"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Sunday, September 18, 2016

மதுரை கோட்ஸ் ஆலைத் தொழிலாளர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு! தொழிலாளர் பாதுகாப்பு குழுவை அமை!


Thozhilalar Paathai 52 (File no 427)
October 1992

சுந்தரம்

நெல்லை மாவட்டம் விக்கரமசிங்கபுரம் மதுரை கோட்ஸ் ஆலை தொழிலாளர்கள் ஆலை தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக போலீசாரால் சுடப்பட்டதை சோசலிசத் தொழிலாளர் கழகம் மிகவும் வன்மையாக கண்டனம் செய்வதோடு, தொழிலாளர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக தொழிலாளர் பாதுகாப்பு அணிகளை அமைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றது.

அக் 17ம் தேதி தங்களின் போனஸ் கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருந்த தொழிலாளர் மீது ஜெயலலிதா அரசாங்கத்தின் போலீஸ் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒரு பெண் உட்பட 4 பேர் காயமடைந்தனர். மதுரை கோட்ஸ் நிறுவனம் தமிழகத்தில் மதுரை, திருச்சி, விக்கிரமசிங்கபுரம் தூத்துக்குடியிலும் கேரளத்தில் கொரட்டியிலும் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளது. இந்த வருடம் கம்பெனிக்கு கொழுத்த லாபம் வந்தும் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நியாயமான போனஸை கொடுக்க மறுத்தது, இதன் காரணமாக தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். விக்கிரசிங்கபுரத்தில் உள்ள தொழிலாளர்களின் ஊர்வலத்தில் முதலாளித்துவ அரசு எந்திரம் தடியடி பிரயோகமும், துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் மதுரை கோட்ஸ் நிறுவனத்தின் - தொழிலாளர்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. மரண நெருக்கடியில் உள்ள இந்த முதலாளித்துவ அமைப்பில்-சந்தைக்கான உற்பத்தியில்-மலிந்த கூலிக்காகவும், கச்சாப் பொருட்களுக்காகவும் வெறி பிடித்த நாய் போல் அலைகின்றனர். இந்த நிலையில் ஒன்றை ஒன்று விழுங்கும் நிலையில் பன்னாட்டு பகாசுர கம்பனிகள் தொழிலாளர்களை கோரமாக சுரண்டவும், தொழிற்சங்க உரிமைக்கு வேட்டு வைக்கவும் முற்படுகின்றன. இதன் ஒரு பகுதியாகவே துப்பாக்கிச் சூட்டிற்கு பின் தொழிற்சங்க அலுவலத்தை திறப்பதற்கு போலீஸ் தடை செய்துள்ளது.

ஸ்டாலினிச கட்சிகள்

இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்படும் மக்களிடமிருந்து எந்த ஆபத்தும் வராமல், சந்தர்ப்பவாத அடிப்படையில் மாறி மாறி முதலாளித்துவ கட்சிகளை ஆதரித்துக் கொண்டு இருக்கும் ஸ்டாலினிச கட்சிகளும் அதன் தொழிற்சங்க பிரிவுகளான CITU, AITUC யும் தொழிலாள வர்க்க இயக்கத்தில் இருந்து கொண்டு, எந்த ஒரு போராட்டத்தையு் துரோகத்தனமாக காட்டிக் கொடுத்து தொழிலாள வர்க்கத்தை சோர்வடைய செய்து நிராயுதபாணியாக்கி வருகின்றார்கள். இந்த துப்பாக்கி சூட்டிற்காக 22ம் தேதியன்று தமிழகம் முழுவதுமுள்ள ஆலை வாயில்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறுவது தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் போராட்டத்தில் தன் பிடியை விட்டு நழுவி போய் விடாமல் இருக்கவே ஆகும். (.ம்) நரசிம்மராவின், ஜெயலலிதாவின் அரசுகள் கொண்டு வந்த புதிய பொருளாதார கொள்கையை எதிர்த்து நாடு பரந்த அளவில் ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்த ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்துடன் முடிந்தது. முதலாளித்துவ அரச எந்திரத்தின் ஒரு பகுதியான போலீசை, “திருத்தி அமைக்க வேண்டும்" என்றும் "கடிவாளத்தை மீறிய குதிரையாக" போலீஸ் இருக்கின்றது என்று கூறும் இந்த கட்சி தலைமைகள் இவர்கள் ஆளுகின்ற மேற்கு வங்கத்தில் நடக்கும் போலீஸ் அராஜகத்திற்கு என்ன கூறுவார்கள்.

முதலாளித்துவ சொத்துடமையை தனியுடைமையை காப்பாற்றும் ஆயுதம் தாங்கிய பிரிவாகிய போலீசை ஸ்டாலினிச தலைமைகள் போலீஸ் துறை என்றும் அதை சீரமைக்க வேண்டும் என்றும் கூறுவது அரசாங்கத்தின் மற்ற துறைகளை போல் இதுவும் ஒரு துறை என்ற பிரமையை தொழிலாளர்களிடையே ஊட்டுவதற்காகும். தொழிலாளர்களை ஒடுக்கும் முதலாளித்துவத்தின் அரசு இயந்திரத்தை சீர்திருத்த முடியும் என்று எதிர்புரட்சிகர ஸ்டாலினிச தலைமைகள் பரப்பும் பிரமையை நிராகரிக்க வேண்டும். தொழிலாளர்களின் சொந்த பாதுகாப்பு அணிகளை கட்ட வேண்டும். முதலாளித்துவ அரசு இயந்திரத்தை தொழிலாள வர்க்க பலத்தினால் உடைத்தெறிந்து மாற்று புரட்சித் தலைமையை கட்டும் போராட்டத்துடன் இது பின்னி பிணைந்ததாகும்.

No comments:

Post a Comment