"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Tuesday, September 20, 2016

மேற்கு வங்க ஸ்டாலினிச அரசாங்கத்தின் போலீஸ் கற்பழிப்புகளும் ஜோதிபாசுவின் வக்காலத்தும்!


Thozhilalar Paathai 52 (File no 427)
October 1992

-அகிலன்

ஸ்டாலினிச சிபிஐ (எம்) ஜோதிபாசுவின் முதலாளித்துவ அரசு எந்திரத்தின் போலீசார், செப்டம்பர் 23ம் தேதியன்று கிழக்கு கல்கத்தாவிலுள்ள புல்பகான் போலீஸ் நிலையத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

 
பத்மினிகளும் நெஹார் பானுக்களும்

அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் தன் கணவர் எதிரிலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பத்மினிக்கு நீதி கேட்டு குரல் கொடுப்பதாக பாசாங்கு செய்து வரும் சிபிஐ (எம்) கட்சியும், அதன் மாதல் சங்கங்களும், இளைஞர் அமைப்பும் (DYFI) சரி அனைத்துமே முதலாளித்துவ அரசு எந்திரங்களுள் ஒன்றான போலீசைப் பாதுகாத்து கொண்டு, சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று பிரமைகளை உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் திணித்து வருவதை நாம் ஏற்கனவே பலமுறை அம்பலப்படுத்தி இருக்கிறோம்.

ஆனால் கல்கத்தாவில் நெஹார்பானு போலீசாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு குரல் கொடுக்க சிபிஐ (எம்) மாதர் சங்கம், இளைஞர் சங்கம் உட்பட ஒருவர் கூட மூச்சை விடவில்லை. அதோடு மட்டுமல்ல இது சம்பந்தமாக பத்திரிகையாளர் ஒருவர், “இம்மாதிரி (ஹொர்பானு போன்ற நடைபாதைவாசி) பொண்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கியிருக்கிறதா" எனக் கேட்டதற்கு சிபிஐ (எம்) தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான ஜோதிபாசு "(நகரின்) நடைபாதைகளில் வசிக்கும் அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய முடியாது" - ஸ்டேட்ஸ்மென் 24 செப்டம்பர் - என்று வெளிப்படையாக அறிவத்ததன் மூலம் உழைக்கும் மக்களுக்கு மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை உத்தரவாதம் செய்திருக்கிறார்.

புல்பகான் போலீஸ் நிலையத்தில் கற்பழிப்புகளும்

24 பன்கானாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட நெஹார்பானு கை ரிக்ஷா இழுக்கும் கணவனால் கைவிடப்பட்ட நிலையில், வீட்டு வேலைச் செய்து தனது 7 வயது மகனையும் 10 வயது மகளையும் காப்பாற்றி வருகிறார்.

செப் 23ம் தேதி நள்ளிரவு இரண்டு மணிக்கு புல்பகான் போலீஸ் நிலைய கான்ஸ்டபிள் நீல்கமல் கோஷ், தூங்கிக் கொண்டிருந்த நெஹார் பானுவை எழுப்பி, வழக்கு சம்பந்தமாக அவள் தேவைப்படுவதாகவும், உடன் வருமாறும் அழைத்தான். தனது சக நடைபாதை வாசிப் பெண்ணின் வழக்கு சம்பந்தமாக அங்கு அவள் பலமுறை சென்றிருக்கிறார். இருப்பினும் முடிந்து போன அந்த வழக்குக்காக கான்ஸ்டபிள் கூப்பிட்டதும் நெஹார்பானுவுக்கு சந்தேகம் வந்து வர மறுத்திருக்கிறார்.

நீல்கமல் கோஷின் முயற்சி எடுபடாமல் போகவே, போலோநாத் எனும் கான்ஸ்டபிள் டிரைவரையும், சனாதன்முரு எனும் கான்ஸ்டபிளையும் அனுப்பி நெஹார் பானுவை அழைத்து வருமாறு கூறியிருக்கிறான். போலீஸ் வாகனத்தைக் கண்டதும் நெஹார் பானு அலறியிருக்கிறார். அப்படியும் அவரை விடாமல் பலாத்காரமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கு நீல்கமல் கோஷ் அவரை முதலில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு பிறகு அங்கு குடிபோதையுடன் இருந்த காளிபடாமுடு சாதன் பௌமிக், ரபிலோசன் மகதா ஆகி மூன்று கான்ஸ்டபிள்களும் நாசம் செய்துவிட்டு அதிகாலை 2 மணிக்கு மீண்டும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி வந்து நடைபாதையிலேயே அவளைத் தள்ளிவிட்டு போய் விட்டனர்.

விஷயம் வெளியில் அம்பலமாகியதும், நெஹார் பானுவை சமூக சேவை நிறுவனத்தையும் எதிர்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களையும் தடுத்தது ஸ்டாலினிஸ்ட் ஜோதிபாசுவின் போலீஸ். இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக மிரட்டியதுமே ஒரு மணி நேரம் கழித்து சந்திக்க அனுமதித்தனர். ஏற்கனவே சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ள தனது மகனுடன் தனக்கு நேர்ந்த கதியையும் எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கும் நெஹார் பானுவை போலீஸ் நிர்பந்தப்படுத்தி, அந்த போலீஸ் கிரிமினல்களை நிரபராதி என விடுவிப்பதற்கு அறிக்கை வாங்க முயற்சி செய்வதாகவும் தெரிகிறது. தொடக்கத்தில் டெபுடி கமிஷனர் ஆப் போலீஸ் பதவி வகிக்கும் அதிகாரி மருத்துவ பரிசோதனை சம்பந்தமாக முரண்பட்ட தகவல்களை அளித்திருக்கிறார். இதுவும் போலீஸின் சதி முயற்சியை ஊர்ஜிதப்படுத்துகிறது.

மேற்கு வங்க போலீஸ் கற்பழிப்புகள்

போலீஸ் துறையைத் தனது கையில் வைத்திருக்கும் ஸ்டாலினிஸ்ட் ஜோதிபாசு "இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக் கொண்டு முடிவுக்கு வர முடியாது" என்று கூறியுள்ளார். அத்துடன் மட்டுமல்லாமல், இந்த கற்பழிப்பு சம்பந்தமாக எந்தவித கருத்தும் கூறாமல், உயர் போலீஸ் அதிகாரி "உரிய நடவடிக்கை" எடுத்ததற்காக பாராட்டைத் தெரிவித்துள்ளார். ஸ்டாலினிச சிபிஐ யின் பாராளுமன்ற உறுப்பினர் கீதாமுகர்ஜி கூடுதல் DGP க்கு விடுத்த கடிதத்தில், மிட்னாப்பூரின் பிங்லா பகுதியைச் சேர்ந்த ஜாசோராஜ்பூர் கிராம ஆதிவாசிப் பெண்ணை, கிராமத் தலைவரின் மகனும் அவனது கூட்டாளியும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பின்னரும் போலீஸ் நடவடிக்கை எடுக்காததையும் அதே போல் இன்னொரு ஆதிவாசிப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவளது குடிசை அழிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

வலதுசாரி முதலாளித்துவ பங்காளராக சீரழியும் ஸ்டாலினிசம்

உழைக்கும் மக்களை ஒடுக்க போலீசை நவீனப்படுத்தி வரும் ஸ்டாலினிச ஜோதிபாசுவின் அறிக்கை ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சர்வதேச ரீதியாக ஸ்டாலினிசம் எதிர்ப்புரட்சி முகாமுக்கு போய்விட்டது என்றார் ட்ராட்ஸ்கி. இன்று சர்வதேச ரீதியாக ஸ்டாலினிஸ்டுகள் பண்பியல் ரீதியாக மாற்றம் அடைந்து ஏகாதிபத்தியத்தின் தரகு முதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதியாக மாறி விட்டனர்.

ஜோதிபாசு தனது மகனை முதலாளியாக்கி அரசு செலவின் லண்டன் சுற்றுப்பயணம் செய்து, நரசிம்மராவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதிநிதியாக NRI முதலாளிகளுக்கு இந்தியாவில் முதலீடு செய்யும்படியும், குறிப்பாக மேற்கு வங்கத்தில் சுரண்ட வரும்படியும், அதற்கு ஒத்துழைப்பு தருவதாகவும் சுவராஜ் பாட்டீலுக்கு அழைப்பு விடுத்தார். காங்கிரசின் வேட்பாளர் சர்மாவுக்கு ஆதரவளித்து முதலாளித்துவ அரசாங்கத்தைப் பாதுகாத்து வரும் ஸ்டாலினிச சிபிஐ (எம்) கட்சி பஞ்சாப், அசாம், காஷ்மீரில் இராணுவ அரச பயங்கரவாதத்திற்கு முழு ஆதரவு தருவதோடு தான் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராகத் திருப்பி வருகின்றது. அதன் ஒரு பகுதி தான் இந்த போலீசின் பாலியல் பலாத்காரங்கள்.

முதலாளித்துவ போலீஸ் இராணுவத்தை கலை

முதலாளித்துவ அரசு எந்திரங்களை நொறுக்காமல் பத்மினிக்களுக்கும், நெஹார் பானுகளுக்கும் விமோசனம் கிடையாது. தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சியின் மூலம் அல்லாமல் முதலாளித்துவ அரசு எந்திரங்களை நொறுக்க முடியாது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்க்காமல் சோசலிசப் புரட்சி சாத்தியமில்லை. அத்தகைய தலைமை நெருக்கடியை தீர்ப்பது, தொழிலாள வர்க்கத்துக்குள் டிராட்ஸ்கிச தலைமையைக் கட்டுவதிலும், ஸ்டாலினிச துரோகத் தலைமைகளை தொழிலாள வர்க்க இயக்கத்திலிருந்து உடனடியாக வெளியேற்றுவதிலுமே தங்கியிருக்கின்றது.

சோசலிச வேலைத்திட்டத்திற்கு போராடு!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் பின்வரும் வேலைத் திட்டத்தை முன் வைக்கிறது.

ஃ முதலாளித்துவ போலீஸ்-இராணுவத்தை கலை!

ஃ தொழிலாளர் பாதுகாப்பு படையணிகளைக் கட்டு!

ஃ பாலியல் பலாத்காரத்தை விசாரணை செய்வதற்கு தொழிலாளர்-இல்லத்துப் பெண்கள் ஆகியோர் கொண்ட மக்கள் விசாரணைக் குழுவை அமை!

ஃ முதலாளித்துவ அரசு எந்திரத்தைத் தூக்கிவீசி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ காலவரையற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு தயாராகு!

ஃ ஸ்டாலினிச, சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகளை தொழிலாள வர்க்க இயக்கத்திலிருந்து உடனடியாக வெளியேற்று!

ஃ சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டு!

Sunday, September 18, 2016

மதுரை கோட்ஸ் ஆலைத் தொழிலாளர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு! தொழிலாளர் பாதுகாப்பு குழுவை அமை!


Thozhilalar Paathai 52 (File no 427)
October 1992

சுந்தரம்

நெல்லை மாவட்டம் விக்கரமசிங்கபுரம் மதுரை கோட்ஸ் ஆலை தொழிலாளர்கள் ஆலை தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக போலீசாரால் சுடப்பட்டதை சோசலிசத் தொழிலாளர் கழகம் மிகவும் வன்மையாக கண்டனம் செய்வதோடு, தொழிலாளர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக தொழிலாளர் பாதுகாப்பு அணிகளை அமைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றது.

அக் 17ம் தேதி தங்களின் போனஸ் கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருந்த தொழிலாளர் மீது ஜெயலலிதா அரசாங்கத்தின் போலீஸ் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒரு பெண் உட்பட 4 பேர் காயமடைந்தனர். மதுரை கோட்ஸ் நிறுவனம் தமிழகத்தில் மதுரை, திருச்சி, விக்கிரமசிங்கபுரம் தூத்துக்குடியிலும் கேரளத்தில் கொரட்டியிலும் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளது. இந்த வருடம் கம்பெனிக்கு கொழுத்த லாபம் வந்தும் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நியாயமான போனஸை கொடுக்க மறுத்தது, இதன் காரணமாக தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். விக்கிரசிங்கபுரத்தில் உள்ள தொழிலாளர்களின் ஊர்வலத்தில் முதலாளித்துவ அரசு எந்திரம் தடியடி பிரயோகமும், துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் மதுரை கோட்ஸ் நிறுவனத்தின் - தொழிலாளர்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. மரண நெருக்கடியில் உள்ள இந்த முதலாளித்துவ அமைப்பில்-சந்தைக்கான உற்பத்தியில்-மலிந்த கூலிக்காகவும், கச்சாப் பொருட்களுக்காகவும் வெறி பிடித்த நாய் போல் அலைகின்றனர். இந்த நிலையில் ஒன்றை ஒன்று விழுங்கும் நிலையில் பன்னாட்டு பகாசுர கம்பனிகள் தொழிலாளர்களை கோரமாக சுரண்டவும், தொழிற்சங்க உரிமைக்கு வேட்டு வைக்கவும் முற்படுகின்றன. இதன் ஒரு பகுதியாகவே துப்பாக்கிச் சூட்டிற்கு பின் தொழிற்சங்க அலுவலத்தை திறப்பதற்கு போலீஸ் தடை செய்துள்ளது.

ஸ்டாலினிச கட்சிகள்

இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்படும் மக்களிடமிருந்து எந்த ஆபத்தும் வராமல், சந்தர்ப்பவாத அடிப்படையில் மாறி மாறி முதலாளித்துவ கட்சிகளை ஆதரித்துக் கொண்டு இருக்கும் ஸ்டாலினிச கட்சிகளும் அதன் தொழிற்சங்க பிரிவுகளான CITU, AITUC யும் தொழிலாள வர்க்க இயக்கத்தில் இருந்து கொண்டு, எந்த ஒரு போராட்டத்தையு் துரோகத்தனமாக காட்டிக் கொடுத்து தொழிலாள வர்க்கத்தை சோர்வடைய செய்து நிராயுதபாணியாக்கி வருகின்றார்கள். இந்த துப்பாக்கி சூட்டிற்காக 22ம் தேதியன்று தமிழகம் முழுவதுமுள்ள ஆலை வாயில்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறுவது தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் போராட்டத்தில் தன் பிடியை விட்டு நழுவி போய் விடாமல் இருக்கவே ஆகும். (.ம்) நரசிம்மராவின், ஜெயலலிதாவின் அரசுகள் கொண்டு வந்த புதிய பொருளாதார கொள்கையை எதிர்த்து நாடு பரந்த அளவில் ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்த ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்துடன் முடிந்தது. முதலாளித்துவ அரச எந்திரத்தின் ஒரு பகுதியான போலீசை, “திருத்தி அமைக்க வேண்டும்" என்றும் "கடிவாளத்தை மீறிய குதிரையாக" போலீஸ் இருக்கின்றது என்று கூறும் இந்த கட்சி தலைமைகள் இவர்கள் ஆளுகின்ற மேற்கு வங்கத்தில் நடக்கும் போலீஸ் அராஜகத்திற்கு என்ன கூறுவார்கள்.

முதலாளித்துவ சொத்துடமையை தனியுடைமையை காப்பாற்றும் ஆயுதம் தாங்கிய பிரிவாகிய போலீசை ஸ்டாலினிச தலைமைகள் போலீஸ் துறை என்றும் அதை சீரமைக்க வேண்டும் என்றும் கூறுவது அரசாங்கத்தின் மற்ற துறைகளை போல் இதுவும் ஒரு துறை என்ற பிரமையை தொழிலாளர்களிடையே ஊட்டுவதற்காகும். தொழிலாளர்களை ஒடுக்கும் முதலாளித்துவத்தின் அரசு இயந்திரத்தை சீர்திருத்த முடியும் என்று எதிர்புரட்சிகர ஸ்டாலினிச தலைமைகள் பரப்பும் பிரமையை நிராகரிக்க வேண்டும். தொழிலாளர்களின் சொந்த பாதுகாப்பு அணிகளை கட்ட வேண்டும். முதலாளித்துவ அரசு இயந்திரத்தை தொழிலாள வர்க்க பலத்தினால் உடைத்தெறிந்து மாற்று புரட்சித் தலைமையை கட்டும் போராட்டத்துடன் இது பின்னி பிணைந்ததாகும்.

Saturday, September 17, 2016

இந்திய சோசலிசத் தொழிலாளர் கழக அங்கத்தவர் மோசஸ் ராஜ்குமாரை நிபந்தனையின்றி மீண்டும் சேவையில் அமர்த்து!


Thozhilalar Paathai 427
December 1992

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியலுக்காக இந்தியாவினுள் போராடி வரும் ட்ரொட்ஸ்கிச இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் அங்கத்தவர் தோழர் மோசஸ் ராஜ்குமாருக்கு எதிராக பகிங்ஹாம், கர்நாடக ஆலை (B&C மில்) நிர்வாகம் ஒடுக்குமுறைத் தாக்குதலைத் தொடுத்துள்ளது.


1992 நவம்பர் 1ம் திகதியில் இருந்து தோழர். மோசஸ் ஒரு கிழமைக்கு வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அத்தோடு அவருக்கு எதிரான குற்றச்சாட்டின் பேரில் எதுவிதமான நஷ்டஈடும் இல்லாமல் வேலையில் இருந்து ஏன் நீக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்டும்படியும் அவர் கோரப்பட்டுள்ளார்.

1991 நவம்பரில் பேர்ளினில் கூடிய உலக தொழிலாளர் மாநாட்டினதும் சர்வதேச தொழிலாளர் பாதுகாப்பு சபையினதும் அங்கத்தவருமான மோசசுக்கு எதிராக நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை எனவும் அவற்றை நிராகரிப்பதாகவும் மோசஸ் குறிப்பிட்டுள்ளார். ஆதலால் இக்குற்றச்சாட்டுக்களை உடன் வாபஸ் பெறும்படியும் தம்மைத் திரும்பவும் சேவையில் அமர்த்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மோசஸ் ராஜ்குமாரால் தாக்கப்பட்டதாக நிர்வாகம் குறிப்பிடும் வெங்கடரமணி அதிகாரி தொழிலாளர் விரோத நடவடிக்கைகளால் தொழிலாளரின் வெறுப்புக்கு ஆளானவர். இவர் இன்று பணிபுரியும் பகுதிக்கு இடமாற்றமாகி வந்ததற்குக் காரணம் முன்னைய பிரிவின் தொழிலாளர்களின் எதிர்ப்பேயாகும். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த அதிகாரி, ஒரு தொழிலாளியையும் கமிட்டி அங்கத்தவர் ஒருவரையும் தாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிகாரியின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தும் விதத்திலும், நிர்வாகத்தின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் விதத்திலும் சோசலிசத் தொழிலாளர் கழகத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் கூறுவதாவது: “தறியில் வேலை செய்வதற்குப் போதுமான கண்டைகளை தொழிலாளர்களுக்கு வழங்குவதில் உதாசீனப் போக்கை கடைப்பிடிக்கும் மில் நிர்வாகம், அவற்றை மேற்பார்வையிடுவதற்கு தொழிலாளர்களை விட பன்மடங்கு சம்பளம் கொடுத்து அதிகாரிகளை நியமித்துள்ளது. அவ்வாறான அதிகாரிகளில் ஒருவரான வெங்கடரமணி கண்டைகள் இல்லாது பல தறிகள் ஆடாமல் நின்று போய் விட்ட நிலைமையிலும் கஷ்டப்பட்டு தறிகளை 8 மணிவரை ஆட வைத்த மோசஸ் ராஜ்குமாரிடம் மரியாதைக் குறைவாக பேசியது மட்டுமல்லாமல் 'பிரிப்பரேசன்' பகுதியில் போய் கண்டைகளை எடுத்து வரும்படி கூறினார்.”

B&C ஆலை ட்ரொட்ஸ்கிச தொழிலாளர் அணியின் செயலாளரான மோசஸ் ராஜ்குமாருக்கு எதிரான இச்சதியின் பின்னணியை விபரிக்கையில் சோ.தொ.. கூறுவதாவது: “மோசஸ் ராஜ்குமார் மீது எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பழிவாங்கல் நடவடிக்கையானது தொழிலாளர்கள் மேல் வேலைப் பழுவை அதிகரிக்கச் செய்தும், புவனகிரிக்கு மில்லின் முக்கியமான பகுதியை மாற்றியும், ஆயிரக் கணக்கில் ஆட்குறைப்புச் செய்தும், போனசை 8.33 சதவீதமாக குறைத்தும், கொள்ளை இலாபம் சம்பாதிக்கும்" திட்டமாகும். இத்திட்டத்தினை தோற்கடிக்கக் கிளர்ந்து வரும் தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் சதியின் ஒரு பாகமாகவே ட்ரொட்ஸ்கிசப் போராளி மோசஸ் ராஜ்குமாருக்கு எதிரான இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என சோ.தொ.. சுட்டிக் காட்டியுள்ளது.

இந்திய மத்திய பிரதேச பிகையில் தொழிற் சங்கத் தலைவர் சங்கர் குகாநியோகியின் படுகொலை, உத்தர பிரதேச டால்மியா சீமெந்து நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்களுக்கு எதிரான பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் (17 பேர் பலி) ஆகியவற்றின் ஒரு பாகமாகவே மோசசுக்கு எதிரான இவ் வேட்டை இடம் பெற்றுள்ளது.

தோழர். மோசஸ் ராஜ்குமாருக்கு எதிரான இந்த வேலை இடைநிறுத்தத்தினை இரத்துச் செய்யும் படியும் அவரை எதுவித நிபந்தனையின்றி மீண்டும் சேவையில் அமர்த்தும் படியும் இலங்கை தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்கள் கோர வேண்டும் எனவும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வேண்டுகின்றது.

Sunday, September 4, 2016

முழு வர்க்க பலத்தையும் அணிதிரட்டி 30ம் தேதி பந்தை நாடு தழுவிய கால வரையற்ற பொதுவேலை நிறுத்தமாக்கு!


Thozhilalar Paathai Volume 24
July 1989


    * சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகளை முதலாளித்துவ கட்சிகளுடனான உறவை முறித்துக் கொண்டு சோசலிச வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை அமைக்கப் போராடும்படி நிர்பந்தி!

    *
    சோவியத்துக்களை ஆட்சியமைப்புகளாக அமைக்கப் போராடு!
    ஸ்டாலினிச மார்க்சிசக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் தொழிற்சங்க மையங்களும் விடுத்துள்ள ஆகஸ்ட் 30ம் தேதி அகில இந்திய பந்தில் முழுத் தொழிற்சங்க இயக்கமும் மற்றும் தொழிலாள வர்க்க இயக்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் முழு வர்க்க பலத்தை அணிதிரட்டிப் பங்கு கொள்ளுவதோடு அதனைக் காலவரையற்ற அகில இந்திய பொதுவேலை நிறுத்தமாக மாற்றி, ராஜீவ்காந்தி அரசாங்கத்தை மட்டுமல்லாது முழு முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியையும் அதன் ஏனைய பிரதிநிதிகளின் ஆட்சியையும் வெளியேற்றுமாறு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட இந்தியாவில் உள்ள டிராட்ஸ்கிச இயக்கமாகிய சோசலிசத் தொழிலாளர் கழகம் அழைக்கிறது.

முதலாளித்துவ வர்க்கத்தின் நாற்றமெடுக்கும் அரைப் பிணத்திலிருந்து அதன் அரசு அதன் அரசியல் கட்சிகளில் இருந்து தன்னைக் துண்டித்து ஒரு சுதந்திரமான வர்க்கமாக தனது வர்க்க சர்வாதிகாரத்தை பல கோடி விவசாயிகளுடன் கூட்டமைத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதாகும். அதாவது தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை அமைக்கப் போராடுவதாகும்.




முதலாளித்துவம் உண்டாக்கும் இன்னல்கள், மனிதச் சீரழிவு, ஒடுக்குமுறை என்பனவற்றிற்குஉ எதிராக வளர்ந்து உக்கிரம் அடைந்து வரும் தொழிலாள வர்க்கத்தினதும், ஏழை விவசாயிகளினதும் மற்றும் ஒடுக்கப்படும் பரந்த மக்களினதும் புரட்சிகர எழுச்சியைப் பயன்படுத்தி ஆட்சியில் உள்ள டாட்டாக்கள், பிர்லாக்களின் ஒரு பிரதிநிதிக்குழுவை அகற்றி அதன் இடத்தில் டாட்டாக்கள் பிர்லாக்களின் பிரதிநிதிகளின் மற்றொரு குழுவை 1977ம் ஆண்டில் போல ஆட்சி பீடத்தில் ஏற்றுவதல்ல தொழிலாள வர்க்கத்தின் பணி. அதாவது ஆட்சியில் இருந்து ராஜீவ்காந்தியையும் அவரது இந்திரா காங்கிரசையும் அகற்றி, அவர்களின் இடத்தில் ஆட்சியில் வி.பி. சிங்குகள், தேவிலால்கள், ராமராவ்கள், கருணாநிதிகள் கூட்டை ஏற்றி தொழிலாள வர்க்கத்திற்கும், ஏழை விவசாயிகளுக்கும், ஒடுக்கப்படும் பரந்த மக்களுக்கும் எதிராக முதலாளித்துவ போலீஸ், ராணுவத் தாக்குதல்களையும், கதவடைப்புகளையும், சீரழிவுகளையும் அவர்கள் மேலும் திறம்பட கட்டவிழ்த்துவிடப் போராடுவது அல்ல தொழிலாள வர்க்கத்தின் பணி

இந்தியாவில் உள்ள தொழிலாளர்களின் வர்க்கப்பணி அவர்கள் கோடானுகோடி பலம் படைத்த சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் படைகளுடன் சர்வதேச ஐக்கியத்தை இறுக்கமாக உருவாக்கி, ஸ்டாலினிச சிபிஎம், சிபிஐ தலைமைகளை அவை முதலாளித்துவக் கட்சிகளுடன் அமைத்திருக்கும் கூட்டை உடைத்து, ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் அமைக்க ஆகஸ்ட் 30ம் தேதி பந்தை, காலவரையற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தமாக மாற்றும்படி நிர்பந்திக்க வேண்டும். அந்த அரசாங்கம் முதலாளித்துவ உடைமையாளர்களுக்கு நஷ்டஈடின்றி அனைத்து ஆலைகளையும் வங்கிகளையும், நிலங்களையும், தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் தேசியமயமாக்கும். அனைத்து ஏகாதிபத்திய வங்கிக்கடன்களையும் ரத்துச் செய்யும், தமிழ் ஈழம் நாகலாந்து, மணிப்பூர் போன்ற ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை நடைமுறையில் உறுதிப்படுத்தும், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளைத் தமிழ் ஈழத்திலிருந்தும், மாலத்தீவிலிருந்தும் நிபந்தனையின்றி உடனடியாக வாபஸ் பெறுவதுடன் ஏகாதிபத்தியம் தீட்டிய இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ரத்துச் செய்யும் நாட்டுப்புறக் கடன்கள் அத்தனையையும் தள்ளுபடி செய்யும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நியாய விலை வழங்கும், உழுபவனுக்கு நிலத்தை வழங்கும், உபகண்டரீதியாக நதிகளை இணைக்கும் நீர்பாசனத் திட்டத்தை ஆரம்பித்து வெள்ளங்களுக்கும், வறட்சிகளுக்கும் முடிவு கட்டும், அனைத்து மொழி, மற்றும் சிறுபான்மையினரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும், முதலாளித்துவ அரச எந்திரத்தின் போலீஸ் மற்றும் ஆயுதப்படைகள் அனைத்தையும் கலைத்து அவற்றின் இடத்தில் தொழிலாளர்கள், விவசாயிகளின் சோவியத்துகளின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளர் விவசாயிகளின் படைகளை அமைக்கும். 1947ல் ஏகாதிபத்தியம் செய்த இந்திய உபகண்ட கூறுபோடலைத் தகர்த்து உலக சோசலிசக் குடியரசுகளின் ஒரு பகுதியாக இந்திய உபகண்டத்தின் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை அமைக்கும்.

ராஜீவ்காந்தி அரசாங்கத்தை வெளியேற்று!” என்ற முழக்கத்தை ஸ்டாலினிச சிபிஎம், சிபிஐ தலைவர்கள் அகில இந்திய பந்தின் முழக்கமாகவும், இலக்காகவும் ஆக்கியுள்ளளார்கள். ராஜீவ் காந்தி அரசாங்கத்தை வெளியேற்றத் தொடுக்கும் போராட்டத்துடன் அதற்கான மாற்று ஒன்றைக் கட்டும் பணியைப் பிரிக்க முடியாது என்று கூறிய நம்பூதிரிபாட்டுகள் "இடதுசாரி ஜனநாயக மதசார்பற்ற கட்சிகளின் அரசாங்கத்திற்கான" அவர்களின் முயற்சிகளையும் முடுக்கி விட்டுள்ளார்கள்.

இது இன்று வேறு எதுவும் அல்ல ஆனால் வி.பி.சிங்குகள், தேவிலால்கள், ராமராவ்கள், கருணாநிதிகள் மற்றும் ஸ்டாலினிச சிபிஎம், சிபை யின் அரசாங்கத்திற்கு ஸ்டாலினிஸ்டுகள் ஒட்டியுள்ள மற்றுமொரு லேபிளாகும்.

ஸ்டாலினிஸ்டுகளின் அரசியல் ஆதரவுடன் முதலாளித்துவ "தேசிய முன்னணி" கட்சிகளின் அரசாங்கம் ஆயினும் சரி அல்லது இந்த முதலாளித்துவக் கட்சிகளினதும், ஸ்டாலினிசக் கட்சிகளினதும் கூட்டு அரசாங்கம் என்றாலும் சரி அது ஒன்றில் 1977ல் ஆட்சி ஏறிய வலதுசாரி ஜனதா அரசாங்கம் போன்றோ அல்லது இன்று மேற்கு வங்கத்தில் ஊழல் புரையோடி போலீஸ் அடக்குமுறை தலைவிரித்தாடும், மண்ணெண்ணைக்காக காத்து நிற்கும் மக்களின் நீண்ட வரிசைகள் நிறைந்து, நூற்றுக் கணக்காக கதவடைப்புகள் பெருகி கொண்டிருக்கும் மாநில ஆட்சி போன்றதோ மத்தியில் வரும்.

இந்தியாவில் ஸ்டாலினிச கம்யூனிச கட்சி தலைமைகள் 1942ல் சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்ததற்காக ஆகஸ்ட் கருங்காலிகள் என்று அவப்பெயர் எடுக்கும் முன்பாகவும், மீண்டும் 1947ல் இந்திய உபகண்டம் முழுவதும் திரண்டெழுந்த தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அலையை முறியடிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இந்திய முதலாளித்துவமும் வகுப்புவாத ரீதியில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த ஏற்படுத்திய பிரிவினைக்கு ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைகள் ஆதரவளித்ததற்கு முன்பாகவே இந்தியப்புரட்சிக்கு ஸ்டாலினிஸ்டுகளால் ஏற்படும் அபாயத்தைப் பற்றி நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான லியோன் டிராட்ஸ்கி இந்திய தொழிலாளர்களுக்கு 1939ல் எழுதிய பகிரங்க கடிதத்தில் பின்வருமாறு எச்சரித்தார்.

பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான கூட்டில் தலைமை தவர்க்க முடியாதபடி வலதுசாரிகளின் கைகளுக்கு செல்கிறது. அதாவது சொத்துள்ள வர்க்கங்களின் கைகளுக்குள்… முதலாளித்துவ வர்க்கத்துடனான கூட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் கைவிட வழிவகுக்கும். கூட்டுக்கொள்கை அர்த்தப்படுத்துவது நேரத்தை கணிப்பதும், காலம் கடத்துவதும், பொய்யான எண்ணங்களை உண்டு பண்ணுவதும், நேர்மை அற்ற திட்டங்களும், சதிகளும் ஆகும். இந்தக் கொள்கையின் விளைவாக, தொழிலாள மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாதபடி விரக்தி ஏற்படுகிறது. அதேசமயம் விவசாயிகள் தொழிலாளர்களுக்கு புறமுதுகு காட்டியவாறு சோர்வடைகின்றனர். ஜெர்மன் புரட்சி, ஆஸ்திரியப் புரட்சி, சீனப் புரட்சி, ஸ்பானிய புரட்சி அனைத்துமே கூட்டுக் கொள்கையின் விளைவாக நாசமாகின. அதை ஒத்த அபாயம் இந்தியப் புரட்சியை அச்சுறுத்துகிறது. அங்கே ஸ்டாலினிசவாதிகள் "மக்கள் முன்னணி" என்ற போர்வையின் கீழ் பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு கீழ்ப்படுத்தும் கொள்கையை முன்வைக்கின்றனர். செயலில் இது அர்த்தப்படுத்துவது புரட்சிகர விவசாய வேலைத்திட்டத்தை நிராகரிப்பதும், தொழிலாளர்களை ஆயுதபாணியாக்க மறுப்பதும், ஆட்சிக்கான போராட்டத்தை நிராகரிப்பதும், புரட்சியை நிராகரிப்பதும் ஆகும்". இன்று சர்வதேச சந்தையில் பிரதான ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளுக்கு (அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா) இடையில் நடக்கும் போட்டியும், தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி அனைத்துமே இன்று உலக அளவில் போருக்கான நிலைமைகளையும், ஆலைமூடல்களையும், ஆட்குறைப்புகள், சம்பள வெட்டுகள், தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படல், விலைவாசியேற்றம் போன்றவற்றை ஏற்படுத்தி வருகின்றன.

இவ்வாறு இருக்கையில் வேலை செய்யும் உரிமையை இந்த முதலாளித்துவ அரசியலமைப்பினுள் அடிப்படை உரிமையாக்குவதன் மூலமாக முதலாளித்துவ பொருளாதார விதிகளினால் ஏற்படும் வேலை அழிப்புகளை தடுக்க முடியும் என்றும் புதிய வேலைவாய்ப்புகள் வழங்க முடியுமென்றும் முதலாளித்துவ தேசிய முன்னணியின் தலைவரான வி.பி.சிங் உடன் இணைந்த "மார்க்சிய" நம்பூதிரிபாட்டுகள் குரல் எழுப்பி பித்தலாட்டம் செய்கின்றனர். உண்மையில் இவர்கள் வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று பேசுகையில், இன்று கூர்மை அடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போது கருங்காலிகள் தமது "வேலை செய்யும் அடிப்படை உரிமையை" பேணி வேலைநிறுத்தப் போராட்டங்களை உடைப்பதற்கே நாசுக்காக வழி செய்கின்றனர். ஒருபுறம் "நாட்டைக் காப்பதே தேசிய முன்னணியின் புது லட்சியம்" என்று வி.பி. சிங்கும், “எதிர் கட்சிகளை ஓரணியில் திரட்ட வேண்டுமாயின் நாட்டைக் காக்க வேண்டும் என்ற பிரச்சினையைத் தவிர வேறு எந்த பிரச்சினையையும் முன் வைக்க முடியாது என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் வாஜ்பேயி மறுபுறமும், இன்னொரு புறம் எதிர்கட்சிகள் பிரிவினைவாத வகுப்புவாத பழமைவாத சக்திகளை ஆதரிக்கும் தேசத் துரோகிகள்" என்று ராஜீவ் காந்தியும் முழக்கமிடுகையில் தேசப்பற்றிலும் தேசிய ஒற்றுமையிலும் தாம் எவ்வையிலும் முதலாளித்துவ கட்சிகளுக்கு இளைத்தவர்கள் அல்ல என்று கூறியவாறு தேச ஒற்றுமையை பேண நாம் இரத்த தியாகம் செய்யத் தயாரென்று போட்டி போட்டுக் கொண்டு சிபிஎம், சிபிஐ தலைமைகளும் அவற்றின் இளைஞர் அமைப்பு தலைமைகளும் பிற்போக்கு தேசிய வெறியை நாளாந்தம் வாந்தி எடுத்து வருகின்றன.

கம்யூனிஸ்டுகள் தாய் நாட்டையும் தேசியத் தன்மையையும் இல்லாதொழிக்க விரும்புகின்றனர்" என்று முதலாளித்துவ வர்க்கம் குற்றம் சாட்டிய போது அதற்கு கம்யூனிச மூலவர்களான மார்க்சும் ஏங்கெல்சும் அளித்த பதில்: “தொழிலாளர்களுக்கு தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடமிருந்து பிடுங்குவது முடியாத காரியம். பாட்டாளி வர்க்கம் யாவற்றுக்கும் முதலாய் அரசியல் மேலாண்மை பெற்றாக வேண்டும். தேசத்தின் தலைமையான வர்க்கமாய் உயர்ந்தாக வேண்டும். தன்னையே தேசமாக்கிக் கொள்ள வேண்டும்" (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மாஸ்கோ பதிப்பு பக்கம் 74) என்பதாகும்.

வர்க்கப் பகைமையுள்ள தேசத்தில் முதலாளித்துவ வர்க்கம் பொதுவாக 'தேசம்' என்று பேசுகையில் அவர்கள் கருத்தில் கொண்டு பேசுவது தமது சுரண்டல் நிறைந்த தேசத்தை பற்றியும் தமது வர்க்க நலன்களை காப்பது பற்றியுமாகும். இந்த தேசத்தை காக்கும் கோரசில் ஸ்டாலினிச சிபிஎம், சிபிஐ மற்றும் மாவோவாத தலைமைகளும் சேர்ந்தது தற்செயலானது அல்ல. 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற பிற்போக்கு கொள்கையுடன் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தினால் சோவியத் யூனியனில் முன்னெடுக்கப்பட்ட மார்க்சிய விரோத நிலைப்பாடு, உலகப் பாட்டாளி வர்க்கத்தை காட்டிக் கொடுத்தது மட்டுமின்றி அக்டோபர் புரட்சியின் வெற்றிகளையும் அழிக்கும் முயற்சியில் முதலாளித்துவ சந்தை பொருளாதாரத்தின் "மேன்மையை" பற்றி புகழ்பாடி சோவியத் யூனியன், சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையையும் முதலாளித்துவ தனிச்சொத்துடமையையும் மீண்டும் கொண்டு வர "அயராது உழைக்கின்றனர்.”

இதற்கேற்றாற்போல் சர்வதேச ரீதியாக ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைகள், சோசலிச வேலைத்திட்டங்களுக்காக போராடுவது இன்றைய யதார்த்த மல்ல, பதிலாக திவாலடைந்த முதலாளித்துவ அமைப்பு முறையினால் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகளுக்கு தொழிலாளர்களை பலியாக்குவது மட்டுமே சாத்தியமானது என்று அவர்களது நடைமுறை கொள்கையில் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

இந்த துரோக ஸ்டாலினிச தலைமைகளுக்கும் ஏனைய தொழிலாள வர்க்க துரோகத் தலைமைகளுக்கும் எதிராக தொழிலாளர்களை சர்வதேச ரீதியாக மார்க்ஸ், ஏஞ்கெல்ஸ், லெனின், டிராட்ஸ்கி காட்டிய வழியில் ஒரு சர்வதேச புரட்சி கட்சியின் தலைமையின் கீழ் அணிதிரட்டி ஏகாதிபத்தியத்தையும் அதன் தேசிய முதலாளித்துவ, ஸ்டாலினிச, சமூக ஜனநாயகவாத, பப்லோவாத ஏஜண்டுகளையும் தூக்கி வீசி ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை அமைக்க போராடி வருவது உலக டிராட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மட்டுமே.

1947ல் இந்திய உபகண்டத்தில் திணிக்கப்பட்ட வகுப்புவாத அரசு அமைப்புமுறையை தூக்கிவீசி, மீண்டும் இந்திய உபகண்ட தொழிலாளர்களை பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில் ஒன்று திரட்டவும், உலக சோசலிச புரட்சியின் ஒரு பகுதியாக இந்திய உபகண்டத்தில் ஐக்கிய சோசலிச குடியரசுகள் அமைக்கவும், டிராட்ஸ்கியின் நிரந்தப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் சோசலிசத் தொழிலாளர் கழகம் போராடி வருகிறது.

தொழிலாள வர்க்கம் அதன் அடிப்படை உரிமைகளைப் பேண முதலாளித்துவ வர்க்கத்தில் இருந்து முழுமையான சுதந்திரத்துடனும் அதற்கு எதிராகவும் போராட வேண்டும். ஆனால் இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியில் தொழிலாள வர்க்க இயக்கத்தில் உள்ள ஸ்டாலினிசத் தலைமைகளோ, தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அணிதிரட்டலை விடுத்து, முதலாளித்துவத்துடன் அதனை முடிச்சுப் போடும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

மூன்றாம் அகிலத்தில் அப்போது தலைமையிலிருந்த ஸ்டாலினிச அதிகாரத்துவம் தொடங்கி வைத்த இந்த போக்கைப் பற்றி, நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான டிராட்ஸ்கி இடைமருவு வேலைத்திட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “அகிலமானது: (ஸ்டாலினிச அதிகாரத்துவத் தலைமையின் கீழ் மூன்றாம் அகிலம்) சீரழிந்து செல்லும் முதலாளித்துவ சகாப்தத்தில் சமூக ஜனநாயகத்தின் பாதையை பின்பற்றத் தொடங்கியுள்ளது. ஆனால் பொதுவாக, அங்கே வரிசைக்கிரமமான சமூக சீர்திருத்தங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை, பாட்டாளி வர்க்கத்தின் ஒவ்வொரு முக்கிய கோரிக்கையும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு முக்கிய கோரிக்கையும் தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவ சொத்து உறவுகளின் மற்றும் முதலாளித்துவ அரசின் எல்லைகளுக்கு அப்பால் செல்கிறது!


நான்காம் அகிலத்தின் தொலைநோக்கு பணி முதலாளித்துவத்தை சீர்திருத்துவதில் அல்ல. அதைத் தூக்கி வீசுவதிலேயே உள்ளது. அதனுடைய அரசியல் நோக்கம் முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து அபகரிப்பதற்காக பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்துவது ஆகும்" (இடைமருவு வேலைத்திட்டம், 1938 பக்கம் 4, லேபர் பப்ளிகேஷன்ஸ்) எனவே வர்க்க நனவுள்ள தொழிலாளர்களே! ஏழை இளைஞர்களே! விவசாயிகளே! மார்க்சிசத்திற்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் சோசலிசப் புரட்சியின் உலக கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தில் இணையுமாறு உங்கள் ஒவ்வொரு வரையும் அழைக்கிறோம்.