"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Friday, September 30, 2016

இந்திய தேர்தல் முடிவுகள்: இந்தியத் துணைக்கண்டத்தை பிடித்துக் கொண்டுள்ள அரசியல் நெருக்கடியை காட்டுகின்றது


Thozhilalar Paathai 470
May 1996

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் இந்திய ஆளும் வர்க்கத்தையும் முழு இந்தியத் துணைக் கண்டத்தையும் பற்றிப் பிடித்துக் கொண்டு வளர்ச்சி பெறும் பிரமாண்டமான அரசியல் நெருக்கடியைக் காட்டுகின்றது. இந்த அரசியல் நெருக்கடி இந்தியத் துணைக் கண்டத்தில் சோசலிச குடியரசு ஒன்றியத்துக்காகப் போராடும் அவசியத்தை கோடானுகோடி தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் முன்னிலையில் தோற்றுவித்துள்ளது.


 
வெளியான சமீபத்திய பொதுத் தேர்தல் முடிவுகளின்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செலுத்திய காங்கிரஸ் கட்சி படுமோசமான தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 136 இடங்களையே கைப்பற்றியுள்ளது. முன்னர் அதற்கு லோக் சபாவில் 260 இடங்கள் இருந்தன.

படுபிற்போக்கு இனவாதக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியும் பாசிச சிவசேனாவும் கூட்டாக 195 இடங்களைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன. இது லோக் சபாவின் முழு ஆசன எண்ணிக்கையான 545 ல் மூன்றில் ஒன்றுக்கு சற்று அதிகமானதாகும். பீ.ஜே.பீ-சிவசேனா கூட்டு ஜனாதிபதி சங்கர் தயாள் ஷர்மாவின் அழைப்பின் பேரில் லோக்சபாவில் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியாக அரசாங்கத்தை அமைத்துக் கொண்டுள்ள போதினும் அரசாங்கத்தில் இருந்து கொள்ள இன்னும் 76 எம்.பீ.களின் முண்டுகோலைத் தேடிக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தை அமைத்துக் கொண்டுள்ள பீ.ஜே.பீ.க்கு முழு வாக்காளர் எண்ணிக்கையில் நூற்றுக்கு 20 வீதம் மட்டுமே கிடைத்துள்ளது.

தேசிய முன்னணி-இடது முன்னணி முதலாளித்துவக் கூட்டுக்கு 117 ஆசனங்கள் கிடைத்துள்ளத.உ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஸ்டாலினிசக் கட்சிகள் இந்த முதலாளித்துவ கூட்டின் இடதுசாரி முன்னணியில் உள்ளன. இம்முன்னணிகள் இன்று மக்களால் தோற்கடிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முண்டுகோலுடன் ஒரு அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கின்றனர். முதலில் இக்கூட்டின் சீ.பீ.எம். தலைவரான ஜோதி பாசுவை பிரதமர் பதவியில் இருத்தி முதலாளித்துவ ஆட்சியின் பொறுப்பை ஏற்க எண்ணிய போதிலும் நெருக்கடியின் ஆழம் காரணமாக இத்தருணத்தில் நேரடியாக ஆட்சி அதிகாரத்துக்கு தோள் கொடுக்காமல் கர்நாடகத்தின் முதலாளித்துவ ஜனதாதளத்தின் தலைவர் தேவ கவுடாவுக்கு பிரதமர் பதவியைக் கையளிக்க எண்ணப்பட்டுள்ளது.

பீ.ஜே.பீ-சிவசேனா கூட்டரசாங்கம் தமக்கு லோக் சபாவில் பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க மே 31 ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்பேரில் கட்சிகள், கூட்டுக்கள், சுயேட்சைக் குழுக்களின் அங்கத்தவர்களை விலைக்கு வாங்கும் இயக்கம் திரைக்குப் பின்னால் நடைபெற்று வருகின்றது. இதில் வாக்குகளைக் கறந்து கொள்ள முடியாது போனால் இரண்டு கிழமை வயதான பீ.ஜே.பீ-சிவசேனா அரசாங்கம் வீழ்ச்சி காணும். இதன் பின்னர் தேசிய முன்னணி-இடது முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் முன்னைய முன்னணியைப் போலவே இதுவும் இழுபறி முதலாளித்துவ குழுக்களின் ஒரு முன்னணியாதலால் இதன் ஆயுளும் சொற்பம். ஸ்டாலினிஸ்டுகளைக் கொண்ட அத்தகைய ஒரு அரசாங்கத்தை தற்காலிகமாக ஆட்சியில் வைத்திருப்பது என்பது தொழிலாளர்கள்-ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடாத்த அதைப் பயன்படுத்த முதலாளித்துவ வர்க்கம் எடுக்கும் தீர்மானத்திலேயே அது தங்கியுள்ளது.

இந்தியப் பொதுத் தேர்தலில் நூற்றுக்கு 60 சதவீதத்தினரே வாக்களித்துள்ளனர். இது வழக்கமான ஒரு போக்கு அல்ல. இது முதலாளித்துவ ஆட்சி தொடர்பாக பொது மக்களிடையே வளர்ச்சி கண்டு வரும் வெறுப்பினை எடுத்துக்காட்டுகின்றது. எந்த ஒரு கட்சிக்கும் மக்கள் அடிப்படை இல்லாமல் ஒரு அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையிலான ஆசனங்கள் கிடைக்காமை காங்கிரஸ் கட்சி நடாத்திய ஏகாதிபத்தியச் சார்பு ஆட்சி முறை தொடர்பாக பொதுஜன எதிர்ப்பும் அவ்வாறே இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாஇல் திணித்த அரசியல் அமைப்பு தொடர்பாக மக்களின் நம்பிக்கையீனமும் எதிர்ப்பும் வளர்ச்சி கண்டு வருவதைச் சுட்டிக் காட்டுகின்றது.

111 ஆண்டுக்கள் வயதுகள் படைத்த இந்திய தேசிய காங்கிரஸ் வீழ்ச்சி கண்டமை முன்னொருபோதும் இல்லாத ஒரு நிலைமையாகும். 1947ம் ஆண்டின் சுதந்திரம் எனப்படுவதன் பின்னர் 4 ஆண்டுகள் தவிர்த்த முழுக் காலத்தையும் ஆட்சி செய்தது இந்திய காங்கிரஸ் கட்சியேயாகும். இந்திய முதலாளி வர்க்கத்தின் இக்கட்சி பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போதும் அதன் பின்னரும் 1950களிலும் 1960களிலும் ஏகாதிபத்திய உலக அமைப்பினுள் பொதுமக்களை கட்டுப்படுத்தி வைக்கும் முக்கிய ஏகாதிபத்திய உபகரணமாக விளங்கியது. இக்கட்சி 1975ல் இந்திராகாந்தி காலத்தில் தோல்வி கண்டது. அந்த தோல்வி காங்கிரஸ் நாற்றமெடுப்பின் ஒரு கட்டமாக இருந்த போதிலும் இன்று நரசிம்மராவ் அரசாங்கத்தின் தோல்வி முற்றிலும் அதற்குச் சமானமானதல்ல.

நரசிம்மராவ் அரசாங்கத்தின் தோல்வியும் அனைத்துக் கட்சிகளதும் நெருக்கடியின் பின்னாலும் உள்ளவை இந்தியாவினுள் கட்டவிழ்க்கப்பட்டுள்ள உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயத்துடன் ஒன்றிணைந்து கொள்ளும் வேலைத் திட்டத்தினால் வர்க்க உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான மாற்றமாகும். காங்கிரசின் வீழ்ச்சியானது யுத்தத்தின் பின்னைய பொருளாதார, அரசியல் உறவுகள் பூகோளரீதியில் வீழ்ச்சி கண்டதைக் குறித்து நிற்கின்றது.

ஏகாதிபத்தியத்தின் கீழ் இடம் பெற்றுவரும் பூகோளமயத்துடன் இணைந்து கொள்ளும் பொருட்டு ராவோ, அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்தியாவை திறந்துவிடவும் அரசாங்கத் துறையை கரைத்துவிடவும் ஆரம்பித்தது. இந்திய தேசியக் கைத்தொழில்கள் வெளிநாட்டு முதலீடும் இறக்குமதியும் பெருக்கெடுத்து வரும் நிலையில் அடியுண்டு போயிற்று. தொழிலாளர்களுக்கும் விவசாயிகள் உட்பட்ட ஒடுக்கப்படும் மக்களுக்கும் கிடைத்து வந்த உதவிமானிய வெட்டு ஆரம்பமாகியது. கடந்த நான்கு ஆண்டுகளுள் இடம் பெற்ற பொருளாதார மறுசீரமைப்பின் கீழ் ஒடுக்கப்பட்ட தொழில்களின் எண்ணிக்கை ஒரு கோடியெனக் கணக்கிடப்பட்டுள்ளது. வேலையற்றோர் எண்ணிக்கை 10 கோடிக்கு அதிகமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. முதலாளிகள் ஏகாதிபத்தியக் கம்பனிகளுடன் சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாக்களை கமிஷனாகச் சுருட்டிக் கொள்கிறார்கள். நாட்டினுள் உயர்ந்த வருமானம் பெறும் நூற்றுக்குப் 10 வீதத்தினர் நாட்டின் முழு வருமானத்தின் நூற்றுக்கு 90 வீதத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு இருக்கும் அளவுக்கு சமூகத் துருவப்படுத்தல் உக்கிரம் கண்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களுள் இந்தியாவின் உத்தியோகப்பூர்வமான வறுமை வீதம் சனத்தொகையின் 36 வீதத்தில் இருந்து 48 வீதமாக உயர்ந்துள்ளது. பூகோளமயமாக்கலின் ஒரு வெளிப்பாடாக இந்தியா முழுவதும் குழந்தை உழைப்பு எண்ணிக்கை 4 கோடிகளைத் தாண்டியுள்ளது. இந்தியா சமூக ரீதியில் இரண்டு நாடாக பிளவுண்டு போயுள்ளது; அதாவது - முதலாளிகளின் இந்தியா, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் இந்தியா.

தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் பயணம்

இந்திய பொதுத் தேர்தல் முடிவுகள் ஏகாதிபத்தியவாதிகளதும் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளிகளதும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் மேற்கொண்டுள்ள பயணத்தை எடுத்துக் காட்டுகின்றது. எனினும் இந்தியாவின் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் தாம் முகம் கொடுக்கும் ஆபத்துக்களைப் புரிந்து கொண்டாக வேண்டும். தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் முதலாளி வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க பதிலீடு இல்லாமல் செய்யப்பட்டுள்ள ஒரு நிலைமையில் இதன் இலாபத்தை பிற்போக்காளர்கள் சுரண்டிக் கொள்கிறார்கள். பீ.ஜே.பீ-சிவசேனா கூட்டு நொண்டி அரசாங்கம் அமைக்கும் அளவுக்கு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அவர்கள் மக்களின் குழப்பநிலையை மதவாதம், இனவாதம் போன்றவற்றைப் பயன்படுத்திச் சூறையாடிக் கொள்கிறார்கள். பாசிச சக்திகளைப் பயன்படுத்திக் கொள்ளுவதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தைத் திருப்பித் தாக்குத் தயாராகி வருகின்றார்கள். இந்திய ஆளும் வர்க்கத்தின் நீண்ட கால கருவியான காங்கிரஸ் கட்சி பொருளாதார பூகோளமயமாக்கத்தின் எதிரில் சிதறுண்டு போகத் தொடங்கியுள்ளது. இது ஆளும் வர்க்கம் தமது ஏகாதிபத்திய அவசியங்களின் பேரில் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை நிர்வகிக்க பெரிதும் வலதுசாரி இராணுவ-பாசிச அமைப்புகளை கட்டி எழுப்பும் திசையில் வேகமாகத் தள்ளப்பட்டுள்ளதைக் காட்டிக் கொண்டுள்ளது. இந்தியாவினுள் வளர்ச்சி கண்டுள்ள நெருக்கடி இந்தியத் துணைக் கண்டத்தின் சகல நாடுகளின் உள்ளும் வளர்ச்சி கண்டுள்ளள நிலைமைகளுடன் இணைந்து கொண்டுள்ளது. இந்நெருக்ககடியின் தாற்பரியங்களை விளக்கித் தீர்வுக்கான முன்னோக்கினை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் பூண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் மட்டுமே முன்வைத்துள்ளது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் சோ.தொ.. மட்டுமே இந்திய துணைக் கண்ட சோசலிசக் குடியரசை அமைக்கும் மாற்று வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று வேட்பாளர்களை நிறுத்தியது.

Tuesday, September 20, 2016

மேற்கு வங்க ஸ்டாலினிச அரசாங்கத்தின் போலீஸ் கற்பழிப்புகளும் ஜோதிபாசுவின் வக்காலத்தும்!


Thozhilalar Paathai 52 (File no 427)
October 1992

-அகிலன்

ஸ்டாலினிச சிபிஐ (எம்) ஜோதிபாசுவின் முதலாளித்துவ அரசு எந்திரத்தின் போலீசார், செப்டம்பர் 23ம் தேதியன்று கிழக்கு கல்கத்தாவிலுள்ள புல்பகான் போலீஸ் நிலையத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

 
பத்மினிகளும் நெஹார் பானுக்களும்

அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் தன் கணவர் எதிரிலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பத்மினிக்கு நீதி கேட்டு குரல் கொடுப்பதாக பாசாங்கு செய்து வரும் சிபிஐ (எம்) கட்சியும், அதன் மாதல் சங்கங்களும், இளைஞர் அமைப்பும் (DYFI) சரி அனைத்துமே முதலாளித்துவ அரசு எந்திரங்களுள் ஒன்றான போலீசைப் பாதுகாத்து கொண்டு, சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று பிரமைகளை உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் திணித்து வருவதை நாம் ஏற்கனவே பலமுறை அம்பலப்படுத்தி இருக்கிறோம்.

ஆனால் கல்கத்தாவில் நெஹார்பானு போலீசாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு குரல் கொடுக்க சிபிஐ (எம்) மாதர் சங்கம், இளைஞர் சங்கம் உட்பட ஒருவர் கூட மூச்சை விடவில்லை. அதோடு மட்டுமல்ல இது சம்பந்தமாக பத்திரிகையாளர் ஒருவர், “இம்மாதிரி (ஹொர்பானு போன்ற நடைபாதைவாசி) பொண்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கியிருக்கிறதா" எனக் கேட்டதற்கு சிபிஐ (எம்) தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான ஜோதிபாசு "(நகரின்) நடைபாதைகளில் வசிக்கும் அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய முடியாது" - ஸ்டேட்ஸ்மென் 24 செப்டம்பர் - என்று வெளிப்படையாக அறிவத்ததன் மூலம் உழைக்கும் மக்களுக்கு மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை உத்தரவாதம் செய்திருக்கிறார்.

புல்பகான் போலீஸ் நிலையத்தில் கற்பழிப்புகளும்

24 பன்கானாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட நெஹார்பானு கை ரிக்ஷா இழுக்கும் கணவனால் கைவிடப்பட்ட நிலையில், வீட்டு வேலைச் செய்து தனது 7 வயது மகனையும் 10 வயது மகளையும் காப்பாற்றி வருகிறார்.

செப் 23ம் தேதி நள்ளிரவு இரண்டு மணிக்கு புல்பகான் போலீஸ் நிலைய கான்ஸ்டபிள் நீல்கமல் கோஷ், தூங்கிக் கொண்டிருந்த நெஹார் பானுவை எழுப்பி, வழக்கு சம்பந்தமாக அவள் தேவைப்படுவதாகவும், உடன் வருமாறும் அழைத்தான். தனது சக நடைபாதை வாசிப் பெண்ணின் வழக்கு சம்பந்தமாக அங்கு அவள் பலமுறை சென்றிருக்கிறார். இருப்பினும் முடிந்து போன அந்த வழக்குக்காக கான்ஸ்டபிள் கூப்பிட்டதும் நெஹார்பானுவுக்கு சந்தேகம் வந்து வர மறுத்திருக்கிறார்.

நீல்கமல் கோஷின் முயற்சி எடுபடாமல் போகவே, போலோநாத் எனும் கான்ஸ்டபிள் டிரைவரையும், சனாதன்முரு எனும் கான்ஸ்டபிளையும் அனுப்பி நெஹார் பானுவை அழைத்து வருமாறு கூறியிருக்கிறான். போலீஸ் வாகனத்தைக் கண்டதும் நெஹார் பானு அலறியிருக்கிறார். அப்படியும் அவரை விடாமல் பலாத்காரமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கு நீல்கமல் கோஷ் அவரை முதலில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு பிறகு அங்கு குடிபோதையுடன் இருந்த காளிபடாமுடு சாதன் பௌமிக், ரபிலோசன் மகதா ஆகி மூன்று கான்ஸ்டபிள்களும் நாசம் செய்துவிட்டு அதிகாலை 2 மணிக்கு மீண்டும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி வந்து நடைபாதையிலேயே அவளைத் தள்ளிவிட்டு போய் விட்டனர்.

விஷயம் வெளியில் அம்பலமாகியதும், நெஹார் பானுவை சமூக சேவை நிறுவனத்தையும் எதிர்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களையும் தடுத்தது ஸ்டாலினிஸ்ட் ஜோதிபாசுவின் போலீஸ். இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக மிரட்டியதுமே ஒரு மணி நேரம் கழித்து சந்திக்க அனுமதித்தனர். ஏற்கனவே சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ள தனது மகனுடன் தனக்கு நேர்ந்த கதியையும் எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கும் நெஹார் பானுவை போலீஸ் நிர்பந்தப்படுத்தி, அந்த போலீஸ் கிரிமினல்களை நிரபராதி என விடுவிப்பதற்கு அறிக்கை வாங்க முயற்சி செய்வதாகவும் தெரிகிறது. தொடக்கத்தில் டெபுடி கமிஷனர் ஆப் போலீஸ் பதவி வகிக்கும் அதிகாரி மருத்துவ பரிசோதனை சம்பந்தமாக முரண்பட்ட தகவல்களை அளித்திருக்கிறார். இதுவும் போலீஸின் சதி முயற்சியை ஊர்ஜிதப்படுத்துகிறது.

மேற்கு வங்க போலீஸ் கற்பழிப்புகள்

போலீஸ் துறையைத் தனது கையில் வைத்திருக்கும் ஸ்டாலினிஸ்ட் ஜோதிபாசு "இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக் கொண்டு முடிவுக்கு வர முடியாது" என்று கூறியுள்ளார். அத்துடன் மட்டுமல்லாமல், இந்த கற்பழிப்பு சம்பந்தமாக எந்தவித கருத்தும் கூறாமல், உயர் போலீஸ் அதிகாரி "உரிய நடவடிக்கை" எடுத்ததற்காக பாராட்டைத் தெரிவித்துள்ளார். ஸ்டாலினிச சிபிஐ யின் பாராளுமன்ற உறுப்பினர் கீதாமுகர்ஜி கூடுதல் DGP க்கு விடுத்த கடிதத்தில், மிட்னாப்பூரின் பிங்லா பகுதியைச் சேர்ந்த ஜாசோராஜ்பூர் கிராம ஆதிவாசிப் பெண்ணை, கிராமத் தலைவரின் மகனும் அவனது கூட்டாளியும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பின்னரும் போலீஸ் நடவடிக்கை எடுக்காததையும் அதே போல் இன்னொரு ஆதிவாசிப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவளது குடிசை அழிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

வலதுசாரி முதலாளித்துவ பங்காளராக சீரழியும் ஸ்டாலினிசம்

உழைக்கும் மக்களை ஒடுக்க போலீசை நவீனப்படுத்தி வரும் ஸ்டாலினிச ஜோதிபாசுவின் அறிக்கை ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சர்வதேச ரீதியாக ஸ்டாலினிசம் எதிர்ப்புரட்சி முகாமுக்கு போய்விட்டது என்றார் ட்ராட்ஸ்கி. இன்று சர்வதேச ரீதியாக ஸ்டாலினிஸ்டுகள் பண்பியல் ரீதியாக மாற்றம் அடைந்து ஏகாதிபத்தியத்தின் தரகு முதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதியாக மாறி விட்டனர்.

ஜோதிபாசு தனது மகனை முதலாளியாக்கி அரசு செலவின் லண்டன் சுற்றுப்பயணம் செய்து, நரசிம்மராவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதிநிதியாக NRI முதலாளிகளுக்கு இந்தியாவில் முதலீடு செய்யும்படியும், குறிப்பாக மேற்கு வங்கத்தில் சுரண்ட வரும்படியும், அதற்கு ஒத்துழைப்பு தருவதாகவும் சுவராஜ் பாட்டீலுக்கு அழைப்பு விடுத்தார். காங்கிரசின் வேட்பாளர் சர்மாவுக்கு ஆதரவளித்து முதலாளித்துவ அரசாங்கத்தைப் பாதுகாத்து வரும் ஸ்டாலினிச சிபிஐ (எம்) கட்சி பஞ்சாப், அசாம், காஷ்மீரில் இராணுவ அரச பயங்கரவாதத்திற்கு முழு ஆதரவு தருவதோடு தான் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராகத் திருப்பி வருகின்றது. அதன் ஒரு பகுதி தான் இந்த போலீசின் பாலியல் பலாத்காரங்கள்.

முதலாளித்துவ போலீஸ் இராணுவத்தை கலை

முதலாளித்துவ அரசு எந்திரங்களை நொறுக்காமல் பத்மினிக்களுக்கும், நெஹார் பானுகளுக்கும் விமோசனம் கிடையாது. தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சியின் மூலம் அல்லாமல் முதலாளித்துவ அரசு எந்திரங்களை நொறுக்க முடியாது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்க்காமல் சோசலிசப் புரட்சி சாத்தியமில்லை. அத்தகைய தலைமை நெருக்கடியை தீர்ப்பது, தொழிலாள வர்க்கத்துக்குள் டிராட்ஸ்கிச தலைமையைக் கட்டுவதிலும், ஸ்டாலினிச துரோகத் தலைமைகளை தொழிலாள வர்க்க இயக்கத்திலிருந்து உடனடியாக வெளியேற்றுவதிலுமே தங்கியிருக்கின்றது.

சோசலிச வேலைத்திட்டத்திற்கு போராடு!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் பின்வரும் வேலைத் திட்டத்தை முன் வைக்கிறது.

ஃ முதலாளித்துவ போலீஸ்-இராணுவத்தை கலை!

ஃ தொழிலாளர் பாதுகாப்பு படையணிகளைக் கட்டு!

ஃ பாலியல் பலாத்காரத்தை விசாரணை செய்வதற்கு தொழிலாளர்-இல்லத்துப் பெண்கள் ஆகியோர் கொண்ட மக்கள் விசாரணைக் குழுவை அமை!

ஃ முதலாளித்துவ அரசு எந்திரத்தைத் தூக்கிவீசி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ காலவரையற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு தயாராகு!

ஃ ஸ்டாலினிச, சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகளை தொழிலாள வர்க்க இயக்கத்திலிருந்து உடனடியாக வெளியேற்று!

ஃ சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டு!

Sunday, September 18, 2016

மதுரை கோட்ஸ் ஆலைத் தொழிலாளர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு! தொழிலாளர் பாதுகாப்பு குழுவை அமை!


Thozhilalar Paathai 52 (File no 427)
October 1992

சுந்தரம்

நெல்லை மாவட்டம் விக்கரமசிங்கபுரம் மதுரை கோட்ஸ் ஆலை தொழிலாளர்கள் ஆலை தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக போலீசாரால் சுடப்பட்டதை சோசலிசத் தொழிலாளர் கழகம் மிகவும் வன்மையாக கண்டனம் செய்வதோடு, தொழிலாளர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக தொழிலாளர் பாதுகாப்பு அணிகளை அமைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றது.

அக் 17ம் தேதி தங்களின் போனஸ் கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருந்த தொழிலாளர் மீது ஜெயலலிதா அரசாங்கத்தின் போலீஸ் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒரு பெண் உட்பட 4 பேர் காயமடைந்தனர். மதுரை கோட்ஸ் நிறுவனம் தமிழகத்தில் மதுரை, திருச்சி, விக்கிரமசிங்கபுரம் தூத்துக்குடியிலும் கேரளத்தில் கொரட்டியிலும் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளது. இந்த வருடம் கம்பெனிக்கு கொழுத்த லாபம் வந்தும் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நியாயமான போனஸை கொடுக்க மறுத்தது, இதன் காரணமாக தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். விக்கிரசிங்கபுரத்தில் உள்ள தொழிலாளர்களின் ஊர்வலத்தில் முதலாளித்துவ அரசு எந்திரம் தடியடி பிரயோகமும், துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் மதுரை கோட்ஸ் நிறுவனத்தின் - தொழிலாளர்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. மரண நெருக்கடியில் உள்ள இந்த முதலாளித்துவ அமைப்பில்-சந்தைக்கான உற்பத்தியில்-மலிந்த கூலிக்காகவும், கச்சாப் பொருட்களுக்காகவும் வெறி பிடித்த நாய் போல் அலைகின்றனர். இந்த நிலையில் ஒன்றை ஒன்று விழுங்கும் நிலையில் பன்னாட்டு பகாசுர கம்பனிகள் தொழிலாளர்களை கோரமாக சுரண்டவும், தொழிற்சங்க உரிமைக்கு வேட்டு வைக்கவும் முற்படுகின்றன. இதன் ஒரு பகுதியாகவே துப்பாக்கிச் சூட்டிற்கு பின் தொழிற்சங்க அலுவலத்தை திறப்பதற்கு போலீஸ் தடை செய்துள்ளது.

ஸ்டாலினிச கட்சிகள்

இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்படும் மக்களிடமிருந்து எந்த ஆபத்தும் வராமல், சந்தர்ப்பவாத அடிப்படையில் மாறி மாறி முதலாளித்துவ கட்சிகளை ஆதரித்துக் கொண்டு இருக்கும் ஸ்டாலினிச கட்சிகளும் அதன் தொழிற்சங்க பிரிவுகளான CITU, AITUC யும் தொழிலாள வர்க்க இயக்கத்தில் இருந்து கொண்டு, எந்த ஒரு போராட்டத்தையு் துரோகத்தனமாக காட்டிக் கொடுத்து தொழிலாள வர்க்கத்தை சோர்வடைய செய்து நிராயுதபாணியாக்கி வருகின்றார்கள். இந்த துப்பாக்கி சூட்டிற்காக 22ம் தேதியன்று தமிழகம் முழுவதுமுள்ள ஆலை வாயில்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறுவது தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் போராட்டத்தில் தன் பிடியை விட்டு நழுவி போய் விடாமல் இருக்கவே ஆகும். (.ம்) நரசிம்மராவின், ஜெயலலிதாவின் அரசுகள் கொண்டு வந்த புதிய பொருளாதார கொள்கையை எதிர்த்து நாடு பரந்த அளவில் ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்த ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்துடன் முடிந்தது. முதலாளித்துவ அரச எந்திரத்தின் ஒரு பகுதியான போலீசை, “திருத்தி அமைக்க வேண்டும்" என்றும் "கடிவாளத்தை மீறிய குதிரையாக" போலீஸ் இருக்கின்றது என்று கூறும் இந்த கட்சி தலைமைகள் இவர்கள் ஆளுகின்ற மேற்கு வங்கத்தில் நடக்கும் போலீஸ் அராஜகத்திற்கு என்ன கூறுவார்கள்.

முதலாளித்துவ சொத்துடமையை தனியுடைமையை காப்பாற்றும் ஆயுதம் தாங்கிய பிரிவாகிய போலீசை ஸ்டாலினிச தலைமைகள் போலீஸ் துறை என்றும் அதை சீரமைக்க வேண்டும் என்றும் கூறுவது அரசாங்கத்தின் மற்ற துறைகளை போல் இதுவும் ஒரு துறை என்ற பிரமையை தொழிலாளர்களிடையே ஊட்டுவதற்காகும். தொழிலாளர்களை ஒடுக்கும் முதலாளித்துவத்தின் அரசு இயந்திரத்தை சீர்திருத்த முடியும் என்று எதிர்புரட்சிகர ஸ்டாலினிச தலைமைகள் பரப்பும் பிரமையை நிராகரிக்க வேண்டும். தொழிலாளர்களின் சொந்த பாதுகாப்பு அணிகளை கட்ட வேண்டும். முதலாளித்துவ அரசு இயந்திரத்தை தொழிலாள வர்க்க பலத்தினால் உடைத்தெறிந்து மாற்று புரட்சித் தலைமையை கட்டும் போராட்டத்துடன் இது பின்னி பிணைந்ததாகும்.

Saturday, September 17, 2016

இந்திய சோசலிசத் தொழிலாளர் கழக அங்கத்தவர் மோசஸ் ராஜ்குமாரை நிபந்தனையின்றி மீண்டும் சேவையில் அமர்த்து!


Thozhilalar Paathai 427
December 1992

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியலுக்காக இந்தியாவினுள் போராடி வரும் ட்ரொட்ஸ்கிச இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் அங்கத்தவர் தோழர் மோசஸ் ராஜ்குமாருக்கு எதிராக பகிங்ஹாம், கர்நாடக ஆலை (B&C மில்) நிர்வாகம் ஒடுக்குமுறைத் தாக்குதலைத் தொடுத்துள்ளது.


1992 நவம்பர் 1ம் திகதியில் இருந்து தோழர். மோசஸ் ஒரு கிழமைக்கு வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அத்தோடு அவருக்கு எதிரான குற்றச்சாட்டின் பேரில் எதுவிதமான நஷ்டஈடும் இல்லாமல் வேலையில் இருந்து ஏன் நீக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்டும்படியும் அவர் கோரப்பட்டுள்ளார்.

1991 நவம்பரில் பேர்ளினில் கூடிய உலக தொழிலாளர் மாநாட்டினதும் சர்வதேச தொழிலாளர் பாதுகாப்பு சபையினதும் அங்கத்தவருமான மோசசுக்கு எதிராக நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை எனவும் அவற்றை நிராகரிப்பதாகவும் மோசஸ் குறிப்பிட்டுள்ளார். ஆதலால் இக்குற்றச்சாட்டுக்களை உடன் வாபஸ் பெறும்படியும் தம்மைத் திரும்பவும் சேவையில் அமர்த்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மோசஸ் ராஜ்குமாரால் தாக்கப்பட்டதாக நிர்வாகம் குறிப்பிடும் வெங்கடரமணி அதிகாரி தொழிலாளர் விரோத நடவடிக்கைகளால் தொழிலாளரின் வெறுப்புக்கு ஆளானவர். இவர் இன்று பணிபுரியும் பகுதிக்கு இடமாற்றமாகி வந்ததற்குக் காரணம் முன்னைய பிரிவின் தொழிலாளர்களின் எதிர்ப்பேயாகும். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த அதிகாரி, ஒரு தொழிலாளியையும் கமிட்டி அங்கத்தவர் ஒருவரையும் தாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிகாரியின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தும் விதத்திலும், நிர்வாகத்தின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் விதத்திலும் சோசலிசத் தொழிலாளர் கழகத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் கூறுவதாவது: “தறியில் வேலை செய்வதற்குப் போதுமான கண்டைகளை தொழிலாளர்களுக்கு வழங்குவதில் உதாசீனப் போக்கை கடைப்பிடிக்கும் மில் நிர்வாகம், அவற்றை மேற்பார்வையிடுவதற்கு தொழிலாளர்களை விட பன்மடங்கு சம்பளம் கொடுத்து அதிகாரிகளை நியமித்துள்ளது. அவ்வாறான அதிகாரிகளில் ஒருவரான வெங்கடரமணி கண்டைகள் இல்லாது பல தறிகள் ஆடாமல் நின்று போய் விட்ட நிலைமையிலும் கஷ்டப்பட்டு தறிகளை 8 மணிவரை ஆட வைத்த மோசஸ் ராஜ்குமாரிடம் மரியாதைக் குறைவாக பேசியது மட்டுமல்லாமல் 'பிரிப்பரேசன்' பகுதியில் போய் கண்டைகளை எடுத்து வரும்படி கூறினார்.”

B&C ஆலை ட்ரொட்ஸ்கிச தொழிலாளர் அணியின் செயலாளரான மோசஸ் ராஜ்குமாருக்கு எதிரான இச்சதியின் பின்னணியை விபரிக்கையில் சோ.தொ.. கூறுவதாவது: “மோசஸ் ராஜ்குமார் மீது எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பழிவாங்கல் நடவடிக்கையானது தொழிலாளர்கள் மேல் வேலைப் பழுவை அதிகரிக்கச் செய்தும், புவனகிரிக்கு மில்லின் முக்கியமான பகுதியை மாற்றியும், ஆயிரக் கணக்கில் ஆட்குறைப்புச் செய்தும், போனசை 8.33 சதவீதமாக குறைத்தும், கொள்ளை இலாபம் சம்பாதிக்கும்" திட்டமாகும். இத்திட்டத்தினை தோற்கடிக்கக் கிளர்ந்து வரும் தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் சதியின் ஒரு பாகமாகவே ட்ரொட்ஸ்கிசப் போராளி மோசஸ் ராஜ்குமாருக்கு எதிரான இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என சோ.தொ.. சுட்டிக் காட்டியுள்ளது.

இந்திய மத்திய பிரதேச பிகையில் தொழிற் சங்கத் தலைவர் சங்கர் குகாநியோகியின் படுகொலை, உத்தர பிரதேச டால்மியா சீமெந்து நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்களுக்கு எதிரான பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் (17 பேர் பலி) ஆகியவற்றின் ஒரு பாகமாகவே மோசசுக்கு எதிரான இவ் வேட்டை இடம் பெற்றுள்ளது.

தோழர். மோசஸ் ராஜ்குமாருக்கு எதிரான இந்த வேலை இடைநிறுத்தத்தினை இரத்துச் செய்யும் படியும் அவரை எதுவித நிபந்தனையின்றி மீண்டும் சேவையில் அமர்த்தும் படியும் இலங்கை தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்கள் கோர வேண்டும் எனவும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வேண்டுகின்றது.