"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Friday, November 23, 2018

காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையை பேணு! இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்களை காஷ்மீரில் இருந்து வாபஸ் வாங்கப் போராடு! இந்திய உபகண்டத்தில் ஒரு ஐக்கிய சோசலிச குடியரசுகளை அமைக்கப் போராடு!


Thozhilalar Paathai Volume 029
February 1990

இந்தியா, பாகிஸ்தானில் உள்ள சூடான பிரச்சனைகளான பலகோடிக்கணக்கான வேலையின்மை, லட்சக்கணக்கான ஆலைமூடல்கள், ஆட்குறைப்புகள், சம்பள வெட்டுகள், விலைவாசியேற்றம் போன்றவற்றினால் தொழிலாளர்கள், வறிய விவசாயிகள், இளைஞர்களிடமிருந்து இருநாட்டு திவாலான முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் எதிராக வளர்ச்சியடையும் எதிர்ப்புகளை திசை திருப்பவும், வர்க்கப் போராட்டங்களை குரூரமாக நசுக்குவதற்காக போலீஸ்-ராணுவ ஒடுக்குமுறை அரசு இயந்திரங்களைப் பலப்படுத்தவும் இந்தியா, பாகிஸ்தான் ஆளும் வர்க்கங்கள் தட்டி எழுப்பும் யுத்த தேசியவெறிக் கூச்சல்களை இந்தியா, பாகிஸ்தான் தொழிலாள வர்க்கம் பாட்டாளி வர்க்க சர்வதேசிய அடிப்படையில் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் அறை கூவுகிறது.

ஜம்மு-காஷ்மீர் சம்பந்தமாக இந்தியா, பாகிஸ்தான் ஆளும் வர்க்கங்களின் பொய் பித்தலாட்டங்கள் நிறைந்த உரிமை கோரல்களை தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை பேணி இந்திய உபகண்டத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலும்-இந்திய (இந்து-முஸ்லீம்) தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் கூட்டுச் சதியாலும் உருவாக்கப்பட்ட மதவாத அரசு அமைப்புகளை தூக்கி வீசி இந்திய உபகண்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வறிய விவசாயிகளின், ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவுடன் ஸ்தாபிக்க போராட வேண்டும். உபகண்டத்தில் உலக சோசலிசக் குடியரசின் ஒரு பகுதியாக ஐக்கிய சோசலிசக் குடியரசுகள் அமைக்க போராட வேண்டும்.

உண்மை என்னவென்றால் ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இந்தியா, பாகிஸ்தான் இருநாட்டு முதலாளித்துவ ஆட்சிகளும் தமது ராணுவத்தினால் ஒடுக்கி வருகின்றன. காஷ்மீர் சம்பந்தமாக இந்தியா, பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் எழுப்பும் கோரிக்கைகள் மோசடியானவை என்பதை ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற பெயரில் செயற்படும் தேசியவாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அமனுல்லாகானின் அறிக்கை மேலும் அம்பலப்படுத்தி உள்ளது. “போர் நிறுத்த எல்லைகளைத் தாண்டி செல்ல வேண்டாம் என்று நான் நமது மக்களுக்கு இராணுவச்சட்ட ஆணை மாதிரியான ஒன்றை விடுத்துள்ளேன். 1,400 கிலோமீட்டர் போர்நிறுத்த எல்லைகளுக்கு குறுக்கே ஒரு தொடராக ஆங்காங்கே நடைப்பெறும் சிறுசண்டைகள் ஒரு தொடர்ச்சியான பதில் தாக்குதலை உண்டு பண்ணி போராக வெடிக்கலாம். அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நெருக்கடி நிலைமைகளை உண்டு பண்ணக்கூடும், அது எமக்கு சாதகமானதாக இருக்காது. ஒரு போர் மூளுமாயின் நாம் நடுவிலே நசுக்கப்பட்டு ஒரு பலிக்கடா ஆக்கப்படுவோம்.” (இந்தியன் எக்ஸ்பிரஸ், பிப்ரவரி 8, 1990).

காஷ்மீர் மக்களுக்கு டில்லி ஆட்சியாளர்கள் மீதுள்ள வெறுப்பு நவம்பரில் நடந்த மக்களவைத் தேர்தல்களை பெருமளவில் பகிஷ்கரித்ததன் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் வாக்குப்பதிவே நடைபெறவில்லை. பாரமுல்லா, ஆனந்தநாக் தொகுதிகளில் 3% பேர் தான் வாக்களித்தனர். டில்லி ஆட்சியாளர்கள் காஷ்மீரின் வளர்ச்சி சம்பந்தமாக காட்டி வந்த புறக்கணிப்பினால் அங்கு தொழிற்துறை வளர்ச்சி எதுவுமே இல்லாமல் இருந்து வருகிறது. அதிகரித்து வரும் வேலையில்லா எண்ணிக்கையும், விலைவாசி ஏற்றமும் அங்கு சமூக நெருக்கடியை மேலும் உக்கிரப்படுத்தி உள்ளது.

கடந்த பல மாதங்களாக போலிசாருக்கும் அங்குள்ள இளைஞர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. தேசிய முன்னணி அரசாங்கத்தின் உள்துறை அமைச்சரின் மகள் காஷ்மீர் தேசிய இயக்கத்தினரால் கடத்தப்பட்டு, அரசாங்கத்தினால் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமது அமைப்பை சேர்ந்த 5 பேரை விடுவிக்கக் கோரி பணயக் கைதியாக வைக்கப்பட்டார். அந்த 5 பேரும் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்னரே உள்துறை அமைச்சரின் மகள் விடுவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சியை ஒடுக்க மேலதிகமான ராணுவம் அனுப்பப்பட்டது. பத்திரிகை தணிக்கையும் அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டது. இந்திய அரசாங்கத்துக்கும், அரச படையினருக்கும் எதிரான காஷ்மீர் மக்களின் எழுச்சி பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்டது என்றும், காஷ்மீர் இந்தியாவை சேர்ந்த பகுதி என்றும் காஷ்மீர் தொடர்பாக நேருக்குநேர் நின்று சண்டையிட பாகிஸ்தான் விரும்பினால் தகுந்த வகையில் பதிலடி கொடுக்க இந்திய மக்களும், இந்திய ராணுவ வீரர்களும் தயாராகவே இருக்கின்றனர் என்று பிரதமர் வி.பி. சிங் முழக்கம் செய்துள்ளார்.

காஷ்மீரின் சுயநிர்ணய உரிமை நிராகரிப்பு

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி அணுகுகிறார்கள் என்பதை லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக மேலதிகாரி சர்யார்கான் பின்வருமாறு கூறியுள்ளார். “நாம் சுயநிர்ணய உரிமையை பற்றி பேசும் போது நாம் கருதுவது காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைய தீர்மானிக்க வேண்டும். காஷ்மீரின் சுதந்திரம் விளையாட்டின் ஒரு பகுதி அல்ல' காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக இருக்க தீர்மானித்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களாக என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு [Print is not clear] ... இருபகுதியினரும் ஒப்புக் கொண்டு உள்ளனர். காஷ்மீர் மக்கள் செய்ய வேண்டியது என்னவெனில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு பணிந்து செல்வதாகும். இந்த ஒப்பந்தத்திற்கு புறம்பாக நீங்கள் பேசும் ஒரு மூன்றாவது தெரிவின் சாத்தியத்தை என்னால் காண முடியவில்லை" (இந்து, பிப்ரவரி 18, 1990. . 9).

மேற்கூறிய இந்த அறிக்கை பாகிஸ்தான், இந்திய ஆளும் வர்க்கத்தினர் சுயநிர்ணய உரிமை பற்றிய கோட்பாட்டை விபச்சாரம் செய்து காஷ்மீர் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான தேசிய சுயநிர்ணய உரிமையை எப்படி தமது பூட்ஸின் கீழ் போட்டு நசுக்குகின்றனர் என்பது தெளிவாகிறது. இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தில் 370ம் பிரிவு சேர்க்கப்பட்டு சிறப்பு அந்தஸ்து கொண்ட இந்திய மாநிலங்களில் ஒன்று என அறிவிக்கப்பட்டது. இதன்படி தனிக்கொடி, தனி அரசியல் அமைப்பு தனி அரசியல் நிர்ணய சபை வைத்துக் கொள்ள காஷ்மீருக்கு உரிமை உண்டென்றும் உண்மையான காஷ்மீரிகள் தான் அங்கு சொத்து உடமையாளர்களாக இருக்க முடியுமென்றும் அறிவிக்கப்பட்டது. நேருவின் ஆட்சி காலத்தில் காஷ்மீரின் பிரதம மந்திரியாக இருந்த ஷேக்அப்துல்லா காஷ்மீரின் சுதந்திரம் பற்றி பொதுஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று டில்லி அரசை நிர்பந்தித்ததன் காரணமாக அவர் தேசத்துரோகி என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டில்லி ஆட்சியின் அடிவருடிகளான பக்ஷிகுலாம் முகமது, சாதிக் ஆகியோர் ஒருவரின் பின் ஒருவராக 1974 வரை காஷ்மீரின் முதல் மந்திரிகளாக இருந்தனர், டில்லியின் பொம்மையாக செயற்பட ஒப்புக் கொண்டதற்கு இணங்க ஷேக்அப்துல்லா சிறையில் விடுவிக்கப்பட்டு டில்லி ஆட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதாவது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொண்டார். இவ்வாறே ஷேக் அப்துல்லாவின் பின் முதல்வரான பாரூக் அப்துல்லாவும் அதே போல் ஷாவும் காஷ்மீர் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை காட்டிக் கொடுத்தனர்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சூழ்ச்சி

கிழக்கில் திபெத்தையும், வட கிழக்கில் சீனாவின் சிங்கியாங் மாகாணத்தையும் வடமேற்கில் ஆப்கானிஸ்தானின் எல்லைகளையும் கொண்டு ஜம்மு-காஷ்மீர் ஒரு மூல உபாய முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பினும், லடாக் பள்ளத்தாக்கில் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

1947ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் இந்து, முஸ்லீம் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து செய்த சதியின் விளைவாக தேசிய விடுதலைப் போராட்டத்தில் மிக இறுக்கமான புரட்சிகர ஐக்கியத்துடன் இணைந்து செயல்பட்ட இந்திய உபகண்டத் தொழிலாள வர்க்கம் மதவாதரீதியில் பிரிக்கப்பட்டு இந்து இந்தியாவும், முஸ்லீம் பாகிஸ்தானும் உருவாக்கப்பட்டது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னணியில் நின்று போராடிய பஞ்சாபி வங்காளி தேசிய இனத்தவர்களும் பிரிவினையின் விளைவாக மத அடிப்படையில் கூறு போடப்பட்டன. அந்த சமயத்தில் ஜம்மு காஷ்மீர் தனி ஒரு அரசாங்க ஹரிசிங் என்பபடும் மன்னரால் ஆட்சி செய்யப்பட்டது. இந்திய உபகண்டத் தொழிலாள ஒடுக்கப்படும் மக்களை மதவாத அடிப்படையில் பிரிவினை செய்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேமான ஜம்மு-காஷ்மீர் தனது கட்டுப்பாட்டுக்கு அப்பால் ஒரு தனி அரசாக இருக்க அனுமதிக்கவில்லை. அதனால் 1947, ஜூன் 3ல் மவுன்பட்டன் (பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதி) காஷ்மீருக்கு சென்று ஜம்மு-காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக இருப்பது நடைமுறை சாத்தியமில்லை என்றும், அப்படியான அரசு பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட மாட்டதென்றும் கூறினார். ஆகஸ்ட் 15, 1947க்குள் இந்தியா அல்லது பாகிஸ்தான் இரண்டில் ஒன்றுடன் இணைவது பற்றி தீர்மானிக்க வேண்டுமென்று மன்னர் ஹரிசிங்கிடம் கூறப்பட்டது. ஆனால் இது மன்னரால் நிராகரிக்கப்பட்டது.

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு பல்வேறு அழுத்தங்களை பாகிஸ்தான் கொடுத்தது. நிலப்பாதை வழியாக காஷ்மீருக்கு செல்லும் உணவு பெட்ரோல், மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பாகிஸ்தானால் தடுத்து நிறுத்தப்பட்டன. பின்பு காஷ்மீர் மீது பழங்குடி மக்களின் ஆதரவுடன் ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டது. ஹரிசிங் மன்னர் ஆட்சி ஆபத்தில் இருக்கையில் காஷ்மீரை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக காஷ்மீர் பிரதம மந்திரி மகாஜன் இந்தியாவிடம் உதவி கேட்டார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள மன்னர் சம்மதிப்பாராயின் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி சிறீநகரை பாதுகாக்க இந்தியா தயார் என்று கூறப்பட்டது. இந்த நிபந்தனைக்கு காஷ்மீர் பிரதமர் ஒப்புக் கொண்டதற்கு இணங்க இந்திய ராணுவம் காஷ்மீரை ஆக்கிரமித்தது. ஜம்மு-காஷ்மீர் அரசின் ஒரு பகுதியாக இருந்த ஜில்சிட் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்பது சம்பந்தமாக 1965ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர்மூண்டது. அதன்பின்னர் 1971ல் பங்களாதேசம் சம்பந்தமாக போர்மூண்டது, 1972ல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் சிம்லாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப் போர்க்கால கட்டத்தின் போதும் அதைத் தொடர்ந்தும் தொழிலாளர்கள் மேல் வேலைப்பளு சுமத்தப்பட்டது. வேலை நிறுத்தங்கள் சட்ட விரோதமாக்கப்பட்டன. அதிக வரிகள் விதிக்கப்பட்டனட. இன்றைய உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பிரமாண்டமான உள்நாட்டு வெளிநாட்டு கடன்களுடன் உலக ஏகாதிபத்திய வங்கியாளர்களின் அடிவருடிகளாக செயற்படும் இந்தியா, பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் அவர்களுடைய ஆட்சிக்கு எதிரான தொழிலாளர்களின், ஏழை விவசாயிகளின், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் போராட்டங்களை திசைதிருப்பவும் நசுக்கவும் இந்து இஸ்லாம் மதவெறிகளை தூண்டிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் இந்துவெறியை தூண்டி இனக்கலவரங்களை உண்டு பண்ணும் வேலையை தேசிய முன்னணி ஆட்சியை தக்க வைக்கும் ஒரு முக்கிய கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி, மிக தீவிர இந்து வெறி அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா போன்றவற்றுடன் சேர்ந்து செய்கிறது. அயோத்தியில் பாபரி மசூதி பள்ளிவாசல் அருகில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று அதற்கான தயாரிப்புகளை தேசிய முன்னணி ஆட்சியின் ஆதரவுடன் செய்து வருகிறது. பிப்ரவரி 14ம் தேதி ராமர் கோயிலை கட்ட ஆரம்பிப்பதாக இருந்த திட்டத்தை, விசுவ ஹிந்து பரிஷத்தும், ராம ஜன்மபூமி முக்தி யக்ஞ சமிதியும் பிரதமருடன் நடத்திய விவாதத்தின் பின் 4 மாதங்கள் ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளன. இந்து மதவெறி அமைப்புகள் எதிர்ப்பார்த்தது போல் இது நெருக்கடியிலுள்ள டில்லி ஆட்சியாளர்களுக்கு மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் உதவியாக இருந்தது. இஸ்லாம் மதவெறி அமைப்புகள் இதனையும், காஷ்மீரில் நடக்கும் இந்திய ராணுவத்தின் அட்டூழியத்தையும் தமது பிற்போக்கு மதவெறி பிரச்சாரத்தை முன்னெடுக்க பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பகுதி என்பதை மாஸ்கோ ஸ்டாலினிச அதிகாரத்துவமும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒப்புக் கொண்டுள்ளதாக டில்லி ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடிக்கின்றனர். இந்திய உபகண்டத்தில் தொழிலாளர்களின் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் புரட்சிகரப் போராட்டங்களை நசுக்கி உலக ஏகாதிபத்தியத்தின் தெற்கு ஆசியா போலீஸ்காரனாக செயற்படும் இந்திய அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆலோசனையுடனும் உதவியுடனும் செய்யப்பட்டால் அது ஏகாதிபத்திய, முதலாளித்துவ நலன்களுக்கு அனுகூலமாக செய்யப்பட்ட ஒன்று என்பதை நன்கு அறியும் மாஸ்கோ ஸ்டாலினிச அதிகாரத்துவமும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பது இயல்பானதே.

இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில், இரண்டாம் உலகப்போரின் பின்பு உருவான சம்பிராதய 'சுதந்திர நாடுகளின்' ஜனநாயக சமத்துவத்தின் அடிப்படையில் வேறுபட்ட மொழி பேசுவோரும் மத மற்றும் இனரீதியான பிரிவினரும் வாழும் ஒரு தனி தேசிய அரசை உருவாக்க ஏகாதிப்பதியம் அனுமதிக்கவில்லை. தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினர் ஒடுக்கப்படும் மக்களை விடுதலை செய்வோராக அல்லாமல் அவர்களை ஒடுக்கும் ஏகாதிபத்தியத்தின் ஜூனியர் பங்காளிகளாகவே செயற்பட்டனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு இந்நிலை பற்றி பின்வருமாறு கூறியது. “இப்படியான முதலாளித்துவ நாடுகள் மீதான ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் விளைவுகள் பெயர் போனதாகும். உள்நாட்டில் பெருத்தமான தொழிற்துறையை வளர்க்க முடியாத நிலையில் அவற்றின் பொருளாதார தலைவிதிகள் ஒரு சிறு மூலவளங்களை ஏற்றுமதி செய்வதுடன் பிணைக்கப்பபட்டு ஒரு பிரமாண்டமான கடன் சுமையின் கீழ் மூச்சுத் திணறுகின்றன. பின்தங்கிய நாடுகளில் உள்ள பரந்த கல்வி அறிவின்மை, நோய் பட்டினி போன்றன மூச்செடுக்க விடாமல் செய்யும் நிலைமையை உண்டாக்கியுள்ளன. உள்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சி அரிதான ச்ம்பவங்களாகவே இருந்தது. அப்படி ஏதாவது இருந்தாலும் கூட அவை சாதாரணமாக ஏகாதிபத்திய ஆதிக்கத்தில் உள்ள பன்னாட்டு உற்பத்தியின் பகுதிகளாகவே இருந்தன. அவை சிப்பாக ஏகாதிபத்தியத்தின் உயர்ந்த லாபத்திற்கான மூலவளங்களாகவே ஊக்குவிக்கப்பட்டன. அவ்வாறான போலியான பொருளாதார வளர்ச்சி ஒடுக்கப்படும் மக்கள்தொகையின் தேசிய நலன்களுக்கு எவ்விதத்திலும் அத்தகைய நிலைமைகளில் முதலாளித்துவ வர்க்கத்தின் குதூகல அரவணைப்புடன் தோன்றுவது சமூகங்களுக்கு இடையிலான கோர யுத்தங்களாகும். இந்தப் பிரச்சினைகளை முதலாளித்துவ ஆட்சி தொடரும் வரை தீர்க்க முடியாது. சுதந்திர காலப் போராட்டங்களை தொடர்ந்து தோன்றிய இந்தியா, பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஷ், பர்மா போன்ற உண்மையில் உலகில் பழைய காலனித்துவ நாடுகளின் வரலாறும் தீர்க்கமாக நிரூபிப்பது முதலாளித்துவ வர்க்கம் உண்மையான தேசிய ஒன்றிணைப்பையும் அரசியல் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முடியாது என்பதாகும்".

1947ல் ஏகாதிபத்திய பிரிவினைக்கு ஆதரவளித்த ஒன்றுபட்ட ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று மூன்றாக பிளவுற்று இருப்பினும் பிரிவினையை தொடர்ந்து ஆதரிப்பதுடன் காஷ்மீர் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை இந்திய ராணுவம் ஒடுக்குவதை ஆதரவளிக்கின்றனர். இலங்கையில் ஈழ மக்களின் தேசிய சுய நிர்ணய உரிமையை இந்திய ராணுவம் நசுக்குவதற்கும் சி.பி.எம், சி.பி.ஐ ஸ்டாலினிசத் தலைமைகள் ஆதரவளித்து வருகின்றன.

ஜம்மு-காஷ்மீரிலிருந்து இந்திய, பாகிஸ்தான் துருப்புகளை வெளியேற்றவும், ஜம்மு-காஷ்மீர் மக்களின் தேசிய சுய நிர்ணய உரிமையை பேணவும் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டு போராட வேண்டும் என சோசலிசத் தொழிலாளர் கழகம் அறை கூவுகிறது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் விடுதலை இந்திய உபகண்டத்திலுள்ள தொழிலாள வர்க்கமும், ஒடுக்கப்படும் மக்களும் 1947 பிரிவினைக்கு எதிராக இந்திய உபகண்டத்தை மறுஐக்கியம் செய்யும் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்ததாகும். இந்திய உபகண்டத்தில் உருவாக்கப்பட்ட மத, இனவாத அரசுகளை தகர்த்தெறிந்து உலக சோசலிசக் குடியரசின் பகுதியாக உபகண்டத்தில் ஒரு ஐக்கிய சோசலிசக் குடியரசுகளை அமைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை உத்தரவாதம் செய்ய வேண்டும்.

காஷ்மீரிலுள்ள தொழிலாளர்களும், வறிய மக்களும் பாகிஸ்தான் மதவாத ஆட்சியாளர்களின் உதவியுடன் காஷ்மீரில் ஒரு மதவாத அரசை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்படும் அனைத்து முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ இயக்கங்களையும் நிராகரிக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் தொழிலாளர்களுடன் புரட்சிகர ஐக்கியம் பூண்டு இந்திய, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடிப்பதுடன் இந்திய உபகண்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உருவாக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக அணி திரள வேண்டும்.

இந்த புரட்சிகர முன்னோக்கில் போராடும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தை ஜம்மு-காஷ்மீரிலும் இந்திய உபகண்டத்தின் ஏனைய பகுதிகளிலும் கட்டி எழுப்ப முன்வருமாறு வர்க்க நனவுடைய தொழிலாளர்களையும் புரட்சிகர இளைஞர்களையும் அழைக்கிறோம்.

இந்திய ஸ்டாலினிஸ்டுகள் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்க தயார்


Thozhilalar Paathai Volume 490
September 1998
பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டரசாங்கம் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வீழ்ச்சி காணும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ள ஒரு நிலையில் காங்கிரஸ் கட்சி முதலாளிகளின் அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்க இந்திய ஸ்டாலினிஸ்டுகள் முன்வந்துள்ளனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான ஜோதி பாசு முன்னணியில் நின்று கொண்டுள்ளார். இவர் ஜூன் 28ம் திகதி ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பாரதீய ஜனதா கட்சி கூட்டரசாங்கம் வீழ்ச்சி காணும் நிலையில் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் தயார் நிலையை பின்வருமாறு வெளிப்படுத்தினார்: சீ.பீ.. (எம்) பா... அரசாங்கம் வீழ்ச்சி கண்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு () எதிராக வாக்களிக்கப் போவதில்லை என்பதை நாம் ஜனாதிபதிக்கு அறிவிப்போம்,” என்றுள்ளனர்.

இந்த பேட்டிக்கு சில தினங்களுக்கு முன்னர் தாம் புதுடில்லி சென்றதாகவும் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி அங்கத்தவர் குழுவின் தலைவரான மாஜி நிதி அமைச்சர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இது பற்றிப் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் கூறிய ஜோதிபாசு அப்பேட்டியில் மேலும் கூறியதாவது: “பா... க்கு பதிலீடாக தோன்றக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் () கட்சி மட்டுமே என நான் திரு. மன்மோகன்சிங்கிடம் கூறினேன். அதனுள் சில இனவாதக் குழுக்கள் இருந்த போதிலும் காங்கிரசுக்கு மதச்சார்பற்ற தன்மை உள்ளது,” என்றுள்ளார். காங்கிரஸ் கட்சியை இந்து சோவினிச பா...வுக்கு எதிராக இருந்து கொண்டுள்ள ஒரே பதிலீடாகவும் மதச்சார்பற்ற சக்தியாகவும் தூக்கிப் பிடிக்கும் ஜோதிபாசு, பா... அரசாங்கம் வீழ்ச்சியடையும் நிலையில் முதலாளி வர்க்க ஆட்சியைக் கட்டிக் காப்பதில் தோள் கொடுக்கும் பொறுப்பு பற்றி காங்கிரஸ்முதலாளிகளுக்கு புரிய வைக்கும் கைங்கரியத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இந்திய முதலாளித்துவப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியுடன் நின்றுவிடாத ஜோதிபாசு அதே நாளில் இந்தியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனுக்கும் பேட்டி அளித்துள்ளார். மேற்கு வங்காளம் திரும்பியதும் அவர் மாநில சபையைக் கூட்டி நிகழ்த்திய உரையில் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் பணி பற்றி கட்சியின் ஏனைய தலைவர்களுக்கு பின்வருமாறு கூறினார்: “பா... வளர்ச்சியால் தோன்றியுள்ள புதிய நிலைமையினுள் காங்கிரஸ் கட்சியுடன் ஐம்பது ஆண்டுகளாக இருந்து வந்த கோட்பாட்டு எதிர்ப்பை கைவிட எமக்கு நேரிடும்,” என்றுள்ளார்.

பா... அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முன்கூட்டியே காங்கிரஸ் அரசாங்கத்துக்கு தோள்கொடுக்கும் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள ஜோதிபாசு, அதை வெளிவெளியாகக் கூறும் பிரச்சார இயக்கத்தையும் மாநிலத்தில் முன்னெடுத்துள்ளார். இந்த நடவடிக்கை ஏதோ ஒரு வகையில் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களிடையே தாம் மேலும் அன்னியப்படுவதற்கான ஒரு காரணமாகிவிடுமோ என சீ.பீ.. (எம்) சீ.பீ.. கட்சிகளின் சில தலைவர்களும் இவர்களுடன் இடதுசாரி முன்னணி என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டுள்ள போர்வாட் புளொக் போன்ற மாஜி குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்களில் ஒருவர் தன்னும் காங்கிரசுக்கு முண்டு கொடுக்கும் தீர்மானத்துக்கு எதிராக கருத்துத் தெரிவிக்காததோடு அத்தகைய ஒரு முடிவு தமது கட்சிகளின் மத்திய குழுக்களையும் இடதுசாரி முன்னணியையும் கூட்டி நடாத்தும் கலந்துரையாடலின் மூலம் எடுக்கப்பட வேண்டும் எனக் கூறிக் கொண்டுள்ளனர்.

ஜூலை 7ம் திகதி மேற்கு வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவில் சீ.பீ.. (எம்) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் பேசிய அதன் ஒரு தலைவரான வீமன் பாசு கீழ்கண்டவாறு கூறியதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன: “காங்கிரஸ் கட்சி () அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் எந்த ஒரு தீர்மானத்தையும் எமது கட்சி இதுவரை எடுக்கவில்லை. மத்திய குழு உறுப்பினர்கள் இம்மாதம் கூடி அது பற்றி முடிவு எடுப்பர்" என்றுள்ளார்.

'கடும் போக்காளர்' என முதலாளித்துவ வெகுஜனத் தொடர்புச் சாதனங்களால் தூக்கிப் பிடிக்கப்படும் சீ.பீ.. (எம்) தலைவரான சீதாராம் யெச்வுரி ஜூன் 29ம் திகதி பத்திரிகையாளர்களுக்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில் வார்த்தைகளைக் கவனமாகக் கையாண்டதன் மூலம் ஜோதிபாசுவின் அறிக்கைக்கு ஆதரவு வழங்கினார். 'பா... அரசாங்கம் வீழ்ச்சி காணும் வரை பொறுத்திருந்து நிலைமை அபிவிருத்தி காணும் தன்மைக்கு ஏற்ப அதற்கு பதிலளிப்பது தமது கட்சியின் நிலைப்பாடு' என அவர் கூறியுள்ளார். பா... அரசாங்கம் வீழ்ச்சி காணும் நிலையில் காங்கிரசுக்கு அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லை என்று மட்டுமே ஜோதிபாசு கூறியதாகவும் அந்த விதத்தில் எதிராக வாக்களிக்காது இருப்பதற்கும் காங்கிரசுக்கு ஆதரவு வழங்குவதற்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் இவர் கூறினார். இதன் மூலம் காங்கிரசுக்கு முண்டு கொடுக்கும் தமது கடைகெட்ட கொள்கையை பூசிமறைக்க இவர் முயன்றுள்ளார்.

இதன் மூலம் இந்திய ஸ்டாலிஸ்டுகள் காங்கிரஸ் கட்சி உட்பட்ட முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டாக பொருளாதார நிகழ்ச்சிநிரலை நடைமுறைக்கிடுவதே திட்டம். காங்கிரஸ் பொருளாதாரக் கொள்கையை எதிர்ப்பதாகவும் தமது ஆதரவைப் பெற வேண்டுமானால் அந்தக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் இந்தியன் ஸ்டாலினிஸ்டுகள் கூறிக் கொள்வது அவர்களின் அரசியல் மோசடியின் ஒரு பாகமாகும்.

இந்திய வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்


Thozhilalar Paathai Volume 448 (File no 011)
May 1994

மே 11ம் திகதி இந்திய வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தினால் அகில இந்தியா பூராவும் வங்கித்துறை ஸ்திம்பித்தது. வங்கிகள் தனியார்மயமாக்கத்தை எதிர்த்தும், சம்பள உயர்வு கோரியும் இந்த வேலைநிறுத்தம் இடம் பெற்றது.

இந்திய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் சமீபத்தில் சமர்பித்த வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ட்ரான்ஸ்நஷனல் கம்பனிகள் இந்தியாவினுள் பரந்த அளவிலான முதலீடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதோடு மிகவும் குறைந்த மட்டச் சம்பளத்தில் உழைப்பைச் சுரண்டுவதற்கான வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாக வங்கிகள் தனியார்மயமாக்கத்தில் நரசிம்மராவ் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தினை உலகச் சந்தைக்குத் திறந்து விடுவதானது தேசியக் கைத்தொழில்களில் வேலை செய்யும் இலட்சோப லட்சம் தொழிலாளர்களை வேலையற்றோர் படையில் தள்ளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நெய்யப்பட்ட நூல் இறக்குமதி மீதான சுங்க வரி தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து குஜராத், டட்ரா, நாகாகாஸ் போன்ற இடங்களில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் மார்ச் 3ம் திகதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கியது தெரிந்ததே.