைச்சர் பெண் தொழிலாளர்களை அணுகி அவர்களைப் பற்றி அறிய அக்கறை கொள்ளவில்லை. அதிகாரிகளும் தொழிலாளர்களை அமைச்சர் அருகே செல்லவிடாமலும் பார்த்துக் கொண்டார்கள். 'அமைச்சரிடம்' இவர்களெல்லாம் அன் எஜூகேட்டட் (படிப்பறிவில்லாதவர்கள்) என்று கூறிவிட்டார்கள். அதிகாரிகள் ஏமாற்றியது கண்டு கொதித்தெழுந்த தொழிலாளர்கள் அப்போதைய பொது மேலாளர் நாராயணனை அணுகிக் கேட்டு, உருப்படியாக எதுவும் சொல்லாமல் மழுப்பி போது விரக்தியுற்ற தொழிலாளர்களில் சிலர் 'அப்ப வாங்கடி' என்று தங்கள் சக தோழர்களை அழைக்கையில், 'அப்ப போங்கடி' என்றார் அந்தத் திமிர்பிடித்த அதிகாரி.

முதல் வேலைநிறுத்தம்

தாங்கள் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது கண்டும் ஏமாற்றப்படுவது கண்டும் வெகுண்ட தொழிலாளர்கள் அடுத்த நாளே வேலைநிறுத்தத்தில் குதித்தார்கள். நிர்வாகம் விரைந்து வந்து 150 தொழிலாளர்களுக்கு பணி ஆணைகளை (Worker order) கையில் கொடுத்து, அடிப்படை சம்பளம் ரூ. 220 என்றும் பஞ்சப்படி 30 என்றும் போட்டு ரூ. 259 ஐ மாத சம்பளமாகக் கொடுக்க முன்வந்தது.

தொடர்ச்சியாகத் தொழிலாளர்கள் போராடியதால் ரூ. 259 லிருந்து 285 ஆகவும் 300 ஆக பின்னர் உயர்த்தப்பட்டது.

தொழிலாளர்களுக்கு சம்பளம் பற்றி எழுதுவது, உறையில் போடுவது ஆகிய எல்லா வேலைகளையும் இந்தத் தொழிலாளர்களே செய்து வருகிறார்கள். அதற்கென்று எழுத்தர் எவரும் அமர்த்தப்படவேயில்லை. ஸ்வீப்பரும் கூட நிச்சயிக்கப்படவில்லை.

எக்ஸ் கிராசியா (Exgratia) பெற்று வந்த தொழிலாளர்களுக்கு அதுவும் நிறுத்தப்பட்டது. மகளிர் மேம்பாட்டுக் கழகம் லாபம் நடத்தும் நிறுவனம் ஆகிவிட்டபடியால் இனிமேல் போனால்பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். அரசு ஆணையின்படி கிடைக்க வேண்டிய ரூ. 25 இடைக்கால நிவாரண தொகையை ஏற்கனவே தொழிலாளர்கள் பெற்று வந்த ரூ. 300 உடன் சேர்த்து, 325 ஆக கன்சாலிடேட் சம்பளமாக (Consolidated Pay) போட்டுக் கொடுத்தது. ஆனால் தொழிலாளர்கள் அந்த இருப்பத்தைந்து ரூபாயையும் ஒன்று சம்ளத்துடனோ அல்லது பஞ்சப்படியுடனோ சேர்த்தாலன்றி தாங்கள் வாங்கமாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.

1 கிலோ அரிசி ரூபாய் ஐந்துக்கு விற்கும் வேளையில், பஸ், ரயில், பயணத்திற்கே மாதம் ரூ. 75 செலவழித்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் வீட்டு வாடகை தான் கொடுக்க முடியுமா? ஒருவேளைச் சாப்பாடு தான் நிறைவாக சாப்பிட முடியுமா?

ஏனைய அரசுத்துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களோடு ஒப்பிடுகையில், 'மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு சுரண்டப்படுகிறார்கள் என்பது தெரியும். ஒரு அரசு கடைநிலை ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 750, மொத்த சம்பளம் ரூ. 1672.50. ஆனால் மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமோ ரூ. 235 தான் மொத்தச் சம்பளமோ ரூ. 300 தான்.

தொழிற்சங்கம் அமைத்தலும் போராட்டமும்

மேலும் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தங்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கவும் தொழிலாளர்கள் 1988ல் தொழிற்சங்கத்தை அமைத்தனர். இச்சங்கம் சி..டி.யுவின் கீழுள்ள இன்டஸ்டிரியல் எஸ்டேட்ஸ் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியனுடன் இணைக்கப் பெற்றுள்ளதுடன், தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தொழிற்சங்கத் தலைவர் சென்றுபேசும் பொழுதும் கூட அலட்சியப்படுத்தி வருகின்றனர் அதிகாரிகள்.

தங்கள் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஊதியசட்டத்தை அமல்படுத்தவும், அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், கழிவறை வசதிகளை விடுப்புகால அனுமதி ஆகியவற்றை நிறைவேற்றவும் கோரி 1989 ஜூன் மாதம் ஒரு அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். பின்னர் தொடர்ந்து ஊர்வலம், ஆர்ப்பாட்டங்கள் நடாத்தியும் எவ்வித பலனும் ஏற்படாததால் 1989 டிசம்பர் 11 முதல் வேலைநிறுத்தத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

தொழிலாளர் நல (?) ஆணையகமும் தொழிலாளர் போராட்டமும்

பின்னி பீச் என்ஜினியரிங், ஸ்டாண்டர்ட் மோட்டார் போல முதலாளித்துவ வர்க்கத்திற்குச் சாதகமாகவே ஆலோசனைகளும் தீர்ப்புகளும் வழங்கி வரும் ஆணையகம், தொழிற்சங்கம் போட்ட வழக்கில்—பேச்சு வார்த்தையின் போது 'சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டுக் கீழே உள்ளவர்களுக்காக பயிற்சி கொடுப்பதற்காக நடத்தப்பட்டது என்றும், லாபநோக்கிற்காக நடத்தப்படவில்லை என்றும் எனவே (வறுமைக் கோட்டுக் கீழேயே அழுந்திக்கிடக்க வேண்டும்) ஒன்றும் செய்ய முடியாது. நீங்களே கூட்டுறவு முறையில் நடத்துங்கள் என்று கையை விரித்து விட்டது.

உண்மையில் இங்கு ஆவின், கோஆப்டெக்ஸ், டாப்கோ, சமூகநலத்துறை போன்றவற்றுக்காக அச்சு வேலைகள் மின்னணுவியல் பொருட்கள் ஆகிய அனைத்தும் லாபத்திற்காக செய்யப்படுகையில், மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களின் உழைப்பு அதற்காக கறந்து எடுக்கப்படுகையில் மகளிர் மேம்பாட்டுக் கழகத்தொழிலாளர்கள் மட்டும் சேவை நோக்கில் தங்களை ஒட்டச் சுரண்டுவதற்கு அனுமதிக்க வேண்டுமாம்.

முதலாளித்துவ அரசின் கபட நாடகம்

லாபநோக்கிற்கான முதலாளித்துவ உற்பத்தியில் போட்டாபோட்டியில், கூட்டுறவு முறையில் நடத்த முடியாது என்பது நன்கு நெரிந்ததே. 'கூட்டுறவு முறையில் நீங்களே நடத்துங்கள்' என்று அமைச்சர் சுப்புலட்சுமியும் தொழிலாளர் நல (?) ஆணையமும் கூறிவருகின்ற அதேவேளையில் கிண்டியில் உள்ள அச்சகத்தையும், சிவகாசியில் உள்ள அச்சகத்தையும் தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான சதித்திட்டத்தை முதலாளித்துவ தி.மு.. அரசாங்கம் தீட்டி வருகிறது.

முதலாளித்துவ அரசாங்கமும் ஸ்டாலினிச தொழிற்சங்கமும்

ஸ்டாலினிச சி..டி.யு. தொழிற்சங்கத் தலைமைகளும் தர்ணாக்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று கோட்டை முன்பும், தொழிலாளர் நல (?) ஆணையகம் முன்பும் நடத்தி முதலாளித்துவ தி.மு.. அரசின் மனம் நோகாதவாறு போராடி வருகிறார்கள்.

வாயில் பந்தல் போடக் கூடாது, நான்கு பேருக்கு மேல் கூடக்கூடாது, தொழிற்பேட்டைக்குள் பந்தல் போடக் கூடாது என்றும் தொழிலாளர்கள் ஆலைவாயில்களின் முன் ஊர்வலம், உண்ணாவிரதம் நடத்தக் தடைவிதித்து அவற்றை 'எழிலகம்' முன் நடத்தக் கூறிவரும் தொழிலாளர் விரோத தி.மு.. அரசாங்கத்தோடு ஒரு பக்கம் நட்புறவு கொண்டாடி வரும் சி.பி.. (எம்) ஸ்டாலினிசத் தலைமைகள் புதுவை, பழனி, தேர்தல்களிலும் தி.மு.. ஜனதா தளம் போன்ற முதலாளித்துவக் கட்சிகளையே மீண்டும் அரியணையில் ஏற்றுவதற்கு தலைகீழாக நின்று உழைத்து வருகிறார்கள்.

ஏதோ அரசு அதிகாரிகள் தவறுகள் செய்வது போலவும் முதலாளித்துவ அரசாங்கம் ஏதும் அறியாத அரசாங்கம் போலவுமான ஒரு பிரமையை ஸ்டாலினிசத் தொழிற்சங்கத் தலைமைகள் தொழிலாளர்களிடையே விதைத்து வருகிறார்கள். தொழிலாளர் நல (?) ஆணையரோ அல்லது காவல்துறை அதிகாரியோ எவராக இருப்பினும் முதலாளித்துவ அரசாங்கத்தின் அரச எந்திரத்தின் பணியைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த நடவடிக்கைகள் அரசாங்கத்திற்குத் தெரிந்தே செய்யப்படுகின்றன என்பது தான் கண்முன் நடக்கும் உண்மை.

கொத்தடிமைத்தனத்திற்கும் கோரச்சுரண்டலுக்கும் எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ள தொழிலாள வர்க்கத்தைத் தனிமைப்படுத்தி, ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், பின்னிபீச் என்ஜினியரிங் மெட்டல்பாகஸ், பி&சி மில் போன்ற நிலைக்கு ஆளாகவிடாமல், வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தொழிலாளர்கள் பின்வரும் வேலைத்திட்டத்தில் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஃ அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், அரசு குறைந்தபட்ச ஊதியத் திட்டத்தை நிறைவேற்றவும், அச்சகங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதைத் தடுக்கவும் போராடிவரும் மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிலாள வர்க்கத்தையும் ஒருபொது வேலைநிறுத்தத்தில் இறக்கிப் போராடுமாறு (CITU) சி..டி.யு (AITUC) ..டி.யு.சி. தலைமைகளை நிர்பந்தி!

ஃ வேலைநிறுத்தப் போராட்டத்தை மேலும் முன்னெடுக்க தொழிலாளர்களுக்கான பொருளாதார நிதி உதவிகளைத் திரட்டித் தருமாறு சி..டி.யு, ..டி.யு.சி. தலைமைகளை நிர்பந்தி!

ஃ இந்தியா முழுவதும் கதவடைப்பு செய்யப்பட்டு உள்ள 800 க்கும் மேற்பட்ட ஆலைகளைத் திறக்கவும் ஆட்குறைப்பு ஆலைகள் மூடல் இவற்றை முறியடிக்கவும், குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்தவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தையும் அனைத்து ஆலைகளையும் வங்கிகளையும் ஒரு பைசா கூட நஷ்டஈடு கொடுக்காமல், தொழிலாள வர்க்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் அரசுடைமையாக்க அகில இந்திய அளவில் ஒரு காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்தில் இறங்குமாறு சி..டி.யு.சி., ..டி.யு.சி. தலைமைகளை நிர்பந்தி!

ஃ சி.பி.. (எம்), சி.பி.., ஸ்டாலினிசத் தலைமைகளை முதலாளித்துவக் கட்சிகளுடனான தமது உறவினைத் துண்டித்து கொண்டு சோசலிச வேலைத்திட்டத்தைச் செயற்படுத்தும் ஒரு தொழிலாளர் விவசாய அரசாங்கம் அமைக்கப் போராடுமாறு நிர்பந்தி!

ஃ நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாள கழகத்தில் இணைந்து தொழிலாளர் ஆட்சி அமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுங்கள்!

No comments:

Post a Comment