"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Thursday, November 22, 2018

இந்தியத் தேர்தலில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் (இந்திய சோ.தொ.க. தேர்தல் விஞ்ஞாபனம்)


Thozhilalar Paathai Volume 470
May 1996

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் பூண்ட இந்திய ட்ரொட்ஸ்கிசக் கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகம் இந்தியப் பொதுத் தேர்தலில் ஒரு சோசலிசப் பதிலீட்டுக்காகப் போராட மூன்று வேட்பாளர்களை நிறுத்தயுள்ளது. ஜோற்றன் றோயும் கே. பழனியும் முறையே கல்கத்தாவிலும் வட சென்னையிலும் லோக் சபாவுக்குப் போட்டியிடுகின்றார்கள். எம். கைலாசம் சென்னை-வில்லிவாக்கம் தொகுதியில் தமிழ்நாடு சட்டசபைக்குப் போட்டியிடுகின்றார்.

இந்தப் பொதுத் தேர்தல் சமூகத் துருவப்படுத்தலும் வேலையில்லாத் திண்டாட்டமும் உக்கிரம் கண்டுள்ள நிலையில் நடைபெறுகின்றது. கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்திய முதலாளித்துவத்தின் மைய ஆணியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. 74 வயது நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசாங்கத் துறைத் தொழில்களை வெட்டிச் சரித்துள்ளது. அரசுடமைக் கைத்தொழில்களை தனியார்மயமாக்கியுள்ளது. விவசாயிகளுக்கான அரசாங்க மானியங்களில் பெரும் வெட்டு இடம்பெற்றுள்ளது. இது இலட்சக் கணக்கான ஏழை விவசாயிகளை வறுமையினதும் பட்டினியினதும் கொடும்பிடிக்குள் தள்ளியுள்ளது.

பூகோளமயமான முதலாளித்துவ உற்பத்தியின் எதிரில் காங்கிரஸ் கட்சி அதன் பாரம்பரியமான தேசியவாத சுயபூர்த்திக் கொள்கைகளைக் கைவிட்டுள்ளது. பொருளாதாரத்தை ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்கள் சுரண்டுவதற்குத் திறந்துவிட்டுள்ளது. அவ்வாறே பல்வேறு ஸ்டாலினிசக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தொழில்களையும் வாழ்க்கை நிலைமைகளையும் ஒழிப்பதை அங்கீகரித்துள்ளன. சோசலிசத் தொழிலாளர் கழகம் அதனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று முதலாளித்துவ முன்னணிகளையும்--காங்கிஸ், பாரதீய ஜனதா கட்சி, தேசியவாத இடதுசாரி முன்னணி--நிராகரிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தேசிய முன்னணி இடதுசாரி முன்னணி எனப்படுவது ஸ்டாலினிஸ்டுகளுக்கும் பல்வேறு பிராந்தியக் கட்சிகளுக்கும் ஜனதாக் கட்சிக்கும் இடையேயான ஒரு கூட்டாகும்.

இந்தச் சகல கட்சிகளும் இந்தியாவில் இருந்து வரும் வறுமையை ஆதரிக்கின்றன. இந்தியாவில் எந்தக் கோஷ்டி அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும் அது இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதலை நடாத்துவது உறுதி.

ஊழல்

இன்றைய பொதுத்தேர்தல் 115 அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் 43 மில்லியன் ரூபாக்களை 1989 க்கும் 1991 க்கும் இடையே இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருநிலையில் நடைபெறுகின்றது. இதில் ஏழு காங்கிரஸ் அமைச்சர்கள், பாரதீய ஜனதாக் கட்சியின் சிரேட்ட புள்ளிகள் ஆகியோர் அடங்குவர். காங்கிரசின் பேரிலான ஆழமான எதிர்ப்பும் இந்திய பாராளுமன்ற அரசியல் முறையுடனான வெறுப்பும் பாரதீய ஜனதாக் கட்சியினாலும் மற்றும் இனவாதக் கட்சிகளினாலும் இந்து சோவினிச, பிரிவினைத் திசைகளில் திசை திருப்பப்பட்டுள்ளது.

சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்த பிற்போக்கு அணிதிரள்விற்கு ஸ்டாலினிசக் கட்சிகளே முக்கிய காரணம் எனச் சுட்டிக் காட்டியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜோதிபாசு தலைமையிலான ஒரு இடதுசாரி முன்னணி மூலம் ஆட்சி செலுத்துகின்றது. இவரே இன்றைய தேசிய முன்னணி-இடதுசாரி முன்னணியின் தலைவர். இவரது ஆட்சி தொழிலாளர்களுக்கு எதிராக முறைமுறையான தாக்குதல்களை நடாத்தி உள்ளது. இதனது புதிய கைத்தொழில் கொள்கையின் கீழ் 28 அரச உடமை கைத்தொழில்கள் மூடப்பட்டுள்ளதோடு 140000 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய தொழிற்சங்க சம்மேளனத்தின் உதவியுடன் ஜோதிபாசு அரசாங்கம் ரெலனிபாராவில் வேலைநிறுத்தம் செய்த சணல் ஆலைத் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் படையைத் திரட்டியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கோலார் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் இந்திய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர்களால் தாக்கப்பட்டனர். இதில் பொலிஸ் படையும் சேர்ந்து கொண்டது. ஜோதிபாசு தமது சமீபத்திய அமெரிக்க விஜயத்தின் போது இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அரசாங்க மாற்றத்தினால் பாதிக்கப்பட்டு விடாது என உத்தரவாதமளித்தார்.

சகல வகையறாவைச் சேர்ந்த தேசியவாதங்களையும் பிரிவினைவாதங்களையும் நிராகரிக்கையில் சோ.தொ.. தேர்தல் விஞ்ஞாபனம் கூறுவதாவது: ... சோசலிசத் தொழிலாளர் கழகம் அனைத்து விதமான தேசியவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் நிராகரிக்கின்றது. இந்தியாவிலுள்ள தொழிலாளர்களுக்கும் சர்வதேச ரீதியாக உள்ள அவர்களது வர்க்க சகோதரர்களுக்கு இடையிலும் பகைமையைத் தூண்டிவிடும் அனைத்து முயற்சிகளையும் எதிர்க்கின்றது.

பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள அகதிகள், குடிபெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்று நடாத்தப்படும் தேசியவெறிப் பிரச்சாரத்தை சோசலிசத் தொழிலாளர் கழகம் வன்மையாக எதிர்க்கின்றது.”

காங்கிஸ் ஆட்சிக்கு எதிரான முன்னோக்கு இலாப முறையை ஒழிக்கும் ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அமைக்கும் சோசலிச வேலைத்திட்டத்துக்கான ஒரு போராட்டத்தின் மூலம் மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும். சோ.தொ.. வேட்பாளர்கள் கைத்தொழில் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் இடையே ஒரு புரட்சிகரக் கூட்டுக்கு அழைப்பு விடுக்கின்றனர். அதன் மூலம் சமூக சமத்துவத்துக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கும் போராட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சியின் வேலைத்திட்டம் கண்ணியமான தொழில், வீட்டு வசதி, சகலருக்கும் கல்வி, சுகாதார வசதி, சகல அரசியல் கைதிகளுக்கும் விடுதலை, மரண தண்டனையை ஒழித்தல், மகளிருக்கு எதிரான சகல பாகுபாடுகளையும் ஒழித்தல், வெளிநாட்டு தொழிலாளருக்கும் அகதிகளுக்கும் எதிரான நெறிப்படுத்தப்பட்டுள்ள சகல சட்டங்களையும் நீக்குதல் என்பவற்றை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.

சோ.தொ.. மதச் சிறுபான்மையினருக்கு எதிரான சகல அரச இடர்பாடுகளுக்கும் முடிவு கட்டும்படியும் காஷ்மீர், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இந்திய இராணுவத்தை நிபந்தனையின்றி உடனடியாக வாபஸ் பெறும்படியும் கோருகின்றது.

தேசிய ஒடுக்குமுறைக்கு முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்ட நடாத்தும் ஒரு போராட்டத்தின் மூலமே முடிவு கட்ட முடியும் என்பதை அங்கீகரிப்பதன் அடிப்படையில் சோ.தொ.. வேட்பாளர்கள் இந்திய முதலாளித்துவ அரசையும் பிரிவினைவாதத்தையும் எதிர்க்கிறார்கள். அவர்கள் ஒரு இந்தியத் துணைக்கண்ட ஐக்கிய சோசலிஸ அரசை அமைக்கப் போராடுகின்றார்கள்.

No comments:

Post a Comment