"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Thursday, May 26, 2016

சென்னை பெரியார் திடல் பொதுக் கூட்டம்

தொழிலாளர் பாதை"

08 செப்டம்பர் 1989 (இதழ் 391)

சென்னை பெரியார் திடல் பொதுக் கூட்டம்:

உள்நாட்டில் தொழிலாளர் போராட்டங்களை நசுக்கும் இராணுவம், வெளிநாட்டில் விடுதலை போராட்டத்தினைக் காப்பது எப்படி?

சோசலிச தொழிலாளர் கழகம்

'புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று தோழர்கள் பாசிச மக்கள் முன்னணியினரால் படுகொலை செய்யப்பட்டமைக்குக் காரணம் பு.க.க. வின் போராட்டம் பாட்டாளி வர்க்க அனைத்துலக வாதத்தினை அடிப்படையாக கொண்டுள்ளதே. பு.க.க. இலங்கை முதலாளி வர்க்கத்தின் இனவெறிக்கும் தமிழ் முதலாளித்துவ தேசியவாதத்துக்கும் எதிராக தமிழ், சிங்கள தொழிலாளர்களை தமிழ் ஈழம் -இலங்கையைக் கொண்ட ஒரு ஐக்கிய சோசலிச அரசினை அமைக்க அணிதிரட்டி வருகின்றனது.'

பு.க.க. சிலாபம் உறுப்பினர் தோழர், கிறேஷன் கீகியனகே பாசிச ம.வி.மு. யால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய இந்திய சோசலிச தொழிலாளர்கள் கழகத்தின் உறுப்பினரும் பி அன்ட் சி ஆலை சென்னை தொழிலாளர் சங்க உறுப்பினருமான தோழர். மோசஸ் ராஜ்குமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்திய ட்ரொட்ஸ்கிச இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகத்தினால் ஜூலை 22 இல் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பேசிய தோழர். மோசஸ் இங்கைப் பிரச்சினைகள் சம்பந்தமான பொய்களும், திருப்புகளும் பரப்பப்பட்டு வரும் நிலையில் உண்மை நிலையை விளக்குமுகமாகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.

தென் ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் ஏகாதிபத்திய பொலிஸ் ஏஜன்டு பாத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் தோழர் கைலாசம் பின்வருமாறு குறிப்பிட்டார்:

ஏகாதிபத்தியத்தின் பூரணமான ஆசீர்வாதங்களுடன் இந்திய முதலாளி வர்க்கம் தென் ஆசியாவில் ஏகாதிபத்திய பொலிஸ் பாத்திரத்தை வகித்து வருகின்றது. முன்னர் பங்களதேஷிலும் இன்று இலங்கை மாலத்தீவிலும் அதை செய்து வருகிறது. பங்களாதேஷிலும் தமிழ் ஈழத்திலும் புரட்சிகரப் போராட்டங்களை நசுக்கும் இந்திய முதலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் முற்போக்கானதென சாயம்பூசி வந்துள்ளன. இந்திய-இலங்கை உடன்படிக்கை தமிழர்களைக் காப்பதற்கன்றி விடுதலைப் போராட்டத்தை நசுக்கவே கைச்சாத்திடப்பட்டது. … தென் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உப குழுவின் தலைவரான ஸ்ரீபன் கே. சொலார்ஸ் இந்திய-இலங்கை உடன்படிக்கையை பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை நசுக்கக் கைச்சாத்தான காம்ப் டேவிட் ஒப்பந்தத்துடன் ஒப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய தோழர். கைலாசம், ஸ்ரீபன் காந்தி - ஜயவர்தன பேர்களை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்ததையும் கூட்டத்தினருக்கு நினைவுபடுத்தினார்.

அடுத்து பேசிய தோழர் ராம் பு.க.க. உறுப்பினர் தோழர் கிறேஷன் படுகொலை செய்யப்பட்ட வர்க்க நிலைமையை விளக்குகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

மரண நெருக்கடி

உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பாகமாக இலங்கை முதலாளி வர்க்கம் மரண நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. தோழர் கிறேசன் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் முன்னணிக்கு வந்து கொண்டுள்ள நிலையிலேயே பாசிச ம.வி. முன்னணியால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பு.க.க. பாட்டாளி வர்க்க அனைத்துலகவாதத்தின் அடிப்படையில் தமிழ் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனை அடிப்படையாக கொண்டு தமிழ் ஈழம் -இலங்கையை கொண்ட ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவ தொழிலாள வர்க்கத்தினை அணி திரட்டிக் கொண்டுள்ள சமயத்திலேயே இப்படுகொலை இடம் பெற்றுள்ளது. தோழர் கிறேசன் மட்டுமின்றி கடந்த வருடம் தோழர்கள் பிட்டவெலவும், குணபாலவும் ஜே.வி.பி. பாசிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டனர்.

பிரித்தானிய ஒடுக்குமுறைக்கு எதிரான அயர்லாந்தின் போராட்டம் சம்பந்தமாக மார்க்சின் அறிவுரையை சுட்டிக் காட்டுகையில் தோழர். ராம் கூறியதாவது:

அயர்லாந்து

அயர்லாந்தின் விடுதலைப் போராட்டத்துக்காக போராடாத வரையில் பிரித்தானிய தொழிலாள வர்க்கம் பிரித்தானிய முதலாளி வர்க்கத்தில் இருந்து எங்ஙனம் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாதோ அங்ஙனமே இந்திய தொழிலாள வரக்கம் தமிழ் ஈழத்தின் சுய நிர்ணய உரிமைக்காக போராடாத வரையில் இந்திய முதலாளி வர்க்கத்தில் இருந்து விடுபட முடியாது எனக் குறிப்பிட்டார்.

'மக்கள் விடுதலை முன்னணி பாசிஸ்டுகளதும் யூ.என்.பி. குண்டர் படைகளதும் கொலை மிரட்டல்களுக்கு மத்தியில் பு.க.க. தோழர்கள் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்காக உறுதியான போராட்டத்தினை தொடுத்துள்ளனர். பாசிஸ்டுகள் தோழர்களை உடல்ரீதியாக ஒழித்துக் கட்ட முயன்றுள்ளனர்.'

இந்திய ஆக்கிரமிப்பு படைகளை தமிழ் ஈழத்தில் தொடர்ந்தும் வைத்திருப்பதில் இந்திய ஸ்டாலினிஸ்டுகளின் துரோகப் பாத்திரத்தை கூட்டத்தினருக்கு சுட்டிக் காட்டிய ராம், உள்நாட்டில் துறைமுகத் தொழிலாளர்கள், புகையிரத் தொழிலாளர்கள், டாக்டர்களின் போராட்டங்களை நசுக்கி வரும் இராணுவம் வெளிநாட்டில் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது எப்படி? எனக் கேட்டார்.

இந்திய படைகளை தமிழ் ஈழத்தில் இருந்து வாபஸ் பெறுவது தொடர்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வேலைத்திட்டத்துக்கும் பாசிச மக்கள் விடுதலை முன்னணியின் இனவாத இந்திய எதிர்ப்பு கூச்சலுக்கும் இடையேயான பண்புரீதியிலான அடிப்படை வேறுபாட்டை விளக்கிய தோழர் ராம் 'இந்திய படைகளை வெளியேற்றும் ம.வி. முன்னணியின் கோரிக்கை இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் 'தேசபக்த இராணுவ அரசாங்கத்துக்காக' போராடுகின்றனர். ம.வி. முன்னணியின் இந்திய விஸ்தரிப்புவாத கொள்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்க கட்சிகளுக்கும் தலைமைக்கும் எதிரான புதிய தாக்குதல்களைத் தொடுக்கப் போவதாக ம.வி.மு. அறிவித்துள்ளது. 'இந்திய ஐந்தாம் படையின் ஆலோசனையின் பேரில் சிங்கள இந்திய ஏஜன்டுகள் இடதுசாரிகளாக வேடம் பூண்டுள்ளதாக' அது குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரகடனத்தின் பேரில் தொழிலாள வர்க்கக் கட்சிகளின் பல அங்கத்தினர்கள் சமசமாஜ கட்சி மத்திய குழு உறுப்பினர்கள், பு.க.க. உறுப்பினர்கள் உட்பட—ம.வி.மு யால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

'ம.வி.மு தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் 'வேலைநிறுத்தங்களுக்கு' இட்டுச் செல்லும் யூ.என்.பி. ஆட்சியாளர்கள் துப்பாக்கி முனையில் தொழிலாளர்களை வேலைக்குத் தள்ளுவதும் 'அன்றாட நிகழ்ச்சி'களாகி விட்டன. இதன் விளைவாக நூற்றுக் கணக்கான தொழிலாளர்களும் தொழிற்சங்க தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

'பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வரும் நிலையில் அது உடனடியாக தனது பிற்போக்கு இனவாத, மத அரசினைக் காக்கும் பொருட்டு இந்திய முதலாளி வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்ளும். ஐக்கிய முன்னணிக்கான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அழைப்பு இலங்கையிலும், அனைத்துலக தொழிலாள வர்க்கத்திடையேயும் ஆதரவினை வென்று வருகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு இந்த ஐக்கிய முன்னணிக்கான போராட்டத்தினை அனைத்துலக தொழிலாள வர்க்கத்திடையே ஆழமாக எடுத்துச் செல்கின்றது.

பூரணத்துவம் செய்யப்படாத ஜனநாயகப் புரட்சியின் பாத்திரத்தினை நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் பூர்த்தி செய்யும் பொருட்டு இலங்கையில் புரட்சி கம்யூனிஸ்ட் கழகமும், இந்தியாவில் சோசலிச தொழிலாளர் கழகமும் இந்திய துணை கண்டத்தில் ஒரு சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தினை — உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் ஒரு களமாக நிறுவ போராடி வருகின்றது எனவும் தோழர். ராம் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment