"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Monday, August 29, 2016

இந்திய ட்ரொட்ஸ்கிச சோசலிச தொழிலாளர் கழகம் ஆதரவு


Thozhilalar Paathai Volume 439
September 1993

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட 
சோசலிசத் தொழிலாளர் கழகம்

37, 2வது மாடி,
நாராயண் மஸ்திரி வீதி,
ஒட்டேரி சென்னை.
1993 ஜூலை 24

விலானி பீரிஸ்,
தலைவி,
சுயாதீனத் தொழிலாளர் விசாரணைக் குழு,
90, 1வது மாளிகாகந்த ஒழுங்கை,
கொழும்பு - 10, இலங்கை.

அன்பின் தோழி,

பிரமேலால் ஜயக்கொடியின் மரணம் பற்றியும் சுதந்திர வர்த்தக வலயத்தின் சேவை நிலைமைகள் பற்றியும் ஆராயும் தொழிலாளர் விசாரணைக் குழு 1993 ஜூலை 25ம் திகதி கூடுவதாக பு... பொதுச் செயலாளர் தோழர். விஜே டயசிடம் அறிந்தோம்.

 
துக்கத்தில் ஆழ்ந்த ஜயக்கொடியின் குடும்பத்தினருக்கும், தாம் சேவை செய்து வந்த 5 தொன் எடை கொண்ட நெரிக்கும் இயந்திரத்தினுள் நசுங்குண்டு ஜயக்கொடி இறந்து போகும் வரை அவருடன் ஒன்றாக சேவை செய்த கொரியா-சிலோன் பாதணி கம்பனியின் தொழிலாளர்களுக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட இந்திய ட்ரொட்ஸ்கிச சோசலிசத் தொழிலாளர் கழகம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றது. உங்களின் விசாரணைக் கமிட்டிக்கு ஆதரவு தர சோசலிசத் தொழிலாளர் கழகம், இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் உள்ளே பிரச்சார இயக்கத்தினைத் தொடுக்க உறுதி பூண்கிறது.

தோழமையுடன்
அருண் குமார்
பொதுச் செயலாளர்,
சோசலிசத் தொழிலாளர் கழகம்

Sunday, August 28, 2016

மேற்கு வங்க போலீஸ் துப்பாக்கிச் சூடு! ஜோதிபாசு அரசாங்கத்தின் கொலை வெறித் தாக்குதல்! 12 க்கு மேற்பட்டோர் பலி


Thozhilalar Paathai Volume 61 (File no 437)
August 1993

ஜூலை 21ல் கல்கத்தாவில் ஸ்டாலினிச ஜோதிபாசு அரசாங்கத்தின் போலீசாரால் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஸ்டாலினிச அரசாங்கத்தின் இந்த படுகொலை நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியின் 'ஜனநாயக! விரோத செயல்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதாக ஜோதிபாசு நியாயப்படுத்தினார். “ஜனநாயகம்", “சட்டம்" “ஒழுங்கு" ஆகியவற்றை பாதுகாப்பதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஜோதிபாசு கூறினார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைப்பது பற்றிய கோரிக்கையை அவர் அடியோடு நிராகரித்தார். அது போலீசாரின் உணர்வுகளை பாதிக்கும் என்றார் ஜோதிபாசு!!

 
காங்கிரஸ் இளைஞர் அணியை தாக்கிய ஜோதிபாசுவின் அதே போலீசார் தான் ஜோதிபாசு அரசாங்கம் பஸ் கட்டணம், ஆஸ்பத்திரி கட்டணங்களை உயர்த்திய போது எழுந்த பரந்த மக்கள் எதிர்ப்பையும், ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. அதே போல் கடந்த நவம்பர் 2ல் ஹரிகர்பாராவில் ஸ்டாலினிச நிர்வாகத்தின் பிற்போக்கு நடவடிக்கைகளை எதிர்த்து திரண்டெழுந்த மூவாயிரம் மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் மீது நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். ஆக ஜூலை 21ல் படுகொலை நடவடிக்கைகள் உண்மையிலேயே ஸ்டாலினிச அரசாங்கத்திற்கு எதிராக வளர்ச்சியடையும் பரந்த தொழிலாளர்களின், மாணவர்களின், வேலையற்றோரின், மத்தியதர வர்க்கப் பிரிவினரின் இயக்கத்துக்கு ஒரு எச்சரிக்கையாகவே செய்யப்பட்டது, புரட்சிகர தலைமை வெற்றிடம் உள்ள நிலையில் ஸ்டாலினிச அரசாங்கத்துக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை முதலாளித்துவ கட்சிகளான காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி மற்றும் மாவோயிச அமைப்புகள் சுரண்ட முயற்சிக்கின்றன; ஜோதிபாசு அரசாங்கத்தின் உண்மையான இலக்கு மேற்கு வங்க தொழிலாள வர்க்கமே.

தொழிலாளர் விரோதம்

மேற்கு வங்கத்திற்கு பன்னாட்டு கம்பனிகளின் முதலீட்டை வரவழைப்பதற்கு ஜோதிபாசுவின் ஸ்டாலினிச அரசாங்கம் பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறது. ஜோதிபாசுவும் அவரது மகனும் முதலாளியுமான சத்தன்பாசு கடந்த வருடங்களில் பல ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளுக்கு விஜயம் செய்து காங்கிரஸ் அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கி பெரும் முதலாளிகள் பங்கு கொண்ட கூட்டங்களில் உரையாற்றினார்கள். இந்த வருடம் ஜூன் மாதம் ஜோதிபாசு மேற்கு வங்க தொழிலாளர்கள் தமது தொழில் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்று பொதுக் கூட்டத்திலே பேசும் போது கூறினார். தமக்கு தொழில் அதிபர்களிடமிருந்தும் இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் (முதலாளிகளிடமிருந்தும்) மேற்கு வங்க தொழிலாளர்களின் தொழில் கலாச்சாரம் சம்பந்தமாக முறைப்பாடுகள் வருவதாகவும் இதனால் அவர் மனம் நொந்து போய் இருப்பதாகவும் கூறினார். அதாவது மேற்கு வங்க தொழிலாளர்கள் முதலாளிகளின் இலாபத்தை பெருக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஜோதிபாசு கூறுகிறார். தொழிற்துறை பாலைவனமாக மேற்கு வங்கம் மாறுவதை தான் பார்க்க விரும்பவில்லை என்றும் அதனால் மேற்கு வங்க தொழிற்துறை பொருளாதாரம் புணருதாரணம் அடைய ஒன்றுபட்டு வேலை செய்ய வேண்டும் என்றும் பாசு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோள் இதர மாநில காங்கிரஸ், ஜனதாதளம், .தி.மு.., பாரதீய ஜனதாக் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் தத்தமது மாநில வளர்ச்சிக்காக பிராந்தியவாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் வேண்டுகோள் விடுவதிலிருந்து மாறுபட்டதல்ல. ஒரு வேறுபாடு என்னவென்றால் ஜோதிபாசு "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி" யிலிருந்து சமயத்திற்கு சமயம் சோசலிசம், கம்யூனிசம் போன்ற வார்த்தைகளை கூறிய வண்ணம் இவற்றை செய்கிறார்.

ஸ்டாலினிசத்தின் பரிணாமம்

அக்டோபர் புரட்சியின் லெனினின் சர்வதேசிய சோசலிச புரட்சி முன்னோக்குகளை கைவிட்டு தமது சலுகைகளை பாதுகாப்பதற்காக சோவியத் அரசுடைமையில் ஒட்டுண்ணியாக இருந்து வளர்ச்சி கண்டது தான் ஸ்டாலின் தலைமையிலான அதிகாரத்துவம், அது "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற மார்க்சிய விரோத கொள்கையை பின்பற்றி அதன் அதிகாரத்துவ சலுகைகளை பாதுகாத்தது, இதனை எதிர்த்து 1923ல் டிராட்ஸ்கி தலைமையில் உருவாக்கப்பட்ட இடதுசாரி எதிர்ப்பியக்கத்தை நசுக்கியது, அக்டோபர் புரட்சிக்கு லெனினுடன் தலைமை வழங்கிய போல்ஷேவிக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையோரை படுகொலை செய்தது. டிராட்ஸ்கியையும், அவரது லட்சக்கணக்கான ஆதரவாளர்களையும், கலைஞர்களையும் கொன்று குவித்தது. இதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சோவியத் ஜனநாயகத்தை நசுக்கி அரசியல் அதிகாரத்துவத்தையும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து பிடுங்கிக் கொண்டது. 1933ல் ஐரோப்பாவில் சக்தி வாய்ந்த தொழிலாள வர்க்கமாக திகழ்ந்த ஜெர்மனிய தொழிலாள வர்க்கம் ஹிட்லரினால் கோரமாக ஒடுக்கப்படுவதற்கு ஸ்டாலினின் கொள்கைகள் காரணமாக அமைந்தன. இதற்கு வக்காளத்து வாங்கிய மூன்றாம் அகிலத்தின் இதர பகுதிகளும் சோவியத் ஸ்டாலினிசத்துடன் கூடவே முழுமையாக எதிர்புரட்சிகர முகாமுக்கு சென்று விட்டதாக டிராட்ஸ்கி கூறினார். ஸ்டாலினிசம், தொழிலாள வர்க்க மத்தியில் ஏகாதிபத்தியத்தின் எதிர் புரட்சிகர ஏஜன்டாக செயல்படுவதாக டிராட்ஸ்கி கூறினார். அதனை அரசியல் ரீதியாக அழிக்கவும், தொழிலாள வர்க்கத்திற்கு புதிய புரட்சிகர முன்னோக்கை வழங்கவும் 1938 ல் நான்காம் அகிலத்தை டிராட்ஸ்கி ஸ்தாபித்தார்.

ஊர்ஜிதம்

ஸ்டாலினிசம் சம்பந்தமான டிராட்ஸ்கியின் சக்தி வாய்ந்த மார்க்சிய ஆய்வு இன்று பல பத்தாண்டுகளுக்கு பின்னர் தீர்க்கமாக ஊர்ஜிதமாகியுள்ளது, உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டம் காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் நீண்டகால முதலாளித்துவ சுற்றி வளைப்பின் கீழ் சோவியத் யூனியன் உலக முதலாளித்துவத்தின் அழுத்தங்களுக்கு பலியாக நேரிடும், அப்போது ஸ்டாலினிச அதிகாரத்துவம் தனது சலுகைகளை தொடர்ந்து பாதுகாப்பதற்காக அதனை ஒரு முதலாளித்துவ வர்க்கமாக மாற்றிக் கொள்ளும் என்று டிராட்ஸ்கி முன் ஆய்ந்து கூறினார். இந்த வளர்ச்சிப் போக்கிலேயே இன்று சோவியத் ஸ்டாலினிசம் சோவியத் யூனியனை அழித்ததுடன், உடைந்த துண்டுகளில் முதலாளித்துவ மீட்சிக்காக தீவிரமாக வேலை செய்கிறது. ஏகாதிபத்தியங்களின் தரகு முதலாளித்துவ பிரிவுகளாக பழைய ஸ்டாலினிஸ்டுகள் இன்று செயற்பட்டு வருகின்றனர். இதுவே கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும், வியட்நாமிலும் நடந்து வருகிறது. இந்திய ஸ்டாலினிஸ்டுகளும் அவர்களது "சர்வதேச தோழர்களின்" பாதையிலிருந்து விதிவிலக்காக இருக்க மாட்டார்கள் என்பதை தான் மேற்கு வங்க ஸ்டாலினிஸ்டுகளின் அரசாங்கம் எடுத்துக் காட்டுகிறது.

இந்திய புரட்சியின் மரண எதிரிகளாக இந்திய ஸ்டாலினிஸ்டுகள் செயற்பட்டு வந்தார்கள். 1947ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் கூட்டாக சதி செய்து தொழிலாள வர்க்கத்தை மதவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு அன்று ஒன்றுபட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைப்பு வழங்கியது. முஸ்லீம்கள் ஒரு தனி தேசிய இனம் அவர்கள் தனியாக ஒரு அரசை "பாகிஸ்தானை" உருவாக்க அவர்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமை இருப்பதாக "கம்யூனிஸ்ட் கட்சி" கூறியது.

பாகிஸ்தானின் உடைவும் (1971ல்) அவ்விரு நாடுகளிலும் தொழிலாளர்களும் விவசாயிகளும் சிறுபான்மை மக்களும் மோசமாக ஒடுக்கப்பட்டு வருவதும் ஸ்டாலினிஸ்டுகளின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் எதிர்புரட்சித் தன்மையை மேலும் வெளிச்சமாக காட்டுகிறது. 1947இன் மதவாத பிரிவினையும் போதாதென்று மேலும் மொழி, ஜாதி அடிப்படையில் துணை கண்ட தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி தொழிலாள வர்க்க ஐக்கியத்தையும் எதிர்ப்பையும் பலவீனப்படுத்துவதற்கு சி.பி.., சி.பி.எம்., சி.பி.. (எம்.எல்) ஆகிய அனைத்து ஸ்டாலினிச அமைப்புகளும் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு மாற்று அணி இல்லை, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுக் கொள்கை முற்போக்கானது என்று கூறி சிபிஐ, சிபிஎம், இரண்டு ஸ்டாலினிச கட்சிகளும் முதலாளித்துவ காங்கிரஸ் ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்து வந்தன. 1987இலிருந்து விபி சிங் தலைமையில் ஜனதா தளம் முற்போக்கானது என்று கூறி தொடர்ந்து முதலாளித்துவ ஆட்சி அமைப்பை காத்து வந்தது. 1977ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சிக்கு ஆதரவு வழங்கியது. ஜனதா அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருந்த ஜனசங்கம் பின்னர் பாரதீய ஜனதாக் கட்சியாக உருவெடுத்தது. ஸ்டாலினிஸ்டுகள் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாசிச வகுப்புவாத கட்சியென்று கூறும் அதே பாரதீய ஜனதாக் கட்சியுடன் சேர்ந்து விபி சிங் சிறுபான்மை ஆட்சியை 11 மாதங்கள் தக்க வைத்தனர், மேலும் பிராந்தியவாத இனவாத கட்சிகளான திமுக தெலுங்கு தேசம் ஆகியவற்றுக்கு முற்போக்கு முலாம்பூசி அவற்றின் வளர்ச்சிக்கு உதவியளித்து வருகின்றன. குறிப்பாக 1991லிருந்து மிக வெளிப்படையாகவே ஏகாதிபத்திய நிறுவனங்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாக இயங்கி வரும் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்து வருவதில் ஸ்டாலினிஸ்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 1991ல் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை ஆட்சியை அமைத்த போது அதை தக்க வைப்பதை நியாயப்படுத்தி ஜோதிபாசு கூறியதாவது: “விரைவில் மற்றொரு தேர்தலை மக்கள் விரும்ப மாட்டார்கள். மக்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள் நாட்டில் குழப்பம் ஏற்படும்.”

இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை பாதுகாப்பதில் இதர முதலாளித்துவ கட்சிகளைப் போலவே ஜோதிபாசுவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அதனால் தான் ஜூலை 21 படுகொலை நடவடிக்கை சம்பந்தமாக விசாரணை நடத்தப்படுமாயின் அது போலீசாரின் உணர்வுகளை பாதிக்கும் என்றார்.

போலீஸ்

ஜோதிபாசு அரசாங்கம் பயன்படுத்தும் போலீஸ் படை இதர மாநிலங்களில் அல்லது சர்வதேச ரீதியாக முதலாளித்துவ ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் போலீஸ் படையின் வர்க்க குணாம்சத்திலிருந்து வேறுபட்டதல்ல. போலீஸ் இராணுவம் இவை அனைத்துமே தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கி முதலாளித்துவ (தனியுடமையின்) சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினால் பயன்படுத்தும் அரசு இயந்திரங்களாகும்; அரசு இயந்திரம் சம்பந்தமாக மார்க்ஸ், ஏங்கெல்ஸின் நிலைப்பாட்டை வலியுறுத்தி மகத்தான அக்டோபர் புரட்சியின் தலைவர் லெனின் அரசும் புரட்சியும் என்ற நூலில் நூற்றுக் கணக்கான பக்கங்களில் எழுதியுள்ளார். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனினின் கருத்துப்படி தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்காக ஏற்கனவே தயாராகியிருக்கும் அரசு இயந்திரத்தை தொழிலாள வர்க்கம் அப்படியே எடுத்தாள முடியாது. அது அனைத்தையும் தொழிலாள வர்க்கம் நொறுக்க வேண்டும், உடைக்க வேண்டும். தகர்த்திட வேண்டும் (அரசும் புரட்சியும், லெனின், பக்கம் 151)

ஆனால் கம்யூனிச முகமூடி அணிந்துள்ள ஜோதிபாசுவையும், சிபிஎம், சிபிஐ ஸ்டாலினிச கட்சிகளையும் பொருத்த வரை தொழிலாள வர்க்கத்தினால் நொறுக்க, உடைக்க தகர்க்கப்பட வேண்டிய அரசு இயந்திரத்தின் உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்திய நாடு கடந்த கம்பனிகள் பூகோள ரீதியான உற்பத்தியில் கம்ப்யூட்டர், தொலைதொடர்பு, போக்குவரத்து சாதனங்களில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான தொழில் நுட்பங்களின் ... உதவியுடன் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறான நாடு கடந்த கம்பனிகள் மிக மலிந்த கூலியைத் தேடி பூகோள ரீதியான வேட்டையில் ஈடுபட்டுள்ளனர், பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கத்தினர் தமது வர்க்க நலன்களை பாதுகாக்க பன்னாட்டு கம்பனிகளுடன் கூட்டிற்கு செல்கின்றன, அல்லது அவற்றினால் விழுங்கப்படுகின்றன. அது போலவே ஸ்டாலினிச அதிகாரத்துவங்களும் இன்று பண்பியல் ரீதியான மாற்றமடைந்து ஏகாதிபத்தியத்தின் தரகு முதலாளித்துவ பிரிவுகளாக மாறியுள்ளன. ஜோதிபாசுவின் பாதையும் அதுவே. மேற்கு வங்கத்தில் ஏகாதிபத்தியத்தின் தரகு முதலாளித்துவ கையாளாக இருப்பது ஜோதிபாசுவோ, மமதாபானர் ஜியா என்பதே அவர்களுக்கு இடையிலுள்ள மோதலின் சாரம்.

தொழிலாள வர்க்கம் இந்த இரண்டு ஏகாதிபத்திய கால் வருடிகளையும் நிராகரிக்க வேண்டும் பொது எதிரியான முதலாளித்துவத்துக்கு எதிராக சர்வதேச ரீதியான தொழிலாள வர்க்கத்துடன் சோசலிசத்துக்கான போராட்டத்தில் ஒன்று சேர வேண்டும். இந்த சோசலிச சர்வ தேசிய வேலைத்திட்டத்திற்கு போராடும் உலக கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவையும் அதனுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தையும் கட்டுவதே, இன்று வர்க்க நனவுள்ள தொழிலாளர்கள், புரட்சிப் பாதையை நாடும் அறிவு ஜீவிகள் இளைஞர்கள், மத்தியதர வர்க்கப் பகுதியினர் முன்னுள்ள புரட்சிகர கடமையாகும்.

Wednesday, August 24, 2016

ஆகஸ்ட் மாத நிதி ரூ. 2,500 (சோசலிச தொழிலாளர் கழகத்தின் துண்டறிக்கை)


Thozhilalar Paathai Volume 437
August 1993

உறுப்பினர்களே, வாசகர்களே, ஆதரவாளர்களே,

ஆகஸ்ட் மாதத்திற்கான நிதி இலக்கு ரூ. 2,500 அதில் 13-8-93க்குள், ரூ. 818 திரட்டப்பட்டிருக்கின்றது. இந்த நிதி இலக்கை பூர்த்தி செய்வதற்கான போராட்டத்தை அனைத்து கிளைகளிலும் எடுக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்க்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்களின், இளைஞர்களின் முன்னணி பகுதியை மார்க்சிஸ்டுகளாக பயிற்றுவிக்கும் போராட்டத்தில் தொழிலாளர் பாதை தீர்க்கமான பங்கை வகிக்கின்றது. இந்த புரட்சிகர பத்திரிகை தொடர்ந்து வெளி வரவும், மேலும் அபிவிருத்தி செய்யவும் உங்களின் முழு ஆதரவும் தேவை. எனவே தங்களின் பங்கை (நிதியை உடனே அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்)

நிதி அனுப்ப வேண்டிய முகவரி

தொழிலாளர் பாதை
22, தேவராஜூலு தெரு, அயன்புரம்,  
சென்னை - 23

இந்தியாவில் ரொக்சியிஸ்டுக்களின் மீதான துன்புறுத்தல்களை கண்டனம் செய்


Thozhilalar Paathai Volume 405 (File 039)
April 1991

சர்வதேசரீதியாக தொழிலாளர் இயக்கம் கட்டாயமாகவும், உடனடியாகவும் இந்திய ரொக்சியிச கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் மீது தற்போது பொலிசினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட துன்புறுத்தல் நடவடிக்கைகளை கண்டனம் செய்ய வேண்டும்.

 
இந்தியாவில் அலைமோதிக் கொண்டிருக்கும் அரசியல் கொந்தளிப்புக்களின் மத்தியில் அரச படைகள் நான்காவது அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் மீது இலக்கு வைத்திருக்கின்றன.

சமூக நெருக்கடிகள் மோசமாகிக் கொண்டிருக்கும் வேளையில் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் அங்கத்தவர்களை வாயடைக்கப் பண்ணும் நோக்கத்தில் அவர்கள் மீது பொலீசாரினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ந்த பயமுறுத்தல் முயற்சிகள் முழுமையாக தோல்வியடைந்துள்ளன. ... மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாமல் வளர்ச்சியடையும் பாரிய சமூக நெருக்கடியை தவிர்க்க முடியாத தங்களது கையாலாகாத்தனத்தை மூடிமறைப்பதற்காக முதலாளித்துவ அரசியல்வாதிகள் இனவாதத்தையும், சாதி வெறியையும் மேலும் மேலும் தூண்டிவிடுகையில், சோசலிசத் தொழிலாளர் கழகம் மட்டும் ... தொழிலாளர் இயக்கத்திற்குள், இந்திய தொழிலாள வர்க்கத்தை ஸ்ரீலங்காவினதும், தமிழீழத்தினதும் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்துவதற்காக போராடும் ஒரேயொரு சக்தியாகும்.
தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலைமைகளில் பொலீசார் இந்திய ரொக்சியிஸ்ட்டுக்களின் மேல் கவனம் செலுத்துவது மிகவும் மோசமான பயங்கரங்களுக்கான அறிகுறியாகும்.

... வட-கிழக்கு மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் 1000 ... தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு மேல் பொலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததினால் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன் 60 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொழிலாளர்கள் அரசிற்கு சொந்தமான டாலா (Dalla) சீமெந்து தொழிற்சாலை தல்மியா (Dalmia) தொழில் நிறுவனக் குழுவிற்கு கையளிக்கப்படுவதை தடை செய்வதற்காக தொழிற்சாலை வாசலில் மறியல் செய்தனர். புது டெல்லிக்கு 340 மைல்கள் கிழக்காக புனித இந்து நகரமான வாரணாசிக்கு அருகாமையில் சுனம்பாத்ரா (Sunebhadra) நகரத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை உத்தரப் பிரதேச சீமெந்துக் கூட்டு ஸ்தாபனத்திற்கு சொந்தமானதாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கம் இந்த தொழிற்சாலையை அதனது புதிய தனியார் சொந்தக்காரர்களுக்கு கையளிக்கவிருந்தது.

பொலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக அருகில் உள்ள ஒப்ரா (Obra) அனல் மின்சார நிலையத்தைச் சேர்ந்த 7000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியதனால் இப்பிரதேசம் பாரிய மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு உட்பட்டது.

இத்தொழிற்சாலையை தனியார் துறைக்கு மாற்றுவதற்கான தீர்மானம் தேசிய மாநில அரசுகளின் தனியார் மயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். தனியார் மயப்படுத்தலின் போது வேலைக்கான உத்தரவாதம் இல்லா தொழிலாக்கப்படுவதுடன் வேலை நிலைமைகள் பாரியளவில் தாழ்த்தப்படும். இந்த வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.

Dalla தொழிற்சாலையைப் பொறுத்தளவில் வேலைநிறுத்தங்களும் உற்பத்தி குறைவும் குறைந்த லாபத்தை ஏற்படுத்தியது தான் தனியார்மயப்படுத்தலுக்கு காரணமென அரசு நியாயப்படுத்தியது.

அசோசியேட்டன் பிரஸ் செய்தி நிறுவனம் இந்தியாவின் சீமெந்து தொழிற்சாலை தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் 75 இலிருந்து 100 டொலர்கள் வரையென அறிவித்துள்ளது.

சோசலிசத் தொழிலாளர் கழகம் இரண்டு வேட்பாளர்களை இந்த தேர்தலில் நிறுத்தி உள்ளது. தென் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் புக்கிங்காம் கர்நாட்டிக் புடவை ஆலையின் தொழிலாளியான தோழர் மோசஸ் ... வேட்பாளராக போட்டியிடுகின்றார். ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிற்சங்கத்தின் முன்னை நாள் நிர்வாகக் குழு அங்கத்தவரான தோழர் கைலாசம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் ... வேட்பாளராவார்.

மே 21 இல் ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பிருந்தே, இந்திய ரொக்சியிஸ்டுக்கள் அரசின் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டனர். ஏப்ரல் 23 இல் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் பத்திரிகையான "தொழிலாளர் பாதையின் ஆசிரியரான தோழர் S. ராம் சென்னையில் "சிறீலங்காவில் இனவாத யுத்தத்தினதும், கிராமத்துப் படுகொலைகளினதும் பின்னணியும் தீர்வும்" என்ற தலைப்பில் ஒரு பகிரங்க சொற்பொழிவாற்றிய இரண்டு நாட்களுக்கிடையில் பொலீஸ் ஒருவித அதிகாரமுமற்ற வகையில் பாரியளவில் புலனாய்வுகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டது. ஏப்ரல் 25 ம் திகதி நாலு மணிக்கு பொலீஸ் அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த குருசாரி எனத் தன்னை அடையாளம் காட்டிய பொலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சென்னையில் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தோழர் ராமை சந்திக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார். இதனை அடுத்த நாட்களில் இதே பொலீஸ் உத்தியோகஸ்தர் தோழர் மோசஸ் இன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று அவரது கடந்த காலம், தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை தொடர்பாக விசாரணை நடத்தினார். பின்னர் மே மாதம் 12 ம் திகதி குருசாமி தோழர் மோசஸ் இன் வீட்டிற்குச் சென்றதுடன் அதேதினத்தில் பெரம்பூர் பராக்டுகள் தெருவில் B&C ஆலை தொழிலாளர்களின் குடியிருப்பு விடுதிகளின் வாசலில் தோழர் மோசஸ் இனை நேருக்கு நேர் சந்தித்தார். குருசாமி அவரிடம் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் ஏனைய அங்கத்தவர்களைப் பற்றியும், கட்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தமொன்றில் தலையிட இருக்கின்றதா என்பது பற்றியும் விசாரணை செய்தார்.

மே 16ம் திகதி காலையில் அண்ணாநகர் மேற்கு விசேட பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலீஸ் சேவகர் சிவலிங்கம் (PC 2479) தோழர் கைலாசத்தின் வீட்டிற்கு விஜயம் செய்தார். தோழர் கைலாசத்தை வீட்டில் காணாததால் இந்த உத்தியோகஸ்தர் அன்று மாலை திரும்பவும் சென்று கைலாசம் கண்டிப்பாக தன்னை திருமங்கலம் பொலீஸ் நிலையத்தில் சந்திக்க வேண்டுமென ஒரு தகவலையும் கொடுத்திருந்தார்.

மே 24 இல் இந்த பொலீஸ் துன்புறுத்தல்களை ஒரு முடிவிற்கு கொண்டு வரும்படி சோசலிச தொழிலாளர் கழகம் கோரிக்கை விடுத்தது. சென்னைப் பொலீசின் பொது நிர்வாகிக்கு தோழர் மோசஸ் பின்வருமாறு எழுதினார்: “விசாரணை செய்வதும், குறுக்கு விசாரணைக்கு உட்படுத்துவதுமான மேலே கூறப்பட்ட முயற்சிகள் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான எங்களது ஸ்தாபனத்தின் அங்கத்தவர்களதும், ஸ்தாபனத்தினதும் அரசியல் உரிமைகள் மீதும் சிவில் உரிமைகள் மீதும் சட்ட விரோதமான அத்துமீறல்களை உருவாக்குகின்றது. இந்த நடவடிக்கைகள் சோசலிசத் தொழிலாளர் கழகம் தனது கொள்கைகளையும், வேலைத்திட்டங்களையும் பிரச்சாரம் செய்யும் சட்டரீதியிலான உரிமையுள்ள நடவடிக்கைகளுக்கும், அத்துடன் வட சென்னை லோக்சபா தொகுதிக்கும் வில்லிவாக்கம் சட்டசபைத் தொகுதிக்குமான அதனது வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரச்சார வேலைகளை மேற்கொள்ளுவதற்கும் ஒரு இடையூறாகும்.

தொழிலாளர் இயக்கத்தின் புரட்சிகர குரலை அடக்குவதற்கான இவர்களது முயற்சிகளில் சென்னை தொழிற்சங்கத்தின் (MTU) ஸ்ராலினிச தொழிற்சங்க அதிகாரத்துடன் பொலீஸ் பகிரங்கமாக இணைந்து செயற்படுகின்றது. கடந்த வருடம் டிசம்பரல் 13 இல் சென்னை தொழிற்சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட B&C மில் தொழிலாளர்களின் கூட்டமொன்றின் போது தோழர் ராம் தொழிற்சாலை வாசலில் வைத்து 30 குண்டர்களினால் தாக்கப்பட்டார்.

இந்த குண்டர்களை ஒழுங்கு செய்வரான வரதராஜன் MLUவின் தலைவரும், ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அங்கத்தவராவார். 1989 இல் இவருக்கெதிராக தோழர் ராம் தொழிற்சங்கத் தலைவர் பதவிக்காக போட்டியிட்டார். ராம் மீது தாக்கியவர்களுக்கு தலைமை தாங்கிய குமரேசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அங்கத்தவரும், MLUவின் நிர்வாகக் குழு அங்கத்தவருமாவார்.

இத்தாக்குதலின்போது அருகாமையிலுள்ள புளியந்தோப்பு பொலீஸ் நிலையத்தின் பொலீஸ்காரர்கள் ஒருவித தலையீடும் செய்யாது முடமாகி நின்றதுடன் தாக்குதல் முடிந்தவுடன் தோழர் ராமை கைது செய்து அவருக்கெதிராக குற்றச்சாட்டுக்களையும் சோடித்தனர்.

சோசலிசத் தொழிலாளர் கழகம் அவர்களிற்கெதிரான தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் துன்புறுத்தல் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வரும்படியும், தோழர் ராமிற்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுக்களை வாபஸ் வாங்கும்படியும் நிர்பந்தம் செய்கின்றது.

சோசலிசத் தொழிலாளர் கழகத்திற்கு மேலான தாக்குதல்கள் தொழிலாள வர்க்கம் முழுமைக்குமான தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.

கண்டனக் கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

THE DIRECTOR GENERAL OF POLICE
TAMIL NADU
STATE POLICE HEADQUARTERS
DR. RADAKRISHNAN SALAI,
MADRAS 600 004, INDIA.

பிரதிகள் அனுப்ப வேண்டிய முகவரி:-

Tholilalar Pathai,
POSTFACH 1609
71020 BIETIGHEIM.