"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Monday, November 26, 2018

பி அண்டு சி ஆலையில், உடையாரின் 21 கோரிக்கைகளை, கதவடைப்பு திட்டத்தை உடைத்தெறிய உள்ளிருப்பு வேலை நிறுத்தத்திற்காகப் போராடு!

இதற்கு ஆதரவாக, சி..டி.யு, ..டி.யு.சி. யை நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தில் இறக்கப் போராடு!

Thozhilalar Paathai Volume 025
September 1989

கடந்த 70 வருடங்களுக்கு மேலாக B & C தொழிலாளர்கள் போராடிப் பெற்ற அனைத்தையும் முற்றுமுழுதாக அழித்து ஒழிக்க, B & C ஆலையின் நிர்வாகம் B & C தொழிலாளர்களுக்கு அதன் 21 கோரிக்கைகளை சென்னைத் தொழிலாளர் சங்கத்தின் ஸ்டாலினிச W. R. வரதராஜன் மூலமாக சமர்பித்துள்ளது.

கடந்த ஆண்டின் 1 1/2 கோடி நஷ்டம் அடைந்த ஆலை நடப்பு ஆண்டில் 4 மடங்கு (6 கோடி) நஷ்டம் அடைந்துள்ளது... இந்த இழப்பை தடுத்து நிறுத்தாவிட்டால் "B & C யின் தொடர்ச்சியான ... மிக ஆபத்தான ... ஏற்படும்" என்று மீண்டும் 1984 ஐப் போலவும் ஸ்டாண்டர்டு மோட்டார்ஸைப் போலவும் கதவடைப்பு செய்வேன்! என்று மிரட்டுகிறது.

இந்த இழப்பிற்குக் காரணம் 1930களின் பெரும் பொருளாதார வீழ்ச்சிகளின் பின்பு ஏற்பட்ட மிகவும் பிரமாண்டமான பொருளாதார வீழ்ச்சிக்குள் உலக முதலாளித்துவம் மூழ்கிக் கொண்டிருப்பதாகும். ஐக்கிய நாடுகளின் அமைப்பான உங்டாட் (UNGTAD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 1989-90 களில் உலகப் பொருளாதாரம் குன்ற ஆரம்பித்துள்ளது மட்டுமல்லாது, இன்று முன்னேற்றமடைந்த நாடுகளுக்கு அது மிக குறிப்பிடத்தகுந்தவாறு உள்ளது. உலக சந்தையில் முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகளுக்கு அமெரிக்கா ஜப்பான், ஐரோப்பாவுக்கு இடையில் நடக்கும் தீவிர வர்த்தகப் போட்டியில் இந்தியா போன்ற பின்னடைந்த நாடுகள் மேலும் மேலும் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா குறிப்பாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழ் 1980 இல் தொடங்கிய வி.பி.சிங்-ராஜீவ்காந்திகளின் புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் தளர்த்தல் கொள்கை, நவீனமயமாக்கல் என்ற கோஷங்களின் கீழ் ஏகாதிபத்திய நாடுகளுக்கு கதவுகளை திறந்து விட்டது, இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை கூடிக் கொண்டு வந்ததன் விளைவாக இந்தியாவின் அந்நியக் கடன் ... கோடி டாலர்களை எட்டியுள்ளது என உலக நிறுவனமான OECD அறிவித்துள்ளது. மேலும் உலக வர்த்தக சந்தையில் இந்தியாவின் பங்கு ஒரு சதத்திலிருந்து அரை சதமாக வீழ்ச்சியுள்ளது.

இவ்வாறான நிலைமையில் உலக சந்தையில் தனது துணிகளை விற்கும் பி அண்டு சி ஆலையின் "தொடர்ச்சியான இயக்கத்துக்கு நவீனமயமாக்கல் இன்றியமையாதது" (9வது கோரிக்கை) மட்டுமலாமல் வேலைப்பளு 88 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் நிர்வாகம் கோரியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் 15 செப்டம்பர் 1988ல் சோசலிசத் தொழிலாளர் அணி B&C தொழிலாளர்களுக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில் "இன்று ஆக 7,000 பேர் அளவில் உள்ள நிலையில் மேலும் 2,000 தொழிலாளர்களை வேலையிலிருந்து எடுத்து 5,000 க்கு உட்பட்ட எண்ணிக்கையுள்ள தொழிலாளர்களுடன் ஆலையை நடத்த சூழ்ச்சிகள் நடந்து வருவதை அநேக தொழிலாளர்கள் அறிந்திருப்பார்கள்,” என்று கூறிய எச்சரிக்கையை உறுதிப்படுத்துவது போல, 15... பேர் ஆள் குறைத்தல் (கோரிக்கை 1) மேலும் ஆட்களின் எண்ணிக்கை வல்லுநர் குழுவின் மூலம் ஆராயப்படும் (கோரிக்கை 3) என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

72% இருந்த ரூட்டிஎபிசியன்சியும் 70% இருந்த நார்த்ராப் எபிசியன்சியும் முறையே 84%ம் 80%ம் ஆக்கப்பட்டு இப்போது முழு ஆலையிலும் 88% ஆக்கப்பட வேண்டும் என கோரியுள்ளது.

கோரிக்கை 4: இன்று ஆகஸ்ட் 1989ல் தொழிலாளர்கள் சராசரியாக 1170 ரூபா பெறுகிறார்கள். இதில் 850 ரூபா வெட்டப்பட்டு ஜூன் 1985 பஞ்சப்படி அளவிற்கு ஷீலிங் போடப்பட வேண்டுமாம்.

கோரிக்கை 5: முன்பு சம்பளம் தான் உற்பத்தியுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது பஞ்சப்படியும் உற்பத்தியுடன் இணைக்கப்பட வேண்டுமென்று கோருவதுடன், தனியொரு தொழிலாளி பெரும் பஞ்சப்படி அவர் கொடுக்கும் உற்பத்தியுடன் மட்டுமல்லாது "டிபார்ட்மெண்டில் பணியாற்றும் எல்லா தொழிலாளர்களுக்கும் அங்கு எட்டப்படும் உற்பத்தித்திறன் விகிதத்தில் சம்பளமும், பஞ்சப்படியும் அளிக்கப்படும்" என கோரியுள்ளது.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மாத முடிவில் சம்பளம் கையில் ஏதும் கிடைக்காது ஆலைக்கு பாக்கியுடன், வெற்றிலையைப் போட்டுக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில், இனிமேல் எத்தனை தொழிலாளர்கள் மாதம் முடிவில் சம்பளத்தை கையில் பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாகும். அவர்களின் கம்பெனிஉப் பாக்கிக்காக, கொத்தடிமையாக ஆலையின் பெரும்பான்மையான தொழிலாளர்களை மாற்ற நிர்வாகம் முயற்சிக்கிறது.

கோரிக்கை 6: B&C தொழிலாளர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அந்தோணிப்பிள்ளை ட்ராட்ஸ்கிச நான்காம் அகிலத்தை விட்டு ஓடுவதற்கு முன்னர் டிராட்ஸ்கிச கொள்கைகளுக்கு B & C தொழிலாளர்களின் தலைமையில் நின்று போராடும் போது வென்றெடுத்த உரிமைகள், பின்பு குசேலரினாலும், “இந்திரா காங்கிரஸ் அந்தோணிப் பிள்ளையாலும், இவர்களுடன் கூட்டாக வி. பி. சிந்தனாலும் 1981ல் 6 மாத போராட்டத்திலும் 1984 இல் 11 மாத போராட்டத்திலும் காட்டிக் கொடுக்கப்பட்டு, இன்றும் எஞ்சியிருக்கும் இரவு ஷிப்ட் அலவன்ஸ், வார் புரடக்ஷன் அலவன்ஸ், தூய்மைப்படி, குறுகிய அவசர விடுப்பு, பனிக்கால விழுக்காடு போன்ற சிறப்புப்படிகள் மற்றும் சலுகைகள் ரத்துச் செய்யப்படுகின்றனவாம்.

கோரிக்கை 7: சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட விடுமுறைகளை தவிர தொழிலாளர்கள் போராடிப் பெற்ற விடுமுறைகள் அனைத்தும் ரத்தாகின்றன என்று நிர்வாகம் தனது கோரிக்கை வைப்பதற்கு முன்னரேயே, “ஆகஸ்ட் 15 சுதந்திர நாளை" நிர்வாகம் வேலை நாள் ஆக்கியது. இதற்கு பெயரளவில் கண்டனம் தெரிவித்துவிட்டு நடைமுறையில் சங்கத்தலைமை ஒத்துழைத்தது.

கோரிக்கை 9: உலக சந்தைக்கான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள B&C ஆலை, தொழிலாளர்களுக்கு எதிரான நவீனமயமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் மேலும் நடத்த இருக்கும் ஆட்குறைப்பு பணி ஒதுக்கீடு கடமைகள் வேலைகள் நிர்ணயம் செய்து சுரண்டலை 'அறிவியல்' அடிப்படையில் கூட்டுதவற்கும் முதலாளிகள் பெற்ற கடன் திருப்புதலுக்கும் மற்றும் வட்டி கட்டுதலுக்கும் ஏற்பட்டும் நிதிபளுவை நிர்வாகம் சமாளிப்பதற்காக 'தொழிலாளர்கள் கூடிய பொருளாதார உதவி' எதையும் கேட்கக்கூடாதாம்.

கோரிக்கை 12: வேலைபளுவைக் கூட்ட தேவைக்கேற்ப எந்திரங்களின் வேகத்தை திருத்தல் செய்வதில்" எந்திரத்தின் வேகத்தை முடுக்கி விடுவதற்கு "நிர்வாகத்திற்கு உரிமை" உண்டாம்; தொழிலாளர்களுக்கோ, சங்கத்துக்கோ, அதைத் தட்டிக் கேட்க உரிமை இல்லையாம். நிர்வாகம் தொழிலாளியை தன் இஷ்டப்படி ஒரு தொழிலிலிருந்து மற்றொரு தொழிலுக்கோ, ஒரு டிபார்ட்மென்டிலிருந்து மற்றொன்றுக்கோ, அல்லது B&C ஆலையிலிருந்து பங்களூர் மில்லுக்கோ மாற்றம் செய்யப்படுவதற்கு உரியவர்கள் ஆவார்களாம்.

கோரிக்கை 13: நிர்வாகத்தின் கெடுபிடியை கூட ஒவ்வொரு பிரிவு டிபார்ட்மெண்ட் நுழைவாயிலிலும் கார்டு பஞ்சிங் அமைப்பை அறிமுகப்படுத்தப் போகிறதாம்.

கோரிக்கைகள் 15, 16: நிர்வாகத்திற்கு ஜால்ரா போடுபவர்களுக்கு பதவி உயர்வுக்கும் 'காலியிடங்களை நிரப்பி' வேலைவாய்ப்பு அளிப்பதற்கும் 'தகுதி அடிப்படையில் பதவி உயர்வு' கொடுப்பதற்கும் 'காலி இடங்களை நிரப்புவதற்கும்" நிர்வாகத்திற்கு உரிமையாம்.

கேண்டீன் சாப்பாட்டை தொழிலாளியின் தலையில் கட்டி, அதற்கு வழங்க வேண்டிய மானியத்தை வெட்டி 'இனி அது தொழிலாளர்கள் கூட்டுறவு முறையில் சொசைட்டி முறையில் அமைக்கப்படும் சங்கமாக செயற்படுமாம்.

கோரிக்கை 20: தொழிலாளர்கள் இதுவரையில் வென்றெடுத்த கிரேடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு நெசவுத் தொழிலாளர்களுக்கு 1) ஆபரேடிவ் 2) ஆபரேடிவ் உதவியாளர்கள் என்ற இரு பதவிகளை கொண்டு வரப்போகிறார்களாம். “ஒரு குறிப்பிட்ட பணிபுரியும் தொழிலாளி ஆபரேடிவ் மற்றும் ஆபரேடிவ் உதவியாளர் இனங்களில் எவ்வகையை சார்ந்தவர் என்பதை நிர்வாகமே தீர்மானிக்குமாம்.” இது புராதன காலத்து அடிமைமுறையை ஆலைக்குள் அறிமுகப்படுத்துவதாகும்.

கோரிக்கை 18: 21-6-89ல் நடந்த ஊர்வலத்தின் போது சோசலிசத் தொழிலாளர் அணி செயலர் மோசஸ் ராஜ்குமார் தாங்கிய அட்டையை -- சிபிஎம், சிபிஐ தலைமைகள் முதலாளித்துவ கட்சிகளுடன் உறவைத் துண்டித்து தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கம் அமைக்க போராடும்படி கோரும் அட்டையை, ஸ்டாலினிச சிபிஎம் இன் மாவோவாத இந்திய மக்கள் முன்னணியின் சில குண்டர்கள் பறித்து அதை கிழித்துப் போட்ட பின் ஊர்வலத்தின் இறுதியில் வரதராஜன் 'வாய்ச்சவாடல்' அடித்து விட்டு நிர்வாகத்திடம் "உங்களது வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் முகமாகத் தொழிலாளர்கள் எபிஸியன்சியை அடைவதோடு ஆப்சென்டீசத்தையும் குறைத்துக் கொள்ள முழு முயற்சியும் எடுப்பார்கள் என்று நாம் உடன்படுகிறோம்" என்று கூறிக் கையெழுத்திட்ட கடிதத்தை சமர்ப்பித்தார்.

இந்திய மக்கள் முன்னணியின் தொழிலாளர் முன்னணியின் செயலர் A. பிரான்சிஸ், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை இழிவான முறையில் நிர்வாகம் பணயக் கைதிகளாக்க உடன்பட்டு "கடின உழைப்பிற்கும் சம்பள இழப்பிற்கும் ஆளாகி வரும் NB தொழிலாளர்களிடம் ஒட்டு மொத்த தொழிலாளர் நலனுக்காக மேலும் ஒத்துழைப்பு கேட்டுள்ளது. ஜனநாயக கோட்பாட்டிற்குப் புறம்பாக இருந்தாலும் சமூகமான பேச்சு வார்த்தைக்கும் பாதிக்கப்பட்ட தோழர்கள், ஆலைக்குள் வரவும் நீதிக்கும் புறம்பாக நீ எதிர்ப்பார்க்கும் ஒத்துழைப்பிலும் இறங்கி விட்டோம்" என்று 4-9-89ல் தட்டி போட்டு அவர்களது துரோகத்தைப் பகிரங்கப் படுத்தியுள்ளார்கள்.

இவ்வாறாக சங்கத்தின் ஸ்டாலினிச, மாவோ விரோத துரோகத் தலைமைகள் வழங்கிய ஆதரவை அடிப்படையாகக் கொண்டு, நிர்வாகம் ஏற்கனவே வேலைப்பளு அதிகரிப்பினாலும் போதிய சம்பளமின்மையாலும் வெறுப்படைந்துள்ள தொழிலாளர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி மேலும் தாக்குதலை தொடுக்கும் முகமாக பின்வருமாறு கூறுகிறது. 'ஆலையை அழிக்கும் விஷவித்தாக 'அசாதாரண மட்டம்' இருந்து வருகிறது, அனுமதியின்றி தாமாகவே மட்டம் போடும் புரையோடிய தொழிலாளர்களின் மட்ட நாட்கள் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்ட மருத்துவச் சான்றிதழ்கள் போர்வையில் கழித்த விடுப்பு நாட்கள் இரண்டும் கோத்து 12 மாதக்காலத்தில் 100 நாட்களோ அதற்கு மேற்பட்டோ காணப்படுமேயானால், அத்தகையோர் இழப்பின்றி பணிவிலக்கம் செய்யப்படுவர் ஒழுக்கத்தைப் பேணுவதிலும், மட்டத்தை குறைப்பதிலும் தொழிலாளர்கள் ஒத்துழைத்தல் வேண்டும்".

இன்று நிர்வாகத்தால் வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் உலக அளவில் திவால் அடைந்துள்ள லாப உற்பத்தி அமைப்பு முறைக்கு தொழிலாளர்களை பலியிட்டு 'மூச்சுக்கொடுக்க' கோரப்படுபவையாகும். இன்று உலகின் அனைத்துக் கண்டங்களிலும் தொழிலாளர்கள் இந்த திவாலான முதலாளித்துவ லாப உற்பத்தி அமைப்பு முறைக்கு எதிராக கிளர்ச்சி எழுச்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். பொது எதிரிக்கு எதிராக தொழிலாளர்கள் அனைவரையும் ஒரு பொது வேலைத் திட்டத்தில் வேலைகளைப் பாதுகாக்க, வாழ்க்கைத்தரத்தை பேண, வேலை நிலைமைகளை பேண காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம், பொது வேலைநிறுத்தம் போன்ற வர்க்கப் போராட்ட முறைகளில் இறக்கி லாப உற்பத்தி முறைக்கு முடிவு கட்டி தேவையை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடப்பட்ட சோசலிச பொருள் உற்பத்திமுறைக்காக போராட வேண்டும், இப்படி முழு உலகத் தொழிலாளர்களை அணி திரட்ட உலக டிராட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா, கண்டங்களில் போராடி வருகிறது.

ஆனால் இங்கு "கம்யூனிஸ்ட் கட்சி" என தவறாக பெயர் இட்டு செயற்பட்டு வரும் ஸ்டாலினிச சி.பி.எம்., சி.பி.. மற்றும் அவற்றின் தொழிற்சங்க அமைப்புகளான சி..டி.யு., ..டி.யு.சி.தேசிய அளவில் என்பது ஒரு புறம் இருக்க, மாநில அளவிலும் கூட தொழிலாளர்களை ஒன்றுபட்ட போராட்டத்தில் இறக்க மறுத்து வருகிறார்கள்.

முதலாளித்துவ அமைப்புக்கு அபாயம் ஏற்படுத்தாத வகையில் ராஜிவ்காந்திக்கு பதிலாக வி.பி.சிங்குகளை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக பிரச்சாரங்களும், கூட்டங்களும் நடத்துவதோடு, “ஒருநாள் பந்த்"ம் ஏற்பாடு செய்து வி.பி.சிங், கருணாநிதி, ராமராவ், தேவிலால் போன்ற முதலாளி வர்க்க பிரதிநிதிகளின் ஆதரவையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

பொதுப்போராட்டத்திற்கு தொழிலாளி வரமாட்டான் என்று ஸ்டாலினிசத் தலைமைகள் தமது காட்டிக் கொடுப்புகளை நியாயப்படுத்த முயற்சித்தாலும், ராஜிவ்காந்தியை வெளியேற்றவும் தொழிலாளர்களின் பல பொருளாதாரக் கோரிக்கைகளை வைத்து சிஐடியு, ஏஐடியுசி தலைமையில் ஏற்பாடு செய்த ஆகஸ்ட் 30 பந்தில் தொழிலாளர்கள் பங்கு கொண்டு நாட்டை ஸ்தம்பிக்கச் செய்தது, தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையையும், போராட்ட குணத்தையும் மீண்டும் ஒருமுறை ஸ்டாலினிஸ்டுகளின் பொய்களுக்கு சவாலாக நிரூபித்துள்ளது.

இவ்வாறாக மீனம்பாக்கம் பின்னி என்ஜினியரிங் ஆலையின் மற்றும் மெட்டல் பாக்ஸ் ஆலையின் ஒருவருடத்திற்கும் மேலான கதவடைப்புக்கு எதிராகவும், நாடு பரந்தளவில் 600 க்கும் மேற்பட்ட கதவடைப்புகளுக்கு எதிராக தொழிலாளர்களை ஒன்றுபட்ட போராட்டத்தில் அணிதிரட்டுவதை நிராகரித்து ஒவ்வொன்றையும் பிரித்து, தனிப் போராட்டங்களாக்கி தனிமைப்படுத்தி, தொழிலாளர்களை சோர்வடையச் செய்து, இறுதியில் நிர்வாகத்தின் அடிமை சாசனங்களுக்கு கையெழுத்திடும் நிலைக்கு கொண்டு வரும் "சாதனைகளையே" சிஐடியும் ஸ்டாண்டர்டு மோட்டார் போன்ற ஆலைகளில் ஏஐடியுசிம் செய்து வருகின்றன.

1981, 1984களில் B&C தொழிலாளர்களின் போராட்டமும் இவ்வாறாகவே அந்தோணிப் பிள்ளையாலும் குசேலராலும், வி.பி.சிந்தனாலும் காட்டிக் கொடுக்கப்பட்டது.இத்துரோகத் தலைமைகள், குறைந்தபட்சம் அவர்கள் தலைமையிலுள்ள தொழிற்சங்கங்களை B&C தொழிலாளர்களுக்கு ஆதரவாக அணிதிரட்ட மறுத்து அனைத்துக் கட்சி மாநாடு என்ற பெயரில் அனைத்து துரோகத் தலைமைகளின் பலத்தையும் அணி திரட்டி, இறுதியில் B&C தொழிலாளர்கள் அடிமை சாசனத்தில் கையெழுத்திட வழி செய்தனர்.

இவ்வாறாக தொழிலாளர்களின் போராட்ட சக்தியை மழுங்கடித்து B&C தொழிலாளி போராட்டத்திற்கு தாளமாட்டான் என்று வரதராஜன், மாதவராவ் துரோக தலைமைகள் மிக கேவலமாக கிண்டல் செய்தாலும் B&C தொழிலாளர்கள் ஏனைய தொழிலாளர்களுடன் ஒன்றிணைத்து பொதுப் போராட்டத்தில் இறங்கத் தயார் என்பதை ஆகஸ்ட் 30ல் நிரூபித்துள்ளனர். ஆகஸ்ட் 30 பந்த் மேலும் நிரூபிப்பது சிஐடியு, ஏஐடியுசி இனால் நாடு பரந்தளவில் தொழிலாள வர்க்க பலத்தை அணிதிரட்ட முடியும் என்பதாகும்.

பிஅண்டுசி தொழிலாளர்கள் இத்துரோகத் தலைமைகள் மீண்டும் அவர்களது காட்டிக்கொடுப்புகளை தொடரவிடாது தடுக்க வேண்டும். அதற்காக பின்வரும் கோரிக்கைகளுக்காக போராட பொதுச்சபையை உடனே கூட்டுப்படி நிர்பந்திக்க வேண்டும்.

ஃ நிர்வாகத்தின் தொழிலாள விரோத 21 அம்சக் கோரிக்கைகளை முழுமையாக நிராகரி!

ஃ அனைத்து வேலைகளையும் பாதுகாக்கவும் இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி உயர்வுக்கும் போராடு!

ஃ உள்ளிருப்பு வேலைநிறுத்தத்திற்கு தயார் செய்!

ஃ உள்ளிருப்பு போராட்டத்தை பாதுகாக்க சிஐடியு, ஏஐடியுசியை காலவரை அற்ற பொதுவேலை நிறுத்தத்தில் இறக்கு!

ஃ தொழிலாளர்கள் விரும்பினால் திரும்பி அழைக்கக்கூடிய ஆலைப் போராட்டக் குழுவின் பிரதிநிதிகளை தேர்ந்தெடு!

ஃ நவீன மயமக்கலினால் குறையும் மனித நாட்களுக்கு ஏற்ப, சம்பள வெட்டின்றி வாரம் 48 மணி நேர வேலையை 30 மணி ஆக்கவும் போராடு!

ஃ அனைத்து பதிலி தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்!

ஃ ஆலைக் கணக்குப் புத்தகங்களை தொழிலாளர் பரிசீலனைக்கு திற!

B&C ஆலை உட்பட அனைத்து ஆலைகளையும், வங்கிகளையும் முதலாளிகளுக்கு நஷ்டஈடின்றி தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் தேசியமயமாக்கு!

B&C, ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ், மாதவரம் பால்பண்ணை, மின்சார ஊழியர் மற்றும் அனைத்து தொழிலாளர் போராட்டங்களையும் ஐக்கியப்படுத்து!

ஃ போராட்ட நிதியை திரட்டு!

ஃ சிபிஎம், சிபிஐ தலைமைகள் முதலாளித்துவ கட்சிகளுடன் உறவைத் துண்டித்து சோசலிச வேலைத்திட்டங்களை நிறைவேற்றும் ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் அமைக்க போராடும்படி நிர்பந்தி!

Saturday, November 24, 2018

மகளிர் மேம்பாட்டு கழக தொழிலாளர் போராட்டம்


Thozhilalar Paathai Volume 029
February 1990

S. ராம்

கடந்த ஆறுவருட காலமாக குறைந்த சம்பளத்தைக் கொடுத்து தங்களது உழைப்பைச் சுரண்டியும், கழிவறை, குடிநீர் வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமலும் விடுப்புகால உரிமைகளை வழங்காமலும் தாங்கள் கொத்தடிமைத்தனமாக நடத்தப்படுவதற்கு எதிராகவும், ஊதிய உயர்வு கேட்டால் அச்சகங்களை தனியாருக்குத் தாரைவார்க்க சதித்திட்டமிடும் முயற்சிக்கு எதிராகவும் பெண்கள் முன்னேற்றம் பற்றி வாய் கிழியப் பேசும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களுக்கு அனைத்துத் தொழிலாள வர்க்கமும் தங்களது ஒன்றுபட்ட வர்க்க ஆதரவினைத் தர வேண்டும்.

1984 ஆம் ஆண்டு மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசால் தொடங்கப்பட்ட மகளிர் மேம்பாட்டுக் கழகம் கிண்டி தொழிற்பேட்டே, தாம்பரம் சானிட்டோரியம், சிவகாசி ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது.

சென்னையில் 150 தொழிலாளர்களும் சிவகாசணியில் 150 தொழிலாளர்களும் (உடன் ஊனமுற்றோர்) இதில் வேலை செய்து வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள அச்சகத்தில் ஐந்து ஆண் தொழிலாளர்களுடன் பெண் தொழிலாளர்களும், மின்னணுவியல் உபகரணங்கள் தயாரித்தலிலும், தாம்பரம் சானிட்டோரியத்தில் கல்வி உபகரணங்கள் தயாரித்தலிலும் பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

ஆவடி தொழிற்சாலைக்கு வேண்டிய கேபிள்பார்ம் (Cableform), மற்றும் டி.வி. காயில் (T.V. Coil), Printed Circuit Board போன்றவற்றை செயது கொடுக்கும் தொழிலாளர்கள் மிகவும் கோரமாகச் சுரண்டப்படுகின்றார்கள். அரசுத் துறைகளுக்கு வேண்டிய புத்தகங்கள், பற்றுச்சீட்டுக்கள், ஆவின் பால் வழங்கும் அட்டைகள், கோஃஆப் டெக்ஸ் கவர்கள் போன்றவற்றை அச்சிட்டுக் கொடுத்த போதிலும், இவர்கள் குறைந்த சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதுடன், கொத்தடிமைகளாகவும் நடத்தப்பட்டு வருகின்றனர். நிர்வாகமும் மாறி மாறி வரும் முதலாளித்துவ அரசாங்கங்களும் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்குப் பின்னர் கன்சாலிடேட் சம்பளமாக மாதம் ரூ. 300- தான் கொடுத்து வருகின்றார்கள்.

ஆனால் மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களோ தங்களது ஊதிய உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து 11-12-1989 முதல் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள்.

இவ்வளவு பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையில் கழிவறை வசதியே இல்லை. குடிதண்ணீர் வசதியும் கூடக் கிடையாது. இவர்களது உழைப்பை மட்டும் ஒட்டச் சுரண்டும் மாறி மாறி வந்த மூன்று முதலாளித்துவ அரசாங்கங்களும் நிர்வாகமும் இதுவரையில், குறைந்தபட்ச ஊதியங்களைக் கூட கொடுக்கவில்லை.

பயிற்சிக்காலம் ஒரு வருடம் தான் என்று முதலில் அறிவித்த நிர்வாகம் 2 1/2 ஆண்டுகள் வரை அதனை அப்படியே நீடித்தனர். பயிற்சிக்காலத்தில் உதவித்தொகை என்று ரூ. 200 மட்டுமே கொடுத்தனர். பயிற்சிக் காலத்தில் ஒரு நாள் லீவு எடுத்தாலும் போதும், அதற்குத் தண்டனையாக மேலும் 2 நாட்களையும் சேர்த்து மொத்தத்தில் மூன்று நாள் சம்பளத்தை அந்த உதவித் தொகையில் வெட்டி எடுத்துக் கொள்வார்கள். 5 நிமிடம் காலதாமதமாகி விட்டாலும் போதும் அன்றைக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பயிற்சியை முடித்தாலும் சரி பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் கூட கொடுப்பதும் கிடையாது.

அதிகாரிகளின் ஆணவம்

இவர்களுக்கு வருகின்ற அரசு அதிகாரிகளும், மேலாளர்களும் தங்களின் அதிகாரத்துவ நலன்களைப் பேணுவதில் குறியாய் இருக்கிறார்களேயொழிய தொழிலாள வர்க்கத்தின் குறைகளை, தேவைகளை, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இதுவரை உருப்படியாய் முயற்சி எடுக்கவில்லை.

கழிவறை வசதி செய்து தரக்கேட்டதற்கு "மௌண்ட் ரோடிலுள்ள சித்தாளுகளை எல்லாம் போய் பாருங்க. அவர்களெல்லாம் அப்படியா பயன்படுத்துகிறார்கள்?” என்று தலைக்கணம் பிடித்த ஐ..எஸ். பெண் அதிகாரி செல்வி ரமேஷ் என்பவர் ஆணவத்தோடு கூறியிருக்கிறார்.

தன்னெழுச்சியான போராட்டங்கள்

2 1/2 வருடமாகியும் பயிற்சிக் காலத்தை நீடிப்பதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர் தொழிலாளர்கள். அவர்களை சமாதானம் செய்வதற்காக அப்போது (1986ல்) விழா ஒன்றுக்கு வருகை தரவிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா விழா மேடையிலேயே உங்கள் பணி நியமனம் பற்றி அறிவிப்பார் என்று கூறினார்கள். விழாவிற்கு வருகை தந்த பெண் அமைச்சர் பெண் தொழிலாளர்களை அணுகி அவர்களைப் பற்றி அறிய அக்கறை கொள்ளவில்லை. அதிகாரிகளும் தொழிலாளர்களை அமைச்சர் அருகே செல்லவிடாமலும் பார்த்துக் கொண்டார்கள். 'அமைச்சரிடம்' இவர்களெல்லாம் அன் எஜூகேட்டட் (படிப்பறிவில்லாதவர்கள்) என்று கூறிவிட்டார்கள். அதிகாரிகள் ஏமாற்றியது கண்டு கொதித்தெழுந்த தொழிலாளர்கள் அப்போதைய பொது மேலாளர் நாராயணனை அணுகிக் கேட்டு, உருப்படியாக எதுவும் சொல்லாமல் மழுப்பி போது விரக்தியுற்ற தொழிலாளர்களில் சிலர் 'அப்ப வாங்கடி' என்று தங்கள் சக தோழர்களை அழைக்கையில், 'அப்ப போங்கடி' என்றார் அந்தத் திமிர்பிடித்த அதிகாரி.

முதல் வேலைநிறுத்தம்

தாங்கள் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது கண்டும் ஏமாற்றப்படுவது கண்டும் வெகுண்ட தொழிலாளர்கள் அடுத்த நாளே வேலைநிறுத்தத்தில் குதித்தார்கள். நிர்வாகம் விரைந்து வந்து 150 தொழிலாளர்களுக்கு பணி ஆணைகளை (Worker order) கையில் கொடுத்து, அடிப்படை சம்பளம் ரூ. 220 என்றும் பஞ்சப்படி 30 என்றும் போட்டு ரூ. 259 ஐ மாத சம்பளமாகக் கொடுக்க முன்வந்தது.

தொடர்ச்சியாகத் தொழிலாளர்கள் போராடியதால் ரூ. 259 லிருந்து 285 ஆகவும் 300 ஆக பின்னர் உயர்த்தப்பட்டது.

தொழிலாளர்களுக்கு சம்பளம் பற்றி எழுதுவது, உறையில் போடுவது ஆகிய எல்லா வேலைகளையும் இந்தத் தொழிலாளர்களே செய்து வருகிறார்கள். அதற்கென்று எழுத்தர் எவரும் அமர்த்தப்படவேயில்லை. ஸ்வீப்பரும் கூட நிச்சயிக்கப்படவில்லை.

எக்ஸ் கிராசியா (Exgratia) பெற்று வந்த தொழிலாளர்களுக்கு அதுவும் நிறுத்தப்பட்டது. மகளிர் மேம்பாட்டுக் கழகம் லாபம் நடத்தும் நிறுவனம் ஆகிவிட்டபடியால் இனிமேல் போனால்பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். அரசு ஆணையின்படி கிடைக்க வேண்டிய ரூ. 25 இடைக்கால நிவாரண தொகையை ஏற்கனவே தொழிலாளர்கள் பெற்று வந்த ரூ. 300 உடன் சேர்த்து, 325 ஆக கன்சாலிடேட் சம்பளமாக (Consolidated Pay) போட்டுக் கொடுத்தது. ஆனால் தொழிலாளர்கள் அந்த இருப்பத்தைந்து ரூபாயையும் ஒன்று சம்ளத்துடனோ அல்லது பஞ்சப்படியுடனோ சேர்த்தாலன்றி தாங்கள் வாங்கமாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.

1 கிலோ அரிசி ரூபாய் ஐந்துக்கு விற்கும் வேளையில், பஸ், ரயில், பயணத்திற்கே மாதம் ரூ. 75 செலவழித்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் வீட்டு வாடகை தான் கொடுக்க முடியுமா? ஒருவேளைச் சாப்பாடு தான் நிறைவாக சாப்பிட முடியுமா?

ஏனைய அரசுத்துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களோடு ஒப்பிடுகையில், 'மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு சுரண்டப்படுகிறார்கள் என்பது தெரியும். ஒரு அரசு கடைநிலை ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 750, மொத்த சம்பளம் ரூ. 1672.50. ஆனால் மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமோ ரூ. 235 தான் மொத்தச் சம்பளமோ ரூ. 300 தான்.

தொழிற்சங்கம் அமைத்தலும் போராட்டமும்

மேலும் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தங்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கவும் தொழிலாளர்கள் 1988ல் தொழிற்சங்கத்தை அமைத்தனர். இச்சங்கம் சி..டி.யுவின் கீழுள்ள இன்டஸ்டிரியல் எஸ்டேட்ஸ் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியனுடன் இணைக்கப் பெற்றுள்ளதுடன், தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தொழிற்சங்கத் தலைவர் சென்றுபேசும் பொழுதும் கூட அலட்சியப்படுத்தி வருகின்றனர் அதிகாரிகள்.

தங்கள் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஊதியசட்டத்தை அமல்படுத்தவும், அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், கழிவறை வசதிகளை விடுப்புகால அனுமதி ஆகியவற்றை நிறைவேற்றவும் கோரி 1989 ஜூன் மாதம் ஒரு அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். பின்னர் தொடர்ந்து ஊர்வலம், ஆர்ப்பாட்டங்கள் நடாத்தியும் எவ்வித பலனும் ஏற்படாததால் 1989 டிசம்பர் 11 முதல் வேலைநிறுத்தத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

தொழிலாளர் நல (?) ஆணையகமும் தொழிலாளர் போராட்டமும்

பின்னி பீச் என்ஜினியரிங், ஸ்டாண்டர்ட் மோட்டார் போல முதலாளித்துவ வர்க்கத்திற்குச் சாதகமாகவே ஆலோசனைகளும் தீர்ப்புகளும் வழங்கி வரும் ஆணையகம், தொழிற்சங்கம் போட்ட வழக்கில்—பேச்சு வார்த்தையின் போது 'சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டுக் கீழே உள்ளவர்களுக்காக பயிற்சி கொடுப்பதற்காக நடத்தப்பட்டது என்றும், லாபநோக்கிற்காக நடத்தப்படவில்லை என்றும் எனவே (வறுமைக் கோட்டுக் கீழேயே அழுந்திக்கிடக்க வேண்டும்) ஒன்றும் செய்ய முடியாது. நீங்களே கூட்டுறவு முறையில் நடத்துங்கள் என்று கையை விரித்து விட்டது.

உண்மையில் இங்கு ஆவின், கோஆப்டெக்ஸ், டாப்கோ, சமூகநலத்துறை போன்றவற்றுக்காக அச்சு வேலைகள் மின்னணுவியல் பொருட்கள் ஆகிய அனைத்தும் லாபத்திற்காக செய்யப்படுகையில், மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களின் உழைப்பு அதற்காக கறந்து எடுக்கப்படுகையில் மகளிர் மேம்பாட்டுக் கழகத்தொழிலாளர்கள் மட்டும் சேவை நோக்கில் தங்களை ஒட்டச் சுரண்டுவதற்கு அனுமதிக்க வேண்டுமாம்.

முதலாளித்துவ அரசின் கபட நாடகம்

லாபநோக்கிற்கான முதலாளித்துவ உற்பத்தியில் போட்டாபோட்டியில், கூட்டுறவு முறையில் நடத்த முடியாது என்பது நன்கு நெரிந்ததே. 'கூட்டுறவு முறையில் நீங்களே நடத்துங்கள்' என்று அமைச்சர் சுப்புலட்சுமியும் தொழிலாளர் நல (?) ஆணையமும் கூறிவருகின்ற அதேவேளையில் கிண்டியில் உள்ள அச்சகத்தையும், சிவகாசியில் உள்ள அச்சகத்தையும் தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான சதித்திட்டத்தை முதலாளித்துவ தி.மு.. அரசாங்கம் தீட்டி வருகிறது.

முதலாளித்துவ அரசாங்கமும் ஸ்டாலினிச தொழிற்சங்கமும்

ஸ்டாலினிச சி..டி.யு. தொழிற்சங்கத் தலைமைகளும் தர்ணாக்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று கோட்டை முன்பும், தொழிலாளர் நல (?) ஆணையகம் முன்பும் நடத்தி முதலாளித்துவ தி.மு.. அரசின் மனம் நோகாதவாறு போராடி வருகிறார்கள்.

வாயில் பந்தல் போடக் கூடாது, நான்கு பேருக்கு மேல் கூடக்கூடாது, தொழிற்பேட்டைக்குள் பந்தல் போடக் கூடாது என்றும் தொழிலாளர்கள் ஆலைவாயில்களின் முன் ஊர்வலம், உண்ணாவிரதம் நடத்தக் தடைவிதித்து அவற்றை 'எழிலகம்' முன் நடத்தக் கூறிவரும் தொழிலாளர் விரோத தி.மு.. அரசாங்கத்தோடு ஒரு பக்கம் நட்புறவு கொண்டாடி வரும் சி.பி.. (எம்) ஸ்டாலினிசத் தலைமைகள் புதுவை, பழனி, தேர்தல்களிலும் தி.மு.. ஜனதா தளம் போன்ற முதலாளித்துவக் கட்சிகளையே மீண்டும் அரியணையில் ஏற்றுவதற்கு தலைகீழாக நின்று உழைத்து வருகிறார்கள்.

ஏதோ அரசு அதிகாரிகள் தவறுகள் செய்வது போலவும் முதலாளித்துவ அரசாங்கம் ஏதும் அறியாத அரசாங்கம் போலவுமான ஒரு பிரமையை ஸ்டாலினிசத் தொழிற்சங்கத் தலைமைகள் தொழிலாளர்களிடையே விதைத்து வருகிறார்கள். தொழிலாளர் நல (?) ஆணையரோ அல்லது காவல்துறை அதிகாரியோ எவராக இருப்பினும் முதலாளித்துவ அரசாங்கத்தின் அரச எந்திரத்தின் பணியைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த நடவடிக்கைகள் அரசாங்கத்திற்குத் தெரிந்தே செய்யப்படுகின்றன என்பது தான் கண்முன் நடக்கும் உண்மை.

கொத்தடிமைத்தனத்திற்கும் கோரச்சுரண்டலுக்கும் எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ள தொழிலாள வர்க்கத்தைத் தனிமைப்படுத்தி, ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், பின்னிபீச் என்ஜினியரிங் மெட்டல்பாகஸ், பி&சி மில் போன்ற நிலைக்கு ஆளாகவிடாமல், வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தொழிலாளர்கள் பின்வரும் வேலைத்திட்டத்தில் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஃ அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், அரசு குறைந்தபட்ச ஊதியத் திட்டத்தை நிறைவேற்றவும், அச்சகங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதைத் தடுக்கவும் போராடிவரும் மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிலாள வர்க்கத்தையும் ஒருபொது வேலைநிறுத்தத்தில் இறக்கிப் போராடுமாறு (CITU) சி..டி.யு (AITUC) ..டி.யு.சி. தலைமைகளை நிர்பந்தி!

ஃ வேலைநிறுத்தப் போராட்டத்தை மேலும் முன்னெடுக்க தொழிலாளர்களுக்கான பொருளாதார நிதி உதவிகளைத் திரட்டித் தருமாறு சி..டி.யு, ..டி.யு.சி. தலைமைகளை நிர்பந்தி!

ஃ இந்தியா முழுவதும் கதவடைப்பு செய்யப்பட்டு உள்ள 800 க்கும் மேற்பட்ட ஆலைகளைத் திறக்கவும் ஆட்குறைப்பு ஆலைகள் மூடல் இவற்றை முறியடிக்கவும், குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்தவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தையும் அனைத்து ஆலைகளையும் வங்கிகளையும் ஒரு பைசா கூட நஷ்டஈடு கொடுக்காமல், தொழிலாள வர்க்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் அரசுடைமையாக்க அகில இந்திய அளவில் ஒரு காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்தில் இறங்குமாறு சி..டி.யு.சி., ..டி.யு.சி. தலைமைகளை நிர்பந்தி!

ஃ சி.பி.. (எம்), சி.பி.., ஸ்டாலினிசத் தலைமைகளை முதலாளித்துவக் கட்சிகளுடனான தமது உறவினைத் துண்டித்து கொண்டு சோசலிச வேலைத்திட்டத்தைச் செயற்படுத்தும் ஒரு தொழிலாளர் விவசாய அரசாங்கம் அமைக்கப் போராடுமாறு நிர்பந்தி!

ஃ நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாள கழகத்தில் இணைந்து தொழிலாளர் ஆட்சி அமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுங்கள்!